புதன், மார்ச் 14
செவ்வாய், மார்ச் 6
அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீதான வாசகப் பார்வை
-முகைதீன்சாலி
நந்தினி சேவியரின் ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ சிறுகதைத்தொகுப்பை ஆற அமர இருந்து வாசித்தேன். எட்டுச் சிறுகதைகள் அடங்கிய அத்தொகுப்பில் ஆறு சிறுகதைகள் என்னை விட மூத்தவை. நான் பிறப்பதற்கு முற்பட்டவை. ஏனைய இரு கதைகளும் என் மழலைப் பருவக் காலத்திற்குரியவை. இச்சிறுகதைத் தொகுப்பை வாசித்து அதற்கு விமர்சனம் எழுதுமளவிற்கு எனக்கு ஆற்றலோ அனுபவமோ கிடையாது.
நந்தினி சேவியர் நன்கு வேர்விட்டு விழுதுவிட்டு கிளைபரப்பி பரந்து நிற்கும் ஆல விருட்சம். நானோ அதன் கீழ் முளைவிட்டு வளரத்துடிக்கும் சிறுசெடி.
விருட்சத்தை விமர்சிக்க செடியினால் முடியாது பார்த்து இரசித்து இன்புற முடியும்.
நந்தினி சேவியரின் அயல் கிராமத்திற்குள் நுழையுமுன்பாக முன்னுரைக்குள் மூழ்கிப்போனேன்.
முதுபெரும் எழுத்தாளர் முருகையன் எழுதிய முன்னுரைக்கு முத்தாய்ப்பாய் நந்தினி சேவியரின் எழுத்தாற்றல் பற்றி குறிப்பிடும் பின்வரும் பந்தி அமைந்து விடுகிறது.
‘அவரது கதைகளில், கருத்து முழக்கங்களையோ உணர்ச்சிமயமான சன்னதங்களையோ நாம் எதிர்பார்க்க முடியாது. அதேவேளை வெறும் கிளுகிளுப்புக்கும் புளிச்சல் ஏவறைகளுக்கும் கொட்டாவிகளுக்கும் சேவியரின் கதை உலகிலே சற்றேனும் இடமில்லை’
ஆனால் இன்றைய நவீன எழுத்தாளர்கள் மேற்படி பண்புகளினின்றும் வெளியேற முடியாது. அவற்றுள் கட்டுண்டு கிடப்பது வேறு விடயம்.
நந்தினி சேவியரை நான் அறிந்தது சற்று நாளிகைக்கு முன்பதாகத்தான். நான் அவரை முதலில் சந்திக்கையில் அவரை ஒரு எழுத்தாளராகவோ விமர்சகராகவோ கண்டுகொள்ளவில்லை. அவரையொரு மனிதம் பொதிந்த மனிதராகவே கண்டுகொண்டேன். பின்னர் அவரோடு உரையாடியபோது அவரது நாவிலிருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் இலக்கியத் தரம் பொதிந்த இனிய தேனாக என் காதுகளைக் குளிர்வித்தன.
பழம் தின்று கொட்டை போட்ட இலக்கியவாதியான அவர் தன்னை எப்போதும் ஒரு வாசகன் என்று அறிமுகப்படுத்தும் பண்பு அவரைப்பற்றியதான எனது பார்வையைக் கூர்மையாக்கின.
இளம் படைப்பாளிகளை புடம் போடுகின்ற அவரது ஆவல், அவர்களை மதித்து அவர்களுடன் சமமாகப் பழகும் பண்பு, தமிழ்த் தாய்க்கு அணி சேர்க்க அவர் கொண்டுள்ள ஆவல், இலக்கிய உலகில் அவர் இன்றும் என் வயதோடு ஒத்திருக்கும் அதிசயம் எண்ணிப்பார்க்கையில் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
திருகோணமலையில் இருந்து கொண்டே இத்தனை காலமாய் நந்தினி சேவியர் என்னும் இலக்கியப் புத்தகத்தை படிக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஏக்கம் என்னை குடைகிறது.
நந்தினி சேவியரின் ‘வேட்டை’ என்ற சிறுகதையைச் சற்றுச் சத்தமாகவே வீட்டிலிருந்து உரக்க வாசித்தேன்.
‘பாற்றா…பாற்றா… கிடக்காடா….கிடக்காடா… வெள்ளயா உதுக்குள்ளான் கிடக்கு… விட்டிடாதை … கிடக்கிடா…கிடக்கிடா… விட்டிடாதை …விட்டிடாதை …எழுப்பு… எழுப்பு…’
மேற்படி வசனத்தை நான் சத்தமாக வாசித்தபோது என் இரு மழலைச் செல்வங்களும் மேற்படி வசனத்தைத் திரும்பத் திரும்ப என்னை வாசிக்க வற்புறுத்தியபோது நான் வியந்து போனேன். நந்தினி சேவியரின் எழுத்தின் பால் மழலைகளுக்கும் ஈடுபாடு உண்டே என்று. இது ஒரு எழுத்தாளனின் மிகப்பெரிய வெற்றியல்லவா!
‘வேட்டை’ கதையினை திரும்;பத் திரும்ப வாசித்த போது நான்; ஒரு சிறுகதை வாசிக்கின்றேன் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு ஒரு நேரடி வேட்டைக் காட்சியினை காண்பது போன்ற உணர்வுக்குள் தள்ளப்பட்டுப் போனேன். என் கண் முன்னால் தம்பரும் அவரின் வெள்ளையனும் உயிரோடு இருப்பதான ஒரு பிரம்மை ஏற்பட்டுப்போகிறது. இது அக்கதையின் உயிரோட்டத்தை உணர்த்தி நிற்கிறது. இதுதான் ஒரு சிறுகதையின் உண்மையான பண்பு என என்னை உணர வைத்த கதை அது.
மேற்படி கதையினூடாக இளம் தலைமுறையினர் அறியாத பல விடயங்களை நந்தினி சேவியர் சொல்லித் தருகிறார்;. வேட்டையாடும் முறை. உடும்பை எடுத்து அதை உடும்புக்கட்டுக் கட்டுகின்ற முறை, வேட்டைக்குப் பயன்படுத்தும் பொருட்கள் இவைகளெல்லாம் எமக்கு ஆவணங்களாக அமைந்து விடுகின்றன.
மொத்தத்தில் ‘வேட்டை’ நம் வாசிப்புப் பசிக்கு நல்லதொரு வேட்டை.
மேற்படி ‘வேட்டை’ கதையானது ஒரு நிகழ்ச்சிக்கதையாக அமைந்திருக்கிறது. அமெரிக்க எழுத்தாளர்களான எட்கர் ஆலன்போ, ஹெமிங்வே இங்கிலாந்து எழுத்தாளரான ஜாக்கப்ஸ் போன்றவர்கள் கதையம்சம் இல்லாது நிகழ்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கதைகள் படைத்துப் புகழ் பெற்றது போன்று நந்தினி சேவியரும் ‘வேட்டை’ கதையினூடாக புகழ் பெறுகிறார்.
‘வேட்டை’ கதையினூடாக இரண்டு நாள் வேட்டைக்காட்சி விபரிக்கப்படுகிறது. இது புதுமைப்பித்தனின் ‘நினைவுப்பாதை’ சிறுகதை போல, இழவு வீட்டில் இரண்டாவது நாள் விடி வெள்ளி கிளம்பும் நேரத்தில் தொடங்கி சுமார் இரண்டே நாழிகைக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை புதுமைப்பித்தன் சொல்லி முடிப்பது போல், நந்தினி சேவியரும் வேட்டையை நடாத்தி முடிக்கிறார். இக்கதை திடீரென்று தொடங்கி திடீரென்று முடிவது போல் தோன்றினாலும் ஆழ்ந்து நோக்கினால் படிப்பவரின் உள்ளத்தில் நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் உள்ள மறைமுகமான கதை படிப்பவரின் உள்ளத்தில் வளர்ந்து கொண்டே போகும்.
தலையும் காலும் இல்லாத முண்டம் போன்ற ஓர் ஓவியத்தை வரைந்து அதற்கு முன்னும் பின்னும் உள்ள அழகுகளைக் கற்பனையால் கண்டு மகிழச்செய்வதே இவ்வகைத்தனவான கதைகளின் நோக்காகும்.
வேட்டையை முடித்துவிட்டு ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ சிறுகதைக்குள் நுழைகிறேன். ஆரம்பம் முதல் முடிவு வரை கதை பண்மையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு நந்தினி சேவியர் மாத்திரம் கதை சொல்லவில்லை. தன்னுடைய நண்பர்களையும் சேர்த்து பக்கத்தில் அமர்த்திக்கொண்டு கதை சொல்வது போல மேற்படி சிறுகதை அமைந்திருக்கிறது.
இச்சிறுகதை வெறும் கற்பனையில் முளைத்தாக எனக்குத் தெரியவில்லை. இது நேரடியாக களத்தில் நின்று அனுபவித்த ஒருவர் சாட்சிக்காக நண்பர்களையும் அழைத்துக்கொண்டு சொன்ன கதையாகவே நான் பார்க்கிறேன்.
கதை இடம்பெற்ற தளமும் கதை மாந்தர்களும் என் காலத்திற்கு முற்பட்டவை என்பதினால் இக்கதை மூலம் கதாசிரியர் சொல்லவந்த விடயம் முழுமையாக புரியாது போனாலும் இக்கதை எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர்களிடத்தில் இக்கதை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது எனது கணிப்பு.
இக்கதை எந்த நோக்கத்திற்காக அக்காலத்தில் எழுதப்பட்டதோ அந்நோக்கம் இக்கதையினூடாக நிச்சயம் நிறைவேறியிருக்கும்.
நான் இதுவரை வாசித்த சிறு கதைகளுள் பண்மையாக சொல்லப்பட்டு லாவகமாக நகர்த்திச் செல்வப்பட்ட முதற்சிறுகதை இதுவெனக் கூறுவேன்.
வெளியூர் சென்று திரும்பிய பாட்டன் பிரயாணச் செய்திகளை பாட்டியிடம் சொல்லி ஆறுவது போல. நந்தினி சேவியர் மேற்படி சிறுகதைையை நகர்த்திச் சென்றிருக்கும் லாவகம் அலாதியானது.
அயற்கிராமத்திலிருந்து ‘ஒரு பகற்பொழுது’ க்குள் நுழைகிறேன். பல சிறுகதைப் பண்புளை தன்னகத்தே கொண்டு தலைநிமிர்ந்து நிற்கிறது இச்சிறுகதை.
பதுமைப்பித்தனின் ‘ஒருநாள் கழிந்தது’ சிறுகதையோடு மேற்படி கதையினை ஒப்பு நோக்குகிறேன். இரண்டு கதைகளிலும் கருவாக வறுமை அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால் இரண்டு கதைகளின் களங்களும் வெவ்வேறு தளங்களில் நடந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. ‘ஒருநாள் கழிந்தது’ நகர வாழ்க்கையின் வறுமை பற்றியும் ‘ஒருபகற்பொழுது’ கிராம வாழ்க்கையின் வறுமைபற்றியும் பேசுகின்றன.
‘ஒருநாள் கழிந்தது’ ஏழை எழுத்தாளரான முருகதாசர் என்ற பாத்திரத்தின் ஒருநாள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.
‘ஒரு பகற்பொழுது’ செல்லம் என்கின்ற கிராமிய குடும்பத் தலைவி பாத்திரத்தை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.
‘ஒருநாள் கழிந்தது’ கதையில் படுக்க வைத்திருக்கும் கோரைப் பாயினை வர்ணிப்பதன் மூலம் அங்குள்ள ஏழ்மை நிலையினை நமக்கு உணர்த்தி விடுகிறார் புதுமைப்பித்தன்.
‘கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜால வித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப்படாததால் அது நடு மத்தியில் இரண்டாக கிழிந்து ஒரு கோடியில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால் முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருத்த வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க ஒரு துண்டையோ அல்லது மனைவியின் புடவையையோ அல்லது குழந்தையின் பாவாடையையோ எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும்’
நந்தினி சேவியர் தனது கதையில் செல்லத்தின் ஏழ்மை நிலையினை, ஆட்டுக்கு அவள் திட்டும் ஒற்றை வாசகத்தினூடாக புரியவைக்கிறார்.
‘உனக்கு மட்டுமே… பசி… எல்லாருக்குந்தான்.. உன்னையும் வித்துத் துலைச்சிட்டாள்?
புதுமைப்பித்தனின் முருகதாசர் என்ற பாத்திரம், ஏழ்மை நிலை காரணமாக சாகா வரம் பெற்ற கதைகளை எழுதுவதை விட்டுவிட்டு தனது எழுத்தாற்றலை விளம்பர நிறுவனம் கொடுக்கும் முப்பது ரூபாய்க்கு விற்று விடுகிறார்.
நந்தினி சேவியரின் செல்லம் பாத்திரம் கடைக்காரன் மார்க்கண்டுவின் ஏச்சில் ரோசமுற்று தன் காதில் கிடந்த தோட்டை அறுபத்தைந்து ரூபா அறாவிலைக்கு விற்று கடன் அடைக்கிறாள்.
புதுமைப்பித்தனின் ‘ஒருநாள் கழிந்தது’ முருகதாசரின் வறுமை நிலையோடு மாத்திரம் நகர்ந்து விட்டாலும் நந்தினி சேவியரின் ‘ஒரு பகற்பொழுது’ அதற்கும் அப்பால் சென்று செல்லையா என்ற பாத்திரத்தின் ஊடாக பொதுடைமைப் பார்வையை வெளிக்கொணர்கிறது.
‘மாறி மாறி ஆண்டாலும் ஏழையல் வாழ்வு கண்ணீரிலே’ என்ற கோசத்தினூடாக ஆட்சியாளர்களை கேள்வி கேட்கிறார்.
கு. அழகிரிசாமியின் திரிபுரம், ராஜா வந்திருக்கிறார், அழகம்மாள், பாலம்மாள் போன்ற சிறுகதைகளினூடாக பொதுவுடைமைக் கருத்துக்கள் வெளிப்பட்டு நின்றது போல நந்தினி சேவியரின் ‘ஒரு பகற்பொழுது’ கதையினூடாகவும் முதலாளித்துவத்திற்கு எதிரான போக்கு காணப்படுவதை உணர்ந்து கொள்ளலாம்.
புதுமைப்பித்தனின் முருகதாசர் பாத்திரத்தின் ஒருநாள் கழிந்து விட்டாலும் திங்கட்கிழமை சம்பளம் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
நந்தினி சேவியரின் செல்லம்மா பாத்திரம் வள்ளியாச்சி கொடுத்த மண்ணப்பிய மரவள்ளிக் கிழங்கோடும் ஒடியலோடும் ஒரு பகற்பொழுதை கழித்து விட்டாலும் நாளைப் பொழுதிற்கு?
2002ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வரங்கக் கோவையில் கலாநிதி செ. யோகராசா சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘ஈழத்துச் சிறுகதைகளில் ஆரம்ப காலம் தொடக்கம் ஏறத்தாழ 1980 வரை வறுமைநிலைச் சித்தாpப்பு முதன்மை இடம் பெற்று வந்துள்ளது. சி.வைத்தியலிங்கத்தின் பாற்கஞ்சி தொடக்கம் நந்தினி சேவியரின் ‘ஒரு பகற் பொழுது’ வரை இதற்குச் சான்றுகளாகின்றன’
மேற்படி கூற்றினூடாக ஈழத்து சிறுகதைப் பரப்பில் நந்தினி சேவியரின் இடத்தை புரிய முடிவதோடு ‘ஒரு பகற்பொழுது’ சிறுகதையின் வெற்றியையும் உணரமுடிகிறது.
ஒரு பகற்பொழுதின் வெயிலின் கொடுமையினால் மனமுருகி ஆறுதல் கொள்வதற்காக ‘நீண்ட இரவுக்குப் பின்’ நுழைகிறேன்.
‘நீண்ட இரவுக்குப் பின்’ சிறுகதை திரும்பத்திரும்ப வாசிக்கத் தூண்டும் கதை. ‘அரசு’ என்ற பாத்திரத்தின் ஊடாக 1974ம் ஆண்டு காலகட்டத்தின் இளைஞர்களின் நிலையினை படம்பிடித்துக் காட்டுகிறார் நந்தினி சேவியர். ஆனால் அந்தநிலை கிட்டத்தட்ட முப்பபத்தாறு ஆண்டுகள் கழிந்து விட்ட இக்கால கட்டத்திலும் தொடர்வதானது சங்கடத்திற்குரியது.
சாகா வரம் பெற்ற கதைகள் என்று கூறுவார்கள் அதற்கு உதாரணமாக நந்தினி சேவியரின் ‘நீண்ட இரவுக்குப்பின்’ சிறுகதை அமைகிறது.
தமிழ், சிங்களம் என்ற இன வேறுபாடுகளுக்கு அப்பால் வறுமை என்பதும், வேலையில்லாத் திண்டாட்டம் என்பதும் மனிதர்கள் என்ற வகையில் சமமானதே என்பதை மேற்படி சிறுகதையில் ‘ரத்னபால’ என்ற பாத்திரத்தை புகுத்துவதின் ஊடாக புரியவைக்கிறார் நந்தினி சேவியர்.
இன்றைய சமுதாய வாழ்வில் காணப்படும் பொருளாதாரப் போராட்டத்தையும், வறுமையின் கொடுமையையும், அதனால் மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களையும் பல கதைகள் பேசுகின்றன. அந்த வகையில் அகிலனின் ‘பசி’ ஆர்.சூடாமணியின் ‘மறுபுறம்’ ஜெயகாந்தனின் ‘ஒருபிடிசோறு’ புதுமைப்பித்தனின் ‘தனி ஒருவனுக்கு’ எம்.ஏ அப்பாசின் ‘கஞ்சி’ இந்தவரிசையில் நந்தினி சேவியரின் ‘நீண்ட இரவுக்குப்பின்’ சிறுகதையும் இணைந்துகொள்கிறது.
மேற்படி சிறுகதையில் ‘வரதன்’ என்ற பாத்திரத்தின் ஊடாக தன்னுடைய மனதில் புதைந்து கிடக்கும் போராட்;ட வேட்கையினை வெளிப்படுத்துகிறார் நந்தினி சேவியர். ‘இந்த நிலமைகள் மாறவேண்டுமென்றால் தேர்தலினாலோ அரசுகள் மாறுவதினாலோ முடியாது என்றும், இந்த நிலமைகளைக் கட்டிக்காக்கின்ற அரசு அமைப்பபை உடைத்து அதிலை எங்களைப்போல உழைக்கின்ற மக்களின்ரை அரசைப் போராடி அமர்த்தாத வரையில் இது தீராது’ என்கிறார். இதிலே ‘உடைத்து’ என்ற சொற்பதத்தின் ஊடாக போராட்டத்தின் வலுவான தன்மையை வெளிப்படுத்துகிறார். இதற்கான போராட்ட ஆயுதமாக கட்சி அரசியலை அறிமுகப்படுத்துகிறார். கட்சி அரசியலுக்கான வழி முறையாக இனமத பேதமின்றி தொழிலாள வர்க்கத்தினரை ஒன்றினைக்கும் செயற்பாட்டினையும் அறிமுகப்படுத்துகிறார்.
ஆயுதங்களால் செய்யமுடியாத வேலைகளை பேனையினால் செய்ய முடியும் என்பதை உணர வைக்கிறார் நந்தினி சேவியர். வாழ்வியலின் யதார்த்த நிலையினை சிறுகதையாக்கும் நந்தினி சேவியரின் மேற்படி சிறுகதை சரியாக புரியப்பட்டிருந்தால் தமிழரின் போராட்ட வரலாறு வேறு விதமாக அமைந்திருக்கும். இன்றைய சூழ்நிலைக்கும் தக்கவாறு மேற்படி சிறுகதை அமைந்திருப்பது அதன் வெற்றிக்கான அறிகுறியாகும்.
நந்தினி சேவியர் அறிமுகப்படுத்தும் இந்தப் போராட்டம் தனி இனத்திற்குரியதில்லை என்பதனை, வரதனைப் போன்றே அவனது அலுவலக நண்பன் ‘விமலரத்தின’ வும் இவனோடு பல விஷயங்களில் உடன்பட்டிருந்தான். என்ற வசனத்தின் ஊடாக புரியவைக்கிறார்.
கருத்துக்களை தன்னிலை வாதங்களாக வெறுங் கோசங்களாக வாசகர் மனதில் திணிக்காமல் கதையின் போக்கோடு விபரிக்கும் பாங்கானது நந்தினி சேவியரின் தனிப் புலமையாகும்.
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் அப்பாவித் தகப்பனுக்கு தனக்கு இனி வேலை கிடைக்காது என்பதை புரியவைத்து, இருக்கின்ற தொழிலை சந்தோசமாக ஏற்று, அதில் வருகின்ற இடர்களை சந்தோசமாக ஏற்கத் துணிவு கொள்ளும் ரத்னபால பாத்திரத்தினூடாக மற்றுமொரு பரிமாணத்தை உணர வைக்கிறார் நந்தினி சேவியர்.
மொத்தத்தில் ‘நீண்ட இரவுக்குப்பின்’ என்ற ஒரு சிறுகதையின் ஊடாக பல விடயங்களை உணரவைத்தது மட்டுமில்லாது இளந் தலைமுறையினருக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் மேற்படி சிறுகதையை தீட்டியிருக்கிறார் நந்தினி சேவியர்.
‘நீண்ட இரவுக்குப்பின்’ ‘பயண முடிவில்’ என் பார்வையைச் செலுத்துகிறேன்.
ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், அவர்களின் வாழ்விடங்கள், சேரிப்புறங்கள், போன்றவற்றை தங்கள் கதைகளினூடாக மிக நுணுக்கமாக அழகுணர்ச்சியுடன் விபரிக்கின்றபோது அல்லது வர்ணிக்கின்றபோது, அவ்வர்ணனைகள் வாசகர் மனதில் எதிர் விளைவினை ஏற்படுத்தும் என்பது நந்தினி சேவியரின் வாதமாகும்.
அதீத வர்ணிப்பானது அவ் அவல நிலைகளை வாசகர் மனதில் பதியவைப்பதற்குப் பதிலாக வாசகர் மனதில் அந்நிலை சம்மந்தமான அழகியலை மேலுணர்த்தும் என்பது நந்தினி சேவியரின் மாற்றுக் கருத்தாக உள்ளது.
இந்த அடிப்படைியில் ‘பயண முடிவில்’ சிறுகதையில், தமயனின் வண்ணான் தொழிலை மிக எளிமையாக விளங்க வைப்பதைக் காணலாம்.
‘விடியலில் எழுந்து துறைக்குப் போய், சீலையோடு மாரடித்து, மருந்து நனைத்து, நீலம் தோய்த்துக் கஞ்சி முறுக்கிக் காயவைத்து, பிறகு இஸ்திரிக்கைப் பெட்டியோடு மல்லாடும் தனது தமையனைப்பற்றி அவன் நினைவுக்கு வந்தது.
ஒரு எழுத்தாளனின் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டுமென்பதை இதனூடாக உணரமுடிகிறது.
‘பயண முடிவில்’ சிறுகதையை வாசித்து முடிக்கையில் மணிரத்திணத்தின் ஒரு சிறந்த சினிமாவை பார்த்து முடித்த பிரமிப்பு ஏற்பட்டுப்போகிறது. மனதில் ஒரு நெருடல் நிலைபெறுகிறது. தங்கனை, வாயாறப் புகழ வேண்டுமென்று, இது சிறுகதை என்று கூட உணராமல் மனம் வெம்புகிறது. இது இக்கதையின் வெற்றிதானே?
‘பயண முடிவில்’ சிறுகதையின் வெற்றி அக்கதையின் முடிவில்தான் தங்கியிருக்கிறது.
அவர் கொடுத்த சாமான்களை ‘தங்கன்’ எடுத்துச் செல்லவில்லை என்பதனை கதாசிரியர் சொல்லுகின்ற விதம் என்னை பிரமிக்க வைக்கிறது. ஒற்றை வசனத்தினூடாக அதை உணர்த்துகிறார்.
‘சாமானையும் றஹீமையும் மூதுரையும் பின் தள்ளி வேகமாக நகர்ந்தது லோஞ்சி’
மேற்படி முடிவினூடாக நந்தினி சேவியர் மனிதனுக்கு இருக்க வேண்டிய சுய கெளரவத்தையும், தன்மானத்தையும் புரிய வைப்பதோடு, உயர் அதிகாரிகள் தங்கள் சுய நோக்கத்திற்காக அப்பாவி ஏழைகளை சுரண்ட நினைக்கும் மனோபாவத்தையும் சுட்டிக் காட்டுகின்றார்.
தன் கெளரவத்தை இழந்து அதிகாரியின் வீட்டில் வேலை பார்த்து அந்த வேலையைப் பெறுவதை விட துறையோடும், இஸ்திரிக்கையோடும், லோன்றியோடும் காலத்தை கடத்துவது மேலானது என்று தங்கன் துணிவு கொள்வதாக ‘எதையும் எதற்கும் தயாரான ஒரு ஓர்மம் அவனுள் படிந்து இறுகியது’ என்ற வசனத்தின் ஊடாக உணர்த்துகிறார் நந்தினி சேவியர்.
‘பயணத்தின் முடிவில்’ இருந்து ‘மத்தியானத்திற்கு சற்றுப்பின்பாக’ வருகிறேன்.
‘மத்தியானத்திற்கு சற்றுப்பின்பாக’ கதையினை மீண்டும் மீண்டும் வாசிக்கின்றேன். சில விடயங்கள் புரிகிறது சில விடயங்கள் புரியவில்லை. இருவரின் உரையாடலாக இக்கதை இருந்தாலும் இதில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட பல மனிதர்கள் வந்து போகிறார்கள். இவர்கள் 1977 ஆம் ஆண்டுகளில் நந்தினி சேவியரோடு வாழ்ந்து பழகிய மனிதர்கள். அவர்களைத் தனக்குள் உள்வாங்கி இச்சித்திரத்தை தீட்டியிருக்கிறார் நந்தினி சேவியர்.
முன்னதாக வந்த கதைகள் எளிமையாக சுதந்திரமாக எழுதப்பட்ட கதைகளாகவும் மேற்படி கதை உயர்ந்த இலக்கியத் தரத்தோடு புறத்தாக்கங்களை உள்வாங்கி கடின போக்கில் எழுதப்பட்ட கதையாகவும் நான் உணர்கிறேன்.
ஆங்காங்கே இக்கதையில் பொதுவுடமைக் கருத்துக்களும்> இயக்கம் சார்ந்த நடைமுறைகளும் இடம்பெற்றிருப்பதை உணர முடிகிறது.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது போல> தொழில்நுட்பக் கல்லூரிகளின் சான்றிதழ்களும் பரீட்சைப்பெறுபேறுகளும் வறுமைக்கும் பசிக்கும் விடையளிக்க வில்லை என்கிறார் நந்தினி சேவியர்.
இக்கதை எழுதப்பட்ட கால கட்டத்தில் வாழந்தவர்கள் இக்கதையினை இலேசாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் ஏனெனில் அவர்களின் அன்றைய வாழ்வியல் பற்றியதான பார்வைதான் இக்கதை. இதை இன்று புரிந்து கொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.
உத்தியோகம், வசதிகள் வந்து விட்டால் உறவு நட்பு யாவும் போலிதானா என கேள்வி எழுப்புகிறார் நந்தினி சேவியர். அவ்வாறு வசதி வந்தவர்கள் வசதிக்காக நண்பர்களை மிதிக்குமுன்பாக நட்புக்கு முற்றுப்புள்ளியிடச் சொல்கிறார்.
ஹெச்.இ.பேட்ஸ் என்பவர் குறிப்பிடுவது போல, எழுதும் ஆசிரியரின் எண்ணத்துணிவு சிறுகதையில் எவ்வாறு வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்பது போல நந்தினி சேவியரின் ‘மத்தியானத்திற்கு சற்றுப்பின்பாக’ சிறுகதை அமைந்திருக்கிறது.
‘ஆண்டவருடைய சித்தம்’ சிறுகதை தடையில்லாது ஓடி கடலில் சங்கமிக்கும் ஆற்றைப்போல தொய்வில்லாமல் பயணிக்கிறது.
1982 காலப்பகுதியில் கம்யூனிச சிந்தனையாளர்கள் அனுபவித்த துயரங்களில் ஒன்றை சுட்டி இக்கதை புனையப்பட்டுள்ளது.
அநாதரவாக மடத்தில் இருக்கின்ற பிள்ளை கூட சுயமாக சம்பாதிக்கும் திறமையுள்ள ஒருவனை கம்யூனிசக் கொள்கையுடையவன் என்ற காரணத்தினால் திருமணம் செய்ய வெறுப்பதாக மேற்படி கதையினூடாக உணர்த்துகிறார் நந்தினி சேவியர்.
கடைசியாக ‘தொலைந்து போனவர்கள்’ கதையில் கண் பதிக்கிறேன்.
1987 கால கட்ட இலங்கைச் சூழலை எண்ணிப்பார்க்கறேன். துப்பாக்கிகள் காலோச்சிய காலகட்டம். பேனைகள் எழுதுகின்ற தன் தொழிலை இடைநிறுத்தி வெறும் பார்வையாளராய்ப் பரிணமித்த காலகட்டம்.
‘தொலைந்து போனவர்கள்’ கதையினூடாக தன் துணிவை வெளிப்படுத்துகிறார் நந்தினி சேவியர். எளிமையான எழுத்து வடிவத்தினூடாக கால சூழலுக்குத்தக்கவாறு சொல்ல வேண்டிய விடயங்ககைத் தெளிவாகவும் அதேவேளை நேரடியாகச் சுட்ட முடியாத விடயங்களை மறைமுகமாகவும் கையாண்டு வாசகர் உணரும் விதத்தில் லாவகமாக கதையினை நகர்த்திச் செல்கிறார் நந்தினி சேவியர்.
‘சுப்பர் மடம்’ என்கின்ற அந்தச் சிறு கிராமத்தை நந்தினி சேவியர் விபரிக்கும் அழகு அலாதியானது. அந்தக்கிராமம் அழிவுற்றதை விபரிக்கையில் ஒரு அழகான கனவு கலைந்தது போல இருக்கிறது.
மொத்தத்தில் ‘தொலைந்து போனவர்கள்’ கதை உள்ளத்தில் ஒரு நெருடலை ஏற்படுத்திச் செல்கிறது.
இன்று இலங்கையில் கோர யுத்தத்தின் விளைவாக தொலைந்து போன தமிழ்> முஸ்லிம் கிராமங்களையும் மனிதர்களையும் இக்கதையினூடாக ஞாபகமூட்டிச் செல்கிறார் நந்தினி சேவியர்.
‘அதே பச்சை நிறச் சீருடை…சப்பாத்துக்கள்…தலைப்பாகை மட்டுமே சற்று வித்தியாசமாய்…” என்ற வாசகத்தின் ஊடாக ஒரு வரலாற்றுச் சான்றினை வெகு எளிமையாக புரியவைக்கும் பாங்கு அலாதியானது.
‘தொலைந்து போனவர்கள்’ சிறுகதை, எழுதப்பட்ட காலச் சூழல் எவ்வாறான கடினத் தன்மை உடையது என்பதனையும் பேனா பற்றியதான வெளிப்புறத் தாக்கத்தின் கடினத் தன்மையினையும் புலப்படுத்தி நிற்கிறது. இவ்வாறான சிறுகதைகள் இறுக்கமில்லா சுதந்திரமான சூழல்களில் இதைவிட எளிமையாக வெளிப்படலாம் என்பது எனது இலக்கிய நோக்கு.
‘நடை அழகு என்பது ஆசிரியரின் தனிச்சொத்து என்று கருதினாலும் ஆசிரியர் அவர் வாழ்ந்த காலத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டிருப்பதை மறுக்க இயலாது காலத்தின் சிந்தனைகள்> எண்ணங்கள் அவற்றை வெளியிடும் பேச்சுமொழி> எழுத்து மொழி இவ்வளவையும் ஜீரணித்துக் கொண்டுதான் படைப்பாளரும் தம்முடைய சொந்த நடையில் படைப்பை வெளியிடுகின்றார். எனவே நடைக்கு ஆசிரியர் மட்டும் காரணமாவதில்லை. அவர் வாழும் காலமும் காரணமாகிறது’ என்ற அகிலனின் கூற்றுக்கு இனங்க நந்தினி சேவியரின் சிறுகதை ‘நடை’ அமைந்திருப்பதைக் காணலாம்.
நந்தினி சேவியரின் ‘நடை’ தனித்துவமானது. யாழ்ப்பான மண்வாசனைச் சொற்களை தன்னுடைய கதைகளில் எளிமையாக கையாள்வதைக் காணலாம். அவ்வாறான சொற்கள் யாழ் மண்ணுக்கு மட்டும் சொந்தமானவை. உதாரணமாக உதுக்குள்ளான், விழுந்திட்டுதே, ஆரேனும், வாங்கிப் போடுவியள், இருக்கே, கேட்டியளே, அறாவிலை, என்னணை செய்யிறது.
ஜெயகாந்தன் சென்னைத் தமிழில் பல கதைகளை எழுதியது போல நந்தினி சேவியர் தான் பிறந்த மண் வாசனையை தன்னுடைய சிறுகதைகள் மூலம் நுகரவைப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ஸ்டீவன்சன் என்ற அறிஞர், சிறுகதைகளை மூன்றாக வகைப்படுத்துகிறார். கருவால் வந்த கதை (The Story Of Plot),பாத்திரத்தால் அதன் குணநலன்களால் உருவான கதை (The Story Of Character), பாத்திரங்களின் உணர்வுகளை மட்டும் முக்கியப்படுத்தும் கதை (The Story Of Impression) இதைவிட நிகழ்சியால் சிறக்கும் கதை என்ற வகையினையும் இணைத்துக் கொள்ளலாம்.
மேற்படி சிறுகதை வகைகளில் நிகழ்ச்சியால் சிறக்கும் கதை என்ற வடிவத்தை நந்தினி சேவியர் கையான்டிருந்தாலும், அவரின் ஏனைய சிறுகதைகள் மேற்படி வகையறாக்களையும் தாண்டி ஒரு புது இலக்கணத்துக்குள் உள்வாங்கக் கூடியதான வகையில் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். அந்த புது வகையாக ‘வாழ்வியல் சார்ந்த அன்றாட நடைமுறை’ என்ற வகைக்குள் நந்தினி சேவியரின் சிறுகதைகளை உள்ளடக்க முடியும் என்பது என்னுடைய கருத்து.
நந்தினி சேவியரின் ஒவ்வொரு சிறுகதைகளும் வெவ்வேறு விடயங்களைப் பேசிய போதிலும் அக்கதைகளில் எங்கேனும் ஓரிடத்தில் கொம்யூனிச சித்தாந்தம் எட்டிப் பார்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இந்த வகையில் நந்தினி சேவியர் வாழ்க்கையைச் சிறுகதையாக்கும் ஒரு வித்தகர். நந்தினி சேவியரின் எழுத்துக்களை வாசிப்பதன் ஊடாக இளம் தலைமுறையினர் தம்மை புடம்போடமுடியும். நந்தினி சேவியரின் எழுத்துக்கள் மட்டுமல்ல அவரும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம்தான். ஏனெனில் அவருடன் உரையாடும் போதெல்லாம் ஓர் உயர் ரக இலக்கியப் புத்தகத்தை வாசித்த சுகானுபவத்தை உணரமுடியுமென்பதை அவருடன் உரையாடுவதன் மூலமே உணரமுடியும்.
mohideensaly62@yahoo.com
நன்றி :- மகுடம்/இதழ் 1/ 2012/மட்டக்களப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)