வியாழன், ஜூலை 26
வியாழன், ஜூலை 5
முத்துலிங்கத்தின் கதைகள் ஒலிப்பதிவாக
புதன், ஜூலை 4
என்கடன் - அனுபவங்களின் அசைபோடல்
‘கோப்புகளோடும் மேசைகளோடும் அலுத்துச் சுழலும் மின்விசிறிகளோடும் சோம்பி ஒழுகும் மின்னொளியோடும் நிகழ்ந்தேறுகின்ற காரியாலயப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு மனிதனை ‘என்கடன்’ எம் முன் கொண்டு வருகிறது’ என ந.சத்தியபாலன், வே. ஐ. வரதராஜனின் கவிதைத் தொகுதிக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘.............கோவைகள்
ஒவ்வொன்றாய்ச் சரிதம் சொல்லும்
கோரிக்கைகளாய் வேண்டுதலாய்
விடய ஏடுகள் புரளும்
கோவைகளின் உயிர் மூச்சில்
உழன்று சோம்பிய முகங்கள்...’
(என் கடன்)
காரியாலயமொன்றினைக் கண் முன் கொண்டு வரும் சித்திரமாய் விளக்குகிறது ‘என்கடன்’.
‘அனுபவங்களின் அசைபோடல்களில்
ஆனந்தமும் சோகங்களும்
கற்ற கணிதமும் விஞ்ஞானமும்
அந்நியமாய்த் தோன்றும்
பேரேடுகளும் காசோலைகளும்
பிறிதொரு பாடமாய் மாறும்
அதிகாரியின் பணிப்புகளில்
இறுக்கங்கள் சூழ்ந்திருக்கும்
பெற்ற பட்டங்கள்
நூலிழையிற் தொங்கும்
தன்வயமிழந்து வெற்ற மனிதனாய்...
என அவரது (வ. ஐ. வரதராஜனது) ‘ஓய்வின் அசைபோடல்களில்...’ யதார்த்தமான பணியிட அனுபவங்களையும் ஈரமற்ற சூழலையும் எமக்கு உணர்த்துகிறது.’
‘முப்பத்தேழு வருடங்களாக அரச பணியில் ஈடுபட்டிருந்த வரதராஜன், தனது பணி ஓய்வு பெற்ற பிறகு, தன் முதலாவது தொகுப்பைத் தந்துள்ளார்’ என இதை மிகச் சரியாகவே கணித்திருக்கிறார் சத்தியபாலன்.
வே. ஐ. வரதராஜனின் கவிதைகள் பெரும்பாலும் அவருடைய வாழ்க்கை அனுபவங்கள், அவர் வாழ்ந்த சூழல், அவருடைய கால நிகழ்ச்சிகள், அவருடைய பணி, பணியிடம், அவருடைய இயல்பு என்ற அமைவுளைக் கொண்டவையாக உள்ளன. குறிப்பாக வரதராஜனின் பணிக்கால வாழ்க்கையையும் அதன்போதும் அதன் நிமித்தமாகவும் சந்தித்த அனுபவங்களையும் மனிதர்களையும் அவர்களுடைய நடத்தைகளையுமே பேசுகின்றன.
இந்த மாதிரியான அரச பணி அல்லது அலுவலகப் பணி வாழ்க்கையைப் பற்றி ஏராளம் சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளில் வெளிவரும் ஏராளம் தொடர்கதைகளின் மையக் களம் அலுவலகங்களையும் அங்குள்ள மனிதர்களைப் பற்றியவையுமே. இப்படி எழுதப்படுகின்றவற்றில் சில தேறியிருக்கின்றன. பலதும் வெறுமனே களிப்பூட்டும் வாசிப்புக்கே தீனியாகின்றன. இப்போது தமிழில் உள்ள பெரும்பாலான தொலைக்காட்சிகளின் நாடகங்களில் அலுவலகங்களும் அங்குள்ள மனித நடத்தைகளும் பிரச்சினைகளும்தான் மையப்படுத்திக் காண்பிக்கப்படுகின்றன. இவையும் சுவாரஷ்யப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டவையே.
ஆனால், வரதராஜன் இந்த அலுவலக வாழ்க்கையையும் அங்குள்ள யதார்த்தத்தையும் அதிகம் பேசாமல் தன்னுணர்வின் வழியாக வெளிப்படுத்துவதற்கு எத்தனிக்கிறார். சுவாரஷ்யமூட்டல் என்பதை விட இதை அவர் பகிர வேண்டும் என்றே உணர்கிறார்.
அலுவலக வாழ்க்கை என்பது பெரும்பாலும் கசப்பூட்டும் அனுபவத்தையுடையது. அது இயந்திரமயமாக அவர்களை விரைவில் மாற்றிவிடுகிறது. ஓடியோடித் தேயும் இயந்திரத்தைப் போன்றே அங்கே வேலைசெய்கிற மனிதர்களையும் மாற்றி விடுகிறது. எல்லா ஊழியர்களும் களைத்துச் சோர்ந்தே தினமும் வீடு திரும்புகிறார்கள். காலையில் புத்துணர்ச்சியுடனும் பொலிவுடனும் பணிமனையின் படிகளில் ஏறும் ஊழியர்கள் மாலையில் வாடித் தளர்ந்து படியிறங்குகிறார்கள்.
இறுதியில் களைத்துச் சோர்ந்த நிலையிலேயே ஓய்வுபெறுகிறார்கள். இந்த ஓய்வு பெறுதல் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு விடுதலையே. ஆனால் அதற்குள் அலுவலம் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய அவலப்பரப்பே. அது அவர்களைச் சாறாகப் பிழித்து சக்கையாக்கி விடுகிறது. அதிலும் அதிகாரிகளும் அவர்களுடைய அதிகாரமும் மனச் சாட்சியுள்ள – சமூக அக்கறையுடைய ஒரு பணியாளரைச் சிதைத்துக் கிழடுதட்ட வைத்துவிடுகின்றன. சேவைக்குப் பதிலாக, சேவையளித்தலை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, சேவையாளனின் உரிமைகள், பொறுப்புகள் என்பவற்றைப் பேணுவதற்கு அப்பால் அதிகாரிகள் கையில் எடுத்து நிலைநாட்டும் அதிகாரம் அலுவலகத்தின் – பணியின் அடிப்படைகளுக்கே எதிரானது. ஆனாலும் ஒரு சராசரியான பணியாளனால் இந்த அதிகார நடத்தைக்கு முன்னே எளிதாக இசைந்து கொள்ளவும் முடியாது@ எதிர்க்கவும் முடியாது. ஆகவே அவருக்கு இது ஒரு சித்திரவதையே. ‘நாற்காலி அதிகாரம்’ என்ற குறியீட்டை நாம் இந்த வகையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். எந்த அதிகாரமும் சித்திரவதைக்குள்ளாகும் உளநிலையையே உற்பத்தி செய்கிறது. இந்த அதிகார நிலையை இங்கே வே. ஐ. வரதராஜனும் தன்னுடைய வாழ்விலும் கவிதைகளிலும் உணர்ந்துள்ளார்.
வரதராஜனின் பெரும்பாலான கவிதைகள் அவருடைய பணி மற்றும் பணியிடம் பற்றியவையே. நிறைவேறாத விருப்பங்கள், தேவைகளை அவர் சொல்கிறார்,
‘இந்தச் சேவல் ஆங்காரத்துடன்
எப்போதும் கூவும்
செம்பழுப்பு இறகுகளை அடித்து
சிவப்பான கொண்டயை அசைத்து
அதிகாரத் தொனியுடன்,
குரலெடுப்பும்...’
(சேவல்)
‘எப்போதும் தேவைப்படுவது
இல்லாத ஒன்றுதான்...
...... வேண்டுதல்கள் யாவும்,
மனக் கதவினுள்ளே
இறுகப் பூட்டியிருக்கும்..’
(பூட்டிய கதவுகள்)
‘நான் நானாக இல்லை
என் சுயமிழக்க
துரத்தப்படுகிறேன்
கதிரையில் உறங்கும்
அதிகாரங்கள்
கண் மூடியபடியே
ஏவிக் கொண்டிருக்கும்...’
(வேலியும் பயிரும்)
‘.... மேலாதிக்க முனைப்புகளும்
அதிகாரத் தளைகளும்
திறமைகளை நசுக்கி ஆளும்
நிறைவேற்ற முடியாத
தேவைகள் முடிவிலியாய்
பூஜ்ஜியத்துள் உறையும்.
(பூஜ்ஜியம்)
இத தவிர, வாழ்வின் பிற அனுபவங்கள், பிற அக்கறைகளைக் குறித்து வரதராஜனின் உணர்கையும் கவனத்திற்குரியது. மனிதாபிமான நிலைப்பட்டு நின்று மனித நடத்தைகளின் பொய்த்தன்மைகளை வரதராஜன் வெளிப்படுத்துகிறார் (குரூரத்தின் சாட்சிகள், புதிய முகமூடிகள்....). சமகால வாழ்வில் தொலைந்து போன கிராமங்களையும் அவற்றின் அடையாளங்களையும் சிதைந்த வாழ்வையுமிட்டுத் துக்கங்கொள்கிறார் (தொலைந்த கிராமங்கள்). முதிர்கன்னியரின் நிலை கண்டு துயருறுகிறார் (படுநிலம்). இப்படிப் பல.
ஆனால், இந்தத் தொகுதியில் முக்கியமான கவிதைகளாக – செம்மையும் அழகும் கூடிய கவிதைகளாக இருப்பது ‘அப்பாவின் கார்’ ‘பல்லி’, ‘யதார்த்தமும் மாய யதார்த்தமும்’ ‘படுநிலம்’என்ற கவிதைகள். இதேவேளை பொதுவாகவே வரதராஜனின் கவிதைகள் எல்லாவற்றிலும் அவருடைய இயல்பினைப்போல ஒரு மென்தன்மையுடைய உரைப்பொலியே உண்டு. இதேவேளை இங்கே கவனிக்கவேண்டிய இன்னொரு விசயம், இந்தக் கவிதைகள் பொதுவான அல்லது வழமையான ஈழத்துக் கவிதைகள் பேசும் உக்கிர அரசியற் பரப்பிற்கு வெளியே நிற்கின்றன என்பது. ஆனால், அப்படி உக்கிரமாக அரசியலைப் பேசத்தான் வேணுமா என்று எழும் கேள்வியும் ஒரு பக்கத்திலுண்டு. தன் வாழ்வனுபவத்தின் ஒரு பகுதியைப் பேசிய வரதராஜன் மறு பகுதியை எவ்வாறு உணர்ந்தார்? என்பது கேள்விக்குரியது.
‘என் கடன்’ என்ற தலைப்பில் ‘ஜீவநதி’யின் 17 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் வே. ஐ. வரதராஜனின் இந்த நூல் இவருடைய முப்பதாண்டுகால எழுத்தின் முதற்தொகுதி.
நன்றி :- புல்வெளி வலைப்பதிவு - கருணாகரன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)