புதன், நவம்பர் 3

கலை வாழ்வு : கலைக்கலசம் வேலுப்பிள்ளை தில்லையம்பலம்

 


- சு. குணேஸ்வரன்

 

   ஒவ்வொரு கிராமங்களும் தங்கள் வாழ்வையும் வரலாற்றையும் மிக நிதானமாக ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வுக்கூடாக சமூக வரலாறுகளாகப் பேணிக்கொண்டிருக்கின்றன. அந்த வரலாறுகளை பெருவீதியில் செல்லும் ஒருவரால் நிச்சயம் கண்டுகொள்ளவே முடியாது. அந்தக் கிராமங்களின் கோயில்கள், பாடசாலைகள், வாசிகசாலைகள், விளையாட்டு மைதானங்கள், குச்சொழுங்கைகள், கேணிகள், குளங்கள் என எல்லாவற்றிலும் வரலாறு வாழ்ந்து கொண்டிருக்கிறது. தனி மனிதனின் வாழ்வென்பதும் தனியே உண்பதும் உடுப்பதும் உறங்குவதும் என்ற வாழ்வல்ல. அது ஒரு சமூக வாழ்வு.  அதற்குள்ளேதான் நாங்கள் நடந்து வந்த பாதைகள் உள்ளன. வேர்கள் உள்ளன. ஏற்ற இறக்கங்கள் உள்ளன. அந்த வகையில் உழைப்பும் உயிர்ப்புமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமங்களில் ஒன்றுதான் கெருடாவில். அந்தக் கிராமத்தின் கலைஞர் வேலுப்பிள்ளை தில்லையம்பலம் தனக்குள்ளும் ஒரு கலை வரலாற்றைக் கொண்டுள்ளார். அது கெருடாவில் கிராமத்தின் கலை வரலாற்றுடன் இணைத்துப் பார்க்கவேண்டியதாகும்.

   வேலுப்பிள்ளை தில்லையம்பலம் 24.06.1949 இல் பிறந்தார். கெருடாவில் கிராமத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர். மூத்த கூத்துக் கலைஞர்களில் ஒருவர். அவரின் கலை வாழ்வு பற்றிய ஒரு அறிமுகக் குறிப்பாக இது அமைகிறது.

   வேலுப்பிள்ளை தில்லையம்பலம் ஆரம்ப இடைநிலைக் கல்வியை யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பெற்றார். தனது 13 ஆவது வயதில் இருந்து நாடகத் துறைக்குள் நுழைந்தார்.

   பாடசாலைக் கல்வியைக் கற்கும் காலத்திலேயே தேவாரம் பாடியும் மேடை நிகழ்வுகளில் பாடல்கள் பாடியும் வந்ததனால் அவரது பாடும் ஆற்றலைக் கண்டு நடிப்புத் துறையிலும் அவரின் பெரியவர்கள் ஈடுபடுத்தினார்கள். 1963 ஆம் ஆண்டு விவேகானந்தா சனசமூக நிலையத்தின் கலைவிழாவில் காத்தவராயன் சிந்துநடைக் கூத்தில் “பிள்ளைக் காத்தான்’ பாத்திரமேற்று நடித்தார்.

   1970 இல் அண்ணாவியார் கிருஷ்ணபிள்ளை அவர்களின் வழிகாட்டலில் ‘நடுக்காத்தான்’ பாத்திரம் ஏற்று நடித்தார். கெருடாவில் கிராமத்தின் சனசமூக நிலைய கலைவிழாக்கள்,கோயில் விழாக்கள், சிறப்பு விழாக்களில் எல்லாம் இவ்வாறு நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. காட்டுப்புலம், கெருடாவில் கொண்டலடி வைரவர், சீலாப்புலம் மைதானம் ஆகிய சொந்தக் கிராமத்தின் மேடைகளில் காத்தவராயன் ‘நடுக்காத்தான்’ பாத்திரமேற்று நடித்தார். இதன்பேறாக தனது கிராமம் தாண்டி அயற்கிராமங்களாகிய உடுப்பிட்டி, வல்வெட்டி, கரணவாய் ஆகியவற்றிலும் நடிக்கும் வாய்ப்புப் பெற்றார்.



   1975 ஆம் ஆண்டு காத்தவராயனில் ‘பிற்காத்தான்’ பாத்திரம் ஏற்று மேலும் பல மேடைகளில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பலரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டார். 1980 இல் சிவபெருமான் பாத்திரமேற்றும் நடித்தார்.

   காத்தவராயன் சிந்துநடைக் கூத்தில் பெயர் பெற்ற அண்ணாவியார்களின் வழிகாட்டலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்ததாகக் கூறியுள்ளார். அண்ணாவியார் அருணாசலம் வல்லிபுரம், அண்ணாவியார் சிவா அப்பா, கற்கோவளம் நந்தகோபால் அண்ணாவியார் ஆகியோர் தனது நடிப்புத் திறனுக்கு வழியமைத்துக் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

   உடுப்பிட்டி அண்ணாவியார் கலாபூஷணம் கி. தவராசா அவர்களுடன் இணைந்து பல மேடைகளில் நடித்தும் பாடியும் வந்துள்ளார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள் போலவே தமது கலைவாழ்வில் பயணம் செய்தனர். உடுக்கு அடித்தல், இசைப்பாடல்கள் பாடுதல், நாடகம் நடித்தல், கூத்துப் பயிற்றுவித்தல் என அதிகமும் ஒன்றாகவே செயற்பட்டனர்.

   1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கெருடாவில் விவேகானந்தா சனசமூக நிலையத்தின் கலை விழாவுக்கென அவ்வூர்ச் சிறார்களைக் கொண்டு மூன்று மணித்தியால காத்தவராயன் சிந்துநடைக் கூத்தினைப் பயிற்றுவித்து நெறியாள்கை செய்து மேடையேற்றியிருக்கிறார்.

   உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் கலை விழாவிலும் சிறுவர்களுக்குப் பயிற்றுவித்து மூன்று மணித்தியால காத்தவராயன் சிந்துநடைக் கூத்தினை மேடையேற்றியிருக்கிறார்.

   பிற்காலத்தில் 1987 இற்குப் பின்னர் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு அதிகமும் மேடைப்பாடல்களைப் பாடியிருக்கிறார். வே. தில்லையம்பலமும் கி. தவராசாவும் இணைந்து சுவிஸ் வாழ் உறவுகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப காத்தவராயன் சிந்துநடைக் கூத்தினை ஒலிப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள். இருவரும் இணைந்து மேடைப் பாடல்களை கெருடாவில், உடுப்பிட்டி, தும்பளை, நெல்லண்டை, கைதடி, புத்தூர், அச்சுவேலி, அளவெட்டி, கரவெட்டி, அண்ணாசிலையடி, குமுழமுனை, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் அழைக்கப்பட்ட கலை நிகழ்வுகளில் பாடியிருக்கிறார்கள்.

   இவை தவிர கிராமங்களில் இடம்பெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் தனிப்பாடல்களையும் மேடைப்பாடல்களைப் பாடவும் அழைக்கப்பட்டிருக்கிறார். முதிர்ந்த வயதிலும் தமது உடல் உபாதைகளை நோக்காது சமூகத்தின் வேண்டுதல்களை நிறைவேற்றி உள்ளார். வடமராட்சியில் வே. தில்லையம்பலம் அவர்களின் குரல் ஒலிக்காத கிராமங்களே இல்லையென்று கூறலாம்.

   இவர் நாடகக் கலை தொடர்பான ஆவணங்களை 1963 தொடக்கம் சேகரித்து வைத்திருந்தார். அவற்றுள் புகைப்படங்கள், நிகழ்வு அழைப்பிதழ்கள், தொடர்புடைய ஒலி ஒளிப்பதிவுகள் ஆகியன இருந்தன.1987 இல் பெரும் எடுப்பில் வடமராட்சியில் இடம்பெற்ற “ஒப்பிரேசன் லிபரேசன்” நடவடிக்கையின்போது கெருடாவில் கிராமமும் அழிவுக்கு உட்பட்டது. இவரின் ஆவணங்கள் அனைத்தும் எரிந்தும் அழிந்தும் விட்டன. பிற்காலத்தில் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளாலும் சேகரித்தவற்றைப் பேணமுடியாமற்போய்விட்டதென கூறினார்.

   பிள்ளைக்காத்தான், நடுக்காத்தான், பிற்காத்தான்,சிவபெருமான், ஆகிய பாத்திரங்கள் ஏற்று பல மேடைகளில் தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்தார் வே. தில்லையம்பலம் அவர்கள். ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் இப்பாத்திரங்களை ஏற்று நடித்திருத்திருக்கிறார்.

   இக்கலைப்பணியைப் பாராட்டி அவ்வப்போது  கௌரவித்திருக்கிறார்கள். கிராமத்தின் மேடைகளில் பல சந்தர்ப்பங்களில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். கெருடாவில் விவேகானந்தா சனசமூக நிலையம், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகம், குமுழமுனை புதுக்குடியிருப்பு கிராமத்தின் கலைக்கழகங்களில் சமூக அமைப்புக்களின் மூலமாக கௌரவம் பெற்றிருக்கிறார்.

   பின்னர், கம்பர்மலை வேலுப்பிள்ளை நினைவாலயத்தினர் 2018 ஆம் ஆண்டு கலைஞர் கௌரவிப்பின்போது பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவித்தனர். அதேயாண்டு கலாவாணி சனசமூகநிலையத்தின் முதியோர் கௌரவிப்பின்போது வே. தில்லையம்பலமும் தவராசாவும் இணைந்து காத்தவராயன் சிந்துநடைக்கூத்தின் ஒரு பகுதியை ஆற்றுகையாக நிகழ்த்தினர். அந்நிகழ்விலும் கௌரவம் பெற்றிருக்கிறார்.


   ஆனாலும் அரச திணைக்களங்களின் கௌரவத்திற்காக ஆவணங்களைத் தயாரிப்பதில் இருந்த இடர்பாடுகள் காரணமாக மிகத் தாமதமாகவே அரச அங்கீகாரத்துடனான ஒரு கௌரவம் கிடைத்தது. பருத்தித்துறைப் பிரதேச செயலக கலாசார அதிகாரசபை வருடாந்தம் நிகழ்த்தும் கலைஞர் கௌரவிப்பில் இவரது கலைச்சேவையை மெச்சி சிந்து நடைக்கூத்துக்காக ‘கலைக்கலசம்’ விருதினை 27.12.2019 இல் பிரதேச மட்டத்தில் வழங்கிக் கௌரவித்தது.

   இதன் பின்னர் வேறு விருதுகளையும் கலைக்கழகங்கள் வழங்கின. பொலிகை தில்லைக்காளி அம்மன் ஆலயம், நீண்ட காலமாக நாட்டுப்புறக் கலையில் ஈடுபட்டு வந்தமைக்காக 24.10.2020 இல் “கலைக்கதிர் விருது” வழங்கிக் கௌரவித்தது. நாடகத் துறைக்காக சங்கவி பிலிம்ஸ் பிறைவேட் லிமிட்டெட் “தேசிய கலாவிபூஷண விருது” 07.03.2021 இல் வழங்கிக் கௌரவித்தது. 



இதன் பின்னர் இந்த விருதுகளைப் பெற்ற தங்கள் கிராமத்து மூத்த கலைஞனைக் கௌரவிக்கவேண்டும் என்ற பெருவிருப்பில் கெருடாவில் நண்பர்கள் குழாம் ஒரு பெருவிழாவை 11.03.2021எடுத்துக் கௌரவித்தனர்.

   இவருடைய கூத்துப்பாடல்களை ஒலிப்பதிவு செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன் சௌ. சிறீதாசன், ப.அசோதரன் ஆகியோர் வே. தில்லையம்பலம் அவர்களுடன் தவராசா அவர்களையும் அழைத்து காத்தவராயன் சிந்துநடைக்கூத்துப் பாடல்களின் ஒரு பகுதியை ஒலிப்பதிவு செய்தனர். இந்த முயற்சி பாராட்டத்தக்கது.

   இவையெல்லாம் அவரின் கலைவாழ்வின் பதிவுகளாகும். பிற்காலங்களில் சமூக நாடகங்களில் பங்கெடுத்த தலைமுறையொன்று கெருடாவில் கிராமத்தில் உருவாகிய வரலாறு ஒன்றும் உள்ளது. 05.10.2021 இல் மறைந்த வே. தில்லையம்பலம் அவர்களது கலைவாழ்வு தொடர்பான புகைப்படங்கள், ஒளிப்பேழைகள், ஒலிப்பதிவுகள், மேடைப்பாடல்கள் ஆகியன ஆங்காங்கே சிதறியுள்ளன. அவற்றை ஒன்றுதிரட்டி எதிர்காலத்தில் முழுமையான ஒரு ஆவணமாக வருங்காலத் தலைமுறையினரிடம் கையளிக்கவேண்டும்.

கெருடாவில் கிராமத்தின் கலைப்பங்களிப்பில் வே. தில்லையம்பலம் அவர்கள் மறக்கமுடியாத மண்ணின் கலைஞராக என்றும் வாழ்வார்.

(2019 ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரதேச செயலக கலாசார அதிகார சபைக்குக் கொடுத்த வே. தில்லையம்பலம் அவர்களின் வாய்மொழித் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குறிப்புக்களின் உதவியுடனும் இக்கட்டுரை எழுதப்பட்டது.)