மறைந்தவர்களின் நினைவாக வெளியிடப்படும் நினைவு நூல்களின் வரிசையில் ‘அம்மா’ என்ற தலைப்பில் ஈழத்தில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அம்மா என்ற வார்த்தையின் தீராத ஆசையின் விளைவாக மேலும் ஒரு நூல் கடந்த 15.04.2011 அன்று புதுத்தோட்டம் நெல்லியடியில் இருந்து கி. கலைச்செல்வனைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு அமரர் முருகேசு செல்லம்மா என்ற அம்மாவின் நினைவாக வெளிவந்திருக்கிறது. தொகுப்பின் தயாரிப்பிலும் வழிகாட்டலிலும் உதவியிருப்பவர் என திரு மு. குணரத்தினம் (குணம்) என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நூலில் ந.மயூரரூபன், த.அஜந்தகுமார், இ.இராஜேஸ்கண்ணன், துவாரகன், சி.பாலமுரளி, கே. ஆர் திருத்துவராஜா, கி.கலைச்செல்வன், டாக்டர் வே.கமலநாதன், வே.சிவசிதம்பரம், ம.பிறேமா, கி.பி மாதுளன், வை.நாகநாதன், சு.விஜயகுமார், செ.றமேஸ், க.மா.அறிவழகன் ஆகிய 15 பேரின் கவிதைகள் உள்ளன. எல்லாக் கவிதைகளிலும் அம்மாவின் உணர்வு தெறிக்கிறது.
தொகுப்பிலுள்ள கவிதைகளில் என்னைப் பாதித்த நண்பர் த. அஜந்தகுமாரின் கவிதையொன்றை இணைய வாசகர்களுக்கு முழுமையாத் தர விரும்புகிறேன்.
அம்மா
-த. அஜந்தகுமார்
இந்தப் பெயரை உச்சரித்து உச்சரித்து
இது தேய்ந்து போனதுண்டா?
இல்லை
வளர்ந்து கொண்டேன்
உன் மடியில் இருத்திக்
கதைபேசித் தலைகோத
நிஜமாவே நேரங்கள்
உனக்கென்றும் இருந்ததில்லை
கால்களில் பூட்டிய சக்கரங்கள்
என்றும் நின்றதில்லை
உன் இருதயம் சுமக்கும்
அன்பும் வற்றியதில்லை
அன்பு வசனங்கள் பேச
உனக்குத் தெரியாது
ஆனால்
அன்பின் உருவமாய் நீயிருப்பாய்
எனது மகிழ்ச்சிகளை
வளர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாது இருக்கலாம்
ஆனால் எனது ஒவ்வொரு சிரிப்பிலும்
ஆயிரம் தடவை மலர்பவள் நீ
உனது பித்த வெடிப்புக் கால்களை
தேயும் கைகளை
தடவிக் கொடுக்க ஆசைப்படுகிறேன்
எனினும்
நின்றுவிட உன்னால் முடிந்ததில்லை
என்னால் அன்பு செலுத்தக் கூடியளவு
உன்னை நேசிக்கிறேன்
என் நேசத்தினால் வாழ்வாய் நீ
உன்னால் வாழ்வேன் நான்
---
நன்றி குணேஸ் அண்ணா
பதிலளிநீக்கு