வியாழன், ஆகஸ்ட் 4

கருணாகரமூர்த்தி ஓர் அற்புதமான கதைசொல்லி




க. நவம்

எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தியின் 'பதுங்குகுழி' சிறுகதைத் தொகுதி கடந்த மாதம் கனடா, ரொறொன்ரோ நகரில் வெளியிடப்பட்டபோது ஆற்றிய உரை.


'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்ற கூற்றுக்கிணங்க அறிவு புகட்டிய ஆசான்களை ஆயுள் உள்ளவும் நன்றியோடு நினைவுகூரும் நல்லவர்களும் உள்ளார்கள். ஏற உதவிய ஏணியை ஒரு பொருட்டாக மதிக்காமல் எட்டி உதைப்பவர்களும் உள்ளார்கள். கண்ட இடங்களில் 'சேர்' என்று சிலர் விழிப்பார்கள். இன்னும் சிலர் ’மாஸ்ரர்’ என்பார்கள். வேறுசிலர் வாத்தியார் என்பார்கள். கண்காணாவிடங்களில் வாத்தி என்றும், சட்டம்பி என்றும், வாஞ்ஞை மிகைப்படின் - கெட்ட கெட்ட வார்த்தை கொண்ட பட்டங்கள் சொல்லியும் சிலர் வசை பாடுவார்கள்.

நண்பர் கருணாகரமூர்தியோ தமது ஆதர்ஸமும் ஆசானும் நண்பருமாகிய அதிபர் திரு. கனகசபாபதி அவர்களுக்கு இந்த ஆக்கத்தைச் சமர்ப்பணம் செய்து, அவரை மட்டுமன்றித் தம்மையும் பெருமைப் படுத்திக்கொண்டுள்ளார். இச்சோபிதமானது, அதிபரது முகத்தில் மட்டுமன்றி ஊரில் சோக்கட்டி தூக்கியதால் – ‘சோக்கட்டி தூக்கியதால் மட்டுமே’ – அதிபரது சொந்தக்காரனான எனது முகத்திலும் புதுவித சோபையை ஏற்படுத்துகின்றது, ஒருவித நம்பிக்கையுடன்!

கடந்த ஒரு வருடத்துக்குள் 12 நூல்களை நான் விமர்சனம் செய்திருக்கின்றேன். நேர்மையான, ஆக்கபூர்மான விமர்சனங்களால் - இங்கு பெயர் சொல்ல விரும்பாத - சில நட்புக்களை நான் இழந்திருக்கிறேன், 'ஆரோக்கியமான விமர்சனத்தால் காப்பாற்றப்படுவதை விட, ஆரவாரம் மிக்க வெறும் புகழ்ச்சியினால் அழிந்துபோவதையே நாம் பெரிதும் விரும்புகிறோம்' என்பதற்கு அடையாளமாக!

அதேவேளை நேரிய, கூரிய விமர்சனங்களால் சில நல்ல புதிய நட்புக்களைப் பெற்றும் இருக்கின்றேன். மெலிஞ்சி முத்தன், ஸ்ரீரஞ்சனி, அகணி சுரேஷ் போன்ற நல்ல நண்பர்கள் அவர்களுள் அடங்குவர்.

கடந்த வருடம் ஜேர்மனியிலிருந்து கனடா வந்திருந்த நண்பர் கருணாகரமூர்தியின் 'கூடு கலைதல்' சிறுகதைத் தொகுதியை நான் விமர்சனம் செய்திருந்தேன். இப்போது மீண்டும் வந்திருக்கும் நண்பர், தமது 'பதுங்கு குழி' சிறுகதைத் தொகுதியையும் நான்தான் விமர்சிக்க வேண்டும் என்று விடாப்பிடியாகக் கேட்டுக்கொண்டார், விமர்சனத்தால் நமது நட்பு இன்னமும் நஞ்சேறிச் செத்துப்போய்விடவில்லை என்பதற்கு ஆதாரமாக!

மனிதன் தனது வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் இருந்து, பல்வேறு வடிவங்களில் கற்பனை செய்துபார்த்து, அளவிலா ஆனந்தம் அடைகின்றான். வாழ்க்கையைக் கற்பனை செய்து, பேசி மகிழ்கின்றான். ஓவியமாக வடித்துக் கண்டு மகிழ்கின்றான். படம்பிடித்துப் பார்த்து மகிழ்கின்றான். அதே வாழ்க்கையைக் கதையாக எழுதிப் படித்து மகிழ்கின்றான். இவ்வாறாகக் கற்பனை செய்து பார்க்கப்படும் வாழ்க்கையானது தனது உண்மை வாழ்க்கையை ஒத்ததாக இருந்தால், இக்கற்பனையை ஓர் உன்னதமான கற்பனை என எண்ணி அவன் பரவசம் அடைகின்றான்.

மனித வாழ்வில் இன்ப துன்பங்கள் போதுமான அளவுக்கு இல்லாதிருப்பதாலேயே இவ்விதமாக மனிதன் கற்பனையில் அவற்றைக் கண்டுகளிக்கின்றான். எனவே வாழ்க்கையின் போதாமை காரணமாக மனிதன் இலக்கியங்களை நாடுகின்றான் என்ற உண்மை இதிலிருந்து புலனாகின்றது!

இலக்கியம் மனித வாழ்க்கையை உள்ளது உள்ளவாறே படம் பிடித்துக்காட்டும் ஓர் ஊடகம் அல்ல. வாழ்க்கையை எந்தவொரு ஊடகத்தாலும் உள்ளவாறு படம் பிடித்துக் காட்ட முடியாது. பதிலாக வாழ்க்கையை மறு அமைப்புச்செய்து, செம்மைசெய்து, பிரதிபலிக்கும் பணியையே இலக்கியம் செய்கின்றது.

இந்த இலக்கியத்தின் நவீனகால வடிவங்களில் ஒன்றுதான் சிறுகதை. 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட செழுமையான பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ்க் கவிதையோடு ஒப்பிடும்போது, தமிழ்ச் சிறுகதைக்கு இன்னமும் 100 வயதுகூட ஆகவில்லை. ஆயினும் அந்தக் குறுகிய கால எல்லைக்குள் தமிழ்ச் சிறுகதை குறிப்பிடத்தக்க அளவில் படிப்படியான, பரிணாம வளர்ச்சியை எய்தியுள்ளது என்பதற்கு நண்பர் கருணாகரமூர்த்தியின் 'பதுங்கு குழி' ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
சிறந்த கலை இலக்கியப் படைப்பொன்றின் பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக, அதனை ஒத்த புதிய படைப்புக்கள் அமையவேண்டும் என எதிர்பார்க்கப்படுதல் மரபு. ஆனால் எந்த ஒரு கலை இலக்கியப் படைப்பையும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று வரையறுக்க முடியாது. சிறுகதைக்கும் இச்சித்தாந்தம் பொருந்தும்.

சிறிய கதைதான் சிறுகதை எனச் சுலபமாகக் கூறிவிட முடிகின்றபோதிலும், அளவு அல்லது நீளம் அல்லது பருமன் என்ற ஒரே உரைகல்லை வைத்துச் சிறுகதைக்கு வரைவிலக்கணம் வகுப்பது தவறு. சிறுகதை என்பது சிறியதாகவும் இருக்கத் தேவையில்லை. அதில் கதையும் கட்டாயமாக இருக்கத்தான் வேண்டுமென்றில்லை.
உருவத்தில் சிறியதோ பெரியதோ, ஒருமைப்பட்ட ஓர் உணர்வைக் காட்டுகின்ற, உரைநடையில் எழுதப்பட்டுள்ள ஒரு கதையைச் சிறுகதை எனலாம். Short Story is a love affair and a novel is marriage என்று சமகால அமெரிக்க எழுத்தாளர் Lorrie Moore எதனைக் கருத்தில் கொண்டு கூறியிருப்பார் என்பது ஊகிக்கக் கூடியதுதான்.

ஆயினும் சிறுகதை, காதல், நாவல், கலியாணம் ஆகிய நான்கும் இந்நாட்களில் ஒருசில மணித்துளிகளையோ அல்லது நீண்ட பல வருடங்களையோ எல்லைகளாகக் கொண்டிருக்கலாம் என்பது நடைமுறை உண்மை.

11 சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் வசதி கருதி ஏற்கனவே வகுக்கப்பட்ட சிறுகதை வரம்புக்குள் அடங்கும் கதைகளும் - அடங்க மறுக்கும் கதைகளும் ஒருங்கே இடம்பெற்றுள்ளன. பின்னைய வகைக்கு 'அந்தி மயங்க முன்னான பொழுதுகள்' 'சூரியனிலிருந்து வந்தவர்கள்' 'பதுங்கு குழி' 'முட்டாப் பசங்கள்ல காந்தியும் ஜின்னாவும்' ஆகிய கதைகளை உதாரணங்களாகச் சொல்லலாம்.

'ஒரு சிறுகதையை நகர்த்திச் செல்லும்போது, தேவையற்ற எதையும் அதிலிருந்து அகற்றிவிட வேண்டும்' என்று சிறுகதைக்கு இலக்கணம் வகுத்த எட்கா அலன்போ கூறியுள்ளார். ஆனாலும் சிறுகதை இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை ஒட்டி, சிக்கனமாகச் சொல்ல வேண்டும் என்ற அவரது பரிந்துரையையும் மீறி, இக்காலச் சிறுகதையாசிரியர்கள் புதிய உத்திகளைக் கையாண்டு, விதம் விதமான வடிவங்களை அமைத்து, புதுமையான சிறுகதைகளை ஆக்கி, தமது ஆற்றல்களை வெளிப்படுத்துகிறார்கள். அதில் பலர் வெற்றியும் பெறுகிறார்கள்.
அந்தவகையில் மேற்சொன்ன சிறுகதை வரம்புக்குள் அடங்காத 4 கதைகளையும் இத்தொகுதியில் உள்ளடக்கி இருக்கும் நண்பர் கருணாகரமூர்த்தியும், தமது துணிகர முயற்சியில் வெற்றிபெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்.

தத்தமக்கு நாட்டம் உள்ள துறைகளில் தம்மை மறந்து ஈடுபட்டலையும் கணவர்கள் இருவரையும், அவர்களது அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்கும் மனைவியர் இருவரையும் 'அந்தி மயங்க முன்னான பொழுதுகள்,' மற்றும் 'கவிஞனின் மனைவி' ஆகிய கதைகளிலும் -
ஞாபக சக்தியை இழந்த நண்பனொருவனை 'சிநேகிதனைத் தொலைத்தவன்' என்ற கதையிலும், அதே ஞாபக சக்தியை இழந்த ஒரு தாயை 'நல்லாக் கேட்டுத்தான் என்னசெய்யப் போகிறேன்?' என்ற கதையிலும் -
ஈழப் போரின் அவலங்களையும், துன்ப துயரங்களையும் 'சூரியனிலிருந்து வந்தவர்கள்' மற்றும் 'பதுங்கு குழி' ஆகிய கதைகளிலும் -
புலம்பெயர் வாழ்வு கற்றுத்தந்த புதுவித பாடங்களை 'எல்லைகள் அற்ற உலகம்' மற்றும் 'முட்டப்பாஸ்' ஆகிய கதைகளிலும் -
கஞ்சத்தனம் மிகுந்த இரு கதை மாந்தரை 'ஒரு கஞ்சலுடன் உல்லாசப் பயணம் போதல்' மற்றும் 'முட்டாப் பசங்கள்ல காந்தியும் ஜின்னாவும்' கதைகளிலும் தரிசிக்கலாம்.

இவ்வாறாகச் சில பொதுப் பண்புகளின் அடிப்படையில் இந்தத் தொகுதியிலுள்ள 11 கதைகளையும் 5 சோடிகளாகப் பிணைக்கின்றபோது, 'அபேதம்' என்ற கதை மட்டும் அனாதரவாகப் பேதப்பட்டு நிற்கின்றது. ஆனால் கூர்ந்து அவதானித்தால், இந்தக் கதையும் இரண்டு வெவ்வேறு கதைகளைக் கொண்ட ஒரு 'சோடிக்கதை' என்றுதான் சொல்ல வேண்டும். எங்கோவொரு இணைய உலாவல் நிலையத்தில் காத்துக்கிடந்து, கைக்காசைக் கொடுத்து உலாவி, முகந்தெரியாத ஒருத்தியிடம் தன் பாலியல் தாபங்களை வக்கிரமாகப் பகிர அலையும் ஒரு விசில் மறவனின் கதை ஒன்று. ஆண்டுக் கணக்காகப் பல கலாசாலைகளின் கதிரைகளைத் தேய்த்து, முனைந்து, முனைவர் பட்டங்கள் வாங்கி ஐரோப்பாவரை வந்திருந்த ஒரு பிரகிருதியின் கண்ணியத்தின் கதை மற்றது. பாலியல் வக்கிரங்களின் அடிப்படையில் இவ்விருவரையும் பலவந்தமாக இணைத்து முடிச்சுப் போட முனைந்திருக்கும் ஆசிரியர், இரண்டு கதைகளையும் - குறிப்பாக Chat Room மில் சரசமாடும் அந்த விசில் மறவனின் கதையை அழகுபடுத்தி விருத்திசெய்து தந்திருப்பாரே ஆயின், வெவ்வேறு இரண்டு நல்ல கதைகளைப் படிக்கும் வாய்ப்பை நாம் பெற்றிருப்போம்.

'முட்டாப் பசங்கள்ல காந்தியும் ஜின்னாவும்' கதையில் வரும் நஸீர் நானாவிடமும், 'ஒரு கஞ்சலுடன் உல்லாசப் பயணம் போதல்' கதையில் வரும் ஜொஹானாவிடமும் காணப்படும் கஞ்சத்தனம் நகைப்புக்குரியது. பல இடங்களில் சிரிக்கவும் செய்தோம்.
ஆனால் வைத்தியர் நஸீரின் நடத்தைகளைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தது போன்று, ஜொஹானாவைப் பார்த்து ஏனோ சிரிக்க முடியவில்லை. அவளது நடத்தைகளுக்குக் காரணமாயிருக்கக்கூடிய உளவியல் பின்னணி காட்டப்படாத காரணத்தால்தான், அவளைப் பார்த்துச் சிரிக்க முடியவில்லை போலும்! அனுதாபம்தான் மேலெழுகின்றது!

போரின் அவலத்தை விலாவாரியாகச் சொல்லும் 'பதுங்கு குழி' எனும் சிறுகதையில் 'இட்டமுடன் எம் தலையில், இன்னபடி என்றெழுதி விட்ட சிவன் செத்துவிட்டான்' என்று கடவுளைச் சபித்துக் கண்ணீர்வடிக்கும் மக்களின் துயரம் பாரமாக நெஞ்சை அழுத்துகிறது.

ஆனாலும் ஒரே தன்மையுடைய நீண்ட விவரணங்களும், நேரடி அனுபவமின்மையின் இயல்பறுந்த வெளிப்பாடும் இடையிடையே அலுப்பூட்டுவதாய் இருந்தன. த. அகிலனின் 'மரணத்தின் வாசனை' ஏற்படுத்திய 'மனப் பதகளிப்பை' கருணாகரமூர்த்தியின் 'பதுங்கு குழி' எற்படுத்தத் தவறிவிட்டது - அடிபட்டவனதும் அடிபடுவதைப் பார்த்தவனதும் அவதி வேறுபாடு போல - டானியலதும் செ. கணேசலிங்கனதும் சாதியக் கதைகளுக்கிடையிலான அனுபவ வேறுபாடு போல.

ஆயினும் இவ்வாறான சில அவதானிப்புகளுக்கு மத்தியிலும், படித்து முடித்த போது, என்னை அறியாமலே எனக்குள் கிளர்சியை ஏற்படுத்திய, சமூகத்தை ஆய்வுக்குட்படுத்தி விமர்சனத்துக்குள்ளாக்கிய, பல நல்ல கதைகளைக் கொண்ட ஒரு நூல்தான் இந்தப் 'பதுங்கு குழி.'

ஒரு படைப்பின் உருவம், உள்ளடக்கம், உத்திகள், மொழிநடை என்பவற்றுடன், வாழ்க்கை பற்றிய படைப்பாளியின் கண்ணோட்டம், அனுபவம், கற்பனைவளம், படைப்பாற்றல், படைப்பு மூலமாக உணர்த்த முயலும் செய்தி என்பவற்றின் சீரான ஒருங்கிணைவுதான் அப்படைப்பின் தரத்தை நிர்ணயிக்கின்றது என்பது இலக்கிய அனுபவஸ்தவர்களது முடிபு. இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் பலவும் இத்தகைய படைப்பம்சங்களது ஒருங்கிணைவின் வெளிப்பாடுகளாக இருக்கின்றமை ஒரு சிறப்பம்சம்ள. அதுவே இக்கதைகளின் வெற்றிக்கான காரணமும் கூட.
மேலாக, இக்கதைகளைப் படைத்திருக்கும் நண்பர் கருணாகரமூர்த்தியின் ஆளுமையையும், அறிவுத் திறனையும், அவதானிக்கும் ஆற்றலையும், வாழ்க்கை பற்றிய நேர்த்தியான கண்ணோட்டத்தையும் அடையாளம் காட்டும் பணியையும் இந்நூல் சிறப்புறச் செய்திருக்கின்றது. இசை, இயற்கை, இலக்கியம், சினிமா, அரசியல், ஆன்மீகம், தத்துவம், தமிழ்மொழி, நாட்டு வைத்தியம், மூலிகை போன்ற பல்வேறு துறைகளில் தம்மிடமிருக்கும் அறிவையும் அனுபவத்தையும் அவர் நன்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். அது இந்நூலுக்கு பெறுமதியையும் பன்முகப் பயன்பாட்டையும் வழங்கியிருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் உண்மை முகத்தை இனம் காணாதவனாக இலக்கியம், புத்தகம், நாவல், சினிமா, சங்கீதம் என, சதா கனவுலகில் வாழ்ந்துகொண்டிருந்த தருணம், 'சில கனவுகள் காணமட்டும் சுகம்' என்ற உண்மை உணர்த்தப்பட்ட பின்னரும் கனவை விதைக்கவே அவாவுறும் கலாதரனும் -
யுத்தம் ஏற்படுத்திய அதிர்ச்சியினால் தன்னை மறந்து, தன்னிலை குலைந்து, தனது கல்லூரிக்கால நண்பனையே அடையாளம் காணமுடியாதளவுக்கு ஞாபக சக்தியைப் பறிகொடுத்த பரிதாப நிலையில் வாழும் பாலச்சந்திரனும் -
எல்லார்க்கும் எல்லாம் உரித்தான இவ்வுலகில், எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்பதை நினைவுறுத்தியதோடு, 'தடையேதுமற்ற தரணியொன்று படைப்போம்' என உறுதிகூறிச் செல்லும் அந்த ஜேர்மன் வாலிபனும் -
மனைவி இன்னொருத்தனோடு ஓடிப்போன பின்னரும் - வாழ்புலத்தில் இதெல்லாம் இயல்பாகிவிட்டதென்று - மரபுக் கண்ணாடிகளைக் கழற்றி வைத்துவிட்டு உலகத்தைச் சாவதானமாகப் பார்க்கும் மனப் பக்குவம்பெற்ற ஆனந்தசிவனும் -
தனது மண்ணில் பிறந்தவன் பிறிதோரு நாட்டில் வைத்துத் தன்னைக் கொடூரமாகத் தாக்கிய வன்மத்தை, அவலத்தை, தன்வீட்டு நாய் தன்மேல் பாய்ந்து பிடுங்கும் மௌடீகத்தைத் தாங்கிச் சகித்த நாட்டு வைத்தியர் நஸீரும் - மனதில் ஆழப் பதிந்துவிட்ட உயிருள்ள பாத்திரங்கள்.

சொன்ன கருத்துக்காகக் காணாமற்போய், அடித்து முறித்த வாழையைப் போல, முனைக் கடற்கரையில், தலை சரிந்து, நெடுத்த உடல்மடிய விழுந்து, செத்துப்போய்க் கிடந்த காசிக்காக மனம் ஊமையாய் அழுதபோது -
அறிவுஜீவிகள், கல்விமான்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்களெல்லாம் அநீதிகளுக்கெதிரான விமர்சனங்களற்ற மௌனிகளாக, தம்மேல் திணிக்கப்பட்பட்ட எதேச்சாதிகாரத்தை எதிர்க்காது, அதிகாரத்துடன் இணங்கிப் போய்க்கொண்டிருந்தபோது, அச்சமின்றி அதர்மங்களை விமர்சித்தமைக்காகக் கொல்லப்பட்ட காசிக்காக மனம் அவதிப்பட்ட போது -
இடையறாத போர்ச் சூழலில் வாழ்வின் அர்த்தம் சிதைந்து போகவே, மேதையாகவும் மனம் பேதலித்தவனாகவும் ஏககாலத்தில் காட்சி தந்து, உண்மைக்காகக் குரல்கொடுத்ததால், சர்வாதிகாரத்தின் கொடுங்கைகளால் சாகடிக்கப்பட்ட காசிக்காக மனம் கண்ணீருகுத்தபோது –
இன்னும் சில காசிகள் வருகிறார்கள்! மேலும் பல காசிகள் வருவார்கள்! அட, உலகம் முழுவதும்தான் எத்தனை காசிகள்! எனக்கூறி நம்பிக்கையை விதைக்கின்றார் ஆசிரியர்.
காசியைத் தரிசிக்கவாவது நீங்கள் கட்டாயம் இந்தக் கதைகளைப் படிக்க வேண்டும்!

வாசிப்புப் பரப்புவெளி அபரிமிதமாக வளர்ச்சியடைந்துவிட்ட இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், சுவைபடச் சொல்லப்படும் எழுத்துக்களே பெரிதும் விரும்பப்படுகின்றன. சுவைபடச் சொல்வதற்கு மொழி நடையழகும் நகைச்சவையும் அவசியம். நடையழகு என்பது வெறும் மொழியாற்றலல்ல, வெளியுலகையும் அகவுலகையும் கூர்ந்து நோக்கி, மொழியிலான சித்திரங்கள் ஊடாகத் துல்லியமாகச் செல்வதையே அது குறிக்கும். நகைச்சுவை என்பது அன்றாட வாழ்க்கையில் நிகழும் அபத்தங்களைச் சுட்டிச் சிரிக்க வைப்பதைக் குறிக்கும். சுய எள்ளலுடன்கூடிய அங்கதம் பக்தி இலக்கிய காலம் தவிர்ந்த ஏனைய எல்லாத் தமிழ் இலக்கிய காலங்களிலும் வேரோடியிருந்த ஒரு பண்பாகும். புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தரராமசாமி, கி. ராஜநாராயணன் ஆகியோர் நடையழகையும் அங்கதத்தையும் சரிவரப் பயன்படுத்திய நவீன தமிழிலக்கியப் படைப்பாளிகள். இவ்வழிவந்த ஈழத்துப் படைப்பாளிகளான எஸ்பொ, அ. முத்துலிங்கம் ஆகியோரின் வரிசையில் இடம்பெறுபவர் கருணாகரமூர்த்தி என்பதற்கு பதுங்குழியும் ஒரு தகுந்த சாட்சி. உலகளாவிய இலக்கியங்களில் மொழிநடையழகும் அங்கதமும் முக்கிய சுவைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உள்ளடக்கியிருக்கும் பல சிறுகதைகளைக் கொண்ட இந்த நூலின் பெறுமதியும் பயன்பாடும் உணரக்கூடியதே.

இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியம் தட்டையானது என்றும், ஒற்றைப் பரிமாணம் கொண்டது என்றும், போர் முடிந்துவிட்டதால் ஈழத்துப் படைப்பாளிகளுக்கு எழுதுபொருள் இல்லை என்றும், புலம்பெயர் இலக்கியம் தேங்கிவிட்டது என்றும் இலக்கியப் பேச்சாளர்கள் அவநம்பிக்கை கொள்ளவேண்டியதில்லை என்பதற்கு ’பதுங்குகுழி’ ஒரு நல்ல சான்று.

பதுங்குகுழி தொகுதியிலுள்ள ஒவ்வொரு கதையும் தனித்தனியே ஆய்வுக்குட்படுத்தப்படக்கூடிய சிறுகதை. அனைத்து கதைகளையும் 15 அல்லது 20 நிமிடங்களுக்குள் ஆய்வுக்குட்படுத்தல் சாத்தியமில்லை. இத்தொகுதி மீதான உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் பணியை மட்டுமே செய்யதிருக்கிறேன்.

நானும் ஒருகாலத்தில் கதைகள் எழுதினேன் தான். அத்தி பூத்தாற்போல இப்போதும் இடையிடையே எழுதுவதுண்டு. எழுதுபொருள் வற்றிப் போனதால்தான் நான் மெலிந்து போனேன் போலும்! நண்பர் கருணாகரமூர்த்தியோ தொடர்ந்து எழுதுகிறார். எழுத நிறைய விடயங்களை அவர் சுமந்துகொண்டிருப்பதால்தான் அவர் இன்னமும் பொலிவுடன் ஊதிப் பெருத்திருக்கின்றார்! தினவெடுத்து எழுதுகின்றார்! There is no greater agony than bearing an untold story inside you என Maya Angelou ஒருமுறை சொன்னது பொய்யில்லைத்தான்!

அற்புதமான ஒரு கதைசொல்லியான நண்பர் கருணாகரமூர்த்தி, நிறைய எழுத வேண்டும். அவர் என்றும் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும்! விதைகள் முளைப்பதும், உழுப்பதும், விழும் மண்ணைப் பொறுத்த விஷயம் என்ற புரிதலுடன்!

Thanks:-
http://www.facebook.com/notes/navam-k-navaratnam/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக