திங்கள், ஏப்ரல் 15

குப்பிழான் ஐ. சண்முகனின் 'ஒரு பாதையின் கதை' - நித்ய ஸந்யாஸ்

நன்றி - காலச்சுவடு

வாசிப்பு
போருக்கு முந்தைய வாழ்க்கை
ஒரு பாதையின் கதை
குப்பிழான் ஐ. சண்முகன்
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை,
நாகர்கோவில் 629 001,
ரூ. 95
குப்பிழான் ஐ. சண்முகத்தின் எல்லாக் கதைகளும், அவை உள்ளடங்கக் கொண்டிருக்கும் கருப்பொருளுக்கு அப்பாற்பட்டு, வெவ்வேறு உருவகங்களை உடையதாயிருக்கின்றன. இதை உணர்தல் வாசகருக்கு வாசகர் மாறுபடலாம்.
‘ஒரு பாதையின் கதை’ என்னும் தொகுப்பிலிருக்கும் இவரது அநேக கதைகள் கலைத்தன்மை என்பதைக் காட்டிலும் லட்சியவாதத்தை முதன்மைப்படுத்துபவை. சிதறலில்லாத தெளிவான விவரிப்புகள் கொண்டவை.
பிரச்சினைகளும் போர்களும் ஏறத்தாழ தொடங்கியிராத காலகட்டத்தில் எழுதப்பட்ட சில கதைகளில் தமிழர் - சிங்களர்களிடையேயான இருபாலினர் ஈர்ப்பையும் தமிழர் கிராமங்களின் இயற்கை அழகுகளையும் அவர்களது திருவிழாக் கொண்டாட்டங்களையும் தரிசிக்க முடிகிறது.
அதே சமயம் -
இந்தியாவுக்குக் கப்பல் புறப்படும் நாளில் கிளம்பும் ‘தலைமன்னார் ரெயில்’இல் புறப்பட்டவர்களை வழி அனுப்ப வந்த வெவ்வேறு வகைப்பட்ட மனிதர்களது பிரிவுத்துயர்களின் காட்சிகள் அவலச்சுவை உடையவை.
‘வேட்டைத் திருவிழா’ கதை - சாமி ஊர்வலம் அதன் பரிவாரங்களோடு மெதுமெதுவாக நகர்ந்து போய்ச் சேருமிடத்தை அடைகையில் ஆர்ப்பரிப்பும் உற்சாகமும் உச்சத்தை அடைந்து, பின் அமைதியாக திரும்பிப் போவது - உணர்ச்சிகளின் கொந்தளிப்பு வடிந்து அடங்கியதும் உண்டாகும் நிச்சலனமாக நிறைவெய்துகிறது.
பெண் அவளது ரகசிய ஆழத்தில் சுதந்திரமான இயல்புடையவளாக இருக்க விருப்பம் கொண்டிருப்பதை, தனக்குள் கிளரும் அன்பைப் பாரபட்சமற்று பகிர்ந்துகொள்ள விழையும் அவளது உண்மையான தன்மையைச் செயற்கைத் அரண்களால் தடுத்துவிட இயலாததை ‘தரு’ கதை உருவகமாகக்கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் ஒரு சில கதைகளின் மாந்தர்கள் அறம் சார்ந்தும், சரிநிகர் சமுதாயம் ஏற்பட விழைந்தும் பேசுபவர்களாகயிருப்பினும், பிறகு வரும் கதைகள் நவீனமான கதைச் சொல்லலை நோக்கி நகர்பவை.
நித்ய ஸந்யாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக