புதன், அக்டோபர் 17

ஈழன்: சமூகம் தொலைத்த மனிதர்






- லதா
 நன்றி - வல்லினம் (இதழ் 46 அக்டோபர் 2012)

திங்கட்கிழமை பிற்பகலில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு நண்பர் அழைத்துக் கேட்டார். ஈழநாதன் இறந்து விட்டாராமே உண்மையா என்று. எனக்கு ஒரு கணம் எதுவும் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த நண்பர் அழைத்திருந்தார். முதலில் அந்த நண்பரை அடையாளம் கண்டுகொள்ளவே சில கணங்கள் ஆனது. அதன்பிறகு அவர் சொன்ன விஷயத்தை உள்வாங்க மேலும் சில கணங்கள் ஆனது. மூளை வேலை செய்வதற்குள் அவரின் அடுத்த கேள்வி - என்ன நடந்தது?

விசாரித்துச் சொல்கிறேன் என்று அவரிடம் கூறி விட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை.

ஈழநாதனை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன. அவருடன் போனில் பேசி ஓராண்டுக்கும் மேலிருக்கும். இதில் அவரைத் தெரிந்தவர்களை எங்கே தேடுவது என்று புரியவில்லை. நட்பைப் போற்றவும் நலம் விசாரித்துக் கொள்ளவும் பொழுதில் இடமில்லை. தொடர்பில் இல்லாததால் தொலைபேசி எண்களும் காணாமல் போயிருந்தன.

ஈழநாதனின் நண்பரும் மக்கள் பிணைப்பாளராக அரிய பணி செய்து வருபவருமான சாந்தன் உதவினார். ஈழநாதனின் நண்பர்கள் தொலைபேசி எண்களைத் தந்தார்.

கவிஞர், கட்டுரையாளர், சிந்தனையாளர், தமிழ் மொழி - சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஆற்றலும் துடிப்பும் உழைப்பும் மிக்க இளையர் - ஈழநாதன்.

ஈழநாதன் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் உடுப்பிட்டி, இலக்கணாவத்தை. சிங்கப்பூர் தெமாசெக் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பதற்கு கல்வி உபகாரச் சம்பளம் பெற்று 20 வயதில் 2001ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார்.

வந்த நாள் முதலே சிங்கப்பூருடனும் இங்கு வாழும் தமிழ்ச் சமூகத்துடனும் தம்மைப் பிணைத்துக்கொண்டார். சொல்லப்போனால், இங்கு வாழும் சமூகத்துடன் புதிதாகக் குடிபுகுந்தவர்களை ஒன்றிணைப்பதில் அவர் ஒரு பாலமாகவே விளங்கினார்.

இலக்கிய நிகழ்ச்சியொன்றில் ஈழநாதன் அறிமுகமானபோது, அவர் என்னை அறிந்து வைத்திருந்தார். என்னை மட்டுமல்ல , தமிழ் உலகில் - இலக்கியம் சார்ந்தோ, அரசியல் சார்ந்தோ, சமூகப் பணி தொடர்பாகவோ எந்த வகையிலாவது ஒரு துரும்பை அசைப்பவராக இருந்தாலும் அவரை ஈழநாதன் அறிந்து வைத்திருந்தார் - அவர்கள் உலகெங்கின் எந்த மூலையில் இருந்தாலும்.

வலைப் பூக்களும் வலைப் பக்கங்களும் முகிழ்க்கத் தொடங்கியிருந்த 2000ஆம் ஆண்டின் தொடக்க காலம். தமிழ் வலைப் பூ, வலைப் பக்கங்களில் ஈழன் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தமது blog-இல் நிறைய எழுதியதோடு, மற்றவர்களையும் எழுத ஊக்குவித்தார். பெரும்பாலும் எல்லா தமிழ் வலைப் பதிவுகளிலும் ஈழனின் பின்னூட்டங்கள் இருக்கும். எப்படித்தான் அவருக்கு நேரம் கிடைத்ததோ.

எல்லாவற்றையும் வாசித்து, எல்லாவற்றிலும் ஈடுபாடு காட்டி, எல்லாருடனும் நட்புக் கொண்டாடி... நினைத்துப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது... மிகச் சிறு வயதிலேயே அவருக்கிருந்த பரந்த வாசிப்பும் அனுபவங்களும் தொடர்புகளும்... முழுதாக அறிந்தவர்களுக்கு மலைப்பை ஏற்படுத்தும்.

பெரும் அறிஞர்கள் விவாதிக்கும் கூட்டமாக இருக்கட்டும். சாதாரண தொழிலாளர்களின் சிறிய ஒன்றுகூடலாக இருக்கட்டும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தமது ஆதரவை அளிப்பார். நாற்காலி தூக்கி அடுக்குவார். விவாதங்களில் பங்கேற்பார். தேவைப்படுவோருக்குப் பொருளுதவியும் செய்வார்.

ஈழத்திலும் ஈழத்துத் தமிழ் மொழி - இலக்கியத்திலும் தீவிரமான பற்றும் ஈடுபாடும் கொண்டிருந்தபோதும் ஈழனிடம் பேதம் இருந்ததில்லை.

தமிழ் நாட்டிலிருந்து வந்தவரையும் ஈழத்தவரையும் வேறு நாடுகளில் இருந்து வந்தவரையும் அவர் பிரபலமானவராக இருந்தாலும் சாதாரணமானவராக இருந்தாலும், உள்ளார்ந்த அன்போடு கவனிப்பார். தனது வேலைகளையும் போட்டுவிட்டு, அவர்களுடன் நேரம் செலவிட்டு ஊர் சுற்றிக் காட்டுவார். அவர்களது நிகழ்ச்சிகளில் பங்குகொள்வார்.

தமிழ் மொழி - இலக்கியத்தின் மீது ஈழனுக்கிருந்த வாஞ்சை அபராமானது. எல்லைகள் இல்லாதது. மொழி தொடர்பாக, எங்கு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதை அவர் அறிந்திருந்திருப்பார்.

பக்கத்து நாடான மலேசியாவில், மாற்றுக் கருத்துடன் புதிய வேகத்துடன் இளைய தலைமுறைப் படைப்புகள் வெளிவரத் தொடங்கியபோதே, மோப்பம் பிடித்து பலருக்கும் பறை சாற்றியவர் ஈழன்.

‘காதல்’ இலக்கிய இதழ் வெளிவந்தபோது அதை சிங்கப்பூருக்கு எடுத்து வந்ததுடன், அவர்களை இங்கு அழைத்து வந்து அறிமுக நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்தார். இங்கு சந்தாதாரர்களை ஏற்படுத்தினார்.

பக்கத்தில் வாழும் நாம் தெரிந்துகொள்ளாமல் இருந்ததை, எங்கோ இருந்து வந்த இவர் முகர்ந்து, மணம் பரப்புகிறாரே என வெட்கமாக இருந்தது. இந்த 'காதல்' குழுவினர்தான் இப்போது 'வல்லினம்' இணைய இதழை நடத்துகின்றனர். இவர்கள் சிங்கப்பூருக்கு அறிமுகமானது ஈழன் மூலம்தான்.

அவர்களது ஆரம்ப எழுத்துகளைப் பார்த்து, “தனித்துவம் பெரிதாக இல்லையே” என்றபோது, “இல்லையக்கா, அவர்களிடம் வேகமும் ஆர்வமும் இருக்கு. வித்தியாசமாக இருக்கிறார்கள். வாசிக்கிறார்கள். பாருங்கோ பெரிசா வருவார்கள்,” என்றார்.

சிங்கப்பூரிலும் இணைய உலகத்திலும் புதிதாக எழுதத் தொடங்கியவர்கள், ஆரம்ப அடியெடுப்பவர்கள் பலருக்கும் ஊக்கமூட்டுபவராக ஈழனைப் பார்த்திருக்கிறேன்.

எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் ஈழனிடம் எனக்கு மிகப் பிடித்த விஷயம், அவரது ஆரோக்கியமான சிந்தனை. அவர் யாரையும் குறை சொல்லிப் பேசி நான் கேட்டதில்லை. கோஷ்டிப் பூசல்கள், குழு சர்ச்சைகளில் பங்கேற்க மாட்டார். ஏதாவது சர்ச்சை பற்றிக் கேட்டால், அதேன் நமக்கு என்பார். எல்லாரையும் பற்றியும் நல்ல விஷயங்களையே பேசுவார். புறம்பேசி நான் அறிந்ததில்லை. தவறான பேச்சுகள் அவர் காதில் விழுந்திருந்தாலும் அது பற்றிப் பேசவே மாட்டார்.

ஆனால், இணையத்தில் புனை பெயரில் எழுதுபவர்களையெல்லாம் அவருக்குத் தெரியும். ஏதோ ஒரு தளத்தில், ஒரு பின்னூட்டத்தை எழுதுபவரையும் அடையாளம் கண்டு விடுவார். இருந்தும் எவரையும் நோகச் செய்ததில்லை.

உலகெங்கும் பலரை அறிந்திருந்த ஈழன், மனிதர்களை நேசித்தார்.

ஒருமுறை அவர் நண்பர் ஒருவர் தொழில் விஷயத்தில் அவரை ஏமாற்றி விட்டார். அது பற்றி வேறொருவர் மூலம் எனக்குத் தெரிய வந்து, ஈழனிடம் கேட்டபோது, “பரவாயில்லை, அவனும் கஷ்டப்படுகிறான். அவனுக்கு வேறு எதுவும் செய்வதும் சிரமம். அதை விடுவோம்,” என்று சாதாரணமாக அந்த விஷயத்தையே மறந்துவிட்டார்.

எனக்குத் தெரிந்து ஈழன் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். படித்த காலத்திலேயே பகுதிநேர வேலை பார்த்தார். படித்து முடித்த பிறகு இரண்டு, மூன்று வேலைகள் பார்த்தார். அவர் ஆடம்பரமாக உடுத்தியோ, செலவழித்தோ நான் அறிந்ததில்லை. எப்போதும் ஜீன்சும் டி-சட்டையும் முதுகில் தூக்கும் பையுமாகத்தான் திரிவார்.

தமிழ் நூல்களை- குறிப்பாக இலங்கைத் தமிழ் நூல்களை இணைய தளத்தில் பாதுகாப்பாகவும் எல்லாருக்கும் கிடைக்கும் வகையிலும் சேமிக்க வேண்டும் என்பதற்காக ஈழன் மிகவும் உழைத்திருக்கிறார். பலரிடம், பல இடங்களில் தேடி நூல்களைச் சேகரித்தார். என்னிடம் இருந்த ஆரம்ப கால சஞ்சிகளைப் பெற வந்தபோது, நூல்களைச் சேகரிப்பதுடன் எழுத்தாளர்களையும் ஆவணப் படுத்த வேண்டும் என்று ஒரு பெரும் கனவை விவரித்தார்.

தமிழ் நூல்களை இணையத்தில் ஏற்ற வேண்டும் என்பதற்காக பாடுபட்டு உழைத்து பணம் சேர்த்து, இணைய நூலகத்தில் நூல்கள் சேர்த்தார். இரவிரவாக இருந்து அவரே நூல்களைப் பதிவேற்றுவார். இலங்கையில் பணம் கொடுத்து பதிவேற்றும் பணியைச் செய்தார்.

நூலகத்தில் ஈழநாதனின் பங்களிப்புப் பற்றி நூலகம் இணைய தளம் இவ்வாறு எழுதியுள்ளது:

“நூலகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டு தனது உழைப்பைச் செலுத்தியவர் ஈழநாதன் அவர்கள். மிகச் சிறிய அளவிலிருந்த நூலகத் திட்டத்துக்கு வளங்களைத் திரட்டியும் பெருமளவு பங்களிப்பாளர்களை இணைத்தும் அதன் செயற்பாடுகளைச் சாத்தியமாக்கியவர் ஈழநாதன். அவரது பங்களிப்பு கிடைக்காது போயிருந்தால் நூலகத் திட்டமானது கொள்கையளவிலேயே நின்று போயிருக்கக் கூடும்."

நூலகத்திற்கான உதவி வழங்கி, முதல் நிதிப் பங்களிப்பு போன்றவற்றை வழங்கியதுடன் நூலகத்தினை ஈழத்தமிழர்கள் வாழுமிடங்களுக்குக் கொண்டு சென்று சேர்த்தமையும் நூலகத்திற்கு உலகெங்குமிருந்து புலம்பெயர் தமிழர்களுடைய பங்களிப்பைக் கொண்டு வந்து சேர்த்தமையும் ஈழநாதனது முக்கிய பங்களிப்புக்களாகும். இன்றும் கூட ஈழநாதன் வாங்கியளித்த வழங்கியிலேயே நூலகம் இயங்குகிறது. நூலகம் தொடர்பான திட்டமிடல், உரையாடல்களிலும் முக்கிய பங்களித்த ஈழநாதன் நூலகத் திட்டம் 2008 இல் நூலக நிறுவனமாக இயங்கத் தொடங்கியபோது முதலாவது அறங்காவலர் சபையிலும் இடம்பெற்றுப் பங்களித்தார்.

ஈழத்தமிழர்களுடைய வாழ்வியல் முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் ஈழத்தமிழ் ஆளுமைகள் வரலாற்றில் அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் மிகப்பெரும் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தார். பல்வேறு ஆவணவியலாளர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களுக்குச் சகல விதங்களிலும் உதவி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, சிங்கப்பூரில் நூலகத்திற்கான அலகொன்றைத் தொடங்கி ஈழத்தமிழர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுடன் தொடர்புடைய ஆவணங்களை பெற்று ஒழுங்குபடுத்துவதோடு ஆவணப்படுத்தித் திறந்த அணுக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருந்தார்; அதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

எல்லாருடனும் நட்பாக இருந்தாலும் எல்லாக் கருத்துகளுடனும் உடன்படுபவரல்ல ஈழநாதன். 81ல் பிறந்த ஈழநாதன், யாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு அட்டூழயங்களை நேரில் கண்டு, அனுபவித்தவர். அச்சமயத்தில் மக்களுக்கு அரணாக இருந்த விடுதலைப் புலிகள் மீது இயல்பாகவே அவருக்குப் பற்று இருந்தது- புலிகள் மீது விமர்சனங்கள் இருந்தபோதும்.

ஈழனின் அரசியல் ஈடுபாடு ஆழமானது. எத்தனை சிக்கல்களை எதிர்கொண்டாலும் தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர் அவர்.

இறுதிக் கட்டப் போரின்போதும் அதன் பின்னரும் பல தகவல்கள் ஈழன் மூலமே எனக்குக் கிடைத்தன. மண்ணின் பெரும் தோல்வி, அவரை மிகவும் அமைதியாக்கி விட்டது. அதோடு வேலைப் பளுவும் அழுத்தத் தொடங்கியது.

பெருங் கனவோடு, இலக்கோடு கடுமையாக உழைக்கத் தொடங்கிய ஈழன் எதிர்கொண்ட தோல்விகள் பல. மாம்பழம் விற்பனை முதல் உணவக வியாபாரம் என பல தொழில்கள் செய்தார்.

அவரது வாழ்க்கைக்கும் மொழி, சமூகம் சார்ந்து அவர் செய்ய நினைத்த பல பணிகளுக்கும் அவருக்குப் பணம் தேவைப்பட்டது.

முழு மூச்சாக உழைக்கத் தொடங்கினார். எழுதுவதில்லை. நண்பர்களுடன் தொடர்பில்லை.

தமது மகனின் 41வது நாளைக் கொண்டாடி விட்டு, செப்டம்பர் 28ம் தேதி வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் திரும்பிய ஈழன், சனிக்கிழமை இந்தோனீசியா சென்றுள்ளார்.

அங்கு ஞாயிறு காலை அவர் இறந்துள்ளார்.

தகவல் அறிந்து அவரது நண்பர்கள் அங்கு சென்று அவரின் உடலை பெற்று, சிங்கப்பூர் வந்து சேர திங்கள் நள்ளிரவைத் தாண்டி விட்டது. பெற்றோர், மனைவி, மகன், நண்பர்களுடன் ஈழனின் இறுதிச் சடங்கு அக்டோபர் 2ஆம் தேதி புதன்கிழமை சிங்கப்பூர் மண்டாய் தகனச் சாலையில் நடைபெற்றது.

அவர் என்ன காரணத்தினால் இறந்தார் என்பது அங்கு நேரில் சென்ற நண்பர்களுக்கே தெரியவில்லை. ஆனால், எங்கெங்கோ இருப்பவர்கள் ஈழனின் இறப்புக் குறித்து வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது. ஈழனது இறப்புக்கான காரணம் ஈழனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். ஊகங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் எதுவும் உண்மையில்லை.

31 வயதில் உயிர்நீத்த ஈழநாதன் என்ற தமிழ் - சமூக ஆர்வலர் சிங்கப்பூரில் 11 ஆண்டுகள் வாழ்ந்தது உண்மை. அக்காலகட்டத்தில் அவர் இச்சமூகத்தில் ஆக்ககரமான தாக்கம் ஏற்படுத்திருப்பது நிச்சயமானது.

ஈழநாதன் கடந்த சில ஆண்டுகளாக வேலைப் பளுவில் மூழ்கி, விலகி இருந்தாலும் அவரது அன்பை மறக்காமல் சிலராவது அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றது ஆறுதலளிக்கிறது.

ஈழநாதனின் தமிழ் மொழி தொடர்பான முயற்சிகளுக்கு சமூகம் முழு ஆதரவளித்திருந்தால், அவர் அவற்றில் முழுமையாக ஈடுபட எல்லா வகையிலும் உதவியிருந்தால், நூலகம் போன்ற மேலும் பல அரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம்.

பொருள் தேடல் ஒரு நல்ல படைப்பு ஆத்மாவை அழுத்தி அமுக்கி விட்டது. கவிதை எழுதுவதை, கட்டுரைகள் எழுதுவதை, பதிவுகள் செய்வதை என ஒவ்வொன்றாக அழித்து விட்டது. கடைசியில் ஈழநாதனை தமிழுலகம் தொலைத்து விட்டது.
 நன்றி - வல்லினம் (இதழ் 46 அக்டோபர் 2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக