செவ்வாய், பிப்ரவரி 7

“புதிய தரிசனம்” சஞ்சிகை - ஒரு நினைவோடை


-இராகவன்

நான் மாலைவேளைகளில் குப்பிழான் ஐ. சண்முகனின் வீட்டிற்குச் செல்வது வழமை. அவ்விதமொருநாள் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோது ஒரு பொடியன் அவருடன் கதைத்துக் கொண்டிருந்தான். அப்போது சண்முகன் எனக்கு, “இவர் பெயர் அஜந்தகுமார். எனது மாணவன். தற்போது இலக்கியச் சஞ்சிகையொன்றை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.” என அந்தப் பொடியனை எனக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் என்னையும் அவனுக்கு சம்பிரதாயபூர்வமாக அறிமுகப்படுத்த என்னிடம் அவன் தன்னால் வெளியிடப்படவுள்ள இலக்கியச் சஞ்சிகைக்கு ஏதாவது படைப்பை எழுதித்தரும்படி கேட்டுக்கொண்டான். நானும் ஒரு கவிதை எழுதி அதனடியில் திகதி மாதம் ஆண்டு நேரமெல்லாம் குறிப்பிட்டு அவனிடம் கொடுத்ததேன்.

2003 காலப்பகுதியில் புதிய தரிசனம் என்ற பெயரில் அஜந்தகுமார் தனது இலக்கியச் சஞ்சிகையின் முதலாவது இதழை வெளியிட்டான். அதில் நான் எழுதிக் கொடுத்த கவிதையும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அதனடியில நான் குறிப்பிட்டிருந்த திகதி மாதம் ஆண்டு நேரம் இவையெல்லாம் முற்றாக நீக்கப்பட்டிருந்தன. எனது அனுமதியின்றித் தானே சுயமாக இதெல்லாம் தேவையற்றதென முடிவெடுத்து அவன் நீக்கியிருந்ததால் இனிவருங் காலங்களில் அவன் கேட்டாலும் ‘புதிய தரிசனம்’ இதழுக்கு எந்தவொரு படைப்பையும் வழங்குவதில்லையெனத் தீர்மானித்தேன். குப்பிழான் ஐ. சண்முகனும் இது குறித்த தனது அதிருப்தியை அஜந்தகுமாரிடமே வெளியிட்டார். பின்னர் தெரியாமல் விட்ட தவறுக்காக அஜந்தகுமார் என்னிடம் மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டான். காலப்போக்கில் எனக்கு நெருக்கமான நண்பனுமானான்.

அவன் வெளியிட்ட புதிய தரிசனம் தொடக்கத்தில் பாடசாலை மாணவர்களையே தனது இலக்குச் சந்தையாகக் கொண்டிருந்தது. காலப்போக்கில் அஜந்தகுமார் தீவிர வாசிப்பில் கவனம் செலுத்திய பின்னர் புதிய தரிசனம் நவீன இலக்கியம் குறித்தும் கவனயீர்ப்பை ஏற்படுத்த முனையும் இதழாகத் தோற்றங் கொள்ளலாயிற்று. மே- ஜீன் 2005 காலப்பகுதியில் வெளிவந்த ஐந்தாவது இதழோடு புதிய தரினம் நின்று போய்விட்டாலும் அவ்விதழின் வெளியீட்டில் இணைந்து செயலாற்றியபோது எனக்குக் கிடைத்த அனுபவம் புதுமையானது.

அப்போது சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம். எவ்வித நெருக்கடிகளுமின்றிச் செயற்படத் கூடியதாக இருந்தது. ஈழத்தமிழ்த்திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான இயக்குநரான ஞானரதன் அக்காலப்பகுதியில் உடுப்பிட்டியிலுள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார். இப்போது சூழலியலாளரென அறியப்படும் பொ. ஐங்கரநேசன் அப்போது ஞானரதனை ஒரு நீண்ட நேர்காணல் செய்திருந்தார். அந்நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் தொடர்ந்து ஐந்து வாரங்களாக வெளிவந்தது. (இவ்வரிய நேர்காணலுக்காக நாமனைவரும் பொ. ஐங்கரநேசனுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்) அதனடிப்படையில் (ஏற்கெனவே புதிய தரிசனம் முதலாவது இதழில் குப்பிழான் ஐ. சண்முகனின் நேர்காணலும் இரண்டாவது இதழில் நாடகக் கலைஞர் வே. க. பாலசிங்கத்தின் நேர்காணலும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது) புதிய தரிசனம் இதழுக்கு ஞானரதனை நேர்காணல் செய்யுமாறு அஜந்தகுமாருக்கு விதந்துரைத்தேன். அப்போது ஞானரதனை அஜந்தகுமாருக்குத் தெரிந்திருக்கவில்லை. எனினும் அவன் முழுமுனைப்போடு உடுப்பிட்டிக்குச் சென்று அவரைச் சந்தித்து நேர்காணலைச் செய்து வெளியிட்டான்.

புதிய தரிசனம் தொடர்பான படைப்புக்களின் தேர்விலும் விவாதத்திலும் நானும் அஜந்தகுமாரும் ஈடுபடும் களங்களாக தமிழ்ப்பூங்கா அச்சகமும் கட்டைவேலி நெல்லியடி கூட்டுறவுக் காரியாலயதிற்குக் கீழுள்ள பொங்கல் விற்பனை நிலையமும் விளங்கின. நாங்கள் அந்தக் களங்களிலிருந்ததுதான் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தோம். தமிழ்ப்பூங்கா அச்சக உரிமையாளர் கணேஷ் அண்ணா எங்களுக்கு இடைக்கிடை தேநீர் வரவழைத்துத் தருவார். பொங்கல் விற்பனை நிலைய மேசையில் ஏறியமர்ந்து நாங்கள் பல விடயங்களையும் கதைப்போம். அவ்வேளை பல நண்பர்கள் அதில் வந்து கூடிவிடுவர். பொங்கல் விற்பனை நிலைய ஊழியர்களான முருகப்பா, சிவகுரு போன்றோர் அப்போதுதான் எங்களுக்குத் தேர்ந்த கதைசொல்லிகளாக அறிமுகமாயினர்.

ஒருநாள் சித்திராதரன் என்ற நண்பர். இவர் தற்போது பருத்தித்துறைத் தபாலகத்தில் கடமையாற்றி வருகிறார். அங்கே வந்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இவர் களுத்துறைச் சிறையில் பல காலமான சிறைவாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து இவர் எழுதிய கவிதை சரிநிகர் இதழில் பிரசுரமாகியிருந்தது. அது இவருக்குத் தெரியாது. நான் சொன்ன பின்புதான் தெரியும். களுத்துறைச் சிறையில் ஒரு நூலகம் இருப்பதாகவும் அந்நூலகத்திலிருந்தே ஜெயமோகனின் ‘திசைகளின் நடுவே’ மண் மற்றும் கா. நா. சுவின் மொழிபெயர்ப்பில் வந்த நோபல் பரிசு பெற்ற நாவலான ‘மதகுரு’ மற்றும் ‘பரபாஸ்’ ஆகியவற்றை வாசித்ததாகவும் சித்திராதரன் சொல்லியிருந்தார். இவையெல்லாம் ‘புதிய தரிசனம்’ குறித்து எழுதும்போதும் நினைவிலோடுகின்றன.

சிராஜ் மன்சூர் எழுதிய “எதிர்ப்பிலக்கியம் ஒரு கலாசார ஆயுதம்” குறித்துப் புதிய தரிசனத்தில் நானொரு விமர்சனக் குறிப்பை எழுதியிருந்தேன். அப்போது வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து எழுதிக்கொண்டிருந்த சில இலக்கியவாதிகளுக்கு அது உவப்பளிக்கவில்லை. அவர்கள் புதிய தரிசனத்துக்குக் கண்டனக் கடிதம் எழுதினார்கள். அதுவும் புதிய தரிசனத்தில் எனது எதிர்வினையோடு பிரசுரமாயிற்று. இதேபோன்று ‘மூடுபெட்டி’ என்ற எனது புனைகதை புதிய தரிசனத்தில் வெளியானபோது வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து இனிவருங்காலங்களில் புதிய தரிசனத்தில் எனது புனைகதைகளைப் பிரசுரிக்க வேண்டாமென அன்பு மடலொன்று அஜந்தகுமாருக்கு வந்திருந்தது. அவன் அதையும் புதிய தரிசனத்தில் வெளியிட்டான்.

ஷோபாசக்தியின் ‘தேசத்துரோகி’ கதைத் தொகுப்பிற்கு குணேஸ்வரன் எழுதிய இரசனைக்குறிப்பும் புதிய தரிசனத்தில்தான் வெளிவந்தது. நானறிய யாழ்ப்பாணத்தில் முதன்முதலில் தேசத்துரோகியை அறிமுகப்படுத்தியது புதிய தரிசனம் மட்டும்தான் என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். அதன் பிறகுதான் நமது இலக்கியவாதிகள் துயில் கலைந்து தேசத்துரோகி பற்றித் தம்பட்டமடிக்கத் தொடங்கினர்.

ஈழத்தின் மிக முக்கியமான நவீன ஓவியர் கோ. கைலாசநாதனை ஒரு நீண்ட நேர்காணல் செய்து புதிய தரிசனத்தில் வெளியிட அஜந்தகுமார் விரும்பினான். அதனடிப்படையில் நான் கோ. கைலாசநாதனை நேர்காணல் செய்தேன். இருபகுதிகளாக அந்நேர்காணலை வெளியிடத் தீர்மானித்தோம். அந்நேர்காணலில் முதலாம் பகுதி புதிய தரிசனம் ஐந்தாவது இதழில் கோ. கைலாசநாதனின் ‘கிருஷாந்தியின் வல்லுறவுக் கொலைச்சம்பவத்தைப் பிரதிபலிக்கும்’ முகப்போவியத்துடன் அவரது முக்கியமான ஓவியங்கள் சிலவற்றையும் உள்ளடக்கி வெளிவந்தது. அத்துடன் புதிய தரிசனமும் நின்றுபோயிற்று. அந்நேர்காணலை முழுமையாகச் சரிநிகரில் வெளியிடுவதற்கு எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

புதிய தரிசனத்தில் வெளியான குப்பிழான் ஐ. சண்முகன், செ.யோகராசா (கருணை யோகன்) ஞானரதன், கோ. கைலாசநாதன், என அனைத்து ஆளுமைகளினதும் நேர்காணல்கள் ஏதோவொரு வகையில் முக்கியமானவைதான்.

கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கவும் தூண்டவும் புதிய தரிசனத்தில் ஓவியம் ஒன்றை வெளியிட்டு அதற்குக் கவிதை எழுதுமாறு அறிவிப்புச் செய்யும் நடைமுறையையும் அஜந்தகுமார் செயற்படுத்தினான். அப்பகுதியில் நான் வரைந்த ஓவியமொன்றையும் அவன் வெளியிட்டிருந்தான். இதுதவிர புதிய தரிசனத்தின் 4வது இதழுக்கு முகப்போவியமும் வரைந்திருந்தேன். இதுதவிர சிங்களப் பத்திரிகையொன்றிலிருந்து நான் கத்தரித்த ஓவியம் ஒன்றுடன் நான் எழுதிய கவிதையையும் அவன் பிரசுரித்திருந்தான்.

இப்போது நிதானித்து நோக்கும் தருணம் நான்காவது ஐந்தாவது ஆண்டு மலரென வெளியிட்டு வீறுநடைபோடும் மாசிகைகளோடு ஒப்பிடும்போது ஐந்தே ஐந்து இதழ்கள் மட்டுமே வெளிவந்த புதிய தரிசனம் பெரிதளவுக்குச் சாதித்துத்தான் இருக்கிறது என்று சொல்லலாம்.

நன்றி – புதியநூலகம் (செய்திமடல்) இதழ் 9.
---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக