வெள்ளி, நவம்பர் 25

2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் பாலை திரைப்படம் வெளியீடு!

மறுமலர்ச்சி

நன்றி - http://marumalarchi10.blogspot.com

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் "பாலை" திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது.



இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.


இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.





தேசிய விருது பெற்ற "போஸ்ட் மேன்" குறும்படத்தின் ஒளிப்பதிவாளரான திரு அபிநந்தன் இராமனுஜம் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் எல்.ஜி.பிரசாத் திரைப்பள்ளியின் மாணவர். படத்தொகுப்பாளர் திரு. ரிச்சர்ட் சென்னை திரைப்படப் பள்ளியின் முன்னாள் மாணவராவார். இவர் தொகுத்த பல படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.



தஞ்சை, புதுக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பழங்குடித் தமிழர்களான இருளர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் பலர் இத்திரைப்படத்தில் முதல் முறையாக திரையில் அவர்களாகவே தோன்றுகின்றனர். படத்தின் கதாநாயகன் சுனில் மற்றும் கதாநாயகி ஷம்மு ஆகியோர் தம் பாத்திரத்தை சிறப்புறச் செய்திருகின்றனர். இவ்விருவரைத் தவிர்த்து, படத்தில் நடிக்கும் அனைவரும் திரையுலகம் சாராத நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. நாகை தி.இரவி படத்தை தயாரித்துள்ளார்.



கடந்த மாதம் முக்கியப் பிரமுகர்களுக்காக திரையிடப்பட்ட படத்தின் விசேட காட்சியைக் கண்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான திரு. தங்கர் பச்சான், திரு. வெற்றிமாறன் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டினர். தமிழறிஞர் மா.பொ.சி.யின் பெயர்த்தி திருமதி. பரமேஸ்வரி, எழுத்தாளர் யுவபாரதி, பத்திரிக்கையாளர் பாரதி தம்பி உள்ளிட்ட திரளான தமிழ் உணர்வாளர்களும், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு திரைப்படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.




இயக்குநர் பாலு மகேந்திரா படக்குழுவினரை நேரில் தம் இல்லத்திற்கு அழைத்து அவர்களது முயற்சியை பாராட்டினார். தமது 45 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் இப்படியொரு திரைப்படத்தை இயக்கவில்லையே என்றும், இப்படம் உலக வரலாற்றுத் திரைப்படங்களின் வரிசையில் முக்கியப் படமாக அமையும் என்றும் அவர் படக்குழுவினரிடம் தெரிவித்தார்.



சென்னை சாந்தி திரையங்கு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நவம்பர் 25 அன்று இத்திரைப்படம் வெளியாகிறது. தமிழ் மக்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் இத்திரைப்படம் குறித்து, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

அளித்தவர் மறுமலர்ச்சி சேர்க்கப்பட்ட நேரம்: 6:05 AM

நன்றி-
http://marumalarchi10.blogspot.com

பாலை படம் பற்றிய மேலதிக இணைப்புக்கள்
1.


பாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்

by கரி காலன் on Friday, 25 November 2011 at 23:58
http://www.facebook.com/note.php?note_id=2369451433470

அன்புள்ள செந்தமிழனுக்கு பெருமையுடன் ஒரு முதல் வரிசை ரசிகனின் பார்வையும் பாராட்டுகளும்,

முதலில் இது ஒரு வெற்றிப் படம் என்றுத் தெரிந்து கொண்டேன், வந்தேறிகளை நேரடியாக எதிர்க்கும் படம் என்பதால் மட்டுமல்ல, இப்படி ஒரு படைப்பு நம் மொழியில் உருவானதே ஒரு வெற்றிதான்.

மிக மிகக் கடினமான சூழலில் இந்தப் பதிவை நான் எழுதுகிறேன், ஏனெனில் அநேகமாக டாப் டென்னில் வரும் அனைத்து படங்களும் பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இந்தப் படம் ஒரு வித்தியாசமான படம் என்று இருந்தாலும் , கதைக்குள் நம்மை கரையவைக்கும் மந்திரப் படைப்புகள் மிகச்சில மட்டுமே உள்ளன , அந்தமிகச் சில படைப்புகளில் ஒரு சிறந்த படைப்பு எனச் சொல்லும் திருப்திக்காக இந்த பார்வையை எழுதும் அதே வேளையில், இந்தப் படம் வணிகரீதியாக சந்தித்துக்கொண்டிருக்கும் சிக்கல்களை நினைக்கையில் தாங்க முடியா வலி ஒன்றும் கூடவே இருக்கிறது...

வலி ஏன்? இன்றைய சினிமாச் சந்தை -  கார்ப்பரேட் முதலாளிகளிடமும், அரசியல்வியாதிகளிடமும், மசாலா ரசனைகளிலும் சிக்கியதால் , இன்று புதியவர்கள், புரட்சியாளர்கள், திரைப்படங்களை நல்லதொரு ஊடகமாக்க நினைக்கும் கலைஞர்கள் என்ன நிலைக்கு ஆளாகின்றனர் என்று தங்கள் கட்டுரையை முகநூலில் இன்று வாசிக்கும் போதே நன்று புரிந்துகொண்டேன், தங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட 1911  படத்திற்கு கிடைத்த வரவேற்ப்பை பற்றியும் எழுதியிருந்தீர்கள், அந்தப் படம் கூட (வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களைச் சொல்லாமல் ஒரு வரலாற்றுப் புரட்சியைத் தான் சித்தரிக்கிறது) இங்கு பெரும் தோல்வி அடைந்தாலும், அவர்கள் ஊரில் நல்ல மதிப்பையும் வெற்றியைப் பெற்றதன் காரணம் அவர்களுக்கு தெரிந்திருந்த அந்த வரலாறு. இந்த படம் பற்றிய அறிவு நமக்கு சிறிதேனுமிருந்தால் மட்டுமே கதைக்குள் நாமும் அமர முடியும்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், சில வணிகரீதியான் (economical  advantage) சாதகங்கள் தங்களுக்கு இருப்பின் நீங்கள் இமாலய வெற்றியை வெகுஜனங்களிடம் இந்தப் படத்தின் மூலம் எட்டியிருப்பீர்கள், இப்பொழுதும் உங்கள் வெற்றி அத்தகையது தான் - ஏனெனில்,எத்தனையோ மாபெரும் கலைஞர்கள் இருக்கும் இந்தத் துறையில் இந்த அளவுக்கு தனது முதல் படைப்பில் எடுத்திருக்கும் கடுமுயற்சி, எம்மைப் போன்ற எளிய பார்வையாளனுக்கும் புலப்படுவதில் நீங்கள் பெரிய சிகரத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது.


எங்கே இந்தப் படம் உங்களுக்கு ஊக்கம் கொடுக்கத் தவறிவிடுமோ என்கிற பயமும் எனக்கு இருக்கிறது, ஒரு பொழுதுபோக்கில் கூட முழு ஈடுபாடற்ற சமுதாயம் (சினிமாவிற்கு கூட மிகத் தாமதமாக வந்துவிட்டு படத்தினை புரிந்து கொள்ள முடியாது கம்மென்ட் அடிப்பது) தங்கள் படங்களை பார்க்கும் கண்ணோட்டம் சரியாக இருக்கவேண்டும் என்று வேறு பயம் தருகிறது, இதற்கு நான் மிகவும் ரசித்த "வாகை சூட வா" படத்தின் தோல்வியும் ஒரு மண்ணுக்கும் உதவாத சில சூப்பர் ஹீரோக்களின் வசூல் ரிப்போர்ட்டுகளும் தான் காரணம்.

தங்கள் படத்தை பார்த்த முதல் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதால் படத்தில் எனக்கு தோன்றிய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்,  இந்தக் கதைக்களத்திற்க்கான உங்கள் உழைப்பு மற்றும் தேர்வுக்கே மிகுந்த பாராட்டுகள், முட்புதர்கள், செம்மண் நிலம், கண்மாய் என வறண்டு போன வானம் பார்த்த பூமியின் வெப்பம், குளிரூட்டப் பட்டுள்ள அறையிலும் எனக்கு உஷ்ணத்துடன் இருந்தது.

தோள்களில் சுமந்துகொண்டு காமிரா அலைந்து திரிந்து எங்களுக்காக படமாக்கிய விதம் மிக அருமை, கண்மாயில் எதிர்த்தண்ணியில் பாயும் மீன்கள், தோல் உறிக்கப்படும் மாடு என்று எல்லா காட்சிகளையும் எந்த மிகைப் படுத்துதலில்லாமல் தந்தமைக்கு நன்றி. மேலும், வீரர்கள் எறியும் அம்புகளுடனும், வேல்களுடனும் பயணிக்கும் காமிரா கோணங்களும், கம்ப்யுட்டர் சித்து விளையாட்டுகளையும்  தவிர்த்தமைக்கு பெரிய கும்பிடு. எளியோரின் போர் முறை எளிமையாகவே இருந்தது.

இசை, அந்த கால நினைவுகளை கொண்டுவரவில்லையே என்றாலும், நீங்கள்  அதையும் justify  பண்ணியதாகவே தோன்றுகிறது. இந்த கால கருவிகளைக்  கொண்டே அந்தக கால  மனிதர்களின் உணர்வுகளை கொண்டு வந்துவிடுகிறது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் வெறும் தாரை தப்பட்டை சப்தங்கள் பண்டைய காலம் போன்றே இருந்தால், கண்டிப்பாக நாம் இந்த படத்தின் சீரியஸ் கட்டங்களை உணரமுடிவது கொஞ்சம் சிரமம் தான்.

படத்தில் பாலைமறவனின் வசனங்கள் மற்றும் அவர் தலைவனுக்கு சொல்லும் உபதேசங்கள், மற்றும் பாலை பற்றி அவர் சொல்லும் கதையும் விதமும் உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டியது, ஷம்மு மற்றும் அவள் தோழிக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம், அடிமைகள் இல்லாத இனமாக நம்மை காட்டியிருப்பது எல்லாம் இன்றைய தமிழர்கள் (குறிப்பாக சாதி, வர்க்க அரசியிலால் பாழ்படுத்தப்படும் இளைஞர்கள்) பார்க்கவேண்டியது.


எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கம், புலி பற்றி முல்லைக்கொடித் தலைவர் தன வீரர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் விதம் தான், இந்தப் படம் பேசும் அரசியலாக நான் உணர்கிறேன், "சிங்கம் வலிமையானது தான், ஆனால் பசியும் , வலியும் தாங்காது, ஆனால் புலி பசியையும் தாங்கும், பதுங்கியும் தாக்கும்"என்று சொல்லும்போது உணர்சிபெருக்கு கண்ணீரை உருமாறும் யதார்த்தம் " இருக்கிறது, "நீங்கள் யாரும் தலைவனின் கட்டளைக்கு காத்திருக்கத் தேவையில்லை தனித் தனியாக போராடுங்கள் " எனும் இடங்களில் உணர்ச்சிகள் கட்டுப்படவில்லை, இதை சாதுரியமாக திமிர் பிடித்த தணிக்கை நண்பர்களிடமிருந்து புரியா வண்ணம் கொணர்ந்த உமக்கு மேலும் ஒரு மலர்மாலை.

மேலே சொன்ன இந்த அரசியலைப் பேசத் தான் நாம் 2000 வருடங்கள் முன்னோக்கிப் போகவேண்டியுள்ளது."திருப்பி அடிக்கனும்னு" (7aam அறிவு ) சொல்லும் உணர்வு கூட இன்று கமர்சியல் ஃபார்முலாக்கலாக மட்டுமே வெகுஜனங்களிடம் மிஞ்சுகிறது, அந்தப் படங்களில் சென்னை சூப்பர் கிங்க்சுக்காக கை தட்டும் ரசிகனாகவே என்னை நான் உணர்ந்தேன்.

உடன்போக்கு, ஆநிரைகவர்தல், வழிப்பறி, மீன்பிடித்தல், பறை, காதல், வானசாத்திரம், கள்வெறி, மயக்கம் என இலக்கிய அடித்தளங்கள் இப்படத்தில் வலுவாக இருந்தது, என்ன வசன உச்சரிப்பில் ஷம்மு நிறைய தடுமாறியிருப்பதாய் தோன்றியது (ஒருவேளை இது என் தவறான கணிப்பாகவும் இருக்கலாம்). மீண்டும் ஒருமுறை இந்தப் படத்திற்கு உழைத்த எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், வாழ்ந்து காட்டிய நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். பாடல்களில் பாலையின் தீம் சாங்கும், முதல் பாடலும் நன்றாக இருக்கிறது .

திரு.செந்தமிழன் அவர்களே!!
உங்களுக்கு நிற்க ஒரு அடி மண் மட்டும் தானா, இந்த மாதொரு படைப்பின் மூலம் எங்கள் மனதில் நின்றுவிட்டீர்கள்.....இந்தப்படம் கண்டிப்பாய் வெற்றிபெறும், எங்களுக்கு மேலும் பல நல்ல படைப்புகளை தருவீர்கள் என்று வாழ்த்துகிறேன்

எமது முகநூல், ப்ளாகர் நண்பர்களே!!  நல்ல படைப்பை ஊடகங்கள் வணிகரீதியாக ஏற்காவிடினும் , நமது முயற்சிகூட பெருமளவு கைகொடுக்கும் , தயவு செய்து இந்தப்படம் பார்த்து தேவையற்ற மசாலா, தழுவல் படங்களைப் பார்த்த பாவங்களை கழுவுங்கள்.படத்தை பாருங்கள் திரையில்.......

Screens  in  Tamilnadu  



காக்கா கடி:

*கொஞ்சம் பாலை பற்றிய அறிவுடன் படம் பார்ப்பது நல்லது, ஒன்னும் தெரியவில்லை என்றால் எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகங்களை பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/Sangam_landscape  உதவக்கூடும்

*எனக்கு இந்தப் படம் மிக வேகமாக சென்றுகொண்டிருப்பதாய் தோன்றியது, பலர் இதை ரொம்ப ஊர்ந்து செல்லும் கதை என்று நொந்து கொள்ளும் லாஜிக் எனக்குப் புரியவில்லை, (what else you need எனி kuthu song or santhaanam??)

* எங்கேயாவது சில இடங்களில் எனது பார்வை மிகைபடுத்தியிருந்தால், என்னை மன்னிக்கவும்  .. எளிமையாய் சொல்லும் கலை மிகக் கடினம் என்று புரிந்துகொண்டேன்.



சனி, நவம்பர் 12

போகிற போக்கில் - எனக்குப் பிடித்தவற்றில் இருந்து....





எஸ். ராமகிருஸ்ணன் நேர்காணல்

இந்த நேர்காணலை காணொளியாக ஏற்கனவே பார்த்து கேட்டு இருக்கிறேன். திரும்பவும் திரும்பவும் கேட்கத் தூண்டுகிறது. அதில் வாசிப்புப்பற்றி கூறும்போது மிக எளிமையாக ஒரு உதாரணம் பின்வருமாறு சொல்வார்.

"எப்படி நம்மளோட உருவத்தைத் திருத்திக்கிறதுக்கு ஒரு கண்ணாடி அவசியப்படுதோ அதேபோல மனதைத் திருத்திக்கிறதுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது."


ஆனால் இலக்கிய உலகில் "நான் வாசித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன்" என்று கூறும் பலரின் மனம் திருந்தியிருப்பதாகத் தெரியவில்லை.
இன்று எங்களைச் சுற்றி நடக்கும் எல்லாச் சம்பவங்களையும் பார்க்கும்போது...படித்தவர்கள்...எல்லாம் தெரிந்தவர்கள்... நாகரிக மனிதர்களைக் கண்டால்...வெருண்டோட வேண்டியிருக்கிறது.

மாறாக, படிப்பறிவில்லாத ஒரு பாமரனனோடு மிகச் சந்தோசமாக உரையாட முடிகிறது. இன்னமும் அவன் மனிதனாகவே இருக்கிறான். இந்த வேறுபாடு ஏன் என்பதுதான் இன்னமும் புரியவேயில்லை. அப்படியானால் படிக்காமல் உலகம் தெரியாமல் கச்சை கட்டுக்கொண்டு இன்னமும் ஆதிவாசிகளாகவே இருந்திருக்கலாம்போல...........

எஸ். ராமகிருஸ்ணனின் உரையாடலை முழுவதும் காண்பதற்குhttp://www.sramakrishnan.com/?page_id=717

வெள்ளி, நவம்பர் 4

துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்



கருணாகரன்



நன்றி :- வல்லினம்
‘காலையின் ஒலிகளை
கவிதைகளாய் என்னிடம் விட்டுப்போகும்
பறவைகளுக்குத் தெரிவதில்லை
மாலைச் சூரியனின் அந்திம ஒளியில்
எனது மாபெருங் கவிதைகளிலும்
குருதி படிந்து போவதை.’

(செத்தவனின் பிம்பமான நான்)

‘தெரு மரங்கள்
சவத்துணி போர்த்தியுள்ளன
இரவுகள்
நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன.’

(மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு)

‘ஒரு கத்தியிலோ
உடைந்த கண்ணாடித்துண்டுகளிலோ
சவரம் செய்து வீசிய பிளேட்டுகளிலோ
வெட்டியெறிந்த நகத்துண்டுகளிலோ
எல்லாவற்றிலும்
ஒட்டியிருக்கிறது மரணத்தின் நெடி’

(சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்)

‘மகா ஜனங்கள் அழுதார்கள்
ஆரசனின்
தூசி படர்ந்த சப்பாத்துக்களின் கீழே
ஆயிரமாயிரம் கபாலங்கள்’

(மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்)

சித்தாந்தனின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘துரத்தும் நிழல்களின் யுகம்’ நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் சிலவற்றில் உள்ள அடிகள் இவை. முப்பது கவிதைகளையுடைய இந்த நூலில் பெரும்பாலானவையும் யுத்தக் கவிதைகள் அல்லது யுத்தம் பற்றிய கவிதைகள். அல்லது சித்தாந்தனின் வாழ்க்கைக் கவிதைகளாகவேயுள்ளன. இந்தக் கவிதைகளிலுள்ள பெரும்பாலான அடிகளிலும் யுத்தத்தின் உக்கிரம், சனங்களின் அவலம், இரத்தத்தின் நெடில், வாழ்க்கையின் இழப்பு, அச்சத்தின் பயங்கரம், காலத்தின் துயர் ஆகியனவே இருக்கின்றன. ஆகவே இது ஒரு யுத்தக் கவிதைகளின் தொகுதியாகவே நமது மனதில் பதிவாகின்றது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பெரும்பாலான ஈழக்கவிதைகள் விடுதலை வேட்கையையும், அந்த வேட்கையுடனான போராட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தன. ஆனால் இப்போது எழுதப்படும் கவிதைகள் யுத்தத்தின் கொடுமையை, யுத்தத்தின்hல் பாதிகக்கப்பட்ட சனங்களின் அவலத்தை, யுத்தப் பிரபுக்களின் பயங்கர யுகத்தைப் பேசுபவனவாக உள்ளன. இது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம். குhலம் எப்படி உருத்திரிந்திருக்கிறது என்பதற்கான சாட்சியமாக இந்தக் கால வெளியின்; படைப்புகளே இருக்கின்றன. கடந்த முப்பதாண்டு கால ஈழ அரசியற் செயற்பாடுகளின் தீவிரம் தவிர்க்க முடியாமல், எல்லாத் தளங்களிலும் எல்லா அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அரசியல் சாதாரணமானதாக இருக்கவில்லை என்பதே இதன் பொருள்.

கடந்த முப்பதாண்டு கால அரசியல் என்பது (1980-2010 வரையுமானது) யுத்த அரசியல் அல்லது ஆயுதந்தாங்கிய அரசியல், பயங்கரவாத அரசியல் அல்லது ஜனநாயக மறுப்பு அரசியலாகவே இருந்துள்ளது. ஆனால் இதைச் சனங்கள் விரும்பவும் இல்லை: எதிர்பார்க்கவும் இல்லை: ஏற்கவுமில்லை. ஆனால் இதை எதிர்க்க முடியாமல் எதிர்க்க திராணியற்ற நிலையில் அவர்கள் திணறினர். ஆப்படி அவர்கள் ஆக்கப்பட்டிருந்தனர்.

சித்தாந்தனின் கவிதைகள் பெரும்பாலும் இந்தப் பின் புலத்தையே, இந்த உண்மைகளையே சொல்கின்றன. குறிப்பாக அதிகாரத்திற்கெதிரான குரலாக, அதிகாரச் சூழலில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமலும் அதேவேளை அது தொடர்பான எச்சரிக்கையோடடும் உள்ள நிலைமையில் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. எனவே இவை தவிர்க்க முடியாமல் தீவிர அரசியற் கவிதைகளாகவே இருக்கின்றன. இந்தத் தீவிரம் என்பது சீரியஸ் என்ற அர்த்தத்தையுடையது.

சித்ததாந்தனின் கவிதைகளிலுள்ள முக்கிய அம்சம் அல்லது சிறப் பென்பது அவரின் வெளிப்பாடாகும். வஸீகரமான மொழிதல், மொழியைக் கையாழ்வதிலுள்ள ஆற்றல், நுட்பமான சித்திப்புக்கள், தீவிரத் தன்மை கொள்ளும் கொந்தளிப்பு இந்த மாதிரியான வெளிப்பாட்டாற்றல் நமது சூழலில் இரண்டு கவிஞர்களிடம் இருக்கின்றன. ஒன்று சித்தாந்தனிடம் இன்னொன்று எஸ்போஸ் என்ற சந்திரபோஸ் சுதாகரிடம் இதைத் தவிர்த்து இன்னொருவரை அடையாளங் காணுவதெனில் அது தானா விஷ்ணு எனலாம் (தானா விஷ்ணுவின் அண்மைய கவிதைகள்)

முக்கியமாக இவர்கள் அதிகாரத்திற்கு ஏதிரானவர்கள். அதிகாரமே இவர்களுக்குப் பிரச்சினை. அதுவும் சகிக்க முடியாப் பிரச்சினை. எனவே அந்தப் பிரச்சினை உருவாக்கும் சினத்திலிருந்து அந்தச் சினம் உண்டாக்கும் கொந்தளிப்பிலிருந்தே இவர்களுடைய கவிதைகள் உருவாகின்றன.அவ்வாறு உருவாகும் கவிதைகளுக்கான மொழியும்கூட அந்தச் சூழலின், அந்த நிலைமைகளின் மொழிதான்.

நெருக்கடிக் காலத்தின் மொழிக்கு எப்போதும் கடும் வீச்சும் சூடும் இருக்கும். தமிழகத்தில் இதற்குச் சிறந்த உதாரணம் ஆத்மாநாம், சிரியாவில் நிஸாக் கப்பானி, பலஸ்தினத்தில் மஹ்முத் தர்வீஸ், றிஷீட் ஹுசைன், சமீஹ் அல்காசிம் போன்ற பலர் இன்னும் ஆபிரிக்காவில் கேபிரியேல் ஒகாரா, டேவிட் டியோப், கிறிஸ்தோபர் ஒகிக்போ, செங்கோர், க்வெஸிப்றூ, டெனிஸ்ப் நூற்றஸ் என்று பல அடையாளங்களுண்டு.

சித்தாந்தன் தன்னுடைய காலத்திலன் பயங்கரங்களையும் அவலங்களையும் அச்சுறுத்தல்களையும் சொல்கிறார். ஓன்று இவை குறித்த வெளிப்பாடு, அடுத்தது இவற்றுக்கான எதிர்வினை. ஆகவே பயங்கர நிலை, துயரம், அச்சுறுத்தல்கள் பற்றிய பதிவாகவும் இவற்றுக்கெதிரான எதிர்ப்புக் குரலாகவும் இந்தக் கவிதைகள் இருக்கின்றன.

‘எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக் கொண்டு
இராணுவ வாகனங்கள் செல்கின்றன’

(தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்)

இது ஒரு சூழ்நிலையின் பதிவு. உண்மை யதார்த்தம் இந்தக் கவிதை இந்தச் சூழலை

‘குழந்தைகளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத் தொடங்கிவிட்டன’

என மேலும் விவரித்துச் செல்லும் இந்தக் கவிதை சிறுவர்களின் உலகம் பறிக்கப்பட்டதை - சிதைக்கப்பட்டதை வெளிப்படுத்துகின்றது. எளிமையாக

‘சுண்டல்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
‘ஐஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத் திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை
……………………………….
இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய்ப் படிந்திருக்கின்றன’

என்கிறது இங்கே பெளிப்படையாக ஒரு முரண் தென்படுகின்றது. சிறுவர்கள் நடமாடுவதற்கு அச்சுறுத்தலாக இருக்கம் தெருவில் ஏனையவர்களினதும ஏனையவற்றினதும் நடமாட்டம் இருக்கிறது. வண்டிகள் ஓடுகின்றன, சுண்டல்க்காரன்,ஐஸ்பழ வியாபாரிகள் எல்லோரும் திரிகிறார்கள். ஆனால் சிறுவர்கள் இல்லை. இது முரண் அல்ல. இதுதான் உண்மை, யதார்த்தம் என்று சொன்னோமே அது.

‘விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்குக் காவு கொடுத்த
தாயின் ஒப்பாரி’

குழந்தைகள் தெருவுக்கு வர முடியாதபோது எப்படி நிகழும் தெருவில் இராணுவ வண்டியின் கீழ் நிகழும் மரணம்? துவிர இதற்கு முதல் அடிகள் இப்படி அமைகின்றன. ‘குழந்தைகளின் சுவடுகள் அழிந்த தெருக்களில் இராணுவத் தடங்கள் பெருகிக் கிடக்கின்றன’ என

ஆனாலும் சித்தாந்தனின் கவிதைகளின் வெளிப்பாட்டின் நவீனத்துவங்களைக் கொண்டு, நுண்ணம்சங்களையும் துலக்குகின்றன.

‘காலம்
ஒரு கனியாக வாய்க்கவில்லை நமக்கு
அழுகலின் மணம் எம் தூக்கத்தை விரட்டுகிறது
……………………………
ஒரு கனியை
எம்பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமானால்
ஆத்மார்த்தமான அந்தக் கணத்தில்
பறவைகளுக்கு மேலும் ஒரு சோடிச் சிறகுகளைப்
பரிசளித்த மகிழ்வில் திளைப்போம்’

(மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு)

இப்படிக் கவித்துவங்கள் கூடிவரும் இடங்கள் அதிகம். நம் காலத்தின் முக்கியமான கவிஞர்களில்_ கவியாளுமைகளில் சித்தாந்தன் முக்கியமானவர். அவர் இப்படி முதன்மை அடைவது அவருடைய வெளிப்பாட்டினாலும், அவர் கொண்டிருக்கும் கலக மனத்தினாலுமே. குறிப்பாக சனங்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதே சித்தாந்தனின் சிறப்பு. அதுவே அவருடைய அடையாளம். சனங்களில் ஒருவராக இருப்பதன் மூலம் இந்த அடையாளமும் இந்த அடையாளத்திற்குரிய மனநிலையும் அவரை வந்தடைகின்றன.

இல்லையென்றால்,

‘எல்லப் பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம்’
(கடவுளரின் நகரங்களில் வாழுதல்)

என்று எப்படி எழுத முடியும்.

சித்தாந்தன் எந்தத் தரப்பையும் ஆதரிக்கவுமில்லை, நியாயப்படுத்தவுமில்லை. அவர் நம்பிக்கை கொள்வதற்கு எந்தச் சமிக்ஞைகளும் தெரியவுமில்லை. ஆனால் வாழ்க்கை நம்பிக்கையற்று இருக்கவும் முடியாது. அவருடைய நம்பிக்கைகள் சகமனிதர்களிடம் வரலாற்றிடமுமே இருக்கின்றன. இதே வேளை சனங்கள் தங்களுக்கு முன்னே எழுகின்ற விம்பங்களால் கவரப்படுவதையும் அந்தப் பிம்பங்களாலேயே மக்கள் பலியாவதையும் சுட்டி எச்சரிக்கின்றார்.

‘மகா ஜனங்கள்
வார்த்தைகளை நம்பப் பழகிவிட்டார்கள்
தெருக்களில் அலைகின்றன
எல்லா நாட்களிலும் நம்பிக்கையூட்டலுக்குரிய
வார்த்தைகள்
அனோஜ்
வார்த்தைகளை நம்பாதே’

(மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்)

‘வேண்டாம்
கொடும் இரவுகளில் புனையப்பட்ட
பிணக்கதைகளில் இருந்து
ஒரு பூ பூக்குமென்றோ
அதன் நடனமிடும் விழிகளில்
சூரியன் உதிக்குமென்றோ
யாருமே நம்ப வேண்டாம்’

(புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்)

பொதுவாகச் சித்தாந்தனின் கவிதைகள் பொய்மைகள், புனைவுகள் குறித்த உலகத்தையிட்ட கசப்புடனும் அதையிட்ட எச்சரிக்கையுடனும் உள்ளதை உணர முடிகிறது. இதற்கு இந்தத் தொகுதியிலுள்ள முப்பது கவிதைகளில் எட்டு, ஒன்பது கவிதைகளின் தலைப்புக்கள் சாட்சி - கவிதைகளில் பெரும்பாலானவையும் ஆதாரம்.

கவிதைகளின் தலைப்புகள்...

1. பிடாரனின் திகைப்பூட்டும கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கின்றேன்.
2. இருளுக்குள் வதைபட்டுச் சிதைகிற ஒளி ஓவியம்.
3. புனிதத்தின் உன்னத இசையை வேட்டையாடும் நாய்.
4. பாம்புகள் உட்புகும் கனவு.
5. மெய்யுறங்கும் நாட்களின் கோடை.
6. புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்
7. நாக்குகளில் ஏற்றப்பட்டிருக்கிறது தூண்டில்.
8. சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்.
9. மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு.

இதேவேளை இத்தகைய கவிதைகளுக்கு அப்பாலான பல நல்ல கவிதைகளும் இந்தத் தொகுதியிலுள்ளன.

பசியோடிருப்பவனின் அழைப்பு, தெய்வங்கள் எறிந்த கத்திகள். கை மறதியாய் எடுத்து வந்த மூக்குக் கண்ணாடி, நிகழ் கணத்தின் வலி, உரையாடலில் தவறிய சொற்கள், பாறைகளுக்கடியில் விழித்திருப்பவனின் இரவு போன்ற கவிதைகள் இந்த வகையில் சிறப்படைந்துள்ளன. குறிப்பாக உறவு, தன்னிலை உணர்தல் ஆகியவற்றில். இதில் ‘நிகழ்கணத்தின் வலி’ மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை நினைவுபடுத்தும் தன்மையுடையது.

‘பொம்மையுடனான சினேகிதம்
எம்மையும் பொம்iமைகளாக்கிவிட்டது
நாம் சிரித்தோம்
அது பொம்மையின் சிரிப்பு
நாம் அழுதோம்
அது பொம்மையின் அழுகை
நாம் கூத்தாடினோம்
அது பொம்மையின் களிப்பு
…………………………….
எமது அழுகையை
பொம்மைகளின் அழுகை என்றனர்
எமது இரத்தத்தை
பொம்மைகளின் இரத்தம் என்றனர்

கடைசியில் நாம்
பொம்மைகளாகவே இறந்துபோனோம்’

சித்தாந்தனின் மொழியிலிருந்தும் வெளிப்பாட்டு முறையிலிருந்தும் வேறுபட்டிருக்கும் கவிதையிது. சுpத்தாந்தனின் கவிதைகள் அவருடைய மொழியமைப்பினாலும் வெளிப்பாட்டு முறையினாலும் எபபோதும் தனித்துத் தெரிபவை. கவித்துவம் கூடிய கணங்களை உள்ளம்சமாகக் கொண்டவை.

‘மறுதலிப்பின் மறுநாழிகையில்
உடைந்து கிடந்தது பூச்சாடி’

(குரோதத்தின் கத்தியோடு நாம் பகிர்ந்து கொண்ட இரவு)

‘நானொரு பறவையை வரைந்தேன்
அது போராயுதமாயிற்று
அதன் நிழல் என் உறக்கங்களிலிருந்து
என்னைத் துரத்துகிறது
………………………………..
நிழல்களின் மௌனம் கொடியது
…………………………’


‘திசைகளின் முரண்களிலிருந்து
ஈனத்தில் பிறப்பெடுக்கும் வனமிருகங்களின்
ஒழுங்கற்ற ஒலிக்குறிகளை
வாசித்தபடி புணரத்தொடங்கினோம்
……………………………..’

இவையே சித்தாந்தனின் அடையாளத்தை காட்டும் மொழிதல், ஆனால் தன்னுடைய முதற் தொகுதிக் கவிதைகளுக்கும் இரண்டாம் தொகுதிக் கவிதைகளுக்குமிடையில் அவரிடம் முதிர்வு உருவாகியுள்ளது. இந்த கவிதைகள் நிகழ்காலத்தைப் பேசுவனவாக இருக்கின்றபோதும் பொது வெளிப் பிரக்ஞையை அதிகம் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

சுருக்கமாகச் சொன்னால் தனக்கான திசையினை அவர் கண்டுபிடித்துள்ளார் எனலாம். இந்தக் திசையில் இனித்தொடரும் பயணம் என்னவாக இருக்கும்? இந்தத் தொகுதியின் அட்டையினை றஸ்மி சிறப்பான முறையில் அமைத்துள்ளமை மேலும் நன்றாக உள்ளது.
நன்றி :- வல்லினம் http://www.vallinam.com.my/issue35/bookreview.html