சனி, ஆகஸ்ட் 18

தேவமுகுந்தனின் சிறுகதைகள்--எம். ஏ. நுஃமான்


தேவமுகுந்தனின் "கண்ணீரினூடே தெரியும் வீதி" சிறுகதைத்தொகுப்பு

தேவமுகுந்தனின் சிறுகதைகளை இப்பொழுதுதான் முழுமையாகப் படித்தேன். இவர் 1990களின் தொடக்கத்தில் எழுதத் தொடங்கியிருக்கிறார். கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் பத்துக் கதைகள்தான் எழுதியிருக்கிறார். இவரது முதல் கதை 'மரநாய்கள்' 1993ல் அச்சில் வெளிவந்திருக்கிறது. ஏனைய ஒன்பது கதைகளும் 2008 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகளில் எழுதப்பட்டவை. இடைப்பட்ட சுமார் பதினைந்து ஆண்டுகளில் இவர் கதைகள் எவையும் எழுதவில்லை. குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும், புதிய தலைமுறையைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது.



தேவராசா முகுந்தன் என்ற சொந்தப் பெயர்கொண்ட தேவமுகுந்தன் தன் பெரும்பாலான கதைகளை நிர்மலன் என்ற புனைபெயரிலேயே எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனினும், கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக கொழும்பிலேயே வாழ்ந்துவருகிறார். இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தில் கல்விகற்று, தேசிய கல்வி நிறுவகத்தில் செயற் திட்ட அதிகாரியாகப் பணியாற்றி, அங்கு பணியாற்றிய காலத்திலேயே அரசாங்க புலமைப் பரிசில் பெற்று மலேசியாவில் பட்ட மேற் படிப்பை முடித்து, தற்போது திறந்த பல்கலைக் கழகத்தில் கல்வித் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். இவரது பெரும்பாலான கதைகள் கொழும்பையே களமாகக் கொண்டிருப்பதை இப்பின்னணியில் புரிந்துகொள்ள முடிகிறது. மரநாய்கள் மட்டும் யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டது. இரட்டைக் கோபுரங்கள் மலேசியப் பின்னணியில் இலங்கையரின் அனுபவத்தைப் பேசுகிறது. ஏனைய கதைகளின் பிரதான களம் கொழும்புதான்.1980க்குப் பிந்திய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பிரதான கருப்பொருள் இனமுரண்பாடும் யுத்த அவலமும்தான்.



இனமுரண்பாட்டால் பிளவுண்ட இலங்கையின் யுத்த சூழல் தனிமனிதர்களின் வாழ்வை, அவர்களின் உணர்வுகளை, நடத்தையை எவ்வாறெல்லம் பாதித்திருக்கின்றது என்பதைத்தான் கடந்த முப்பது ஆண்டுகாலப் பகுதியில் எழுந்த மிகப் பெரும்பாலான படைப்புகள் பேசுகின்றன. அதிலும் குறிப்பாக, யுத்தத்தின் குழந்தைகளான முகுந்தன் போன்ற புதிய தலைமுறையினரின் எழுத்தில் இதுவே முனைப்பாக வெளிப்படுகின்றது.



இவர்கள் இன உறவின் சுகத்தை அன்றி, இனப் பிளவின் குரூரத்தையே அனுபவித்தவர்கள். இவர்களின் படைப்புகள் அந்த அனுபவத்தின் வெளிப்பாடுகளாக அமைவது தவிர்க்க முடியாதது.



முகுந்தனின் முதலாவது கதையான 'மரநாய்கள்' யுத்தத்தினால் சிதைந்து, ராணுவம் முகாமிட்டிருந்த யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றின் அன்றாட வாழ்க்கையை சிறுவன் கோபியின் அனுபவத்தின் ஊடாகப் பேசுகின்றது. அந்தக் கிராமத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்திருந்த மக்களில் சிலர் வீடு திரும்பி அழிபாடுகளைத் திருத்தி வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கத் தொடங்குகிறார்கள். ராணுவம் பள்ளிக் கூடத்தில் முகாமிட்டுள்ளது. ராணுவம் கோழிகளைப் பிடித்துச் செல்வதால் அண்மையிலிருந்த கோழிப் பண்ணை மூடப்பட நேர்கிறது. குறைந்த விலைக்குக் கோழிகளை விற்கிறார்கள். கோபியின் அம்மா ஒரு கோழி வாங்கிவருகிறார். அவன் அதை ஆசையோடு வளர்க்கிறான். இரவில் கோழியைப் பிடிக்க வரும் மரநாயை அண்ணன் துரத்தியடிக்கிறான். ஆனால் ராணுவம் ஊரெல்லாம் கோழிகளைப் பிடிக்கத் தொடங்குகிறது. ஒருநாள் வீடுவீடாகப் போய் கோழிபிடித்துவரும் ராணுவத்தினர் கோபியின் கண்முன்னாலேயே அவனது கோழியை அடித்துக் கொன்று உரப்பையில் போட்டுத் தூக்கிச் செல்கிறார்கள். கோபி அழுதுகொண்டு தோட்டத்தில் நின்ற அண்ணனிடம் சொல்கிறான். கதை இவ்வாறு முடிகிறது:'வாழைகளுக்குப் பாத்தி கட்டிக்கொண்டிருந்த தமயன் மண்வெட்டியைக் கீழேபோட்டுவிட்டு நிதானமாகச் சொன்னான். 'மரநாய்களைத் துரத்தவேண்டும்' ஒன்றும் புரியாதவனாக கோபி அழுகையை அடக்கிக் கொண்டு கண்ணீரினூடு தமயனின் முகத்தை அண்ணார்ந்து பார்த்தான். அது தெளிவாக இருந்தது. இவனுக்குப் புரிய இன்னும் சிறிது காலம் போதும்.'இக்கதையில் 'மரநாய்கள்' ராணுவத்துக்குக் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ராணுவத்தின் முற்றுகைக்கு உட்பட்ட கிராமத்தில் உரிமையும் சுதந்திரமும் அற்ற மக்களின் வாழ்வையும் அவர்கள் மனதில் கொதிப்பு ஏறிவருவதையும் இக்கதை யதார்த்தமாகச் சித்திரிக்கின்றது. யாழ்ப்பாண யுத்த சூழலை மையமாகக் கொண்டு தேவமுகுந்தன் எழுதிய கதை இது ஒன்றுதான்.



இவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே, யுத்தம் காரணமாக இன உறவு பிளவுண்ட தலைநகர் கொழும்பில், சிங்கள நடுத்தர வர்க்கத்தினரின் சந்தேகப் பார்வைக்கு மத்தியில் தமிழர்கள் எதிர்நோக்கிய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றியே பேசுகின்றன. இனமுரண்பாடும் மோதலும் உச்சத்தில் இருந்த யுத்த காலத்தில் கொழும்பிலும் பிற பிரதேசங்களிலும் பொதுமக்களை, குறிப்பாகச் சிங்களவர்களைப் பெருமளவில் பாதித்த புலிகளின் தொடர்ச்சியான குண்டு மற்றும் தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக பொலிஸ், ராணுவக் கெடுபிடிகளும் கைதுகளும் அதிகரித்தன. எந்தக் கணத்தில், எங்கு, எது நடக்குமோ என்ற பீதி எல்லோர் மனதிலும் கவிந்திருந்தது. உத்தரவாதம் அற்ற வாழ்க்கைச் சூழல் எல்லோரையும் உலுக்கிக்கொண்டிருந்தது. புலிகள் யார், பொதுமக்கள் யார் என்று வேறுபிரித்தறிய முடியாத நிலையில் தமிழர்கள் அனைவரும் சந்தேகத்துக்கு உள்ளாகினர். அரசின் நடவடிக்கைகளும் ஊடகப் பிரச்சாரமும் இதைத் தீவிரப்படுத்தின. புலிகளின் அரசியலுக்கு இது அவசியமாக இருந்தாலும், குறிப்பாக, தமிழர்களைப் பொறுத்தவரை இது மரண விளையாட்டாகவே அமைந்தது. தனிப்பட்ட கோபதாபங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்படும் ஒரு பொய்த்தகவல் கூட ஒருவரின் கைதுக்கும், சித்திரவதைக்கும், சிறைவாழ்வுக்கும் அல்லது மரணத்துக்கும் கூடக் காரணமாகும் ஆபத்து எப்போதும் இருந்தது. தனிமனித உரிமைகள் செல்லாக் காசாகிய நிலைமையே யதார்த்தமாயிற்று.



சிங்கள் தேசிய வாதம் தமிழ் வெறுப்பை ஊட்டி வளர்ப்பதற்கும், தமிழ்த் தேசியவாதம் சிங்கள வெறுப்பை ஊட்டி வளர்ப்பதற்கும் இது நல்ல பசளையாயிற்று.இந்த யதார்த்தத்தை ஈழத்துத் தமிழ் இலக்கியம் எவ்வாறு கையாண்டது என்பது ஒரு முக்கியமான கேள்வி. மிகப் பெரும்பாலான எழுத்தாளர்கள் தமிழ்த் தேசியவாத நேக்கு நிலையிலிருந்தே இதைப் பார்த்திருக்கிறார்கள் என்பதே எனது அவதானிப்பு. தேவமுகுந்தன் இதற்கு விலக்கல்ல என்பதையே இத்தொகுப்பில் உள்ள பல கதைகள் உணர்த்துகின்றன. அவருடைய கதைகள் மிக வலுவாக இந்த அனுபவத்தைப் பேசுகின்றன. பெரும்பாலான கதைகள் அவருடைய சொந்த அனுபவத்தைப் பேசுகின்றனவோ என்று எண்ணத் தூண்டும் வகையில் உண்மைக்கு நெருக்கமாகத் தோன்றுகின்றன.



'சிவா' இத்தொகுப்பிலுள்ள மிக உருக்கமான கதைகளுள் ஒன்று. அவன் ஒரு பல்கலைக்கழக மாணவன். மிகுந்த திறமைசாலி. சிங்கள மாணவர்களுடனேயே மிக நெருங்கிப் பழகுகிறான். ஒரு சிங்கள மாணவியைக் காதலிக்கிறான். ஆனால் ஒருநாள் இரவு பல்கலைக்கழகத்திலிருந்து வீடு செல்லும் வழியில் சந்தேகத்தின் பேரில் சோதனைச் சாவடியில் அவன் கைதுசெய்யப்படுவதோடு எல்லாமே மாறுகிறது. வாயிற் காவன் உட்பட நெருங்கிப் பழகிய சிங்கள மாணவர்கள் எல்லோரும் தமிழ் மாணவர்கள்மீது சந்தேகப்படுகிறார்கள். பல்கலைக் கழகத்துக்குள் பொலிஸ் புகுந்து தமிழ் மாணவர்களை எல்லாம் விசாரணைக்காக அழைத்துச் செல்கிறது. சிவா ஆறுவருடங்கள் சிறையில் இருந்து குற்றம் நிரூபிக்கப்படாமல் சித்திரவதைக்கு உள்ளான வடுக்களுடன் வெளியே வருகிறான். நண்பர்களிடமிருந்து தனிமைப்படுகிறான். பின்னர் (மீண்டும் கைதுசெய்யப்பட்டு) காணாமல்போய்விடுகிறான்.சிவாவுடன் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்த நண்பன் முரளிதான் கதைசொல்லி. ஆறுவருடங்கள் சிறையிலிருந்து மீண்ட சிவாவை ஒரு கலியாண வீட்டில் சந்திப்பதுடன் கதை தொடங்குகிறது. பின்னர் முரளி பழைய சம்பவங்களை நினைவுகூர்கிறான். இறுதியில் சிவா மீண்டும் காணாமற்போனது பற்றி ஒரு நண்பன் சொன்ன தகவலுடன் கதையை முடிக்கிறான் முரளி. எனினும் கதை நமக்குள் அத்துடன் முடிவதில்லை. இன மோதலில் பலிக்கடாக்களாகிப்போன ஏராளமான அப்பாவி சிவாக்களின் கதைகள் நம்முள் தொடர்கின்றன.



'இடைவெளி', 'ஒரு சுதந்திர நாள்' ஆகிய இரு கதைகளையும் 'சிவா'வுடன் இணைத்துப் பார்க்கலாம். இடைவெளி கதையில்வரும் ஜெகன் கொழும்பில் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறான். சக சிங்கள ஊழியர்களுடன் நட்புடன் பழகுகிறான். எனினும,; அலுவலகத்தில் தமிழ்ப் பத்திரிகை வாங்கிப் போடுவது தொடர்பாகவும், சுனாமி நிவாரணத்தக்குச் சேர்க்கும் பணத்தை தமிழ்ப் பிரதேசத்துக்கும் கொடுக்கவேண்டும் என்பது தொடர்பாகவும் சக ஊழியர்களுடன் உரிமைப் போராட்டம் நடத்தி 'பயங்கரவாதி' என்ற பட்டமும் பெறுகிறான். அவன் அலுவலகத்துக்கு லீவு போட்ட ஐந்து நாட்களில் மூன்று நாட்கள் கொழும்பில் குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. அவனது லீவையும் குண்டுவெடிப்பையும் தொடர்புபடுத்தி அலுவலகத்தில் பலர் அவனைச் சந்தேகிக்கிறார்கள். கடைசியாகக் குண்டு வெடித்த அன்று அவன் தன் குழந்தையை நவலோக ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயிருந்தான். அவன் வெளியே வந்த போது வீதியில் வாகனங்கள் எதுவும் இல்லை. ஆட்டோவுக்காக அவன் அங்கும் இங்கும் ஓடித்திருந்ததை அவனுடன் வேலைசெய்யும் யாரோ கண்டிருக்கிறார்கள். மறுநாள் பொலிஸ்காரர்கள் அலுவலகத்துக்கு வந்து விசாரணைக்காக ஜெகனை அழைத்துச் செல்வதோடு கதை முடிகிறது.



கொழும்பில் வாடகை அறையில் வாழ்ந்துகொண்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் யாழ்ப்பாண மாணவன் ஒருவனின் சுதந்திர தின அனுபவத்தைக் கூறுகின்றது 'ஒரு சுதந்திர நாள்'என்ற கதை. சுதந்திர தினத்தில் தமிழர்கள் சுதந்திரம் இல்லாமல் வாழும் முரண்தான் கதைப்பொருள். பாதுகாப்புக் கெடுபிடி காரணமாக பகலுணவுக்குச் செல்லும்போது அவன் பரிசோதனைக்கு ஆளாவது, அவன் வழக்கமாகச் சாப்பிடும் லக்ஷ;மி பவன் மூடிக்கிடப்பது, பொலிஸ் பதிவு புதிப்பிக்கப்படாததால் அங்கு வேலைசெய்த மலையக இளைஞர்களை பொலிஸ் அள்ளிச் சென்ற செய்தி, பெரிய தேசியக் கொடியைப் பிடித்தவாறு சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் பொப்பிசை பாடியவாறு பஸ்சில் சுற்றுலாச் செல்வது, இனியும் சாப்பாட்டுக்கு அலைந்து ஆபத்தில் மாட்டிக்கொள்ளாது அறையில் இருக்கும் பாணைச் சாப்பிடலாம் என்று அவன் அறைக்குத் திரும்புவது என்று கதை விரிந்து முடிகிறது. சிங்களவர்களுக்கே சுதந்திரம், தமிழர்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பதை கதை அழுத்திக் கூறுகின்றது.



'இரட்டைக் கோபுரம்' மலேசியப் பிண்ணணியில் அமைந்தாலும் தொனிப்பொருளைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட மூன்று கதைகளுடனும் உறவுடையது எனலாம். சுனில், லால், முரளி மூவரும் அரசாங்க புலமைப் பரிசில் பெற்று மலேசியாவில் உயர் கல்வி கற்பவர்கள். ஒரே வாடகை வீட்டில் சமைத்துச் சாப்பிட்டு மிகுந்த நட்புடன் வாழ்பவர்கள். மலேசிய இலங்கையரான சுப்பிரமணியத்துடன் அவர்களுக்கு நெருங்கிய நட்பு ஏற்படுகின்றது. சிங்களவர், தமிழர் என்ற முரண்பாடுகள் எவையும் அவர்களை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. அப்படி ஒரு அன்னியோன்யம். திடீரென சுனிலின் குழந்தை பேராதனை மருத்துவ மனையில் இறந்ததாகத் தகவல் வருகிறது. சுனிலின் தம்பி முரளியிடம்தான் தகவல் சொல்கிறான். உடனே அண்ணனை ஊருக்கு அனுப்பிவைக்கும்படி கேட்கிறான். சுனிலிடம் தகவலைச் சொல்லி அவனைத் தேற்றி விமான நிலையத்துக்கு அழைத்துவருகிறார்கள். சுப்பிரமணியம்தான் தன்னுடைய செலவில் பயணச் சீட்டு வாங்கி தன்னுடைய காரில் கூட்டிவருகிறார். விமானம் இரண்டுமணிக்கு கொழும்புக்குப் போகும், அங்கிருந்து சுனிலின் மச்சான் அவனைக் கண்டிக்கு அழைத்துச் செல்வான். ஆனால் அது நடக்கவில்லை. அன்றைக்கு கொழும்புக்கான விமானங்கள் எல்லாம் ரத்துச்செய்யப்பட்டுவிட்டன. கட்டுநாயக்கா விமான நிலையத்தைப் புலிகள் தாக்குவதாகச் செய்தி தெரிவிக்கப்படுகின்றது. தன் பயணம் தடைப்பட்ட ஆத்திரத்தில் 'பறத் தெமிலு' எனச் சுனில் திட்டுகிறான். கதை இவ்வளவுதான். முரளியால் சுனிலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் தனக்குள் இப்படிச் சொல்லிக்கொள்கிறான்: 'என் காதுகளை என்னால் நம்பமுடியவில்லை. சுனில் ஏன் 'பறத் தெமிலு' என்று ஏசுகிறான்? அவனின் பயணம் தடைப்பட்டதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். அவனின் துயர் எங்களிலும் பரவியுள்ளபோது ஏன் எங்களைத் திட்டுகிறான்,' முரளிக்கு இது புரியாவிட்டாலும் இன முரண்பாடு மனித நடத்தையை எவ்வாறெல்லாம் பாதிக்கின்றது என்பது இதன்மூலம் நமக்கு நன்கு புரிகின்றது.இதுவரை நாம் பார்த்த நான்கு கதைகளிலும் சிங்களவர் பற்றிய ஒரு எதிர்மறையான கருத்துநிலை வெளிப்படுவதைக் காணலாம்.



பாதிக்கப்பட்டவர்களின் நோக்குநிலையில் இருந்து நாம் இவற்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.'கண்ணீரினூடே தெரியும் வீதி' இனமோதல், யுத்தம் தொடர்பாக நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு கதை என்று நினைக்கிறேன். மோதலில் சம்பந்தப்பட்ட இரு சாராரின் துயர அனுபவமும் ஒரேசமயத்தில் இக்கதையில் பேசப்படுகின்றது. ஜயசிகுறு படைநடப்பு காலப் பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. கதைசொல்லி ஒரு பல்கலைக்கழக மாணவன். கொழும்பில் கல்கிசையில் வாடகை அறையில் குடியிருக்கிறான். அவனது குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து கிளிநொச்சியில் குடியிருக்கிறது. அப்பா கனடாவில். தம்பி நகுலன் இயக்கத்தில் சேர்ந்துவிட்டான். ஒருநாள் பள்ளிக்குப் போனவன் திரும்பிவரவில்லை. அவனுடைய சைக்கிள்தான் திரும்பிவருகிறது. அவன் தானாக இயக்கத்தில் சேர்ந்தானா அல்லது பாலத்காரமாகச் சேர்க்கப்பட்டானா என்பதைக் கதைசொல்லி சொல்லவில்லை. தம்பி இயக்கத்தில் சேர்ந்தனால்தான் கதைசொல்லியின் குடும்பம் யாழ்ப்பாணம் திரும்பிச் செல்ல முடியவில்லை என்று நாம் யூகிக்கலாம். கிளிநொச்சியிலிருந்து அம்மா அவனுக்குக் கடிதம் எழுதியதினால் அவன் இரண்டுமுறை அறை மாறவேண்டி இருந்தது. கனடாவிலிருந்து அப்பா அனுப்பும் காசை வங்கிமூலம் கிளிநொச்சிக்கு அனுப்புவதற்கு அவன் வங்கி முகாமையாளரின் அவசியமற்ற விசாரணைக்கெல்லாம் உட்படவேண்டியிருக்கிறது.கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பல்கலைக்கழகம் மூன்று மாதமாக மூடிக்கிடக்கிறது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்த அவனது பல்கலைக்கழக நண்பர்கள் எல்லாரும் ஊர் போய்விட்டார்கள். அவனால் கிளிநொச்சிக்குப் போகமுடியாது. அதனால் கொழும்பில் தங்கியிருக்கிறான். ஒரு தூக்கமற்ற இரவில் கதைசொல்லி இக்கதையைச் சொல்கிறான். கதை இவ்வாறு தொடங்குகிறது:



'நான்கைந்து மாதங்களாய் இதேமாதிரித்தான் இரவில் ஒழுங்காகத் தூங்க முடிவதில்லை. காலிவீதியைக் கிழித்து விரையும் அம்புலன்ஸ் வண்டிகளின் அவல ஒலிகள் என்னைத் திடுக்கிட்டு விழிக்கச் செய்கின்றன. பெரிய ஆஸ்பத்திரிக்கும் விமான நிலையத்திற்குமிடையே அவலக் குரலெழுப்பியபடி அம்புலன்ஸ் வண்டிகள் ஓடி விரைகின்றன. கல்கிசைச் சந்தியிலிருக்கும் மலர்ச்சாலைக்கு சடலங்களை ஏற்றியபடி வரும் இராணுவ டிரக் வண்டிகள் அவற்றை அங்கு இறக்கிவிட்டுச் செல்கின்றன. அவ்வண்டிகளின் முன் இருக்கைகளில் இராணுவ வீரர்கள் துயர்படிந்த முகத்தினராய் அமர்ந்திருப்பர். நகரெங்கும் வெண்கொடிகள் காற்றில் படபடக்கின்றன. நான் தங்குகிற அறையிருக்கும் கல்கிசை மார்க்கட்டுக்கு முன்னாலுள்ள வீதியிற்கூட இரு வீடுகளில் வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டுள்ளார்கள். அவ்வீட்டு முகப்புகளில் இராணுவச் சீருடை தரித்த இளைஞர்களின் பெரிய வர்ணப் புகைப்படங்களை வைத்துள்ளார்கள். அவற்றைப் பார்க்க அவர்களுக்கு என்னிலும் பார்க்க இரண்டு மூன்று வயது குறைவாய் இருக்கும் போலிருந்தது. இன்றுமாலை அவ்வீடுகளுக்குப் போய்க் கதைத்துவிட்டும் குடித்துவிட்டும் வந்த எனது அறையின் சொந்தக்காரர் குமுது அங்கிள், சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மல்லாவியிலிருந்து வவுனியா வந்துவிட்டனவென்றும் இன்று இரவு வீடுகளுக்கு வந்து நாளையிண்டைக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுமென்றும் சொல்லியிருந்தார். சொல்லும்போது அவர் குரல் தழுதழுத்தது. அவருக்குத் தெரியப் பிறந்து வளர்ந்து இறந்த பிள்ளைகள்.. அவர் தூக்கி வளர்த்த பிள்ளைகள் அவர்கள்...'தூக்கமற்ற அந்த அதிகாலையில் அவனுடைய அறைக்கதவு தட்டப்படுகிறது. போலிஸ் விசாரணைக்கு வந்துள்ளதோ என்ற தயக்கத்துடன் கதவைத் திறக்கிறான். வந்தவன் அறை நண்பன் நிக்சன். அவசரமாக அவனை வெள்ளவத்தைக்கு அழைத்துச் செல்கிறான். அவனது அப்பா அவனை அவசரமாக ரெலிபோன் எடுக்கச் சொன்னதாகச் சொல்கிறான். 'கோப்பாயில நகுலன் செத்திட்டானாம்' என்று அப்பா சொல்லி அழுகிறார். 'பொடி பெரியாஸ்பத்திரியில் இருக்காம்' என்று சொல்கிறார். கதை பின்வருமாறு முடிகிறது:'எனக்குத் தலை சுற்றுமாப்போல இருக்கு. நிக்ஸன் என்னைப் பிடித்தபடி கொமினிகேசனின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு வெளியே வருகிறான். நகுலனின் உடல் அநாதையாய் ஆஸ்பத்திரிச் சவச்சாலையில் இப்ப கிடக்கும். உடலில்லாமல் கிளிநொச்சியில் செத்தவீடு நடக்கும்.நாளைக்கு வீட்டுக்காரர் குமுது அங்கிளோடை வீட்டுக்குப் பக்கத்திலை நடக்கப்பபோகின்ற செத்தவீடுகளுக்குப் போகவேண்டும்.கண்ணீரினூடு வீதி தெரிகிறதுவெண்புறாக்களாய் சீருடையணிந்த பாடசாலைப் பிள்ளைகளை ஏற்றிய வாகனங்கள் காலிவீதியில் ஊர்கின்றன. அந்த வாகனங்களை விலத்தியபடி அவலக் குரலெழுப்பி அம்புலன்ஸ் வண்டிகள் தெற்கிலிருந்து வடக்குநோக்கி விரைகின்றன. வானம் வேறு அழுது தொலைக்கின்றது.'கடந்த முப்பது ஆண்டுகளில் இனமோதல், யுத்த அனுபவங்களைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட சில சிறந்த சிறுகதைகளுள் இதுவும் ஒன்று என்பது என் கணிப்பு. சிங்களவர், தமிழர் என்ற பேதம் இன்றி யுத்த அவலம் எல்லோர் மீதும் கவிந்திருப்பதை எவ்விதப் பாசாங்கும் இன்றி இக்கதை யதார்த்தமாகச் சொல்லுகின்றது. இத்தொகுப்பிலுள்ள தேவமுகுந்தனின் மிகச் சிறந்த கதை என்றும் நான் இதைத்தான் சொல்லுவேன். இனமுரண்பாட்டுக் காலகட்டத்தில் ஒரு எழுத்தாளனிடம் நாம் எதிர்பார்க்கக்கூடிய அறம் இக்கதையில் பிரகாசமாகத் தெரிகிறது.



'சிவா', 'இடைவெளி', 'இரட்டைக் கோபுரம்' போன்ற கதைகளில் வெளிப்படையாகத் தெரியும் சிங்களவர்களைப் பற்றிய ஒரு எதிர்மறைப் பார்வை இக்கதையில் இல்லை என்பது எனக்கு மிகுந்த ஆறுதல் தருகின்றது.'வழிகாட்டிகள்', 'கூட்டத்தில் ஒருவன்' ஆகிய இரு கதைகளும் இனமுரண்பாட்டைப் பின்னணியாகக் கொண்டவை எனினும் பிரச்சினையை வேறு ஒரு தளத்தில் அணுகுகின்றன. இன மோதல் சூழலில் சமூகப் பிரக்ஞையற்ற உயர் வர்க்கத் தமிழர் சிலரின் நடத்தையை கிண்டலோடு விமர்சிக்கும் கதைகளாக இவற்றைக் கருதலாம். பிரச்சார வாடை சற்றுத் தூக்கலாக உள்ள மிகைப்படுத்தலாக இக்கதைகள் அமைகின்றன.



முகுந்தனின் கதைகள் எல்லாம் ஒரு வகையில் சுய அனுபவ வெளிப்பாடுகளாகக் கருதக்கூடியவையே எனினும் 'இவன்' என்ற கதை சுய அனுபவச் சாயலைச் சற்றுக் கூடுதலாகப் பெற்றிருப்பதாகத் தோன்றுகின்றது. பல்கலைக்கழகத்தில் படித்து முதல் வகுப்பில் சித்தியடைந்தும் பல ஆண்டுகளாக வேலையற்றிருக்கும் ஒரு பட்டதாரியின் அனுபவத்தைக் கதை விபரிக்கிறது. வேலையற்ற ஒரு தமிழ் இளைஞன் கொழும்பில் வாழ்வதிலுள்ள பிரச்சினைகளையும் அது சித்திரிக்கின்றது. பணமும் செல்வாக்கும் உடைய, தன்னைவிடப் படிப்பிலும் திறமையிலும் குறைந்த தனது தமிழ் நண்பர்கள் நல்ல தொழிலில் இருப்பதையும் தான் வேலையற்று அலைவதையும் கதைசொல்லி விரிவாக விபரிக்கிறான். ஒருவகையில் சற்று மிகைப்படுத்தலாகத் தோன்றினாலும் கதைசொல்லும் முறையில் இத்தொகுப்பில் உள்ள நல்ல கதைகளுள் இதையும் ஒன்றாகக் கருதலாம்.'



சின்ன மாமா' இத்தொகுப்பிலுள்ள ஒரு வித்தியாசமான கதை. போர்ச் சூழலோடு நேரடியான தொடர்பற்றது. சாதியில் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்தபின் தன் குடும்பத்தை முற்றிலும் புறக்கணித்த ஒரு பிரபல எழுத்தாளரைப் பற்றியது கதை. ஒரு எழுத்தாளனின் போலி வாழ்க்கையை அம்பலப் படுத்துவது என்பதற்குமேல் சொல்லும் முறையில் கதை சிறப்பாக அமைந்துள்ளது.



பொதுவாகவே தனது எல்லாக் கதைகளிலும் தான் ஒரு நல்ல கதைசொல்லி என்பதை தேவமுகுந்தன் நிரூபித்திருக்கிறார். கொழும்புச் சூழலை, அதன் சமூக-புவியில் வரைபடத்தை சிறப்பாக வரைந்திருக்கிறார். பத்துக் கதைகளில் அரைவாசிக் கதைகளாவது நல்லகதைகள் என்ற தகுதியைப் பெறுகின்றன. அந்தவையில் புதிய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் தேவமுகுந்தனும் முக்கிய இடம்பெறுகிறார் என்பதில் ஐயம் இல்லை.கடந்த முப்பது ஆண்டுகால இனமுரண்பாடு, மோதல், யுத்தம் பற்றிய பிரச்சினைகளை ஈழத்துத் தமிழ் இலக்கியம் எவ்வாறு கையாண்டுள்ளது என்ற கேள்வியை நான் இங்கு மீண்டும் எழுப்ப விரும்புகிறேன்.



பெரும்பாலும் இவை பாதிக்கப்பட்டவர்களின் குரலாக, சார்புநிலைப்பட்டவையாகவே காணப்புடுகின்றன. சிங்கள மேலாதிக்கம், ராணுவ ஒடுக்குமுறை, அரசபயங்கரவாதம் பற்றிய விபரிப்பகளாகவே அவை பெரிதும் வெளிப்பட்டுள்ளன. அது ஒருவகையில் தவிர்க்கமுடியாதது என்று வாதிடலாம். அது ஒருவகையில் நியாயமாகவும் தோன்றலாம். எனினும், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் விடுதலை இயக்கங்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளையும், கொலைகளையும், பயங்கரவாதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிப் பேசாத இலக்கியம் ஒருபக்கச் சார்பானது என்பதையும் நாம் அழுத்திக் கூறவேண்டும்.இந்திய பிரிவினையின்போது இந்துக்களும் முஸ்லிம்களும் பல இலட்சக் கணக்கில் கொல்லப்பட்டதையும் புலம்பெயர்ந்ததையும் பின்னணியாகக் கொண்டு சாதத் ஹசன் மண்டோ, கே. ஏ. அப்பாஸ் போன்றவர்கள் அதற்கு வெளியே இருந்து அவற்றின் அபத்தத்தைப் பற்றி எழுதியவற்றை நான் நினைத்துப்பார்க்கிறேன். எழுத்தாளனின் அற உணர்வுக்கு நாம் அவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். தமிழில் அத்தகைய எழுத்து மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. தேவமுகுந்தனின் 'கண்ணீரினூடே தெரியும் வீதி' கதையை அவ்வகையிலேயே நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். இது தொடர்பாக சுதாராஜின் உயிர்க்கசிவு சிறுகதைத் தொகுதிக்கு நான் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்ட ஒரு கருத்தோடு இக்குறிப்பை முடிக்க விரும்புகிறேன:; 'சோபாசக்தி, சக்கரவர்த்தி ஆகிய புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் போல் யுத்த சூழலில் விடுதலை இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்ட கதைகளை எழுதியவர்களை ஈழத்தில் மிக அரிதாகவே காணமுடியும். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கவில்லை. கோவிந்தன் என்ற புனைபெயரில் இயக்கங்களின் வன்முறையை அம்பலப்படுத்தி புதியதோர் உலகம் நாவலை எழுதிய நோபேட் விடுதலைப் புலிகளால் பின்னர் கொல்லப்பட்டார். செல்வி அவ்வாறு கொல்லப்பட்ட ஒரு பெண் கவிஞர். இப்பின்னணியில் சுதாராஜ் போன்றவர்களின் மௌனத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். யுத்தத்துக்குப் பிந்திய சூழலில் இந்த மௌனத்துக்கு விடுதலை கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.'இந்த எதிர்பார்ப்புடன் தேவமுகுந்தனுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
-எம்.ஏ.நுஃமான்

வெள்ளி, ஆகஸ்ட் 10

மரணத்தில் துளிர்க்கும் கனவு

 
- சி. ரமேஸ்

நன்றி : எதுவரை, ஆகஸ்ட் 2012 | இதழ் – 04

நுண்ணுணர்வின் வெளிப்பாடாக அமையும் கவிதை,சொற்களுக்குள் கட்டுண்ட அர்த்த உற்பத்தியை உள்வயப்படுத்திஅதன் கருத்துருவாக்கம்,வெளிப்பாட்டு முறைமை,வடிவஅமைப்பால் பன்முகத்தன்மைக் கொண்டு விரிந்த எல்லைகளைச் சாத்தியமாக்குகிறது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின் மொழியின் உச்சபட்ச சாத்தியங்களை நிகழ்த்தும் ஈழத்து நவீன தமிழ்க்கவிதை, அதீத புனைவு, புதிய உத்திகளுக் கூடான வடிவமைப்பு, குறியீட்டு முறைமைகளுக்கூடான பிரக்ஞை பூர்வமான முன்வைப்பு,முதலியவற்றால் செறிவிறுக்கம் கொண்ட நிகழ் கவிதையாகப் பரிணாமம் கொள்கிறது.

இரண்டாயிரத்துக்குப்பின் ஈழத்தில் எழுந்த கவிதைத் தொகுதிகளில் பெரும்பாலானவை தமிழரின் துன்பியல் வாழ்வியலையும் அது வேரூன்றிய பூர்வீகபூமியையும் அவாவுறுகின்ற கவிதைகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட பிரதிகளாகவே காணப்படுகின்றன.தமிழர் வாழ்வில் நிலம் பற்றிய பதிவுகள், வரலாற்று ஆவணமாகவும் முதன்மையானதாகவும் முக்கியமான வையாகவும் கருதப்படுகின்ற இச்சூழலில் தமிழரின் வாழ்வியல் இருப்பியலின்; சுவடாகத்துலங்கும் இக்கவிதைகள், ஈழப்போராட்டத்தையும் சிதைந்துபோன போரியல் வாழ்வையும் அதன் வலிகளையும் வன்கொடுமைகளையும் பாடுபொருளாகக் கொண்டவை.

மரணங்கள் மலிந்த பூமியில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் மையம் கொள்ளும் இக்கவிதைகள் பூர்வீக பூமியை இழந்து தவிக்கும் நலிவுற்ற மக்களின் வாழ்வியலை உயரோட்டமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்கின்றன. இடிபாடுகளுக்குள் சிதைவுண்டு அழிவுண்ட காலவெளிக்குள் அமிழ்ந்து நொந்து நைந்து போன துயரியின் அவலக் குரலாய் எழுந்து நிற்க்கும் இக்கவிதைகள் இராணுவ ஆக்கிரமிப்புக்களால் பலியாகிப் புதையுண்டு போன உறவுகளின் வலிகளையும் தொடர்ச்சியான இடம்பெயர்வுகளையும் இழப்புக்களையும் பயங்கரவாதத்தின் வன்கொடுமையை எதிர்கொண்ட வாழ்க்கைச் சூழலையும் பேசுகின்றன.இத்தடத்தில் முகம் கொள்ளும்“மரணத்தில் துளிர்க்கும் கனவு”அழிவென்ற பேரிலக்குடன் நடத்தப்பட்ட போரில் ஈழத்தமிழரால் தொலைக்கப்பட்ட – புதையுண்ட வாழ்வியலை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யும் அதே வேளை மூடுண்ட வெளிக்குள் குரல்வளைகள் நெரிக்கப்பட்ட மக்களின் நிகழ்சார் இருப்பை ரணமும் வலியுமாக முன்மொழிகிறது.

ஈழத்து மக்களின் புரையேறிபோன வாழ்வை வெவ்வேறு கோணங்களில் பல்வேறு அனுபவங்களுக்கூடாகக் வெவ்வேறு காலகட்டங்களைக் காட்சிப்படுத்தும் இத்தொகுப்பு, கவிதைகள் வாயிலாக வடக்கு, கிழக்கு அப்பால் வடமேல்மாகாணத்தையும் ஒன்றிணைக்கிறது. அனார், அலறி, பஹிமா ஜஹான், சித்தாந்தன், துவாரகன், தீபச்செல்வன், பொன்.காந்தன், தானா.விஷ்ணு என எட்டு கவிஞர்களின் எண்பது கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்த இத்தொகுப்பின் தொகுப்பாசிரியார் கவிஞரும் ஊடகவியலாளருமான பாலேந்திரன் பிரதீபன் எனப்படும் தீபச்செல்வன் ஆவார்.

யுத்தபூமியின் மூடுண்ட நகரத்தின் வாழ்வியல் பொழுதுகளைப் பாடும் தீபச் செல்வனின் கவிதைகள் சமகால நிகழ்வுகளின் பதிவுகளாகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்கின்றன.துயர் மண்டிய மரணவாழ்வின் பொழுதுகளைக் கண்டு நொந்து புண்ணுற்றுப்பாடும் இக்கவிதைகள் ஈழத்தமிழரின் வாழ்வியலை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுபவை.ஒரு கோயிலைக் கைப்பற்ற தொடங்கிய யுத்தம் பேரழிவாய், பெருஊழியாய் மாறி ஈழத்தமிழரை அழித்த கதையைச் சொல்லும் “போர்தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்”பொருட் பெறுமானமுள்ள வரலாற்று நிகழ்வின் ஒரு பதிவை ஆவணப்படுத்துகிறது.

“போராளிகள் மடுவை விட்டுப் / பின்வாங்கினர் /நஞ்சூரிய உணவைத் /
தின்ற / குழந்தைகளின் கனவில் /நிரம்பியிருந்த / இராணுவ
நடவடிக்கையிலிருந்து / போர் தொடங்குகிறது.
நகர முடியாத இடைஞ்சலில்/நிகழ்ந்து வருகிற /எண்ணிக்கையற்ற /
இடம் பெயர்வுகளில் /கை தவறிய /உடுப்புப் பெட்டிகளை விட்டு /
மரங்களுடன் /ஒதுங்கியிருக்கின்றனர் சனங்கள்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -88)

மனித வாழ்வின் உயிர்ப்பின் கணங்களை நிதர்சன வாழ்வுக்கூடாக இக்கவிதை புடம் போட்டுக்காட்டுகிறது.

அச்சுறுத்தும் வன்முறைகளினதும் அவ்வன்முறைகளினால் நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைகளினதும் கோரமுகங்களை இதயசுத்தியுடன் மென்னுணர்வுத்தளத்தில் வெளிப்படுத்தும் ‘தீபச்செல்வனின்’“எல்லாக் கண்களையும் இழந்த சகோதரியின் கனவு” நிகழ்வின் வழி மனிதம் ஏந்திய பெருந்துயரை தத்துருபமாகக் கண்முன் நிறுத்துகிறது.

“….குழந்தைகளின் குருதியால் ஊறியிருந்தபடி
பெருநிலத்தை அவள் இறுதியில் பார்த்திருக்கிறாள்
என்றும் தன்னால் தன் நிலத்தை
பார்க்க முடியாதபடி திரும்பியிருக்கிறாள்
கடலால் கொண்டு செல்லப்பட்ட நாளிலிருந்து
கனவிழந்து தன் உலகத்தை தேடிக்கொண்டிருக்கிறாள்
உடலெங்கும் ஷெல் துண்டுகள் ஓடியலைகின்றன
கண்களை இழந்த சகோதரி கனவுகளைப் பற்றியே பேசுகிறாள்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -103)

யுத்தம் குழந்தையின் அகப் புற உலகைச் சிதைத்து நகரைச் சின்னா பின்னப்படுத்துகிறது.அழிவுண்ட நகரத்தில் இருந்து எழும் மனித பேரவலத்தின் குரல் தீபச்செல்வனின் கவிதைகளில் மனிதத்தின் வலியாய் ஒளிர்கிறது.

காயத்திலிருந்து கொட்டுகின்ற கனவுகளைக் கூடச் சிதைக்கின்ற இராணுவ நடவடிக்கையால், பதுங்கு குழிக்குள் பல்லாயிரக்கணக்கான துன்பங்களை வாழ்வின் வலிகளாகத்தாங்கி கூனிக் குறுகி வாழும் ஈழமக்களின் அவல வாழ்வைக் காட்சிப்படுத்தும் தீபச் செல்வனின் ‘கடல் நுழைகிற மணற் பதுங்கு குழி’ பெருந்துயர் பொதிந்த அழிவின் குறிகாட்டியாய் முகம் கொள்கிறது.காலவடுவின் நிகழ்ப் புற பொருண்மையில் உருக்கொள்ளும் இக்கவிதை போரினால் காவு கொள்ளப்பட் சூழலில் வாழ்தலுக்கான எத்தனிப்பின் சுவடுகளை உணர்த்தி நிற்கிறது.

குருதியின் பாரத்தையும் கண்ணீரின் உவர்ப்பையும் கொடுந் துயரின் அவலத்தையும் அகதி வாழ்வின் நீட்சியையும் இழப்பின் சுவடுகளையும் தீப்ச்செல்வனின் கவிதைகள் வரலாற்றின் வழி பதிவு செய்கின்றன. ஒருவிதப் பிரச்சாரத்தன்மை தீபச்செல்வனின் கவிதைகளில் ஒளிர்ந்திருந்தாலும் இக்கவிதைகளை ஈழத்து இலக்கியப்பரப்பிலிருந்து ஒதுக்கிவிட முடியாது.ஏனெனில் இவை காலத்தின் சாட்சியாய் நிற்பவை.யுத்த சன்னதத்தின் அழிவின் சிதைவிலிருந்து எழும் இக்கவிதைகள் வாழ்வுக்கும் சாவுக்கு மிடையிலான வலியிலிருந்து பிறப்பவை.

நவீன சிந்தனையை உள்வாங்கி பன்முகத்தளத்தில் இயங்கும் அனார் பெண்ணுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் அநுபவங்களைப் பெண்ணிலை, பெண்ணியநிலை சார்ந்து நுட்பமாய் வெளிப்படுத்தும் இயல்புடையவர். இத்தொகுப்பில் இடம்பெறும் அனாரின் கவிதைகள் கண்டு கொள்ளப்படாத – வெளிப்படுத்தமுடியாத பெண்மொழிசார் அனைத்து கூறுகளையும் தனனகத்தே கொண்டு இயங்குகிறது.ஆணின் அனுபவக் குரலில் இருந்து வேறுபட்ட இக்குரல் அதீத குறியீடுகளையும் அனுபவ வெளிப்பாட்டுவழி கட்டமைக்கப்பட்ட நவீனகருத்தியலுக்கான மொழிசார் கூறுகளையும் கொண்டு இயங்குகிறது.

ஒரு சமூகப்பண்பாட்டு நடத்தைக்குள் சிக்குண்டு உள,உடல் ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்ணின் குரலாய் வெளிப்படும் ‘ஓவியம்’ அனுபவப் பதிவின் மூலம் பெண்ணுக்கென்று எதுவுமில்லாத ஆண்மையச் சிந்தனையால் உருவாக்கப்பட்ட நலிவுண்ட நிஜவுலகைக் காட்சிப்படுத்துகிறது.

“ வெறும் ஓவியத்தின் வாழ்வில் / என்ன அர்த்தமிருக்க முடியும் /அசைய
முடியாக் கைகளும்/நகர முடியாக் கால்களும் /பேசமுடியா உதடுகளும்/
சந்தேகமே இல்லை/வாயில்லா ஜீவன் ஆடாதசையாது /சுவரில் மாட்டப்
பட்டிருக்கிறது /பல்லிகள் எச்சில் படுவதையும் எதிர்க்காமல்”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -11)

சமூகநியதியைத் தகர்க்க முடியாது அத்தளைக்குள் சிக்குண்டு நலிவுற்று வாழ்வின் அர்த்தமின்மைக்குள் உழலும் குரூரவெளியை அனாரின் ‘யாருக்கும் கேட்பதேயில்லை’ கவிதையிலும் தரிசிக்கலாம்.

அதிக அலங்காரமில்லாத சொற்கள், நேர்த்தியானமொழியமைவு, எளிமையானபுனைவு நுட்பமாகக் கையாளப்படும் மொழிப்பிரயோகம் எனவிரியும் அலரியின் கவிதைகள் மிகைநிலை கவியாடலாக அமையாது அநுபவத்தை உள்வாங்கிய பகிர்தலாகவே அமைகின்றன. ராணுவ ஒடுக்குமுறையும் ஆயுதப் போராட்டமும் வலுப் பெற்ற யுத்த பூமியில் எவ்வித பிரக்ஞையும் ஏற்படுத்தாத மனித இறப்புக்களின் நிதர்சனத்தை, இயல்புற வாழ்வை ‘ஒருவன் கொல்லப்படும் போது’ என்னும் கவிதை மிக எளிமையாகப் பதிவு செய்கிறது.அதே சமயம் அக்கவிதை ஏற்படுத்தும் தாக்கம் அதீதமானது.

“ஒருவன் கொல்லப்படும் போது/பெரிதாக என்ன நடக்கப் போகின்றது.
குருதி பெருகி வடிந்து /பச்சை பசும் புல்தரை/செவ்வரத்தம் பூக்கள்
போலாகப் போகின்றது…./மல்லிகை மணம் கசியும் காற்று /பிணநெடி
சுமந்து வீசப் போகின்றது /அழும் குரல்கள் கணப் பொழுதில் /ஓய்ந்து
விடப்போகின்றன. /இவை தவிர/ஒருவன் கொல்லப்படும் போது /
பெரிதாக என்ன நடக்கப் போகின்றது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -23)

இனப்படுகொலைகள் தீவிரமடைந்த சூழலில் குரூரத் தாக்குதல்களுக்குள்ளாகி வதையுண்ட மனிதர்கள் ஆழ்கடலிலும் ஆற்றங்கரையோரங்களிலும் பிணங்களாக மிதப்பர்கள்; ‘கடலில் மிதக்கும் சடலங்கள் யாருடையதென்று யாருக்கும் தெரியாது” எனத் தொடங்கும் ‘இனந்தெரியாத சடலங்கள்;’ கடந்த கால நிகழ்வெளியை அப்பட்டமாக எடுத்துரைக்கிறது.

“யாருடைய சடலங்கள் கடலில் மிதக்கிறதென்று
சடலங்களுக்கு தெரியாதது போலவே
கடலில் மிதக்கும் சடலங்கள் யாருடையதென்று
கடலுக்கு தெரியாது.”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -26)

‘சொல் பொருள் பின்வரும் நிலையணியை நிகழ்கால இருப்புக்கு ஏற்ப வெவ்வேறு கோணத்தில் பயன்படுத்திய அலறி ஒரு பொருட்படக் கையாளும் சொற்களைக் கொண்டு சொல்லின் வெளியைத் திறக்கிறார்.இவ் மீப்பொருண்மையில் கட்டுறும் பிறிதொரு கவிதையே சித்தாந்தனின் “பசியோடிருப்பவனின் அழைப்பு”.

“மலைகளை உண்ணும் நுட்பங்களைப் போதித்தாய்/பிறகு
மலைகளின் சுவை பற்றிய பாடல்களை/இசைத்துக் காட்டினாய்/
மழைப் பொழிவுகளுக்குள்/மலைகள் வளரும் அதிசயங்களை
வசியச் சொற்களில் சொன்னாய்/மலைகள் தீர்ந்து போகும்
ஒருநாள் வருமெனில் /அப்போது/மலைகளைத் தின்று
மலைகளாகிய நாம்/நம்மையே பகிர்ந்துண்டு/பசியாறலாம்”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -57)

முழுக்கமுழுக்க கருத்தியலை உள்வாங்கி நவீன கதையாடல்வழி இயங்கும் இக்கவிதை பிரச்சினைக்குட்பட்டு மறைந்து போகும் யுகத்தில் கண்ணீர் வழி மனிதனால் மனிதன் காவு கொள்ளப்படும் துன்பியல் நிகழ்வைத் துக்கித்துக் காட்டுகிறது.சிதைவாக்கம் என்னும் பின்நவீனத்துவ களத்தில் இயங்கும் இக்கவிதை வெளிமாயையால் கட்டுண்ட அகவெளியைப் படிமத்துக்கூடாகக் காட்சிப்படுத்துவதுடன் அடக்கி ஒடுக்கப்பட்டு வேட்டையாடப்படும் மக்களின் வாழ்வை மலையென்னும் குறியீட்டுக்கூடாகவும் துல்லியமாக முன்வைக்கிறது.

ஈழத்தின் போரியல் வாழ்வை,அதன் வரலாற்றை, மரபை, தத்துவத்தை கதையாடல் வழி கட்டமைக்கும் சித்தாந்தன்கவிதைகள் ஆழ்ந்த பொருட் பெறுமானம் மிக்கவை.மொழிவழி இயங்கும் நுட்பமான சொல்லிணைகளால் உருவாக்கப்படும் இக்கவிதைகள் பன்முகத்தளத்தில் இயங்குபவை.மூடுண்ட நகரத்தின் இருண்ட வாழ்வின் ஆறாத ரணங்களையும் கொடுமையான மரணவெளிகளையும் காட்சிப்படுத்தும் ‘மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு’ குருதி சுவரப்பட்ட கடந்த காலத்தின் ஆவணப் பெட்டகம்.

“தெருமரங்கள்
சவத்துணி போர்த்தியுள்ளன
இரவுகள்
நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன.;;;;;……
சட்டத்தால் கட்டப்பட்டிருக்கிறது இரவு
வாகனங்களின் இரைச்சல்
கனவுகளில் எதிரொலிக்கிறது
கபாலத்தில் எதிரொலிக்கிறது
கபாலத்தில் உதிரத்தின் நெடி தெறிக்கிறது
இந்த இரவை எப்படித்தாண்டப் போகின்றேன்
ஆசுவாசப்படுத்த எவருமில்லை.”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -58)

கடந்த கால ஈழத்தின்சனநடமாட்டமில்லா அச்சமூட்டும் இரவு பொழுதினைக் காட்சிப்படுத்தும் இக்கவிதை யதார்த்த நிகழ்வின் நிழற் பிரதி.தூக்கத்தை தொலைத்து விட்டு நடுநிசியில் மரணத்துடன் இறந்து இறந்து வாழும் உருச்சிதைக்கப்பட்ட தமிழ் ஆத்மாக்களின் இதயத் துடிப்பைப் பதிவு செய்கிறது.

உருமாறும் தேசத்து தலைமைகளால் மனிதப்படுகொலைகள் சப்தமின்றி அரங்கேற்றப்படுகின்றன.; ஒப்பாரிகளும் ஓலங்களும் நிறைந்த மலிந்த மரணவெளிக்குள் நாற்சிகளினல் உருவாக்கப்பட்ட மொத்ஹவுசன் முகாமை விட கொடூர வதைமுகாங்கள் வன்மங்கள் உறையும் கண்களுடன் ஒளிர்கின்றன.அச்சமே வாழ்வாய்ப் போன அசமந்த சூழலில் உயிரைக் கையில் பிடித்தபடி அலையும் மனிதவாழ்வைக் காட்சிப்படுத்தும் ‘கடவுளர்களின் நகரங்களில் வாழுதல்’ என்னும் கவிதை ஈழத்தின் உண்மையின் தோற்றத்தை நகல் பிரதியாய் எடுத்துரைக்கிறது.

மக்களின் யதார்த்த வாழ்வியல் புறப்படிமங்களுக்கூடாக இக்கவிதையில் நன்கு காட்சிப்படுத்துகிறது.இப்பின்னனியில் எழும் ‘மகாஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்’ கனவுகளால் நிரப்ப பட்ட வர்ணம் குழையாத வாழ்வை அவாவுகின்றது. குழந்தைகளை மகிழ்வூட்டாத பொழுதுகள்,குருதி,அச்சம், துயரம் முதலானவற்றுக்குள் உழன்று கொண்டு போலி வார்த்தைகளை உண்மையென நம்பி ஏமாறும் மக்கள், உணர்வுகளற்ற உறவுகளுடன் கழிக்கும் பொழுதுகள் என விரியும் இக்கவிதை மனித வாழ்க்கை வாழ்வதற்;காக அன்றி அரசை சந்தோசிப்பதற்காகவும் அரசனை வாழ்விப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது என்னும் ஈழத்தின் இன்றைய நடப்பியல் நிலையையும் விளக்கி நிற்கிறது.

உயிர்ப்புடன் மேலான்மை செலுத்திய அரசியல் பின்னனியில் வன்மப்பட்டு சிதைக்கப்பட்ட வாழ்வைப் பாடும் சித்தாந்தன் கவிதைகள் மறைக்கப்பட்ட,மறுக்கப்பட்ட பகுதிகளை தன்னுள் இணைத்து இயங்குகிறது.உணர்வுகளுக்கப்பால் செறிவிறுக்கம் கொண்ட புதிய சொல்லாட்சி, புதிய சொல் முறைமைக்களுக்கூடாக நவீன கவிதைக்கான இயங்கு வெளியைச் சாத்தியமாக்கும் சித்தாந்தன் மீபொருண்மையில் இயங்கும் அசாத்தியமான படிமங்கள், குறியீடுகளுககூடாக நிகழ்கவிதைக்கான புதியவெளியைத் திறக்கிறார்.

சமூக அரசியல் பிரக்ஞையின் வெளிப்பாட்டுச்சாதனமாக விளங்கும் கவிதை கவிஞனின் அனுபவத்துக் கூடான அகப்புற உலகை கட்டமைக்கிறது.அக்கவிதை உணர்வு பூர்வமாகவும் உயிரோட்டமான முறையிலும் தான் வாழ்ந்த சூழலையும் அச்சூழலுக்குள் நிர்பந்திக்கப்பட்ட வாழ்வியலையும் அடையாளப்படுத்துகிறது. அவ்வகையில் உணர்வின் தடத்தில் எழும் பொன்.காந்தனின் கவிதைகள் போரினால் புண்ணுண்ட மக்களின் கோர இருப்பை ஆவணப்படுத்துகிறது.அகதி முகாம் என்னும் பெயரில் இயங்கிய சமகால வதை முகாம்களில் வாழ்ந்த மக்களின் மனங்களில் மேலெழும் விரக்தியையும் ஆபத்தையும் துயரையும் பேசும் இவரது கவிதைகள் தனித்துவமானவை.

“…நாம் மரணித்துக் கிடக்கையில்
எமது பிணம் எதிர்பார்க்கக்கூடிய
எமது குழந்தையின் மாபெரும் அழுகை
இல்லாதிருக்கும் சாபக்கேடு
எமை சிதையில் வதைத்தெரிக்கும்”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -118)

மரணங்கள் மலிந்த யுத்த பூமியில் பிணங்களை எண்ணி உரத்து அழுவதற்கு கூட குழந்தைகளற்ற சூழலை முன்வைக்கும் ‘நமது கடன்’ ஈழத்தமிழனின் நாதியற்ற அவல வாழ்வின் நிகழ்தன்மையை விளக்குகிறது.

சமூக,அரசியல் பரிமாணங்கள் உள்ள ஒருவரது இலக்கிய ஆளுமை, அவரது படைப்பினுடாகச் சுவரப்படும் போது அப்படைப்பு யதார்த்ததன்மை கொண்ட கனதியான பன்முகப் படைப்பாக உருப்பெறும்.அவ்வகையில் வரலாற்று நிகழ்வின் உள்முக இயங்கியலை மனித வாழ்வியலுக்கூடாகப் பதிவு செய்யும் கவிதைகளே பொன்.காந்தன் கவிதைகள். வாழ்வதற்கு இடமற்று துரத்தப்படும் ஈழத்தமிழர் வீடிழந்து, வாழ்விழந்து அகதிமுகாமில் மந்தைகளைப் போல் அடைக்கப்பட்டு வாழ்வதனை தந்தையின் மரணத்துக்கூடாகக் காட்சிப்படுத்தும் ‘அப்பாவின் சுதந்திரம் பற்றிய குறிப்பு’ யதார்த்தவாழ்வின் இயல்புநிலையை எடுத்துகிறது.

“அகதிவாழ்வைவிடஅவருக்குச் சாவுமேலானது
அப்பா ! செத்துவிட்டார்
சந்தோசம்
இப்போதுஅப்பாமுதுமையோடுகால் கடுக்க
நிவாரணத்திற்காககாத்திருக்கத்தேவையில்லை
சிலவேளைநெரிசலில் சிக்குண்டு
தடக்கிவிழுந்து
எழமடியாமல் தவிக்கவேண்டியதில்லை
அகதிவாழ்வைவிடஅவருக்குச் சாவுமேலானது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -120)

காலத்தின் சாட்சியாக நிற்கும் இக்கவிதை தான் வாழும் கொடிய சூழலின் மெய் உருக்காட்டியாக விளங்குகிறது.அப்பாவின்பாடல்,உன் எஜாமானின் மரணச்சான்றிதழ் முதலான கவிதைகளும் இத்தளத்திலேயே இயங்குகின்றன.

எதிர்காலம் பற்றிய கனவுகள் தொலைந்த நிலையில் போலிமைகளால் உள்ளமைக்கப்படும் வாழ்வே நிகழ்கால இருப்பாக கட்டமைக்கப்படும் ஈழச் சூழலில்,ஒளிமயமான காத்திருப்புக்கள் தொடர்கின்றன. ஆயினும் நம்பிக்கையிழந்து அல்லலுற்று ஏமாந்து வாழும் வாழ்வோ வேம்பெனக் கசக்கிறது.காருண்யம் மிக்க மனிதப்பண்புகள் மனிதனாலே வேட்டையாடப்படுகிறது.பொன்.காந்தனின் “காத்திருப்பின் கடைசிக்காலம்” என்னும் கவிதையும் இப்பின்னனியில் புறப்பொருட் படிமங்களுக்கூடாக தன்னை முன்மொழிகிறது

இன்றைக்கும் நாளைக்கும் இடையில் உயிர் வாழ்வதற்கும் உணவுக்கும் அல்லாடும் மனிதனின் உயிர்த்துடிப்பை “ஆடை” கவிதையில் தரிசிக்கலாம்.அகதி முகாமில் கொடும் நெருக்கடிக்குள்ளாகி வதைபட்டு நொந்து நொடிந்து வாழும் மனித வாழ்வியல் உணர்வுத்தளத்தில் காட்சிப்படுத்துகிறது.

“ஆடை வழங்கலாம் என அகதி முகாம் / ஒலி பெருக்கி அலறியது/
விழுந்தடித்து /நிவாரண அட்டையோடு ஓடிய / சனத்திரலில் /கலந்த
அவள் திரும்பி வரும்பொழுது / வெயிலை அணிந்து வியர்வை கொட்ட /
ஏமாற்றத்தை அணிந்து / ஆடைகள் முடிந்ததாம் / இனி அடுத்த முறையாம்
என்பதை ஃ/அணிய முடியாத முகத்துடன் / அணிந்து போன ஆடை நெரிசலில் /
கிழிந்ததும் தெரியாமல் நின்றாள்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -123)

விதிக்கப்பட்ட வாழ்வைப்பாடும் பொன்.காந்தன் கவிதைகள் மரணத்தில் துளிர்க்கும் கனவாகவும் வதைக்கப்பட்டு சிதைக்கப்பட்ட வாழ்வின் மேலெழும் துன்பியல்குரலாகவும் எழுகிறது.

வெர்லோன், பால்வெலரி கூறுவதைப்போல ‘உள்ளுணர்வின் தடத்தில் கவிஞனை மீறி எழும் அர்த்த தன்மையற்ற கலைஇலக்கிய வடிவமான கவிதை’ சிந்தனை,எண்ணப் புரிதலுக்கேற்ப வெவ்வேறான அர்த்த பரிமாணங்களைக் கொண்டு  இயங்கும் ஆற்றல்மிக்கது. நுட்பமான உத்வேகத்தன்மையுடன் இவ்வழி இயங்கும் விஷ்ணுவினுடைய பெரும்பான்மையான கவிதைகள் பன்முகத்தன்மை கொண்ட அபூர்வமான சொல்லிணைகளால் உருவானவை.
               “ நடுநிசிகளில் / பொம்மைகள் அச்சம் கொண்டெழுகின்றன /
                அவைகளின் விழிகளுள் படர்கிறது / உதிர்ந்து கிடக்கும்
                மிரட்டும் விழிகள்
                 பொம்மைகள் சிரித்துப் பேசும் / மனநிலையில் இருப்பதில்லை /
                 மிரட்டும் விழிகள் ஆணியடிக்கிறது / அதன் அடிமனதில்…”
 மொழியின் சாத்தியங்களை இக்கவிதை முடிவுறாத் தன்மையை நோக்கி இட்டுச் செல்கிறது. ஒரு புனைவின் கட்டமைவுவானது அதன் எல்லைகளை – அர்த்த சாத்தியத்தை -உணர்வுத் தொற்றை ஒரு வரையறைக்குள் சுருக்கிக் கொள்ளாது வாசிப்பு, மீள்வாசிப்புக்கூடாக அதன் பரிமாணங்களை வியாபிக்கச் செய்தலாகும். முடிந்த காலத்தின் பதிவாக, சாட்சியமாக விளங்கும் விஷ்ணுவினுடைய இக்கவிதை குறியீட்டுக்கூடாக உள்ளுணர்வின் மெய்கூறுகளை இணைத்துப் பார்க்கிறது.
 தொடரும் இடம் பெயர்வுகளுக்கு மத்தியில் எமது நிழல்களே அச்சுறுத்தும் கொலை வாள்களாக மாறி எம்மைத் துன்புறுத்தும் அகால சூழ்வெளியை விஷ்ணுவினுடைய ‘நிழற்படங்கள்’ தர்க்கரீதியாக உணர்வு பூர்வமாக முன்மொழிகிறது.
        “வெளவால்களும் சிலந்திகளுமாய்க் / கூடிவாழும் வீடொன்றில் / தொங்கியபடி
        இனம் தெரியாதொருவரின் / நிழற்படம் / முன்னெப்போதுமே கண்டிராத அந்த
        முகம் நன்கு பழகியவனைப் போல் / புன்னகைக்கிறது.
        எல்லோரும் விட்டுக்கிளம்பிய பின் /தனித்திருப்பது கூடத் தெரியாமல் /
        புன்னகைக்கும் அந்த உருவம் / என்னுடையதொன்றாய் மாறுகின்றது. /
        நான் திகைத்துத் திரும்புகையில் / சுவர் எங்கும் / தொங்கிக் /
        கொண்டிருக்கின்றன / என்னையொத்த நிழற்படங்கள் இன்னும் பல.”
                                             (மரணத்தில் துளிர்க்கும் கனவு -125)
    யுத்தத்தை மையப்படுத்தி இயங்கும் சூழலும் அது தரும் தாக்கமும் அதிர்வும் ‘அந்நியமாதல்’ கவிதையில் பிறிதொரு பொருட்புலத்தில் அர்த்த உருப்பெறுகிறது. விம்பங்கள் அழிக்கப்பட்டு உணர்வுகள் சிதைக்கப்பட்டு சொல்வதை மொழியும் மனிதனாக வாழ்க்கை நிர்பந்திக்கப்பட்டதை
            “ எனது வெளியெங்கும்  /எப்போதுமே  கண்டிராத /அவர்களது
            முகங்கள் / வீசிவிட்டுச் செல்லும் புன்னகைகளை / பத்திரமாக
            வாங்கிக் கொண்ட பின் / எனது புன்னகையைப் பதிலாக அளிக்கிறேன் /
            வெறும் சம்பிரதாயமாகப் / பரிமாறப்படும் புன்னகைகள் வெறுமையாய்… ”
என்னும் வரிகள் துயருடன் கூடிய வலிகளுடன் தன்னை முன்மொழிகிறது.
கவிதை கட்டுப் பொருளாக அன்றி நேரடித்தன்மை கொண்ட அநுபவத்தின் மாதிரியுருக்களாக விஷ்ணுவின் ‘அந்நியமாதல்’, ‘கனத்த நாள்’, ‘கடைசிநட்சத்திரம்’முதலான கவிதைகள் முகம் கொள்கின்றன. இவ்வகையான தூலத்தன்மை கொண்ட கவிதைகள் வெகுஅரிதாகவே இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஆயினும் இக்கவிதைகளிலேயே உயிர்த்துடிப்பும் உணர்வும் ஒன்றிணைந்த கலவையாய்ப் பொங்கிப் பிரவகிக்கிறது.

அடக்குமுறை,அதிகாரத்துக்கெதிரான குரலாக வெளிப்படும் ஃபஹிமா ஜஹனின் கவிதைகள் பெண் மொழிப்பிரக்ஞைக் கூடாகத் தன்னை விசாலித்துச் செல்கிறது.யுத்த சூழலுக்குள் வலியோடும் வாழ்வின் அனுபவங்களோடும் வெளிப்படும் இக்கவிதைகள் உள்ளடக்க முறையிலும் வெளிப்பாட்டு முறையிலும் தனித்தன்மையை பெற்றுள்ளன.
கதையும் கவிதையும் ஊடாடி ஒன்று கலக்கும் இடமாக ஃபஹிமாவின் ‘உயிர்வேலி’ அமைகிறது. ஆழ்பொருள் குறியீட்டுக் புனைவுக்கூடாக உயிர் பறிக்கும் வாழ்வின் நிகழ்வினைப்பாடும் இக்கவிதை பெருந்தேசியத்தின் வன்மத்தின் வெளிக்குள் உழலும் நிகழ் இருப்பைச் சித்திரிக்கிறது.

“குருவி குந்தியிருந்த மரத்தின் கீழே வீழ்ந்து கிடந்தது இற்றுப்போன ஒரு நிழல்
தொலை தூர ஆற்றுப்படுக்கையில் மறைந்து கொண்டிருந்தது கடைசிச் சூரியன்
அசைந்து வரும் கரிய யானைகளைப் பார்த்தவாறு கைவிடப்பட்ட தன் கூட்டை
எண்ணிக் கண்ணீர் உகுத்திடலாயிற்று அடைகாத்த முட்டைகளைப் பெருங்காற்றில்
போட்டுடைத்த கரங்களில் எல்லா அதிசயங்களும் இருந்தது “ஏன் செய்தாய்” எனக்
கேட்க முடியாத அடக்கு முறையில் காலம் சிக்கியிருந்தது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -37)

போர் தின்னும் பூமியில், கையில் உயிரை பிடித்தவாறு இருண்ட சூன்யவெளிக்குள் அலையும் மனித வாழ்வு இக்கவிதையில் நுட்பமாகப் பதிவு செய்யப்படுகிறது.தேசத்து மானுடத்தின் பேரவலத்தையும், இடம்பெயர் வாழ்வையும், போரின் பிடிக்குள் சிக்குண்டு அல்லலுறும் மக்களின் வாழ்வையும் குறியீட்டு, காட்சிப் படிமங்களுக் கூடாக வெளிப்படுத்தி நிற்கும் பிறிதொரு கவிதை ‘அடவி 2007’ ஆகும். ஈழத்தின் வன்முறைச் சூழல்பற்றிய ஒரு மொத்தமான சித்திரத்தை தரும் இக்கவிதை எம்.ஏ நுஃமான் கூறுவதைப் போல ‘ஈழத்தின் அவலம் பற்றிய ஒரு முழுமையான குறியீடு’எனலாம்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தீவிரப் போக்கு தமிழ்,முஸ்லிம் உறவுகளுக்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்திய சூழலில் ஃபஹிமாஜஹனின் கவிதைகள் நட்புறவின் பாலமாக இருந்தன. போரளி மீது கொண்ட காதலின் தீவிர,மென் போக்குகளின் நுண் இழைகளை ஆழமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் ‘ஒரு கடல் நீருற்றி’ என்னும் கவிதையில் ஃபஹிமா பதிவு செய்கிறார்.

“இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ? “
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -36)

ஒடுக்கு முறைக்குள் உழன்று தவிக்கும் தமிழ் மக்களின் ஆதார சுருதியாக அமையும் இக்கவிதை தமிழ் தேசியத்தின் உரிமைக்கு உயிர் கொடுக்கும் குரலாகவும் ஒலிக்கிறது.அடக்குமுறை,வன்முறைக்கெதிரான கலகக் குரலாக ஒலிக்கும் ஃபஹிமாவின் கவிதைகள் தமிழ்த் தேசிய நோக்கு நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது.இப்பின்னனியில் எழும் ‘பாதங்களில் எழும் முற்ற வெளி’முகவரியற்ற நெருப்பு நிலவுக்கு’‘உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்’ முதலான கவிதைகளும் அரச வன்முறையின் உச்சபட்ச நிகழ்வுகளையும் இனத்துவ முரண்பாட்டின் மையத்தில் எழும் போராட்டச்சிந்தனையின் தார்மீக எழுச்சியையும் வெளிப்படுத்தி நிற்கினறன.

ஈழத்து சமகால வாழ்வியலை நுண் அரசியலோடு இணைத்து இயல்பான மொழியில் கவிதைகளுக்கூடாக மென் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் துவாரகன் ஆவார்.சிக்கலில்லாத வாழ்வின் அர்த்தங்களைத் தேடும் இவரது கவிதைமொழி வாழ்வின் அனுபவங்களுக்கூடாகக் கட்டுருபவை.அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் வாழ்வின் அபத்தங்களை எழும் வலிகளை எளிமையாகவும் நேர்த்தியாகவும் அங்கதமாகவும் வெளிப்படுத்தும் துவாரகன் கவிதைகள் சமகால நிகழ்வின் பதிவுகள்.

குழந்தைகள் முதல் முதியோர் வரை யாவரையும் குருதியுமிலும் கோரப்பற்களுடன் காவு கொள்ளும் மரணம், எம் தேசத்தில் தெருவோரங்களிலும் வெளிகளிலும் பதுங்கியுள்ளது. பிணம் தின்னும் கழுகு போல் காத்துக் கிடக்கும் மரணத்தை எவ்வித பிசிரலுமின்றி ‘ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது’ என்னும் இவரின் கவிதை தத்துருபமாகப் பதிவு செய்கிறது.

“நடந்து செல்லும் வயல் வரம்புகளில் /படுத்திருக்கும் பாம்புகள் போல் /
வீதிகளின் வெளியெங்கும் / பதுங்கியிருக்கிறது மரணம் / கலகலப்பான /
மழலைக்குரல்களையும் தம் நீண்ட பிரிவின் பின்னான உறவுகளையும்
தம் கடமை முடிக்க விரையும் எல்லோரையும் தோற்க்கடித்து வெடித்துச்
சிதறும் வெடிகுண்டைப் போல் காத்திருக்கிறது மரணம்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -78)

இராணுவ அரண்களுக்கு அருகாமையில் நாம் செல்லும் போது மீண்டும் மீண்டும் எம்மை நாமே பரிசீலித்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகிறோம். இவ்வலநிலையை அங்கதமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் வெளிப்படுத்துகிறது ‘மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்’.

“ஓடிய சைக்கிளில் இருந்து /இறங்கி நடந்து /ஓட வேண்டியிருக்கிறது /
போட்ட தொப்பி /கழற்றி போட வேண்டியிருக்கிறது/ எல்லாம் சரிபார்த்து
மூடப்பட்ட / கைப்பை / மீளவும் திறந்து திறந்து /மூடவேண்டியிருக்கிறது
என் அடையாளங்கள் அனைத்தும் /சரியாகவே உள்ளன / என்றாலும் /
எடுக்கவும் பார்க்கவும் வைக்கவும் வேண்டியிழுக்கிறது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -73)

அச்சத்துடனும் ஆற்றாமையோடும் ஒவ்வொரு ஈழக்குடிமகனும் கழித்த வாழ்நாட்களை கண்முன் நிறுத்தும் இக்கவிதை காலத்தோடு கருத்தூன்றி நிற்கிறது.நாதியற்று வெறுமனே கழியும் பொழுதுகள், எம்மை கேட்காமலே எம்மிடம் இருந்து பறிக்கப்படும் எம் உடமைகள், எல்லைகளின்றி காத்திருப்பின் நடுவே பழுத்துப்போன இலைகளாய் உதிரும் வாழ்வு என மூடுண்ட நகரத்தின் அகப் புறவெளிகளைக்காட்சிப்படுத்தும் துவாரகனின் கவிதைகள் மனித துயரின் பதிவுகளாய் அவற்றின் சாட்சிகளாய் விளங்குபவை.

அதிகார வன்முறையின் கீழ் இழைக்கப்பட்ட அநீதிகளையும் கடந்தகால நிகழ் பொழுதில் நடந்த கொடூரங்களையும் எடுத்துரைக்கும் இத்தொகுப்பு மரணத்துக்குள் விதிக்கபட்ட வாழ்வை வரையறுத்து நிற்கிறது.வாழ்வும் போரும் ஒன்றாகக் கலந்த சூழலில் எழுதப்பட்ட இக்கவிதைகள் மனித உணர்வுகளின் உள்வயத்தன்மையில் கட்டுறுபவை. ஆங்காங்கே அளவுக்கு அதிகமாகத் தென்படும் எழுத்துச், சொற்,பொருட் பிழைகள் தொகுப்பினை பலவீனமான பிரதியாக முன்மொழிந்தாலும் காத்திரமான எடுத்துரைப்பும் கனதியான வடிவமைப்பும் சமகாலப் பொருட்புலப்பாடும் சிறப்பான தொகுப்பாக இதனை முன்நகர்த்துகிறது.

ஈழத்து இளம் தலைமுறையினரின் ஆளுமைமிக்க கவிதைகளைத் தாங்கி வரலாற்றின் ஆவணமாகவும் காலத்தின் சாட்சியாகவும் நிற்கும் இத்தொகுப்பு சோகமும் அவலமும் நிறைந்த அநுபவத்தின் வாயிலாகவே முகம் கொள்கின்றது.மனிதப்படுகொலைக்குப்பின்னர் துயரத்தையும் அதன் வழி நிறையும் கண்ணீரையும் உள்ளார்ந்த தொனியில் வெளிப்படுத்தும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் தீவிரத்தன்மை கொண்டவை.மரணத்தில் துளிர்க்கும் கனவாகவும் ஒன்றாய் வாழ்தலுக்கான குரலாகவும் ஒலிக்கும் இக்கவிதைகள் அழிவுண்ட காலத்தில் கரையாமல் காலத்தைக் கடந்தும் தன்னை முன்நிறுத்தும் இயல்புடையவை.

௦௦௦௦௦௦௦
நன்றி : எதுவரை, ஆகஸ்ட் 2012 | இதழ் – 04