திங்கள், ஜூன் 18

பாலை


சூழலியல் பிரக்ஞையை மீட்டெடுக்கும் “பாலை” -ஆதி வள்ளியப்பன்

(நன்றி - தடாகம்)

தமிழ்த் திரைப்படங்கள் சூழலியல் உணர்வுடன் எடுக்கப்படுவதும், அதை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்து காட்சிப்படுத்துவதும் கனவில் மட்டும் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒன்று. ஆனால் செம்மை வெளியீட்டகம் தயாரித்து, செந்தமிழன் இயக்கியுள்ள “பாலை” படத்தில் அந்தக் கனவு நனவாகியுள்ளது.

தேசபக்தி, அந்நிய ஊடுருவல், காதல், சண்டை என தமிழ்த் திரைப்படங்கள் எதை மையப்படுத்தி எடுக்கப்பட்டாலும், குறைந்தபட்ச சூழலியல் உணர்வுகூட இல்லாமல், காட்டையும் இயற்கை வளங்களையும் அழித்தே எடுக்கப்பட்டிருக்கின்றன. படங்களின் பெயரைக் குறிப்பிட்டால், சிலர் மல்லுக்கு நிற்கக்கூடும். தமிழ் சினிமா “மேதை”கள் முதல் திரையில் போராட்ட கருத்துகளை முன்வைப்பவர்கள் வரை இதிலிருந்து விதிவிலக்காக இருக்கவில்லை. சூழலியல் மீது திரைப்படங்கள் நிகழ்த்தும் வன்முறை பரவலாக பதிவு செய்யப்படாத ஒரு மிகப் பெரிய பிரச்சினை.

அந்த வகையில் “பாலை” பிரதிபலித்துள்ள சூழலியல் உணர்வு வேறு எந்த தமிழ்ப் படத்துடனும் ஒப்பிட முடியாதது.

முல்லை என்பது காடும் காடு சார்ந்த பகுதி. இங்கு வாழ்ந்த மக்கள் ஆயர்கள். ஆநிரை மேய்ப்பது, பால் பொருள்களை விற்பதுதான் இவர்களது பணியாக இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பகுதிதான் முல்லைக்குடி. வெளியிலிருந்து வந்து குடியேறிய ஒரு மக்கள் குழு, முல்லைக்குடி மக்கள் குழுவை செழிப்பான சொந்த மண்ணை விட்டு விரட்டி விடுகிறது. இதனால் முல்லைக்குடி மக்கள் வறண்ட பகுதியில் வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.


"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப், பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" என்று சிலப்பதிகாரம் கூறியிருக்கிறது. முல்லைக்குடி பாலையை எதிர்நோக்கியிருக்கிறது. பாலைத்திணையில் எந்த இயற்கை வளமும் எஞ்சியிருக்காது என்பதால், கொள்ளையடித்துத்தான் வாழ வேண்டும். தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் இயற்கை வளம் பொய்த்துப் போகும் நிலையில்தான், கொள்ளையடித்தல் என்ற தொழில் நுழைய வேண்டி வருகிறது.

இந்த சூழ்நிலையில் தங்களை வெளியேற்றிய ஆயக்குடி மக்களை வீழ்த்துவதா அல்லது வாழ்க்கையை நெருக்கடிக்குத் தள்ளும் பாலையை கடப்பதா என்ற கேள்விக்கு முல்லைக்குடி தள்ளப்படுகிறது. முல்லைக்குடியும் அதன் மக்களும் மாண்டார்களா, மீண்டார்களா என்பதே கதை.

நல்ல வேளையாக இந்தக் கதைக்கு மிகை என்ற சாயத்தை பூசாமலும், சினிமாத்தன பகட்டை வலிந்து அணிவிக்காமலும் படமாக்கி இருக்கிறார்கள். எந்த கதையை தேர்ந்தெடுத்தார்களோ, அதற்கான நிலப்பகுதியை தேடி பொட்டல், சிறு காடு, மணல்வெளி, வயற்காடு, ஏரி என்று காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

அத்துடன் நின்றுவிடவில்லை. அந்த நிலப்பகுதியில் கிடைக்கும் ஆவரம்பூ, கண்ணுபூ, கொன்றை விதைகள், இலை கிரீடம் போன்றவை முல்லைக்குடி மக்களின் அணிகலன்களாக ஆகியுள்ளன. நாயகியின் பிரிக்க முடியாத உறவுகளில் ஒன்றாக இருக்கிறது ஒரு பனை மரம். பண்டைத் தமிழர்கள் போரில் அடையாளத்துக்காக மலர்களை சூடியது நாம் அறிந்ததுதான். மட்டுமில்லாமல், தங்கள் நிலப்பகுதியை - திணையை குறிக்கவும் மலர்களின் பெயர்கள், அதிலும் அந்தந்த நிலத்துக்குரிய சிறப்பு மலர்களை பெயராக வைத்த பண்பாடு நம்முடையது. அது திரையில் கச்சிதமாக வெளிப்படுகிறது.

முல்லைத்திணைக்கு இயல்பாகவே உரிய காலம், கார் காலம் (மழைக் காலம்). மழையை நம்பியே அவர்களது வாழ்க்கை இருந்தது என்பதால், மழை எப்பொழுது வரும் என்பதை கணிக்கும் பழக்கம் அந்த மக்களிடம் இருந்திருக்கிறது. காலத்தையும் நேரத்தையும் கணக்கிட்டு, மழையை வரவேற்க காத்திருக்கிறார்கள் அம்மக்கள். மழை என்பது உலகம் முழுவதற்குமான அடிப்படை ஆதார வளம். அதுவே இயற்கையும் அதை சார்ந்து வாழும் உயிரினங்களின் வாழ்க்கையும் செழிக்கக் காரணமாக இருக்கிறது. “நீரின்றி அமையாது உலகு” தொடங்கி பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், மற்ற ஆதாரங்களிலும் இதைத் தெளிவாக உணரலாம்.

தாவரங்கள், மலர்களை மட்டுமல்ல, காட்டுயிர்களையும் படத்திலிருந்து பிரிக்க முடியாத கதாபாத்திரம் ஆக்கியிருக்கிறார் திரைப்பட இயக்குநர். அவரது கூர்ந்த கவனிப்பும், சிந்தனையும் இதில் பயன்பட்டுள்ளன. முல்லைக்குடிக்கு பாலை எனும் ஆபத்து வரப் போகிறது என்பதை சில இளைஞர்கள் முதன்முதலில் உணர்ந்து, தங்கள் குடிக்கு வழிகாட்டும் முதுவனைத் தேடி பதைபதைப்போடு ஓடிச் செல்கிறார்கள்.

அவர்களை பதைபதைக்க வைத்த காட்சி, ஒரு நீர் நிலையிலிருந்து நன்னீர் ஆமைகள் வேறிடம் நோக்கி அணிவகுத்து பயணிப்பதுதான். அவை எந்தத் திசையில் பயணித்தன என்பதை கேட்டவுடன், “பாலை வரப் போகுதுடா” என்ற புலம்புகிறார் முதுவன்.
மிகவும் அற்புதமான காட்சியமைப்பு இது.

அதேபோல, தன் காலடி ஓசை கேட்டு தூங்கும் முயலின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என மெல்லமெல்ல அடியெடுத்து வைக்கிறான் ஒருவன். முல்லை நிலப்பகுதியில் முயல்கள் இருக்கும் என்பது உண்மை. அதை படத்தின் நகர்வுக்கும் காட்சி ரீதியாக பங்களிக்க வைத்தது சிறப்பு.

இன்று வரை தண்ணீரில் ஈட்டி வீசி பிடிக்கும் பழங்குடி மக்களின் மீன்பிடி முறையையும் காட்டியிருக்கிறார்கள். பாடல்களும் நடன அசைவுகளும் பழங்குடிகளின் நடன அசைவுகளை பிரதிபலிக்கின்றன. இப்படி படமெங்கும் சூழலியல் உணர்வும் மானிடவியல் கூறுகளும் உற்று நோக்கி, ஆராயப்பட்டு ஆதாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பண்டைத் தமிழ் மக்கள் குழுக்களைச் சேர்ந்த இருளர் இன மக்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் சில கதாபாத்திரங்களை ஏற்று நடித்தும் உள்ளனர்.

தமிழ்ப் பண்பாடு பற்றி பெருமிதப் படுபவர்களும் அதை சரியாகப் புரிந்துகொள்ளவும், வருங்கால சந்ததிகள் நமது பண்பாட்டின் சிறப்புகளை உணர்ந்து கொள்ளவும் இதுபோன்ற காட்சி ரீதியிலான படைப்புகள் பெரிய அளவில் உதவும். நமது வருங்காலத் தலைமுறைக்கு நமது அடையாளங்களை காட்சிரீதியாகச் சொல்ல மிகச் சிறந்த பதிவு “பாலை”.

1 கருத்து:

  1. I Already show that film and i really feel that why there is no one to speak about this film. Really good film. Writing about that film is Superb work.

    பதிலளிநீக்கு