சனி, ஜூலை 9

பேராசிரியரின் பேட்டி ஒன்று



பேராசிரியரின் பேட்டி ஒன்று
நன்றி - அனஸ் (இளைய அப்துல்லா)

ஞாயிறு, ஜூலை 3

நூலகம் செய்திமடல் 6 வெளிவந்துள்ளது.



நூலகம் செய்திமடல் 6 வெளிவந்துள்ளது. இவ்விதழில் நூலகம் நிறுவனம் தொடர்பான சந்திப்பு நிகழ்வுகள் பற்றிய பதிவு, மல்லிகை முதல் இதழின் ஆசிரிய தலையங்கம், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கலை இலக்கிய சங்கத்தின் வருடாந்த இலக்கிய விழா பற்றிய பதிவு, இலங்கையில் இசையியல் நூல்கள் பற்றி சிந்து கோபியின் கட்டுரை, ஆகியவற்றுடன் இம்மாத நூலகம் செய்திமடல் வெளிவந்துள்ளது. 8 பக்கங்கள் கொண்ட இவ்விதழை இலவசமாகவே பிடிஎப் கோவையாக வாசிக்கமுடியும்.http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2011.06.15.pdf

சனி, ஜூலை 2

தர்மினியின் "சாவுகளால் பிரபலமான ஊர்" - ஒரு பார்வை




யோகி

நன்றி - வல்லினம், இதழ் யூலை 2011

தர்மினியின் கவிதை தொகுப்பான சாவுகளால் பிரபாலமான ஊர் பற்றி எழுதுவதே எனக்கு பெரிய சவாலாக இருந்தது. முதன்மையத் தொகுப்பின் தலைப்பே என்னை அதனுள் நெருங்க விடாமல் பயமுறுத்தியது. ஒவ்வொரு முறையும் எப்படித் தொடங்கலாம் என்று தொடங்கி தொடங்கியே பல காகிதங்கள் கசக்கி எரியப்பட்டது. கவிதைப் பற்றிய விமர்சனத்தை எழுதுவது இது எனக்கு முதல் முறை இல்லை. எனினும் தர்மினியின் கவிதைகளை அத்தனை சுலபமாக என்னால் விமர்சித்து விட முடியவில்லை. அதை எழுதுவதற்கு சரியான சொற்கள் தேவை படுகிறது. அவ்வாறான சொற்களை சரியான இடத்தில் பயன் படுத்திக்கொள்ள எனக்கு பொறுமை தேவைப் படுகிறது. அனைத்துக்கும் மேலாக அக்கவிதைகளை கிரகித்துக்கொள்ள எனக்கு வலிமை தேவைப்படுகிறது.

சாவுகளால் பிரபாலமான ஊர், இதை விவரித்து சொல்வதென்றால் பிணங்களால், மரணங்களால் பிரசித்திப்பெற்ற நகரம். அல்லது மாநிலம் அல்லது நாடு. எவ்வாறான மரணங்கள்? நோயால் அல்லது விபத்தால் அல்லது இயற்கையால் ஆன மரணமா? இல்லை. எப்படியெல்லாம் நிகழக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்ந்த மரணங்கள். எப்படியெல்லாம் பிணமாகக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்த்திக்காட்டிய கொடூரங்களுக்குப் பெயர் போன ஊர். வன்கொடுமையையும், வக்கிரத்தையும் அப்பாவி பொதுமக்கள் மீதும் விடுதலை போராளிகள் மீதும் பிரயோகித்து பிணங்களை சம்பாதித்து பிரசித்திப்பெற்ற ஊர்.

அந்த ஊரில் பிறந்து வளர்ந்து போரின் கசப்பான அனுபவங்களோடு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் தர்மினி தன் இறந்த காலங்களுக்கு உயிர் கொடுத்து கவிதை வடிவில் உருவம் தந்திருக்கிறார். போரின் ஆராத காயங்கள், நட்பு, காதல், ஆணாதிக்கம், அரசு திட்டங்கள் என அதனதனில் பட்ட காயங்களை கவிதையாக சமைத்து நமக்கு உண்ண கொடுத்திருக்கிறார். 50 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் பக்கத்துக்கு பக்கம் வெறுமையும், துயரமும் அவரின் கோபமும் போர் சூழலையே பேசிக் கொண்டிருக்கின்றன.

யுத்தத்தில் பாதிக்கப்படும் உடைமைகளையும் சொத்துக்களையும் உயிரைக்கொண்டு மதிப்பிட முடியாது. ஆனால் யுத்தங்கள் தின்று தீர்க்கும் வீடுகளைப் பற்றிய கவலையோடு ஓடுபவர்கள் நத்தையின் கூடு போன்ற வீடொன்று முதுகில் இருந்தால் எளிதாக இருக்கும் என்று வெம்புகிறார்கள்.

குண்டுகள், துப்பாகிகள்,
வேவுக்கண்கள் சொல்லுகின்றன
வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்

..................................

நத்தையின் கூடு போன்ற
வீடொன்றை நினைத்து வெதும்பியபடியே
ஏதோ ஓரிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள்.

வீடுகளில் சுகமாக வாழ்ந்து பழகி விட்ட நமக்கு நத்தை போன்றதொரு வீட்டையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் பாதுகாப்புக்கூட துணை நில்லாத வீடுகளைப் பற்றிய துயரமே எவ்வகையான கவிதைக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

அடக்கம் செய்ய முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பிணங்களை தூக்குவதற்கு ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பெரியவர்களின் குமுறல்களை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. ஆனால் கவிதையாய் சொல்கிறார் தர்மினி இப்படி.

சுடுகாற்றுத் தாழைகளிலிருந்து
நாகங்கள் தப்பித்தோடியிருக்க
கல்லறைப் பூவரசுகளின் நிழலில்
அடையாள அட்டைகளைக் கைகளிற் பொத்தியபடி

பிணந்தூக்க எவருமற்று
கிழவர்களும் கிழவிகளும் கால் நீட்டிக்காத்திருப்பர்.

சிதைவடைந்த ஊரில் செழித்துக்கிடைப்பவையே சுடுகாடும் இடுகாடும் என்று இருக்கும் போது பிணங்களும் நிம்மதியற்றுதான் இருக்கின்றன.

பெண்ணியம் பேசும், பெண்கள் எழுதும் கவிதைகள் அவர்களின் உருப்பைக் கொண்டாடியே இருக்கிறது. அதைத்தாண்டி இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சிலர் வெவ்வேறு பாடுபொருள் கொண்டு கவிதை வரைந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தன் சுயத்தைதான் பாடுகிறார்கள் என்ற பொது கருத்து ஒன்று பெண் கவிகள் மீது உண்டு. தொகுப்பில் தர்மினியும் உருப்பை பேசுகிறார் இப்படி.

சொறி பிடித்த தொடைகள்
மலமாய் நாறும் வாய்கள்
அழுக்காக மடிந்த வயிறுகள்

நெளிந்த குறிகள்
உங்கள் நிர்வாணங்களை ஒரு தடவை பார்த்து வெட்கி
மற்றுமொருத்திக்குக் காட்டாது
பொத்தி வையுங்கள்...

என்று முடிகிறது கவிதை. இராணுவச் சிப்பாய்கள் ஈழத்து சகோதரிகளுக்கு செய்த வன்கலவிக்கும், சித்திரவதைகளுக்கும் கொடூரக் கொலைகளுக்கும், அழிக்கமுடியாத சாபத்தைச் சுமந்துக்கொண்டுதான் வாழ நேர்ந்திருக்கிறது. செத்துப்போன கன்றைச் சுற்றி நின்று பிய்த்து தின்னும் ஓநாய்களாகவும் மரபு அற்றவர்களாகவும் அவர்களை சீறுகிறார் தர்மினி. சிங்கள சிப்பாய்களின் குடும்பத்துப் பெண்கள் தன் வீட்டு ஆணின் வருகையை எதிர்ப்பார்ப்பதை இப்படி விவரிக்கிறார். ஒருத்தி தன் சகோதரனின் நலம்விசாரித்து கடிதம் எழுதுகிறாள். பிரிவை தாங்க முடியாமல் காதலி கண்ணீர் வடிக்கிறாள். தன் காதலைச் சொல்வதற்காக மற்றொருத்தி சிப்பாயின் விடுமுறையை எண்ணி வாசலையே பார்த்துக்கொண்டிருகிறாள். அவனின் மகள் அப்பன் கொண்டு வரும் பரிசு பொருட்களையே நினத்துக்கொண்டிருக்கிறாள். மனைவி நித்திரையற்ற தன் இரவுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறாள். அவனின் தாய் சாவுக்காவது வருவானா என்று கலங்கிய படி இருக்கிறாள். அந்தச் சமயத்தில் அவன் போரில் ஏதோ ஒரு பெண்ணை வன்கலவிச் செய்து கொன்று மண்ணை போட்டு மூடி இருக்கலாம். உண்மையில் சிங்களச் சகோதரிகளின் அன்புக்கும் நேர்மைக்கும் பாத்திரமற்றவர்கள் இவர்கள். நம்பிக்கை துரோகிகள் என்றும் இவர்களை சொல்லலாம்.

ஈழம் போர் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு மற்றவர்களை விட அதில் பெரும் பாதிப்படைந்தவர்கள் குழந்தைகள்தான். அவர்களின் சிரிப்பும், குழந்தை தனமும், குழந்தை பருவமும் அனியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விளையாட்டுகள் பலவந்தமாக கலவாடப்பட்டிருக்கிறது. புத்தகம் ஏந்தும் கைகளில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. கருவரையில் வளரும் குழந்தைக்கும் போர் பற்றிய பயம் அல்லது எதிர்காலத்து போராளி நீ என ஆருடம் ஊட்டப்படுகிறது. இந்த விடயத்தை பேசுகிற கவிதை தர்மினியின் இந்தத் தொகுப்பில் மிக முக்கியமானது.

ஐந்து மாதக் கருவும் போருக்குத் தேவையாம்
இனி எம் கர்ப்பங்கள் கண்காணிக்கப்படும்

..................................

சில மாதங்களான குழந்தைகளை நோக்கியும்
சில வருடங்களான சிறுவர்களைக் குறிவைத்தும்
தாயின் கதறலை வென்ற
துப்பாக்கிகளின் ஓசைகள்


என்று தொடர்கிறது கவிதை. அதிகாரம் கொண்ட வெறி கொண்டவர்கள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் தீவின் திசை எங்கும் வெறி கொண்டவர்களாகவே அலைவதை கவிதையில் காணப்படுகிறது. ஓடி விளையாடுப் பாப்பா என்று பாரதி சொன்ன கவிதைக்கெல்லாம் அங்கே வேலை இல்லை. செய்து முடி. அல்லது செத்து மடி என்பதுதான் எழுதாத விதியாக உள்ளது

கடிதம் எழுதாத நண்பனுக்கு முகவரி கொடுக்கும் கவிதையும் (பக்கம் 26), தீர்ந்து போகாத காதலைப்பற்றி பேசும் பெண்ணின் மனநிலையிலான கவிதையும் (பக்கம்30) மீண்டும் மீண்டும் போரினால் மாறிப்போன பிம்பங்களையே நம் கண்முன் நிறுத்துகிறது. இவரது கவிதைகள் ஆதங்கங்களை மட்டும் அல்ல வரலாற்று பதிவுகளும் அவற்றுடனான அவரின் இருப்பையும் இணைத்திருக்கிறார். கணவனின் ஆணாதிக்கத்தை ஆற்றாமையுடன் தனக்குள்ளோ அல்லது பயந்து பயந்து மற்றவருடமோ கேள்விக்கேட்கும் பெண்கள் எங்கும் உண்டு. எல்லாரது பெண்கள் வாழ்க்கையிழும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான் இது. மேலோட்டமாக இதை பார்க்கும் போது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அதனால் ஏற்படும் மனஉளைச்சலையும், மனஅழுத்தத்தையும் திரண் இல்லாத பெண்கள் எங்கு கொண்டுபோய் கழுவ முடியும்?

சுற்றியிருக்கின்ற நான்கு வீடுகளும்
சற்றுக் கதவு திறந்து பார்த்தன.

..................................

கணவன் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறான்
காதடைக்க வாயடைத்து நின்றேன்.

..................................

மறுநாள் மெதுவாக வந்தானவன்

..................................

இன்று உரத்துக் கத்திட முடியாதவன் போல
மெல்லச் சொன்னான்
மன்னித்து விடு
என் ஒரு காதுச்சவ்வும் அதிராத அவ்வசனம்
எட்டிப் பார்த்த அத்தனை வீடுகளுக்கும் எப்படி கேட்கும்?

என்று முடியும் இந்த கவிதை தர்மினியின் துள்ளியமான பெண்ணியப் பார்வையை காட்டுகிறது.

இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த கவிதையாக 'அகமும் புறமும்' என்ற கவிதை உள்ளது. நான் எத்தனை பலவீனமானவள் என்று என்னை சுட்டிய கவிதை அது. மன்னித்தலும் மறத்தலும் மனித மாண்பு எனப் படும்போது, மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல், சதாக் கொல்லும் போரின் நினைவுகளை எப்படி உரித்துப்போடுவது? எங்கு போனாலும் எப்படி இருந்தாலும் சாவுகளால் பிரபலமான ஊரில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளம் பின்தொடர்வதை யாராலும் அறுத்துப்போட முடியாது.

எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்…

நீரால் நிலத்தால் பிரிந்த துயரில்
வேலை முடிந்து வெந்நீரிற் குளித்து
நேரம் ஒதுக்கிப் பேச
மதுவை ஊற்றி மேசை நிறைத்து
மசாலாவுடன் மாமிசங்கள் மற்றும் மலர்க்கொத்துக்களுடன்
அவ்வப்போது வாதங்களைக் குரோதங்களை வீசி
முடிவிற் சில பாடல்களாற் தீர்ந்திடும்

எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்...

ஈழத்துப்போரின் அவலங்களை விதவிதமாக பேசியாகிவிட்டது. பக்கம் பக்கமாக எழுதியாகியும் விட்டது. நாளுக்கொரு காணொலியாக வந்த வண்ணமே உள்ளது. பாதிப்படைந்தவர்களை விட மற்றவர்க்கு அது ஒரு சேதிதான். அச்சச்சோ என்று வேதனையைத் துப்பிவிடும் சேதிகள். அதிக பட்சமாக பண உதவியோ அல்லது இலங்கை அரசுக்கு எதிராக இணையத்தில் வாக்குகளோ....அல்லது....இங்கிருந்தபடி விடுதலை போராளிக்கான நியாயங்களை கூட்டம் போட்டு பேசவோ மட்டும்தான் எங்களால் முடியும். சாவுகளால் ஒரு ஊர் பிரபலமாகிக்கொண்டிருக்கு போது நாங்களும் திராணியற்று சுடச்சுடச் சேதிகளை எதிர்பார்த்துக்கொண்டு உயிரோடுதான் இருந்தோம்.
நன்றி - வல்லினம், இதழ் யூலை 2011

வெள்ளி, ஜூலை 1

காற்றுவெளி - மின்னிதழ் வெளிவந்துள்ளது.



யூலை மாத காற்றுவெளி மின்னிதழ் வெளிவந்துள்ளது. ஈழ தமிழக புகலிட படைப்பாளிகளின் படைப்புக்களைத் தாங்கி வழமையான அம்சங்களுடன் இதழ் வெளிவந்துள்ளது. http://issuu.com/kaatruveli/docs/july_issue


சனி, ஜூன் 25

காலம் 37 வது இதழ் வெளிவந்துள்ளது.


காலம் 37 வது இதழ் எஸ்.பொ இயல்விருது சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இந்த இதழில் எஸ்.பொவின் இயல்விருது ஏற்புரையும் ஏ.ஜே கனகரட்னா, நீலாவாணன், பா.செயப்பிரகாலம் எழுதிய எஸ்.பொ பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

அருண் சிவகுமார், யமுனா ராஜேந்திரன், சீரோதி ராமச்சந்திரன் ஆகியோரின் சினிமா பற்றிய கட்டுரைகள் உள்ளன.

மு.புஸ்பராஜன், பெண்ணியா, லஷ்மி மணிவண்ணன், அனார், அஜிதா, மயூரரூபன், ரவிக்குமார் ஆகியோரின் கவிதைகள் உள்ளடங்கியுள்ளன.

சச்சிதானந்தன் சுகிர்தராஜாவினதும் அ.முத்துலிங்கத்தினதும் பத்தி எழுத்துக்கள் உள்ளன.

புத்தக விமர்சனங்களை ஜெயமோகன், மணி வேலுப்பிள்ளை, பொ.கருணாகரமூர்த்தி, டி.சே.தமிழன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மெலிஞ்சி முத்தனின் சிறுகதையும், என்.கே மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பும், சிவதாசனின் சந்திப்புத் தொடர்பான கட்டுரையும், ஈழத்துப் பூராடனார் பற்றிய அஞ்சலிக்குறிப்பும் இடம்பெற்றுள்ளன.
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கவிதையியல்’, மு.பொ வின் 'இன்றைய கவிதை' ஆகிய திறனாய்வுக் கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன.

அவற்றில் மு.பொ வின் 'இன்றைய கவிதை' என்ற திறனாய்வுக் கட்டுரையை எனது வலைப்பதிவு நண்பர்களின் வாசிப்புக்காக இத்துடன் இணைத்துள்ளேன்.

(பிரதியின் மேல் அழுத்தினால் பெரிதாக்கி வாசிக்கமுடியும்)









வெள்ளி, மே 27

மொழியின்றி விரிகின்ற என் ஜீவன்...


கனடிய தமிழரின் முழுநீளத்திரைப்படத்தில் இடம்பெற்ற 3 பாடல்கள் செல்லத்துரை சுதர்சனின் வரிகளில் பதிவாகியுள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்

படம் - 1999
பாடல்வரிகள் - செல்லத்துரை சுதர்சன்
பாடியவர் - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
இசை - ராஜ்

சனி, மே 21

த.தவேந்திரராசா

அண்மையில் கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெற்ற த.தவேந்திரராசா அவர்களைப் பற்றிய பதிவு ஒன்று. அவரது ஓய்வுக்காலம் நலமாக அமைய வாழ்த்துக்களோடு.

பேராசிரியர் மா. கருணாநிதி அவர்களுடன் தவேந்திரராசா


---

நன்றி - கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவில் இருந்து

த.தவேந்திரராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தம்பன் தவேந்திரராசா (1951) மயிலிட்டி அல்வாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் சிவகுரு வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், வடமராட்சிக் மருதங்கேணிக் கோட்டக் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றினார்.

தனது ஆரம்பக்கல்வியையும் இடைநிலைக்கல்வியையும் யாழ் தேவரையாளி இந்துக்கல்லூரியில் பெற்றுக் கொண்டார். க.பொ. உயர்தரத்தை யாழ் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் கற்றார்.

பொருளடக்கம்


பட்டப்படிப்புநிலை

கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகமாணிப் பட்டத்தையும் தொடர்ந்து அதே பல்கலைக்ககழத்தில் தத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் கல்வி டிப்ளோமாப் பட்டத்தையும், முதுகலைமாணிப் பட்டத்தையும் (பண்பாட்டியல்) பெற்றுக் கொண்டார்.


ஆசிரியப்பணி

கண்டி கம்பளை சாஹிராக் கல்லூரியில் 1976 ஆம் ஆண்டு தன்னை ஆசிரியராக இணைத்துக் கொண்டார். 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற இடமாற்றத்தின்போது யாழ் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் கல்வி கற்பித்தார்.


அதிபர் சேவை

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சையில் தேறியதன் காரணமாக அதிபர் நியமனம் வழங்கப்பட்டது. அதன்போது யாழ் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் உயர்தர வகுப்புக்கான பகுதித் தலைவராக கடமையாற்றினார். 1993 ஆண்டு அதிபர்களுக்கான இடமாற்றத்தின் போது யாழ் வல்வை சிவகுரு வித்தியாலயத்தில் அதிபராக நியமனம் பெற்று 14 வருடங்கள் கடமையாற்றினார்.


கோட்டக்கல்விப் பணிப்பாளர்

2006 ஆம் ஆண்டு வடமராட்சி மருதங்கேணிக் கோட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். அக்காலத்தில் மருதங்கேணிப் பிரதேசம் பிரிக்கப்பட்ட நிலையில் வடமராட்சிக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும் முறைசாராக் கல்விப் பிரவுக்கு கடமையாற்றியுள்ளார். தொடர்ந்து 2009 இல் கரவெட்டிக் கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி 15.03.2011 இல் ஓய்வு பெற்றார்.


ஆய்வேடுகள்(பதிப்பிக்கப்படாதவை)

  • மரபுரீதியற்ற ஏற்றுமதிப் பொருட்களின் போக்கு – தத்துவமாணிப் பட்டத்திற்கு சமர்ப்பித்த ஆய்வேடு
  • அடிப்படைக் கணக்கியல் கற்பித்தல் முறைமைகள் – கல்வி டிப்ளோமாவுக்கான ஆய்வேடு
  • வல்வைப் பண்பாட்டு உருவாக்கத்தில் பொருளாதாரத் தாக்கம் – முதுகலைமாணிக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு