செவ்வாய், பிப்ரவரி 7

“புதிய தரிசனம்” சஞ்சிகை - ஒரு நினைவோடை


-இராகவன்

நான் மாலைவேளைகளில் குப்பிழான் ஐ. சண்முகனின் வீட்டிற்குச் செல்வது வழமை. அவ்விதமொருநாள் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோது ஒரு பொடியன் அவருடன் கதைத்துக் கொண்டிருந்தான். அப்போது சண்முகன் எனக்கு, “இவர் பெயர் அஜந்தகுமார். எனது மாணவன். தற்போது இலக்கியச் சஞ்சிகையொன்றை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.” என அந்தப் பொடியனை எனக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் என்னையும் அவனுக்கு சம்பிரதாயபூர்வமாக அறிமுகப்படுத்த என்னிடம் அவன் தன்னால் வெளியிடப்படவுள்ள இலக்கியச் சஞ்சிகைக்கு ஏதாவது படைப்பை எழுதித்தரும்படி கேட்டுக்கொண்டான். நானும் ஒரு கவிதை எழுதி அதனடியில் திகதி மாதம் ஆண்டு நேரமெல்லாம் குறிப்பிட்டு அவனிடம் கொடுத்ததேன்.

2003 காலப்பகுதியில் புதிய தரிசனம் என்ற பெயரில் அஜந்தகுமார் தனது இலக்கியச் சஞ்சிகையின் முதலாவது இதழை வெளியிட்டான். அதில் நான் எழுதிக் கொடுத்த கவிதையும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அதனடியில நான் குறிப்பிட்டிருந்த திகதி மாதம் ஆண்டு நேரம் இவையெல்லாம் முற்றாக நீக்கப்பட்டிருந்தன. எனது அனுமதியின்றித் தானே சுயமாக இதெல்லாம் தேவையற்றதென முடிவெடுத்து அவன் நீக்கியிருந்ததால் இனிவருங் காலங்களில் அவன் கேட்டாலும் ‘புதிய தரிசனம்’ இதழுக்கு எந்தவொரு படைப்பையும் வழங்குவதில்லையெனத் தீர்மானித்தேன். குப்பிழான் ஐ. சண்முகனும் இது குறித்த தனது அதிருப்தியை அஜந்தகுமாரிடமே வெளியிட்டார். பின்னர் தெரியாமல் விட்ட தவறுக்காக அஜந்தகுமார் என்னிடம் மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டான். காலப்போக்கில் எனக்கு நெருக்கமான நண்பனுமானான்.

அவன் வெளியிட்ட புதிய தரிசனம் தொடக்கத்தில் பாடசாலை மாணவர்களையே தனது இலக்குச் சந்தையாகக் கொண்டிருந்தது. காலப்போக்கில் அஜந்தகுமார் தீவிர வாசிப்பில் கவனம் செலுத்திய பின்னர் புதிய தரிசனம் நவீன இலக்கியம் குறித்தும் கவனயீர்ப்பை ஏற்படுத்த முனையும் இதழாகத் தோற்றங் கொள்ளலாயிற்று. மே- ஜீன் 2005 காலப்பகுதியில் வெளிவந்த ஐந்தாவது இதழோடு புதிய தரினம் நின்று போய்விட்டாலும் அவ்விதழின் வெளியீட்டில் இணைந்து செயலாற்றியபோது எனக்குக் கிடைத்த அனுபவம் புதுமையானது.

அப்போது சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம். எவ்வித நெருக்கடிகளுமின்றிச் செயற்படத் கூடியதாக இருந்தது. ஈழத்தமிழ்த்திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான இயக்குநரான ஞானரதன் அக்காலப்பகுதியில் உடுப்பிட்டியிலுள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார். இப்போது சூழலியலாளரென அறியப்படும் பொ. ஐங்கரநேசன் அப்போது ஞானரதனை ஒரு நீண்ட நேர்காணல் செய்திருந்தார். அந்நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் தொடர்ந்து ஐந்து வாரங்களாக வெளிவந்தது. (இவ்வரிய நேர்காணலுக்காக நாமனைவரும் பொ. ஐங்கரநேசனுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்) அதனடிப்படையில் (ஏற்கெனவே புதிய தரிசனம் முதலாவது இதழில் குப்பிழான் ஐ. சண்முகனின் நேர்காணலும் இரண்டாவது இதழில் நாடகக் கலைஞர் வே. க. பாலசிங்கத்தின் நேர்காணலும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது) புதிய தரிசனம் இதழுக்கு ஞானரதனை நேர்காணல் செய்யுமாறு அஜந்தகுமாருக்கு விதந்துரைத்தேன். அப்போது ஞானரதனை அஜந்தகுமாருக்குத் தெரிந்திருக்கவில்லை. எனினும் அவன் முழுமுனைப்போடு உடுப்பிட்டிக்குச் சென்று அவரைச் சந்தித்து நேர்காணலைச் செய்து வெளியிட்டான்.

புதிய தரிசனம் தொடர்பான படைப்புக்களின் தேர்விலும் விவாதத்திலும் நானும் அஜந்தகுமாரும் ஈடுபடும் களங்களாக தமிழ்ப்பூங்கா அச்சகமும் கட்டைவேலி நெல்லியடி கூட்டுறவுக் காரியாலயதிற்குக் கீழுள்ள பொங்கல் விற்பனை நிலையமும் விளங்கின. நாங்கள் அந்தக் களங்களிலிருந்ததுதான் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தோம். தமிழ்ப்பூங்கா அச்சக உரிமையாளர் கணேஷ் அண்ணா எங்களுக்கு இடைக்கிடை தேநீர் வரவழைத்துத் தருவார். பொங்கல் விற்பனை நிலைய மேசையில் ஏறியமர்ந்து நாங்கள் பல விடயங்களையும் கதைப்போம். அவ்வேளை பல நண்பர்கள் அதில் வந்து கூடிவிடுவர். பொங்கல் விற்பனை நிலைய ஊழியர்களான முருகப்பா, சிவகுரு போன்றோர் அப்போதுதான் எங்களுக்குத் தேர்ந்த கதைசொல்லிகளாக அறிமுகமாயினர்.

ஒருநாள் சித்திராதரன் என்ற நண்பர். இவர் தற்போது பருத்தித்துறைத் தபாலகத்தில் கடமையாற்றி வருகிறார். அங்கே வந்து தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இவர் களுத்துறைச் சிறையில் பல காலமான சிறைவாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து இவர் எழுதிய கவிதை சரிநிகர் இதழில் பிரசுரமாகியிருந்தது. அது இவருக்குத் தெரியாது. நான் சொன்ன பின்புதான் தெரியும். களுத்துறைச் சிறையில் ஒரு நூலகம் இருப்பதாகவும் அந்நூலகத்திலிருந்தே ஜெயமோகனின் ‘திசைகளின் நடுவே’ மண் மற்றும் கா. நா. சுவின் மொழிபெயர்ப்பில் வந்த நோபல் பரிசு பெற்ற நாவலான ‘மதகுரு’ மற்றும் ‘பரபாஸ்’ ஆகியவற்றை வாசித்ததாகவும் சித்திராதரன் சொல்லியிருந்தார். இவையெல்லாம் ‘புதிய தரிசனம்’ குறித்து எழுதும்போதும் நினைவிலோடுகின்றன.

சிராஜ் மன்சூர் எழுதிய “எதிர்ப்பிலக்கியம் ஒரு கலாசார ஆயுதம்” குறித்துப் புதிய தரிசனத்தில் நானொரு விமர்சனக் குறிப்பை எழுதியிருந்தேன். அப்போது வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து எழுதிக்கொண்டிருந்த சில இலக்கியவாதிகளுக்கு அது உவப்பளிக்கவில்லை. அவர்கள் புதிய தரிசனத்துக்குக் கண்டனக் கடிதம் எழுதினார்கள். அதுவும் புதிய தரிசனத்தில் எனது எதிர்வினையோடு பிரசுரமாயிற்று. இதேபோன்று ‘மூடுபெட்டி’ என்ற எனது புனைகதை புதிய தரிசனத்தில் வெளியானபோது வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து இனிவருங்காலங்களில் புதிய தரிசனத்தில் எனது புனைகதைகளைப் பிரசுரிக்க வேண்டாமென அன்பு மடலொன்று அஜந்தகுமாருக்கு வந்திருந்தது. அவன் அதையும் புதிய தரிசனத்தில் வெளியிட்டான்.

ஷோபாசக்தியின் ‘தேசத்துரோகி’ கதைத் தொகுப்பிற்கு குணேஸ்வரன் எழுதிய இரசனைக்குறிப்பும் புதிய தரிசனத்தில்தான் வெளிவந்தது. நானறிய யாழ்ப்பாணத்தில் முதன்முதலில் தேசத்துரோகியை அறிமுகப்படுத்தியது புதிய தரிசனம் மட்டும்தான் என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். அதன் பிறகுதான் நமது இலக்கியவாதிகள் துயில் கலைந்து தேசத்துரோகி பற்றித் தம்பட்டமடிக்கத் தொடங்கினர்.

ஈழத்தின் மிக முக்கியமான நவீன ஓவியர் கோ. கைலாசநாதனை ஒரு நீண்ட நேர்காணல் செய்து புதிய தரிசனத்தில் வெளியிட அஜந்தகுமார் விரும்பினான். அதனடிப்படையில் நான் கோ. கைலாசநாதனை நேர்காணல் செய்தேன். இருபகுதிகளாக அந்நேர்காணலை வெளியிடத் தீர்மானித்தோம். அந்நேர்காணலில் முதலாம் பகுதி புதிய தரிசனம் ஐந்தாவது இதழில் கோ. கைலாசநாதனின் ‘கிருஷாந்தியின் வல்லுறவுக் கொலைச்சம்பவத்தைப் பிரதிபலிக்கும்’ முகப்போவியத்துடன் அவரது முக்கியமான ஓவியங்கள் சிலவற்றையும் உள்ளடக்கி வெளிவந்தது. அத்துடன் புதிய தரிசனமும் நின்றுபோயிற்று. அந்நேர்காணலை முழுமையாகச் சரிநிகரில் வெளியிடுவதற்கு எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

புதிய தரிசனத்தில் வெளியான குப்பிழான் ஐ. சண்முகன், செ.யோகராசா (கருணை யோகன்) ஞானரதன், கோ. கைலாசநாதன், என அனைத்து ஆளுமைகளினதும் நேர்காணல்கள் ஏதோவொரு வகையில் முக்கியமானவைதான்.

கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கவும் தூண்டவும் புதிய தரிசனத்தில் ஓவியம் ஒன்றை வெளியிட்டு அதற்குக் கவிதை எழுதுமாறு அறிவிப்புச் செய்யும் நடைமுறையையும் அஜந்தகுமார் செயற்படுத்தினான். அப்பகுதியில் நான் வரைந்த ஓவியமொன்றையும் அவன் வெளியிட்டிருந்தான். இதுதவிர புதிய தரிசனத்தின் 4வது இதழுக்கு முகப்போவியமும் வரைந்திருந்தேன். இதுதவிர சிங்களப் பத்திரிகையொன்றிலிருந்து நான் கத்தரித்த ஓவியம் ஒன்றுடன் நான் எழுதிய கவிதையையும் அவன் பிரசுரித்திருந்தான்.

இப்போது நிதானித்து நோக்கும் தருணம் நான்காவது ஐந்தாவது ஆண்டு மலரென வெளியிட்டு வீறுநடைபோடும் மாசிகைகளோடு ஒப்பிடும்போது ஐந்தே ஐந்து இதழ்கள் மட்டுமே வெளிவந்த புதிய தரிசனம் பெரிதளவுக்குச் சாதித்துத்தான் இருக்கிறது என்று சொல்லலாம்.

நன்றி – புதியநூலகம் (செய்திமடல்) இதழ் 9.
---

வியாழன், ஜனவரி 5

ஆற்றல் மிகு கரத்தில் – கே. டானியல்




நன்றி - வல்லினம்.
கே. பாலமுருகன்


அறிமுகம்: யாழ்ப்பாணத்தில் 1927-இல் பிறந்தவர் டானியல். இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு 11 மாதங்கள் சிறைப்பட்டார். தமிழகத்திற்கு வந்து தஞ்சையில் தங்கினார். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் இருந்தவர். தஞ்சையில் மார்ச்சு 1986-இல் மரணமடைந்தார். ஈழத்து பஞ்சமர் மக்களுக்காகத் தோழர் டானியல் தன் இலக்கிய இயக்கப் பணிகளை அர்ப்பணித்தவர். தமிழ் இலக்கியத் துறைக்கு நாவல், குறுநாவல், சிறுகதை என பல வடிவங்களில் தம் பங்களிப்பைச் செய்துள்ளார்.

கே. டானியல் எனும் கதைச்சொல்லி

கே. டானியல் என்ற பெயரை 'பஞ்சமர்' நாவல் பற்றிய அதிகமான பேச்சுக்களின் வழியே அறிந்திருக்கிறேன். 'பஞ்சமர்' நாவலை மையப்படுத்தி நாவலின் முக்கியத்துவம் குறித்து நிறைய விமர்சகர் சொல்லவும் கேட்டதுண்டு. தமிழ் இலக்கியச் சூழலில் ஒடுக்கப்பட்ட போர் சமூகத்தின் மனசாட்சியை இலக்கியமாக்கியதில் கே.டானியலின் பங்கு மிக முக்கியமானதாகும். ஈழ இலக்கியம் என்ற உரையாடலை கே.டானியலை நீக்கிவிட்டு நம்மால் தொடர முடியாத அளவிற்கு ஈழத்துத் தலித் இலக்கியத்திற்குப் பெரிதும் பங்காற்றிய கதையாசிரியர். ஈழ தலித் இலக்கியத்தின் முன்னோடியாகவே கே.டானியல் கருதப்படுகிறார்.

அ.மார்க்ஸ் முன்னுரையுடன் தொக்குக்கப்பட்ட ஈழத்துத் தலித் சிறுகதைகள் தொகுப்பிலிருந்து வாசிக்க நேர்ந்த 'ஆற்றல் மிகு கரத்தில்' எனும் சிறுகதையின் மறுபார்வை இது. சமீபத்தில் ரியாஸ் குறானாவை வல்லினத்துக்காக நேர்காணல் செய்தபோது, தமிழில் குறிப்பிட்டு சொல்லப்பட்ட நல்ல விமர்சகர்கள் இருந்தும் ஏன் கே.டானியலின் 'பஞ்சமர்' நாவல் தொடர்ந்து கவனிக்கப்படவில்லை என்ற கேள்வியை முன்வைத்திருந்தோம். ஒரு நாவல் ஒரு சமூகத்தில் எப்படியெல்லாம் வாசிக்கப்பட்டிருக்கக்கூடும்? எந்தக் காலக்கட்டத்தில் ஒரு பிரதியின் மீது நிகழ்த்தப்பட்ட வாசிப்பு அப்பிரதியின் முக்கியத்துவங்களை மீட்டுணர்ந்திருக்கும் என விரிவாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. ரியாஸ் குறிப்பிட்டிருப்பதைப் போல அனைத்துப் பிரதிகளையும் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஒரு வாசகநிலை 'பஞ்சமர்' நாவல் வந்த காலக்கட்டத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளுக்குப் பிறகுத்தான் தலித் இலக்கியம் என்ற ஒரு பிரக்ஞை தமிழ் இலக்கிய சூழலுக்குள் வலுப்பெறத் துவங்குகிறது. இதை அ.மார்க்ஸ் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, தலித் இலக்கியமே தாமதமாகத்தான் தலித் அரசியல் கட்சிகளின் செயல்பாட்டின் மூலம் பெற்ற உந்துததால் தமிழுக்குள் வருகிறது. அதனைச் சார்ந்த விமர்சனமும் கவனமும் பரவலாகப் போய்ச்சேர மேலும் காலம் பிடித்திருக்கும். இந்தக் கால வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால், ஏன் ஈழ இலக்கியம் பஞ்சமர் நாவல் வந்த காலக்கட்டத்தில்கூட சரியான கவனம் பெறவில்லை என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.

‘ஆற்றல் மிகு கரத்தில்’ – கதை பின்புலம்

இக்கதை வேலன் என்ற இளைஞனின் அடிமை வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. வேலன் கமக்காரன் எனும் கிராம முதலாளிக்கு அடிமையாக ஒப்படைக்கப்படுகிறான். கமக்காரனும் கமகாரச்சியும் அவனை வீட்டில் ஒரு வேலைக்காரனாக வளர்க்கிறார்கள். அடித்தட்டு நிலையில் சோற்றுக்காகப் போராட வேண்டிய நிலை இந்தப் சாதிய பொருளாதார சமூகத்தால் தலித் மக்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். அல்லது சாதிய ரீதியில் அடிமையாக முதலாளிக்குக் கீழ் ஒடுக்கப்பட்டிருப்பார்கள். இதுதான் தலித் அனுபவிக்கக்கூடிய வாழ்க்கை. அவர்களுக்கு அளிக்கப்படும் இடம். இந்த சமூக அரசியல் இன்று பலதரப்பட்ட கருத்தியல் தளங்களில் வைத்து விவாதிக்கப்பட்டாலும் கே.டானியல் இக்கதையை எழுதியக் காலக்கட்டத்தில் தலித் சமூகத்தின் அவலங்களைப் பதிவு செய்ததில் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

வேலன் என்ற தலித் சிறுவயதில் தன் அம்மாவால் அங்கு வந்து ஒப்படைக்கப்படுகிறான். கதையின் துவக்கத்தில் அம்மாவை டானியல் சித்தரித்திருப்பது வித்தியாசமான பகுதியாகும். ‘அறிவு என்ற ஒன்று தெரிந்த பருவத்தில் கந்தப்புக் கமக்காரன் வீட்டில், ‘தாய்’ என்ற ஒரு உருவம் அவனை இட்டுச் சென்றதாக ஞாபகம்.’ மிகச் சுருக்கமாகத் தலித் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையால் தாய், குடும்பம் போன்ற மேல்தட்டு புனித வியாக்கியானங்கள் பொருட்படுத்தாத ஒரு சூழலை அடைந்திருக்கின்றன. தாய் என்பவளை வழிப்படும் ஒரு பிம்பமாகக் கருதப்படும் ஒரு காலக்கட்டத்தில் அவளை ஒரு உருவமாக மட்டும் பாவித்திருப்பது, தலித் வாழ்க்கை எப்படிச் சமக்காலத்திய புனிதங்களையும் கொண்டாட்டங்களையும் தவிர்த்திருக்கிறது எனப் புரிந்துகொள்ள முடிகிறது.

கமக்காரனும் கமக்காரச்சியும் அவனைத் தொடர்ந்து கொடுமைப்படுத்துவது கதையில் சொல்லப்படுகிறது. கமக்காரன் பிடரியில் அடிப்பான் என்றும் கமக்காரச்சி முதுகில் குத்துவாள் என்றும் விவரிக்கப்பட்டிருக்கிறது. உடல் ரீதியில் கொடுமைப்படுத்தப்படுவதே அடிமையின் மீதான அதிகாரமாக முதலாளிய சமூகம் நிறுவியிருக்கிறது. சுடுத்தண்ணீர் ஊற்றி வேலைக்காரிகள் கொடுமைப்படுத்தப்படுவது மலேசியா போன்ற நாட்டிலும் நடக்கின்றது. இஸ்த்திரி பெட்டியைக் கொண்டு உடலில் சூடு வைப்பது, கட்டையால் அடித்துத் துன்புறுத்துவது, சூடான எண்ணையை மேலே ஊற்றிக் காயப்படுத்துவது, பழைய உணவைக் கொடுப்பது, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது என வேலைக்காரர்கள் மீது முதலாளிகள் நடத்தும் கொடுமைகள் எல்லாம் நாடுகளிலும் வன்மையானவையாகும்.

வேலனை கமக்காரனின் பிள்ளைகள், முகத்தில் எச்சில் துப்பி அவமானப்படுத்துகிறார்கள். அந்த வீட்டின் குழந்தை குட்டிகள் என அனைவரும் அவனை ஆளுக்கொருப் பக்கம் கொடுமைப்படுத்துகிறார்கள். அதிகாரங்களின் பலத்திற்கேற்ப அவன் அவதிக்குள்ளாகுகின்றான். பிறகு கொடுமை தாங்காமல் அங்கிருந்து தப்பித்து ஓடப்பார்க்கிறான். ஆனால் ஊர் மக்களாலேயே மீண்டும் பிடித்து கமக்காரனிடம் ஒப்படைக்கப்படுகிறான். இதுதான் அடிமை வாழ்க்கை என்பது. அடிமைகளால் தப்பிக்கவே முடியாது. குறிப்பாக வேலைனைப் போன்ற தலித்துகள் இறுதிவரை ஒரு வேலைக்காரனாகவும் தீண்டத்தகாதவனாகவும் வாழ்ந்து சாக வேண்டும் எனும் ஒரு கொடூரத்தைக் கதையாசிரியர் காட்டுகிறார்.

கமக்காரன் வீட்டில் இல்லாதபோது கமக்காரியின் கள்ள உறவைப் பற்றி வேலன் அறிந்துவிடுகிறான். அவனை அங்கிருந்து கமக்காரி தப்பிக்க உதவி செய்கிறாள். கமக்காரனின் வேட்டி சட்டைகள் சிலவற்றையும் 10 ரூபாயையும் கொடுத்தனுப்புகிறாள். அங்கிருந்து தப்பித்து வேலன் சொந்தக் கிராமத்திற்கு வந்து சேர்கிறான். கதையின் பின்பகுதியில் கிராமம் எப்படிச் சாதிய ரீதியில் தளம் பிரித்துப் பாதுகாக்கப்படுகிறது என்பதை விரிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. வேலன் ஒரு பள்ளன் என்பதைக் கதையிலேயே குறிப்பிடுவதன் மூலம் அக்கிராமத்தில் பள்ளர்கள் மிகவும் மோசமாக அடக்குமுறைகளுக்கு ஆளாகி அடிப்பணிந்து வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

வேட்டியைக் கட்டிக்கொண்டு அழையும் வேலைனை மேல்சாதிக்காரர்கள் அசூசையுடன் பார்க்கிறார்கள். அவனுடைய தோற்றத்தைக் கண்டு வெறுக்கிறார்கள். தலித் மக்களின் மீது எந்த நேரத்திலும் எப்படியும் அதிகாரத்தையும் வன்முறையையும் அவிழ்த்துவிடலாம் என்பதை, அந்த மேல்சாதிக்காரர்கள் வேலனை அடித்து அவனுடைய வேட்டியை அவிழ்த்து நிர்வாணமாக்குவதன் மூலம் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். இது ஒரு சிறு நடவடிக்கை மட்டுமே. மேல்தட்டு சாதிய முதலாளிகளின் அதிகாரத்தின் வேர்கள் அடர்த்தியாகச் சமூகத்தைப் பின்னியிருக்கின்றன.

அதன் பிறகு வேலனைப் பலவகைகளில் எல்லோரும் சிறுமைப்படுத்துகிறார்கள். அடித்துத் துன்புறுத்துகிறார்கள். தலித்துகளின் இருப்பை எப்படியெல்லாம் துயரத்துக்குள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதை வேலன் எனும் கதைப்பாத்திரத்தின் வாயிலாக டானியல் முன்வைக்கிறார். சமூகத்திற்குள் ஒரு தலித்தின் இருப்பின் முக்கியத்துவம் எக்காலக்கட்டத்திலும் கவனப்படுத்தப்படவில்லை என்பதே இந்தத் தலைமுறையின் சாபம்.

ஆதவன் தீட்சண்யா நேர்காணலில் குறிப்பிட்டிருப்பதைப் போல, இந்து மதம் என்பதே சாதியக் கட்டமைப்பால் உருவானது. சாதியின் மூலன் ஒரு குழுசார் மக்களை ஒடுக்கி ஆள்வதற்கு எல்லாம் வசதிகளையும் அளிக்கக்கூடியவையாக இந்து மதத்தைக் குறிப்பிடலாம்.

தன் மீதான கொடுமைகளைப் பொறுக்கமுடியாத வேலன் தன்னுடைய அனைத்துச் சொந்தகளும் காலமானதற்குப் பிறகு சுடுக்காட்டுப் பக்கமாக இருக்கும் ஆலடி வயிரவன் கோவிலுக்கு வந்து சேர்கிறான். ஒரு தலித்தின் கடைசி இயலாமையாக இதைக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வயிரவன் கோவிலில் உருண்டு புரண்டு கண்ணீர்விட்டு அழுகிறான் வேலன். இந்தச் சமூகத்திலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதன் அவலத்தைச் சொல்லியும், தன்னை மேல்தட்டு வர்க்கம் துன்புறுத்தியதன் வலியை வெளிப்படுத்தியும் புலம்புகிறான். அது ஒரு ஈன பேரோசையாகக் கோவில் முழுக்க ஒலிக்கிறது.

வயிரவன் சாமி கோவில் சுடுக்காட்டுப் பக்கமாக இருப்பதாகச் சொல்லும் இடத்திலேயே டானியல் சிறுதெய்வமும் ஒருவகையில் ஒடுக்கப்பட்ட நிலையில்தான் அங்கு அமர்த்தப்பட்டிருப்பதாகக் காட்டுகிறார்.

வேலன் இறுதியில் அவன் மீதான எல்லாம்விதமான புறக்கணிப்புகளையும் எதிர்க்கொள்ள அசாத்தியமான சக்தியை வயிரவன் கோவிலில் வைத்துப் பெறுகிறான். இது ஒரு வகையான எதிர்ப்புணர்வின் மூலம் உருவாகும் உந்துதல். கோவிலை விட்டு வெளியேறுபவன் ஆக்ரோஷமாகக் காணப்படுகிறான். தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு திமிருடன் நடந்து வருகிறான். அவனை துன்புறுத்த வருபவர்களை திருப்பியடித்து ஒரு சண்டியராக மாறுகிறான். வன்முறைக்கு வன்முறையே சரியானது என உணர்ந்து அதன் வழியே தன்னுடைய அதிகாரத்தை எதிர்க்கும் அதிகாரத்தைக் கண்டடைகிறான்.

சாதியம்: உடலின் மீதான பாசிசம்

பிற உடலை ஒடுக்குவது அடக்குவது என்பது போர் காலத்திய ஒரு பாரம்பரிய கொடுமையாகவே அடையாளப்படுத்த முடிகிறது. போரில் தோற்றவர்களை உடல் ரீதியில் இம்சைப்படுத்தி எதிரியின் ஆளுமையைக் காட்டுவது ஒரு மரபாகும். இன்று இலங்கையில் போரில் தோல்வியுற்ற ஒரு சமூகமாக இராணுவத்திடம் சிக்கிக்கொண்டிருக்கும் பொதுமக்கள் உடல் ரீதியில் அடக்கப்படுகிறார்கள். அவர்களை வெளியிலிருந்து யாரும் சந்திக்க முடியாது. அவர்களின் உடல் அந்த எல்லையைக் கடந்து வெளியேற முடியாது. வன்கொடுமை, பசி, கொலைகள் என அவர்களின் உடல் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், இராணுவத்தின் உடல் வதை செயலாகும். இன்று போர் சமூகங்களாக, போரினால் பாதிக்கப்பட்டவர்களாக, அதே இராணுவ வதைகளை மீளுருவாக்கம் செய்து பிரயோகிக்கும் ஒரு சூழலுக்கு நம் சமூகங்கள் ஆளாகியுள்ளன.

வரலாற்றின் வழி இராணுவத்திடமிருந்து பெற்றுக்கொண்டு பாசிச உணர்வை இன்றைய சமூகங்கள் பிரதியெடுத்து அமல்படுத்துகின்றன. சாதியத்தின் அடிப்படையில் குடியியல் பெருமையை அடையும் ஓர் குழு, அந்தச் சமூகத்தில் இராணுவ நடவடிக்கைகளைத் தலித் மக்கள் மீது பாவிக்கின்றன. அவர்களின் உடலை வதைக்கின்றன. அவர்களின் உடலைத் தன் முதலாளிய தன்மைகளுக்குப் பலியாக்கின்றன. தனக்குக் கீழான சாதியைச் சேர்ந்த மக்களின் உடலை இம்சைப்படுத்துவதன் மூலமும் அந்த உடலைத் தன் ஆளுமைக்கு உட்பட்டவையாக மாற்றியும் அல்லது அவ்வுடல்களை ஆட்சி செய்யும் அதிகாரமாக உருவெடுத்தும் ஒரு சாதி சார்ந்த முதலாளிய அமைப்பு தன்னைப் பாசிச உறுப்பினராக மாற்றிக்கொள்கிறது.

தலித்துகளை ஒடுக்கியும் அவர்களை இம்சித்தும் தன்னுடைய மேட்டுக்குடி பெருமைகளை நிருபித்துக்காட்டிய அனைத்தையுமே எளிய மக்களின் உடல்களின் மீதான அதிகாரமாகவே பார்க்கிறேன். இதுவொரு இராணுவ மரபார்ந்த செயல்களாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அடிமையின் அரசியல்

அடிமை என்றதும் எனக்கு இரண்டு விசயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று அடிமை தான் அடிமையாக இருப்பதில் கடமைப்பட்டிருப்பதாகக் கருதி பணியாற்றுவதும், விசுவாசமாக இருப்பதும் என இயங்குவான். அல்லது வற்புறுத்தி அடிமையாக்கப்பட்டிருப்பான். தலித் சமூகத்தின் பெரும்பாலான பகுதியினர் இப்படி வற்புறுத்தி அடிமையானவர்களே. உத்தபுரம் தொடர்பான பிரச்சனை இதற்கு ஓர் உதாரணமாகும். உத்தப்புர சுவர் தலித்துகளுக்கு என்றுமே தடையாக இருந்தது. அது அவர்களைச் சிறுமைப்படுத்துவதாகவே உணர்ந்தார்கள். ஆகையால் அதற்கு எதிராக தலித்துகள் போராட்டம் நடத்தினார்கள். இதுவே பெரும் அரசியல் மாற்றுக்கருத்துகளை உருவாக்கின. இக்கதையில் கே.டானியல் உருவாக்கும் வேலனும் வற்புறுத்தி அடிமையாக்கப்பட்டவனே. அவனால் தன் எதிர்ப்புணர்வைக் காட்ட முடிகிறது. கதையின் இறுதியின் தன்னைத் தானே மீட்டுக்கொள்ள அடிமை சிந்தனையிலிருந்து வெளியேறுகிறான். அடிமைக்குள்ளிருந்து வெளிப்பட்டவன் ஒரு பாசிட்டிவ் அதிகாரமாக மாறி கடும் எதிர்வினை ஆற்றுகிறான்.

இதுடான் கே.டானியலின் தலித் அரசியல். தன் புனைவுகளின் மூலம் அவர் நிறுவும் அரசியல் கருத்துகளுக்கான ஒரு நல்ல உதாரணம் இக்கதை. தலித்துகளின் மீதான அனைத்துவிதமான சுரண்டலுக்கும் எதிர்வன்முறை மட்டுமே சரியான வழிமுறை என டானியல் முன்வைக்கிறார். அதனால் அவருடைய வேலன் கதைமாந்தர் ஒரு வலுப்பெற்று தன் முரண் உணர்வை வெளிப்படுத்துகிறார்.

கே. டானியலின் மீட்பும் பெருங்கனவும்

தலித் இலக்கிய முன்னோடி கே.டானியல் இக்கதையின் இறுதியின் வேலனின் கோபமும் எதிர்ப்புணர்வும் ஓர் இயக்கமாக மாறுவதாகச் சொல்லியிருப்பார். ஒட்டுமொத்த இலங்கை உரிமை போராட்டம் எப்படி இயக்கங்களாக மாறுகின்றன என்பதை விவரிக்கும் வகையிலான ஓர் அனுபவத்தைப் பெற முடிந்தது. தனிமனிதர்கள் கூட்டுச் சக்தியாக ஒன்றிணைந்து ஓர் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகத்தான் ஈழத் தலித் சமூகத்தை அதிகாரத்தின் பிடியிலிருந்து மீட்க முடியும், அதற்கு இயக்கம் அவசியம் எனும் அரசியல் புரிதலை வலுவாகக் கொண்டிருக்கிறார் டானியல். அதன் தொடர்பாகத்தான் கதைகளும் அதே வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன.

இயக்கம் உருவாக்கம், மாற்றுப் பாசிச எதிர்ப்புணர்வு என அனைத்தையுமே நியாயப்படுத்தும் ஒரு வாழ்க்கை டானியல் வாழ்ந்திருக்கக்கூடும். அதன் வழியே தன் கதைகளைப் படைக்கிறார். வேலன் இலங்கையில் உருவான போராளிகளின் குறியீடு. வேலனை முன்வைத்து இலங்கையின் பாசிசத்திற்கு எதிரான உருவான முக்கியமான பிம்பங்களையெல்லாம் நினைவுப்படுத்திக்கொள்ள முடிகிறது. டானியல் சிறுகதைகளைவிட நாவல்(பஞ்சமர்) அனைவராலும் பேசப்பட்டவை. இக்கதையிலும் கூட கதை இறுதியை நோக்கி நகர நகர கதையின் மீதுள்ள பிடிப்பை இழந்து வருவதாகத் தோன்றியது. கடைசியில் கதையை அவசரமாக முடித்ததாகத் தெரிந்தது.

கே. டானியல் எழுதத் துவங்கிய காலக்கட்டத்தில் அவருடைய இலக்கியச் செயல்பாடுகள் வலுவான அரசியல் கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தன. அதைக் கொண்டு அவரால் ஒரு படைப்புலகை அரசியல் நிலத்துடன் சிருஷ்டித்துக்கொள்ள முடிந்தது.
-கே. பாலமுருகன்
நன்றி - வல்லினம்.

புதன், டிசம்பர் 21

இரு வேறு நகரங்களின் கதை!


நன்றி - பதிவுகள்.கொம்


வெங்கட் சாமிநாதன் - 


கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. . இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை, மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றை,ப் பேசுகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையும் அனுபவங்களும் தமிழக வாழ்க்கை என்ன, வரலாற்றின் எந்த நாட்டு மக்கள் தொகையின் வாழ்க்கையைப் போலும், வரலாற்றைப் போலும் அல்ல. நாடிழந்து, மொழியிழந்து, வாழும் யூத மனிதக் கூட்டம் தான் ஈழத்தமிரை நினைவூட்டும். இன்று ஈழத் தமிழர் வாழ்வையும் இழந்து நிற்கின்றனர்.

சரமக் கவிகள் என்கிறார் அகிலன் தன் கவிதைகளை. அவர் பத்தாண்டுகளுக்கு முன் எழுதிய கவிதைகள் பதுங்கு குழி நாட்கள்- ஐப் பேசுபவையாகத் தான் தந்திருக்கிறார். இப்படித் தான் ஒரு இளம் கவிஞனின் வாழ்க்கை அனுபவங்கள் இருக்கிற தென்றால் அங்கு மனம் குதூகலித்துக் கவிதை பாட, முகம் சிரித்துத் தன் வாழ்க்கையைக் கொண்டாட, சக மனிதனிடம் மலர்ந்த முகம் காட்ட என்ன இருக்கக் கூடும்?.

அன்று “ தெருவோரம் நாய் முகரக் கிடந்த தன் நண்பனின் மரணம் செவிப்பட்டது. தன் நன்பண் தெருவோரம் நாய் முகரக் கிடந்தான். அது செய்தியாகத் தான் செவிப்பட்டது. ஏனெனில் அந்நாட்கள் ஊரில் மகிழந்துலாவிய நாட்கள் அல்ல. உயிர் தப்ப பதுங்கு குழியில் ஒடுங்கிக் கிடந்த நாட்கள்.

இரு தலைமுறைக் காலமாக வாழ்க்கையின் அவலங்கள் தீவிரமாகைக் கடந்து வந்து விட்டன. இன்று

பாதமற்ற கால்களால்
வாழ்வைக் கடந்து செல்கிறார்கள்
நாதியற்ற மக்கள்.

ஏனெனில்

முன்னர் இங்கிருந்த கிராமமோ
முன்னர் இங்குர்ந்த வீடுகளோ

இன்றில்லை. மருத்துவக் கூடங்களில்,

காலுக்கொரு தலையும்
தலைக்கிரு கண்களும்

தான் காணக் கிடைக்கின்றன.

தமிழக மக்கள் வாழ்க்கை கவிதகளாக ஆவணப் படுத்தப் பட்ட அந்த கவிதைத் தொடக்க காலத்தில் வாளடி பட்டு வீழ்ந்து கிடக்கும் தன் மகனைத் தேடிய தாயைப் பற்றிப் பாடிய பாடல் உண்டு. அந்தத் தாய தேடிய இடம் தன் ஊரல்ல. அது தன் ஊரை விட்டு ஒதுங்கிய ஒரு போர்க்களத்தில்.

இன்று போர்க்களம் தேடிப் போகவேண்டியதில்லை.

முன்னரிங்கிருந்தன வீடுகள்
.முன்னரிங்கிருந்த கிராமம்

என்று திகைத்து நிற்கும் காலம். வாழ்ந்த ஊரே போர்க்களமாகிக் கிடக்கிறது. உயிர் காப்பாற்றும் மருத்துவ மனைகள் பிணக் கிடங்காகிக் கிடக்கும் நாட்கள் இவை.

ஊர் தேடி, வீடு தேடி வந்துவிட்ட மரணம் குவிந்து கிடக்கும் போர்க்களத்தில் கிடப்பவை

மணிக்கட்டுகள் சில்அ முழக்கைகள் சில்
அங்குமிங்குமாய் உடைந்தும் கிழிந்தும் வேறு பல

ஒன்றெடுத்தேன்
பிராயம் இருபதுக்கும் மேல் ஆண்கை
முரட்டு விரல்கள்

நெடிய ஆயுள் ரேகை கைவிட்டிறங்கி
மேலும் பயணமானது

இறக்கிப் பார்த்தேன்
பச்சையால் குத்தியிருந்தான்

“சஞ்சுதா”

இப்படித்தான் அடையாளங்கள் காணப்படுகின்றன, சிதைந்த உடல் பாகங்களைக்கொண்டு. நாடற்றுப் போய், பேச்சற்றுப் போய், வாழ்வற்றுப் போய், கடைசியில் தன் அடையாளமுமற்றுப் போய் விட்ட நிலை.

முண்டத்திற்கு மேலும் கீழும் ஒன்றுமில்லை
இரத்த வெடில்
சிதம்பழுகிய உடலைத் தொட முதல்
முறிந்தன என்புகள்

“குழந்தைகள் போலும்”

மூடையாய்க் கட்டிய பின்
ஓரமாய்க் குவிக்கத் தொடங்கினோம்.

”குவிந்த மலர்ச் சிரிப்பைக்” காட்டிய முகங்கள், ”ஆடி வரும் தேனா”யிருந்தவை இன்று “குழந்தைகள் போலும்” என்று யூகித்து மூட்டையாய்க் கட்டி ஓரமாய்க் குவிக்க வெண்டிய முண்டங்களாகி விட்டன

சொல்லிக் கொண்டே போகலாம். திரும்ப புறநானூ.ற்றுப் பாடல்கள் எழுதப்படுவதாகத் தோன்றும். தொடக்க காலத்திலேயே போர், மரணம், வாள் என்று தமிழ்க் கவிதை பேசத் தொடங்கிவிட்டது. அது வீரம் பற்றியும் பேசியது .அதுவே தமிழ்க் கவிதை எல்லாமும் அல்ல. அது ஒரு பகுதி. மாத்திரமே. வாழ்க்கை பற்றியும் காதல் பற்றியும் பேசின தமிழ்க் கவிதையின் பெரும்பகுதி..ஆனால் ,இங்கு அதற்கெல்லாம் ஒரு காலம் வரும் என்றும் தோன்றவில்லை.

வெறிச்சோடின ஒரு நூறாயிரம் ஆண்டுகள்

இனிக்காரணமுமில்லை,
காத்திருக்க எவருமில்லை என்ற போதும்
பின்னும் கிடந்த முந்தின நாட்கள்
தாய் வெந்து முதுமை கிடந்த இடத்தில்

அவனில்லை
அவரில்லை

எவருமில்லை

பாழ்

இந்தப் பாழ் என ஏதுமிருக்கவில்லை முந்திய புறநானூற்றில்

இந்தப் பாழை உருவாக்கிய வேற்றோர் இடமுமுண்டு, மனிதக் கூட்டமுமுண்டு. இப்பாழுக்கு வழிகாட்டியதாகச் சொல்லிக் கொள்ளும் காவியுடை தரித்த புத்த பிக்குகள் தம் ”கருணை” பாலித்த பாழ் இது. அதே புத்த பிரான் பிறந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தான் இந்த புத்த பிக்குகள் இத்தகைய கருணை பாலித்திருக்கிறார்கள். அவர்களது கருணை ஆட்சி தயங்கும், தளரும் காலத்தில் எல்லாம் காவியுடை பிக்குகளும் அவர்தமைக் குருவாகக் கொண்ட அரசும் திரும்ப தம் கருணைக்கு வலிவூட்டியே வந்திருக்கிறார்கள். புத்தர் போன்ற ஒர் கருணையும் சாந்தமும், மெல்லிய புன்முருவலும் கொண்ட கடாட்சம் தரும் இன்னொரு தேவ ரூபம் உண்டா என எனக்குத் தெரியாது. அத் தேவ ரூப சாந்த சொரூபன், புத்தன் தேவனும் அல்லன். தேவனாகிய மனிதன் தான். புத்த பிக்கு காவியுடையும் எங்கும் இதே போன்ற “கருணை” பாலிப்பதும் இல்லை. காவியுடைக்குள் இருக்கும் மனித மனம் சார்ந்தது, சக மனிதனை பிணக்கிடங்காக்குவதும் அவன் வாழ்ந்த இடத்தைப் பாழாக்குவதும். காவியுடைக்குள் இருந்த ஒரு இன்னொரு பிக்கு தான்., காரணம் அவன் பாழாக்கிய சக மனிதன் தன்னைப் போன்று காவியுடை தரித்திருக்கவில்லை. வியத் நாமில் தன்னையே தீயிட்டு மரித்துக் கொண்டான்.இதே போன்று காவியுடை தரித்த ஒரு பிக்கு. அது மனிதம் இழந்த ஒரு அதிகாரத்துக்கு அவன் தெரிவித்த கண்டனம் அந்த ரூபம் பெற்றது. இன்னொன்று அதுவும் அரசு அதிகாரம் தான், இரண்டாயிரம் ஆண்டு முந்திய இன்னொரு காலத்தில் போரை மறுத்தது. ஆனால் இங்கு அந்தக் காவியுடைக்குள் இருக்கும் மனிதன் வேறாகத்தான் இருந்தான். காவியுடை அவனை மாற்றவில்லை. அதிகாரம் வேண்டும், அதிகாரம் செலுத்தும் காவியுடை இது. இரு வேறு உலகங்களை, நகரங்களை உருவாக்கிவிடுகிறது. ஒன்று காவியுடை தரித்தது. இன்னொன்ரு காவியுடை அற்றது.

வேடிக்கை வாணச் சிறுமழையும்
அணிநடை யானைப் பேருலாவும்
படர் நெடும் மின் கொடிச் சரமும்
உங்களிரவை நனைக்கையில்
பொங்கிப் பிரகாசம் கொள்ளும் உங்கள் நகரத்தை
போகமும் போதையும் மிஞ்சித் தள்ளாடும் நள்ளிராக்களை
தூக்கத்தினால் நீங்கள் மூடிப் புரள்கையில்
சன்னங்களாலும் பீரங்கிகளாலும்
உடைத்துத் திறக்கப்படுகிறது
ஊரடங்கிய வேறோரு நகரம்
பசியும் வலியும் தீராப்பீதியும் பீடித்த நள்ளிராக்களில்
பெருக்கெடுக்கும் இரத்தத் தெருக்களை
தூங்காக் கண்களால் கடக்கிறார்கள்
இன்னொரு தலை நகரத்து மக்கள்.

இது இன்றைய ஈழத்தமிழ் கவிஞர் அகிலன் எழுத விதிக்கப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்.

இங்கு வீரமில்லை. ஒன்று மனிதம் இழந்த அதிகாரக் கொடூரம். மனிதப் படுகொலை. இன்னொன்று சதைப் பிண்டங்களாக், அடையாளம் இழந்து மரிக்கும்

நாங்கள் இங்கு தள்ளியிருந்து மௌனித்து வேடிக்கை பார்க்கும் இன்னொரு மனிதக்கூட்டம். இரைச்சலிடும் வீர கோஷங்களே எங்களால் சாத்தியமானது. இங்கும் சரி, உங்கள் நாட்டின் நகர் ஒன்றிலும் சரி, முறுவலித்த சாந்த சொரூப புத்தன் உறைந்து சிலையாகித் தான் கிடக்கிறான். எங்களுக்கு அவன் இரண்டாயிர ஆண்டுகளுக்கும் முந்தி வாழ்ந்த புத்தன். அவன் காலடிகள் எங்கள் வரலாற்றில் நீள வில்லை.
vswaminathan.venkat@gmail.com


நன்றி - பதிவுகள்.கொம்

வெள்ளி, டிசம்பர் 16

நந்தினி சேவியாரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்“ வாசக நோக்கில் சில குறிப்புகள்- இதயராசன்-


Thanks- http://muchchanthi.blogspot.com/2011/11/blog-post.html
THURSDAY, NOVEMBER 3, 2011



சுரண்டல், இனபேதம், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றினை சமூக வாழ்நிலை மாந்தர்கள் ஊடாட்டத்தின் மூலம் நெல்லிமரப் பள்ளிக்கூடம் சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர்.
மேய்ப்பன், ஒற்றைத்தென்னை, கடலோரத்துக் குடிசைகள், மனிதம், நெல்லிமரப் பள்ளிக்கூடம், தவனம், எதிர்வு. விருட்சம் ஆகிய எட்டுக்கதைகளும் வறுமை, இனம், சாதி ஆகிய மூன்று சமூகப்பிரச்சினைகளையும் உயிர்ப்புடன் நம்முன் பேசுகின்றன.

அயல்கிராமத்தைச் சேரந்தவர்கள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு அடுத்ததாக இச்சிறுகதைத் தொகுதி, கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் கதையை நீட்டி முடக்காமல் தேவைக்கேற்ப அச்சொட்டாகச் சொல்வதில் வல்லவர். கூடவே எள்ளல் உணர்வுடன் வாசிக்கத் தூண்டுகிறது. இக்கதைகள் எட்டினையும் விமர்சனம் என்றில்லாமல் ஒரு வாசக அனுபவத்துடன், ஏனைய வாசகர்களும் வாசிக்கவும் ஜோசிக்கவும் வைக்கும் நோக்கில் இரசனைக்குறிப்பாக எழுதமுற்படுகின்றேன்.

முதலாவது சிறுகதை – மேய்ப்பன்:
கடலோரத்துச் சிறுகிராமத்தில் தேவாலயம் அமைத்து, தொழிலும் தேவாலயமுமே உலகமாய் வாழ்கின்ற சங்கிலித்தாம் கிறகோரி என்னும் கிழவர், தனது மகன் காணாமல் போனபோது, மருமகள் தெரேசாவை கந்தசாமிக்கு தவிர்க்கமுடியாத காரணத்திற்காக மறுமணம் செய்து கொடுக்கின்றார். இதனை எதிர்த்த ஊர்மக்கள், உறவினர்கள் அவருடன் சேர்த்து தேவாலயத்தையும் ஒதுக்கி விடுகின்றனர். தேவாலயமும் கிழவர் மனதும் பாழ்பட்டுப்போகிறன. இறுதியில் சிதைவுறும் தேவாலயத்தைச் சீர்செய்வதற்காய் மீன்பிடிக்கக் கடலுக்குப்போய், புயலில் சிக்குண்டு உயிர்துறக்கின்றார்.
இங்கு மறுமணம், மதமாற்றம் என்னும் முரண்நிலை யதார்த்தம், தேவாலயத்துடன் பிணைக்கப்பட்ட வாழ்வின் ஊடாக, வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல் நெருடலின்றி சொல்லப்படுகின்றது. பிரதான பகை முரண்பாடு பின்தள்ளப்பட்டு, உள்முரண்பாடுகள் தோண்டி எடுக்கப்பட்டு மக்களை மோதவிடுவதன் மூலம் பகை முரண்பாடு நேசசக்தியாய்த் தோன்றும் மாயைமயக்கம் இக்கதைவாயிலாக ஆசிரியர் சொல்வது வாசகரைச் சிந்திக்கத் தூண்டுவனவாய் உள்ளது.

இரண்டாவது கதை – ஒற்றைத்தென்னை:
அந்த மீனவக்கிராமத்தில் இரு கிழவர்கள் வசிக்கின்றார்கள். இருவரும் சம வயதினர். அதிரியாரின் மகன் பாலைதீவு படகுவிபத்தில் இறந்துபோகின்றான். அச்சோகத்தினைத் தாங்கமுடியாமல் தவிக்கும்போது, சந்தியாக் கிழவர் அவரைத் தேற்றுகிறார். இதில் உள்ள முரண் யாதெனில், சந்தியாக்கிழவர் தம் குடும்பமே அவ்விபத்தில் இறந்துபோன சோகத்தை வைத்துக்கொண்டே தேற்றுவதுதான். ஒரே வாழ்க்கை முறையில் ஒருவரின் மனம் வைரித்துப்போகின்றது, மற்றது நொந்துபோகின்றது.
கதை இவ்வாறு முற்றுப்பெறுகிறது.
குருநகரில் எதற்குமே அசையாத இரண்டு தென்னைகள்…!
ஒன்று அது. மற்றது…?
சந்தியாக் கிழவன்!
அவளுக்கு உடல் சிரில்க்கிறது.
வாழிடமும் தொழில் முறையும் அதனூடு பெறுகின்ற பட்டறிவும் தனியாளுக்குத் தனியாள் வேறுபடுவது தவிர்க்கமுடியாது. இறப்பு என்பது யதார்த்தமான போதிலும் ஜீவனையே உலுக்ககின்ற சாவு அவனைத் தும்பாக்கிப் போடுகின்ற சோகத்தினையும் அதனைத் தைரியத்துடன் எதிர்கொள்ளும் இன்னொருவரும் காட்டப்படுவதன் மூலம் சிறுசிறு ஏமாற்றங்களுக்காய்த் துவண்டுபோய், தற்கொலை செய்ய அலைபவர்களை விழிப்பூட்டுவதாய் உள்ளது. இதனைக் கற்பனையில் காட்டாமல் அவர்களின் வாழ்வின் மூலமே காட்டுவது, கதாசிரியரின் கருத்தியல் தளத்தின் பலத்தினைக் காட்டுகிறது.

மூன்றாவது கதை – கடலோரத்துக் குடிசைகள்:
மீனவக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த இரு சகோதரர்கள் ஒருவர் மரியசேவியர், மற்றவர் எட்வோட். மரியசேவியர், சுவாமியர் படிப்புப்படிக்க வெளிநாடு சென்று, வெகுகாலத்தின் பின்னர் கிராமத்துத் தேவாலயத்திற்குப் பங்குத்தந்தையாக வருகின்றார். தம்பி தனது மச்சாளைத் திருமணம்புரிந்து, கடற்றொழிலாளியாக வறுமையில் வாடுகின்றான். தமது உழைப்பினைச் சுரண்டும் சம்மட்டியாருக்கு எதிராகக் கலகம் செய்கின்றான். சுரண்டலை ஆதரிக்கும் அத்தனையையும் கேள்விக்கு உட்படுத்துகின்றான். கோவிலும் சுரண்டல் வர்க்கத்திற்குச் சார்பாக இருப்பதால் அப்பக்கமே போகாமல் விடுகின்றான். அண்ணன் பங்குத்தந்தை – தம்பி புரட்சிக்காரன், அண்ணனுக்கு வசதியான வாழ்க்கை விதவிதமான உணவுகள் ஆனால் பசியில்லை. தம்பியின் குடும்பம் பசியுடன் உணவில்லை. இதற்கான காரணத்தைத் தேடுவதாய்க் கதை இயல்பாக நகர்கிறது.
“நீங்கள் செத்தபிறகு வாற சொர்க்கத்தைப் பற்றிப் பேசிறியள்… நாங்கள் இப்ப இருக்கிற நரகத்தைப் பற்றிப் பேசிறம்.. அதை மாத்தப்பார்க்கிறம்…”
உதுகளைப் பேசிறதாலைதான் உங்கட வீட்டிலை வறுமை பஞ்சம்
சுவாமியார் இடைமறித்தார். எட்வேட் சிரித்தான்
“ஒவ்வொரு நாளும் கோவில்லையே பழிகிடக்கிற சந்தியா அண்ணை, பேதுறு அம்மான்… எல்லோருக்கும் இதனாலையே வறுமையும் கஷ்டமும்…?”
“மரங்களின் வேர்களினருகே கோடரிகள் போடப்படுகின்றன.. நற்கனி கொடாத மரங்கள் அத்தனையும் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்…”
எட்டுக்கதைகளிலும் முதன்நிலையில் வைத்துப் பேசப்பட வேண்டிய கதை இது. மதம், அரசியல், வறுமை, சுரண்டல் என்பனபற்றி வாசகரைக் கட்டுடைத்துச் சிந்திக்கத் தூண்டுகின்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

நான்காவது கதை – மனிதம்:
இவரது கதைகளில் இக்கதை இரு பக்கங்களைக் கொண்டதாகும். ஷெல் வீச்சில் முத்தரும் மனைவியும் செத்துப் போயினர். அவர்களது கைக்குழந்தையும் அண்ணனும் மட்டுமே தப்பியுள்ளனர். ஊரே சிதைக்கப்பட்ட நிலையில் யார் யாரைப் பார்ப்பது. ஒரு வயோதிபர் வெளியே வந்து கைக்குழந்தையைக் கையேற்கிறார். சிறுவன் தாய் தந்தையரின் உடலத்தை விட்டுச்செல்ல மனமின்றி அங்கேயே இருக்கின்றான்.
“எனக்குப் பசிக்குதுதான்...... நானும் உங்களோட வந்துட்டா ஐயாவையும் அம்மாவையும் காகம் கொத்திப்போடும்....... நீங்க தங்கச்சியைக் கொண்டு போங்க......”
யுத்தத்தின் கொடுமையினை சிறுகச் சொல்லி, பெருக உரைக்கும் கதை – மனிதம் மரிக்கவில்லை என்பதை சாட்சி பகரும் கதை.

ஐந்தாவது கதை – நெல்லிமரப் பள்ளிக்கூடம்:
நெடுத்து வளர்ந்த நெல்லிமரத்தடியில் உள்ள பள்ளிக்கூட்டம், அதில் கல்விகற்ற சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஏனைய சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. கிணற்றில் தண்ணீர் அள்ளியதற்காக ஒரு சிறுவன் ஆசிரியரால் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறான். அதன் விளைவு அக்கிராமத்துச் சிறுவர்கள் பாடசாலை செல்லாமல், பின்னர் தங்கள் கிராமத்தில் பாடசாலையை நிறுவி பள்ளிக்குச் செல்வதே கதை.
“வாத்தியார்! இவன் கிணற்றுக்கட்டுல ஏறி துலாக்கயிற்றைப் பிடிச்சவன்”
ஜீவகாருண்யம் என்ற பெயரை மட்டுமே சூடியிருந்த மாணவன் முட்டுக்காய்த் தலையரிடம் போட்டுக் கொடுத்தமைதான் கதையின் முக்கிய திருப்புமுனையான அமைகிறது.
இக்கதையில் பொன்னையா வாத்தியார் எனும் அன்புள்ளங் கொண்ட, மாணவர்களால் நேசிக்கப்படுபவரும், முட்டுக்காயர் எனும் பட்டப்பெயர் கொண்ட பஞ்சாட்சரம் வாத்தியார் - இவருக்கு நேர் விரோதமான சாதித் திமிர் கொண்டவராகச் சித்தரிக்கப்படுகின்றார். அமைதியான மாணவர் அநீதிக்கு எதிராக தமது எதிர்ப்பினைப் புலப்படுத்துவதும் அதன் மூலம் ஒடுக்கப்படும் கிராமம் ஒன்று விழிப்புறுவதும் இயல்பாகவே சொல்லப்படுகின்ற போதிலும், சொல்ல வேண்டியவை நிறையவேயுண்டு என்பதை கதையில் சொல்லப்படும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. இது ஒரு நாவலுக்கான நகர்வைக் கொண்டுள்ளது எனலாம்.

ஆறாவது கதை – தவனம்:
83 யூலைக் கலவரத்தின் போது புறக்கோட்டையில் இறால் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமிழர். சக சிங்கள ஊழியர்களால் காப்பாற்றப்பட்டுப் போஷிக்கப் படுவதையும் கலவரத்தின் அவலமும் சொல்லப்படும் கதை இது. அந்தத் துன்பியல் நிகழ்வில் நாமும் அகப்பட்டது போன்ற உணர்வைத் தருகிறது.

ஏழாவது கதை – எதிர்வு:
யாழ்ப்பாணத்தில் யுத்தச் சூழ்நிலையில் தமது மாமனாரின் மரணச் சடங்கினை திட்டமிட்டபடி சமயாசாரப்படி நடாத்த முடியாமல் சவுக்குத் தோப்பில் புதைத்தமையும் மரண வீட்டில் குண்டுவீச்சு நிகழ்ந்த போது தப்பிப் பிழைக்க ஓடிய உறவினர்கள் பின்பு நிஜத்தினை மறந்து,
“அவன் கொமியூனிஸ்காரன் அதுதான் கோயில் சடங்கு செய்யாமல் மாமனைச் சவுக்குமரக் காட்டுக்குள்ள தாட்டுப்போட்டான்”
என்று கூறும் முரண்நிலை யதார்த்தத்தினை இலாவகமாக சிறப்பான கதை கூறல் மூலம் சொல்வது இக்கதையின் வெற்றியாகும்.

எட்டாவது கதை – விருட்சம்:
இலங்கை இனப்பிரச்சினையின் வெளிப்பாடே மதங்கள் மோதிக் கொள்வது. சாதாரண மக்களின் உணர்வினைத் தூண்டுவதும், இதில் புத்தரும் - பிள்ளையாரும் அரச மரத்துக்கு உரிமை கோருவது இலங்கைக்கே உரித்தான பண்பாகும். இதனை மரங்களை நேசிக்கும் ஒரு உள்ளத்தின் மூலம் யதார்த்தத்துடன் இணைத்து, பண்பாட்டுத் தளத்தில் விபரிப்பது அற்புதமாக வாய்த்துள்ளது. இக்கதை நிச்சயமாக சிங்களத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டியதாகும்.

“போர்க்காலத்துக்கு முன்னர் ஊரின் பெருவிருட்சங்கள் பல சிறு கோவில்களாக சூலங்களுடன் நின்றநிலைமாறி ஆக்கிரமிப்பின் இன அடையாளங்களாக அரசமரங்களும் அதன் கீழ் புத்தர்களும் உருவாகிவிட்டமையை இவன் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு”
விருட்சங்களே இன அடையாளங்களா......?
பெரு விருட்சங்களின் கீழ் தெய்வங்களை வைத்துப் பூசிப்பதன் மூலம் விருட்சமும் அச்சூழலும் புனிதம் பெறுவதோடு சூழலும் பேணப்படுகிறது என்பது ஏதோ உண்மைதான். ஆனால் சகோதரர்கள் போல வாழவேண்டியவர்கள் அந்தத் தெய்வத்திற்காக ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்துவதுதான் அவலத்திலும் அவலம். இதனை நந்தினி சேவியர் சிறப்பாகவே பதிவுசெய்துள்ளார்.

முடிவுரை :
எனவே இச்சிறுகதைகள் எட்டும், எட்ட முற்படும் எல்லைகளை விட்டகலாதபடியே எம்மையும் ஈர்க்கின்றன. அனைத்து விதமான அவலங்களிடையேயும் மனிதம் மரிக்காமல் இன்னும் உயிர்புடன் உள்ளதையே இக்கதைகள் சொல்லாமல் சொல்லி நிற்கின்றன என்ற வகையில் இச்சிறுகதைத் தொகுதிக்கு ‘மனிதம்’ என்ற தலைப்பிட்டிருப்பினும் பொருந்தும் என்று கூறி, நந்தினி சேவியரிடமிருந்து இன்னமும் துடிப்பான, துல்லியமான கதைகளை எதிர்பார்த்து, தளரா மனத்துடன் முதிர்ந்த கதைகளை இன்னும் இன்னும் வேண்டி நிற்கின்றோம்.
Posted by பாரதி தீட்சண்யா at 11:49 PM


Thanks- http://muchchanthi.blogspot.com/2011/11/blog-post.html