புதன், ஏப்ரல் 18

ஒரு சிறு தீப்பொறி - சேரன்


நன்றி :- globaltamilnews.net

சென்ற வாரம் நூலகம் நிறுவனத்தினரின் கனடாப் பிரிவினர் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அது தொடர்பான சிக்கல்களும் பறற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது. நூலகம் நிறுவனம் எண்ணிம நூலகம் என்பது மட்டுமல்ல ஈழத் தமிழ் ஆவணங்கள், நூல்கள் மேலும் பல்வேறுபட்ட அறிவுச் சான்றுகளையும் பேணவிழைகிற ஒரு சிறப்பான முயற்சியாகும். எண்ணிம நூலகம் பற்றிய நிகழ்வில் யாழ் நூலக எரிப்புப் பற்றிப் பேசுவதும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அமைப்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டது போல, "அப்போது எமது நூலகம் ஏண்ணிம நூலகமாக இருந்திருக்குமானால் எரிப்பு ஏற்படுத்திய்இருக்கும் பாதிப்புக் குறைந்த அளவிலேயே இருந்திருக்கும்". எனினும் அது வேறு காலம். இது வேறுகாலம். என்னையும் என்போன்ற நூற்றுக் ஆயிரக்கணக்கானவர்களையும் அரசியல் என்னும் பெருஞ்சுழலுள் இழுத்துவிட்ட காலம் அது. இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து வருகிற தகவல்களின்படி, வடபுலத்தை ஆள்வோர் யாழ் நூலகத்தின் கணினிப் பிரிவையும் கழிவுப் பிரிவாக மாற்றுகிற திடீர் ரசவாதம் செய்யும் வல்லமை வாய்த்திருப்பவர்கள் என்றால் தமிழர்கள்உக்கும் நூலகங்களுக்கும் பெரிய அரசியல் பொருத்தப்பாடு இல்லை என்றே தெரிகிறது. இந்த அவலம் எவ்வகையான அரசியல் சுழியைக் கொண்டுவரப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


முப்பத்தொரு முன்பு யாழ்ப்பாணப் பொது நூலகமும் யாழ்ப்பாணப் பட்டினமும் எரிக்கப்பட்ட போது ‘இரண்டாவது சூரிய உதயம்’ என்னும்கவிதையை எழுதினேன். அந்த நாட்களில்தான் யாழ்ப்பாணத்தின் தமிழ் நாளேடான “ஈழநாடு” பணி மனையையும் அச்சுக்கூடத்தையும் தீக்கிரையாக்கினார்கள். ஈழவிடுதலைப் போராட்டம் என்ற வெடிகுண்டின் நீண்ட திரியின் முனையில் அக்கினிக் குஞ்சு ஒன்றை வீசிய காலம் அது.

ஆனால், இன்று இனப்படுகொலை நடந்தேறிய பிற்பாடு சாம்பலின் மீதும் புகையினுள்ளும் சித்தம் குழம்பிய நிலையிலிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நின்று கடந்த ஆண்டுகளை ஆற்றாமையோடு திரும்பிப் பார்க்கிறோம். ஹெயின்றிச் ஹைன் என்கிற அறிஞர் ஒருமுறை சொன்னார்: முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்தது.

யாழ். நூலகம் எரியுண்டபோது நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். நானும் என்னுடைய நண்பர்கள் பலரும் அப்போது பல்கலைக்கழகத்தின் ‘பாலசிங்கம் விடுதி”யில் தங்கியிருந்தோம். அது உயர்ந்த மாடிக் கட்டிடம். தொலைவிலிருந்து புகை அடர்த்தியாகக் கிளம்புவதைப் பார்த்தோம். துவக்கத்த்தில் என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டாலும் மிக விரைவிலேயே தகவல் பரவி விட்டது. தீவிர முயற்சி எடுத்தும் எரிந்து கொண்டிருக்கும் இடங்களுக்கு அன்றிரவு எங்களால் செல்ல முடியவில்லை. படையினரின் வெறியாட்டு பயங்கரமானதாக இருந்தது.மறுநாள் காலைதான் செல்ல முடிந்தது. நாங்கள் அங்கு சென்ற போது நூலகம் முற்றாக எரிந்து போய்விட்டிருந்தது. அதனைப் பார்வையிட்டு அதிர்ச்சியிலும் கோபத்திலும் கையறு நிலையில் துடித்துக் கொண்டிருந்த ஆயிரக் கணக்கான மக்கள் எம்மைச் சூழ நின்றனர். இன்னும் பலர் தொடர்ச்சியாக நூலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

எரிந்துபோன நூலகத்தருகே இருந்த துரையப்பா விளையாட்டரங்கத்தில் தான் தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட நூற்றுக்கணக்கான இலங்கை அரச படையினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். விளையாட்டரங்கத்தின் பார்வையாளர் பகுதியில் இருந்த உயர்ந்த படிக்கட்டுக்களில் ஏறி நின்று எங்களைக் கேலி செய்தனர் அரச படையினர். அவர்கள் கையில் எதற்கும் தயாராகத் துப்பாக்கி இருந்தது.

“ஐயோ, எல்லாம் போச்சே! பாவம் நீங்கள்” என்று சிங்களத்தில் பேசியபடி எங்களைப் பார்த்துச் சிரித்துச் சிரித்துக் கேலி செய்தார்கள். கவலையில் அழுவது போல வேடிக்கை செய்தார்கள்.அந்தச் சிரிப்பும், கேலியும், களிக்கூத்தும் கொண்டாட்டமும் முப்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் பெருமளவில் அவர்களிடம் இருக்கிறது. இரண்டாவது சூரிய உதயத்திற்கு அப்பால் என்னிடம் இப்போது இருப்பது ‘காடாற்று’ என்ற புதிய கவிதைகளின் தொகுதி. சாம்பலிலும் புகையிலும் குருதியிலும் கண்ணீரிலும் அன்று பிறந்த என்னுடைய கவிதை மறுபடியும் அதே இடத்தில் வந்து நிற்கிறது. இனப்படுகொலைக்கும் படுகொலையின் மொழிக்கும் இலக்கியத்தினதும் கவிதையினதும் மறுமொழி என்ன என்பது அகற்றப்பட முடியாத பெருமலையாக நமது சிந்தனையிலும் இதயத்திலும் இருக்கிறது.

இந்தக் காலகட்டத்தின் சாத்தியப்பாடுகள், எமக்கு ஏற்பட்ட ஆழமான மன வடுக்கள், கடந்தகாலம் பற்றிய மீள்பரிசீலனை, அரசியல் சுய விமர்சனம், மானுட விழுமியங்களினதும் மனித நாகரிகத்தினதும் அடிப்படைத் தோல்வி என்பன பற்றிய கருத்தாடல்கள் மெல்ல மெல்ல மேல் எழுகின்றன.

நூலகமும், யாழ்ப்பாணமும், ஈழநாடு இதழும் எரியூட்டப்பட்டமையும் அவற்றையொட்டி மேலும் தீவிரம் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அரசியல், எனது கவிதா இயக்கத்துக்கு மட்டுமன்றி எனது இதழியல் ஊடகவியல் செயற்பாட்டுக்கும் ஒரு சிறு தீப்பொறியாய் அமைந்தது. எரியூட்டப்பட்டு மறுநாளே ‘எரிகிறது யாழ்ப்பாணம்’ என்று தமிழிலும் “Jaffna On Fire” என ஆங்கிலத்திலும் துண்டுப்பிரசுர வடிவில் செய்தித்தாளைக் கொண்டு வந்தோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அவையின் சார்பிலும் அவர்களுடைய ஓயாத உழைப்பாலும்தான் இது சாத்தியமாயிற்று.சேத விபரங்கள், நடந்த நிகழ்வுகள் பற்றிய விரிவான செய்திகள் போன்றவற்றைத் தாங்கி இவை கல்லச்சு (Cyclostyle) முறையில் தயாரித்து வெளியிடப்பட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள எந்த அச்சகமுமே இவற்றை அச்சிடப் பயந்த நேரத்தில் கத்தோலிக்கப் பாதிரிமார் சிலருடைய தீவிரமான ஒத்துழைப்பு மூலமே இவற்றை எங்களால் வெளிக்கொணர முடிந்தது. இந்த ஆவணங்களை இப்போது எங்கே போய்த் தேடுவது?

ஈழநாடு இதழ் மறுபடியும் வெளிவரத் துவங்கும் வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் எரிகிறது யாழ்ப்பாணம் இதழ்களை மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் இரு மொழியிலும் வெளிக்கொணர்ந்தோம். தமிழ் ஊடக மொழியைச் செம்மைப்படுத்துவதிலும் மரபற்ற எனது ஆங்கில உரைநடையைத் திருத்துவதிலும் காலம் சென்ற ஏ. ஜே. கனகரத்னா இரவிரவாக உதவி செய்தார்.போர்க்கால ஊடகவியலில் கால்பதித்த முதலாவது அனுபவம் அது. என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு அந்தக் காலம் கோபத்துடன் கூடிய ஒரு பெரிய பயில்புலமாக இருந்தது. எனினும் அநியாயமாக அத்தகைய வரலாறே மறுபடி மறுபடி மீள வருகிறது.

இந்த முயற்சிகளில் இரவு பகலாக எங்களோடு ஈடுபட்டவர்களும் நூலகம் எரியுண்ட இரவும் அதற்குப் பிற்பாடும் அயராமல் உழைத்தவர்களும் பின்னர் பல்வேறுபட்ட போராளி அமைப்புகளில் இணைந்து விட்டார்கள். பிற்பாடு பலர் முக்கியமான தலைவர்களாக மாறி விட்டனர். பலர் இன்று விடுதலைப் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள். சிலர் “காணாமல்” போய் விட்டார்கள்.சிலர் இப்பொழுது புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். வேறு சிலர் இப்போது ‘ஜனநாயக’ வழிக்குத் திரும்பி விட்ட அரசியல் தலைவர்களாக இருக்கிறார்கள்(!!!). இன்னும் சிலர் தொடர்ச்சியாக அரசியல் அஞ்ஞாத வாசத்தில் ஆழ்ந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் இன்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கவும் முடியவில்லை.

நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்கு ஏலவே சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இனப்படுகொலையின் பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.

எனினும் மஹாகவி தனது கவிதையொன்றில் சொல்வது போல “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்பதைத்தான் நாங்களும் சொல்ல வேண்டும்.

சேரன்

(படங்கள் -ஏப்பிரல் 7, 2012; சனிக்கிழமைநேரம்: 5:00 பிப - 8:30 பிபஇடம்: Sri Sathya Sai Baba Centre of Scarborough, Canada (Finch & Middlefield)5321 Finch Avenue EastScarborough, ONM1S 5W2 இல் நூலகம் அறிமுக நிகழ்வுப் படங்கள் நன்றி இளங்கோவின் முகநூல்)

செவ்வாய், ஏப்ரல் 10


இராகவனின் படைப்புகள் வடிவங்களைக் கடந்த வடிவம்
மு. பொ.

நன்றி - காலச்சுவடு ஏப்ரல் 2012



இன்றைய ஈழத்து இளந்தலைமுறை எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாக நான் கருதுவது இருவரை. ஒருவர் இராகவன். அடுத்தவர் திசேரா. இவ்விருவரும் தாம் எழுதும் விஷயங்களை ஆழமான தளங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் அதற்கேற்ற முறையில் வித்தியாசமான எடுத்துச் சொல்முறையைக் கையாள்வதாலும் இன்றைய தீவிர வாசகர்களின் கவனத்துக்குள்ளாகின்றனர். இவர்களுள் இராகவன் ஒரு படி மேலே போய் வழமையான எழுத்தாளர்கள் “கலையற்றவை”யென எவற்றையெல்லாம் ஒதுக்கிவைக்கிறார்களோ அவற்றையெல்லாம் கலைத்துவப்படுத்திக் காட்டியுள்ளார். குறிப்பாக நம் எழுத்தாளர் கையாளச் சங்கோஜப்படும் பாலியல் விஷயங்களை இவர் எடுத்தாண்ட முறை பலவகையான அபிப்பிராயங்களை மேலாட வைத்துள்ளன. சிலரை இது ‘அசிங்கம்’ என அலற வைத்துள்ளது. விஷயமறிந்த இளைஞர் சிலரை ‘இராகவன் அழகாகத்தான் செய்துள்ளார்’ எனப் பாராட்ட வைத்துள்ளது. இன்னும் சிலரை சைகோ என்னும் படத்தில் ஹிச்சாக் தன் கதாநாயகனை மௌனிக்க வைத்துத் தொண்டை மிடறு மேலும் கீழும் போய் வரச்செய்த நிலைமைக்குத் தள்ளியுள்ளது.

அப்படியானால் இராகவனின் எழுத்துக்கள் எத்தகையன? இதற்கான பதிலை அவரது எழுத்துக்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் கேள்விகளுக்குப் பதில் காண்பதன் மூலமே கண்டுகொள்ளலாம்.

முதலாவது, இவரது எழுத்துக்கள் மூளையால் கட்டமைக்கப்படுகின்றன என்னும் குற்றச்சாட்டு.
இரண்டாவது, பாலியல் விஷயங்களை இவ்வளவு பச்சையாக இவர் எழுதுகிறார். இது சிலரைப் படிக்க முடியாமல் செய்துவிடுகிறது.
மூன்றாவது, இராகவன் சொல்முறைக்காகப் பாவிக்கும் விஷயங்கள் கலையோடு எந்தவிதத்திலும் சம்பந்தப்படுத்த முடியாதவை என்ற குற்றச்சாட்டு.

முதலாவது குற்றச்சாட்டான கலையை மூளையோடு சம்பந்தப்படுத்தக் கூடாது என்று சொல்லும் பலர் இன்னும் நம்மிடையே உள்ளனர். இயல்பாகவே உணர்வுகளோடு அதிகமாக இணைந்துகொள்ளும் கலைசார்ந்த படைப்புகளை மூளையோடு - அதாவது சிந்தித்து அதன்வழி அதைச் செப்பனிடும் வேலையோடு - சம்பந்தப்படுத்துதல் கூடாது என்று சொல்பவர்கள் முன்வைக்கும் காரணம்: அப்படிச் சம்பந்தப்படுத்தினால் அது உண்மையான கலைப் படைப்பாக இருக்காது என்பதே. இத்தகைய எண்ணமுடையவர்களில் ஒருவர்தான் கவிஞர் சோலைக்கிளியும். அதனால்தான் அவர் “கவிஞன் என்பவன் யார்? ஆடுகளை மேய்ப்பதைப் போல் கவிதைகளையும் மேய்ப்பவனா? இல்லை. கவிதைகள் தாம் கவிஞனை மேய்க்க வேண்டும். கவிதைகளை எழுதுபவன் கவிஞன் என்பதை விடுத்துக் கவிஞனை எழுதுவதே கவிதைகள்தாம் என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது” (மிக அதிகாலை நீல இருள் முன்னுரை) என்று கூறுகிறார். இன்று சோலைக்கிளியினதும் அவரைச் சார்ந்தோரது கவிதைகளுக்கும் நேர்ந்த கதி தெரியும். அவை காலமாற்றம் கோரும் நிமிர்வுக்கு இடங்கொடுக்காது, சோர்ந்துபோய் வீழ்ந்தமைக்குரிய காரணம் அவை மூளையோடு சம்பந்தப்பட்ட விமர்சன உள்விழிப்புக்காட்படாது போனமையே என்று துணிந்து கூறலாம். 
சிறந்த கவிஞனிடம் அல்லது படைப்பாளியிடம் எப்பொழுதுமே விமர்சனம் உள்விழித்திருக்கும் என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். டி. எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட், யேற்ஸ் ஆகிய சிறந்த கவிஞர்கள் இதற்கு உதாரணம். எலியட் நவீனக் காலத்தின் சிறந்த விமர்சகராகவும் இருந்தார் என்றால் அதற்குக் காரணம், அவரது கவிதை ஆக்கங்கள் மூளையோடு சம்பந்தப்பட்டிருந்ததே. அவர் கவிதையால் மேய்க்கப்படவில்லை, மாறாகக் கவிதையை மேய்த்து இலக்கிய உலகையும் செம்மைப்படுத்தினார். இன்றைய புதுக்கவிதைப் போக்கிற்கு அவரும் எஸ்ரா பவுண்டும் செய்த பங்களிப்பு பெரிது.


இந்தப் பின்னணியில்தான் இராகவனின் படைப்புகளைப் பார்க்க வேண்டும். வழமையான பழைய பாணியிலேயே அப்பம் சுடுவதுபோல் கதைகளை எந்தவிதச் சுயவிழிப்புமற்றுப் போட்டடிக்கும் நம் இலக்கியப் பிரம்மாக்கள் மத்தியில் இராகவனின் படைப்புகள் அதிரடித் தாக்குதல்களாகவே வந்துவிழுகின்றன. ஒற்றைப்பரிமாணக் கதைசொல்லிகளுக்குப் பல்பரிமாணத்தை நோக்கிய நகர்வுகள் புரியப்போவதில்லை. உதாரணத்திற்கு இவரது ‘மாதிரி வினாத்தாள்’ படைப்பைக் காட்டலாம். இக்கதை சரிநிகரில் வெளியானபோது இளந்தலைமுறை வாசகரிடையே வித்தியாசமான ரசனை அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதன் பிரதி ஏற்கனவே என் கைக்கு எட்டியிருந்ததால் அதை என் இளம் நண்பர்களுக்குச் சுற்றுக்குவிட்ட பின் நடந்த கலந்துரையாடலில் ஒருவர் கூறினார், “நம்ம மூத்த எழுத்தாளர்கள் எவ்வளவுதான் முக்கி முக்கி எழுதினாலும் நமது சமகால அரசியலை இவ்வளவு நேர்த்தியாக அங்கதத்துக்குள்ளாக்கியிருக்க முடியாது. ஆனால் அதைத் தன் வினாத்தாள் ரெக்னிக் மூலம் இராகவன் செய்துகாட்டியுள்ளார்” என்று சரியாகவே கூறினார். மாதிரி வினாத்தாள் அரசியல் விஞ்ஞானம் என்று போடப்பட்டுச் சாக்கோவின் சிந்தனைகள் என்ற பிரிவில் கேள்விகளைத் தொகுக்கிறது. சாக்கோ யார்? அவர் சிந்தனைகள் என்ன என்ற பின்னணி ரசனையைக் கூட்டுவதாகவும் உள்ளது என்றும் மேலும் சிலர் கூறியது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே. இங்கே ஓர் எழுத்தாளனின் அறிவின் விழிப்பு சொல்முறையில் ஏற்படுத்திய அடிப்படை மாற்றத்தின் மூலம் படைப்பாற்றல் புதிய தளத்துக்கு இட்டுச் செல்லப்படுகிறது.
இரண்டாவது குற்றச்சாட்டு, இராகவன் பாலியல் விவகாரங்களை மிகப் பச்சையாக எழுதுகிறார் என்பது. வேடிக்கை என்னவென்றால் பாலியல் விவகாரங்களையெல்லாம் கோயில் கோபுரங்களிலேயே கொலுவிருத்திக் கலையாகப் போற்றி இறும்பூதெய்திய நம் பெரும் பண்பாடு இன்று அதைப் பற்றிப் பேசப் பயந்து, பேசுவதையே ‘துடக்காக்கி’ வேலிகட்டித் திரைவிழுத்தி அப்படி ஒன்றே இல்லாததுபோல் பாவனை பண்ணிக்கொண்டு அதே நேரத்தில் தன் முழுக் கவனத்தையுமே மறைவாக அதிலேயே குவித்துக் கொண்டிருப்பதுதான் முரண்நகை. பாலியல் விவகாரத்தையே ஓர் ‘இன்மைப் பொருளாக’ப் பாவனை பண்ணிக்கொள்ளும் நம் சமூகம் தன் கவனம் முழுவதையும் அதிலேயே குவித்துள்ளது என்பதை இராகவன் கட்டவிழ்க்கிறார். ஆதிப் பொதுவுடைமைக் காலத்தில் இருந்தபோது மனித சமூகம் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தோடு இருந்தது. தாய் மகனோடும் தந்தை மகள்மாரோடும் சகோதரன் சகோதரிகளோடும் வேறுபாடின்றி மாறிமாறிப் புணர்ந்தார்கள். ‘நாகரிக விழிப்பு’ ஏற்பட்ட பின்னரே வேறுபாடுகள் பார்க்கப்பட்டன. கட்டுகள் போடப்பட்டன. ஆயினும் நம் கீழைத்தேயப் பண்பாடு ஆண், பெண் குறிகளையே வணக்கத்துக்குரியவையாக வைத்துப் புணர்தலையே சக்தி-சிவம் இணைவாக, ஜீவாத்மா பேராத்மா கலப்பின் குறியீடாக அதன் பல கோணங்களைத் தாந்திரிகம் என்று பெயரிட்டு நடைமுறையாக்கி அதன் போக முத்திரைகளை அழகியலாகவும் ஆன்மீகமாகவும் பார்த்த இப்பெரும் பண்பாட்டு மரபில் வந்த நம் சமூகம் இன்று அதை அசிங்கமானதாகவும் மறைப்புக்குரிய ஒன்றாகவும் பார்க்கிறது. இது பௌத்தம், சமணம், கிறிஸ்தவ மிஷனறி வருகை மொகலாய ஆதிக்கம் என்பனவற்றின் தாக்கமோ? எது எவ்வாறிருந்தாலும் sமீஜ்ஐ ஒரு பொருட்டாகவே எடுப்பதாக இல்லை என்பதுபோல் பாவனை பண்ணிக்கொண்டு மறைவாக முழுக் கவனத்தையும் அதன்மேல் குவித்து அதைக் கட்டித்த மையப்பொருளாக்கியுள்ள நம் சமூகத்தின் மீது இராகவன் மேற்கொள்ளும் அதிரடித்தாக்குதல் அந்தக் கட்டித்துப்போன பால்விவகாரம் என்னும் பனிப் பாறையைச் சிதறவைக்கிறது. அதனால் அது சிதறித் திரவமாகிக் கரைகிறது. அனுமதிக்கப்பட்ட ஏனைய நாளாந்த உலக நடைமுறைகளுக்குள் பால்விவகாரமும் ஒன்றாகித் திரவமாகிக் கரைகிறது, நீர்மைப்படுத்தப்படுகிறது. இது எதிர்காலத்தில் பல சமூக மாற்றங்களுக்கு முன்னோடியாகிறது. இங்கே சுவாரசியமான விடயம் என்னவெனில் இராகவன் நம் கட்டித்துப்போன மையப் பொருளான பால்விவகாரத்தை மட்டும் திரவப்படுத்தவில்லை, அதே பாய்ச்சலில் இன்றைய புனைகதைக்கு விதிக்கப்பட்ட எல்லைகளால் திண்மமாகிவிட்ட புனைகதைகளையும் திரவமாக்கிவிடுகிறார். ‘மநுபுத்திரனின் படைப்புகள்’ என்ற ஆக்கத்தில் மநுபுத்திரனின் கருதுகோள்களில் ஒன்றாக இது வைக்கப்படுகிறது. இதற்கவசியமான இன்னொரு கருதுகோள் ‘புனைகதையின் பால்வழி’ என்ற தலைப்பில் முன்வைக்கப்படுகிறது. இதன்படி பாலுறுப்புகள் மற்றும் கலவி குறித்த விபரணங்கள் மரபொழுங்குகளைத் தகர்த்தெறியும் செறிவுத்தன்மை இருந்தால் மட்டுமே அது புனைகதைகளின் எல்லைகளைக் கடந்தேகும் என்கிறார். இது கேலியும் கிண்டலும் அங்கதமும் நுரைத்துச் செல்லும் ஓட்டமும் நடையுமான போக்கில் சொல்லப்பட்டபோதும் அடிப்படையில் அது நம் கலை இலக்கியப் புனைவுலகில் பாரிய மாற்றத்தைக் கோடிகாட்டி நிற்கிறது.


மேலும் இராகவனின் ‘மநுபுத்திரனின் படைப்புகள்’ ‘எதிர்நோக்கு’ ‘புத்தக அறிமுகம்’ ‘வண்ணத்துப்பூச்சிகள் கொண்டு செல்லும் இதிகாச நகரம்’; ‘நிகழ்வு’ ஆகிய புனைவுகள் ‘கலாவல்லி முதலான கதைகள்’ என்ற தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை இவரது படைப்புகளில் முக்கியமானவை. இங்கேதான் பால் விவகாரங்கள் பற்றிப் பச்சையாக இவர் எழுதுகிறார் என்பவர்களின் கருத்துக்கான படைப்புகள் உள்ளன. இக்கதைகளை ஒவ்வொரு தீவிர வாசகனும் ஒரு வரியைக்கூட விட்டுவிடாது படிக்க வேண்டும். படித்து முடித்ததும் அவை மனத்தில் ஏற்படுத்தும் உணர்வுகள் பற்றித் தீவிர விசாரணையை மேற்கொள்வது அவசியம். நான் இவற்றைப் படித்தேன். சடையர் பெருமானின் திருவிளையாடலிலிருந்து காக்கையின் வாழ்க்கை வரலாறு என்பதற்கு மத்தியில் மநுபுத்திரனின் வாழ்க்கைச் சரிதம் பற்றி வாசிக்கத் தொடங்கியபோது, “1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் முற்று முழுதாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்த சமயம் அணு அணுவாகத் தனிமையின் வீரியத்தை உணரத் தொடங்கிய காலத்தில்தான் எதிர்பாராதவிதமாகக் ‘கரமைதுன சங்கிரகம்’ கிடைத்தது என்று ஆசிரியர் கூறும்போது அதிரத் தொடங்கிய என் விலாவெலும்புகள் (இது ஏற்கனவே வர்ணகுலத்தின் ஆண்குறியில் “மமீசு” என்று எழுதப்பட்ட சுருக்கமும் அது ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று அவன் ஆண்குறி விறைப்புற்றபோது கண்ட விளக்க விரிவும் என் விலாவெலும்புகளின் அதிர்வுக்கான அத்திவாரத்தை ஏற்கனவே போட்டிருந்தது.) மநுபுத்திரனின் ஹலாசனப் பயிற்சியில் இன்னும் மேலெழுந்து, மாண்புமிகு கிளிமூக்கன் மீசையைச் சிரைக்கத் தொடங்கியதிலிருந்து நடிகனின் காதலி ஆட்சிப் பொறுப்பேற்றுத் தனது யோனிமயிரைச் சிரைப்பது வரையில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றங்கள் ஊடாக வந்து ‘புத்தக அறிமுகம்’ என்னும் பகுதியில் “நடிகைகளோடு உடலுறவு கொள்வது எப்படி? என்ற பூமிநாதன் என்பவரின் கேள்விக்கு இந்நூலின் ஆசிரியர் “பூமிநாதா! நடிகைகளோடு உடலுறவு கொள்வதற்கு நீ கருவிலே திருவுடையவனாய் இருக்க வேண்டும்” என்ற பதில் கூறலில் உச்சம் பெறவே, விலாவின் அதிர்வை அடக்க முடியாது வாய்விட்டுச் சிரித்தேவிடுகிறேன்.

இராகவனின் விட்டில் ஓர் அரசியல் பகுப்பாய்வு மற்றும் கலாவல்லி முதலான கதைகள் ஆகிய இரண்டு தொகுப்பிலுள்ள கதைகளை வாசிக்கும் ஒருவன் அவற்றை விட்டுவிடாது ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியது காரணத்தோடுதான். இவற்றில் பால்விவகாரம் என்ற ஒன்றைவைத்து இராகவன் இன்றைய நமது சமூகத்தையே கதித்தெழ அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்தெறிகிறார். இவற்றை வெளிக்கொணர்வதற்கு அவரிடமிருந்தெழும் மொழிக் கையாள்கை, பல்துறை வாசிப்பின் சிலிர்ப்பு தீவிர வாசகனைப் பிரமிக்கவைக்கும். இவர் ஒரு விடயம் சம்பந்தமாகப் பாவிக்கும் சொல்லை நீக்கிவிட்டு அதற்கு நிகராக வேறொன்றைப் புகுத்த முடியாத மேதைமை மற்றொன்று. இவற்றின் பின்னணியில் இவரின் கதைகளில் காணப்படும் பால்விவகாரங்களுக்கு ஈடாக நான் ஏற்கனவே சில படித்திருக்கிறேன். மேற்கில் பலகாலத்துக்கு முன்னர் வெளிவந்த ஹென்றி மில்லரின் எழுத்துக்கள். இதில் ஒன்று றோட்டில் போகும் பெண்களை ஜன்னல் வழியாகப் பார்த்திருக்கும் ஒருவன் அவர்களின் பெண் குறிகளின் பல்வகைத் தோற்றங்களைக் கற்பனை செய்தல், டி.எச் லாறன்ஸின் லேடி சற்றலீஸ் லவரில் காதலனும் காதலியும் தமது மறைவிடங்களுக்குப் பரஸ்பரம் மலர்சாற்றி மேன்மைப்படுத்தி மகிழ்தல், மேலும் இவை பற்றி எழுதிய ஜேம்ஸ் ஜொய்ஸ், அல்பேர்டோ மோறாவியா, நோர்மன் மெயிலரிலிருந்து ஙிமீணீtஸீவீநீளீs பிஹ்ஜீstமீக்ஷீs என்ற மேற்குலகக் கிளர்ச்சிக் குழுக்களின் கையில் படாதபாடுபட்டு நம் நாட்டு ஷியாம் செல்லத் துரையின் திuஸீஸீஹ் ஙிஷீஹ்வரை வந்து சகஜநிலை எய்திய இந்த நேரந்தான் பால்விவகாரத்தில் இராகவனும் கைவைத்தார். ஆனால் இதில் இவர் கைவைத் தாரோ இல்லையோ ஏற்கனவே இதில் பரிசோதனை செய்தவர்களாகச் சொல்லப்படும் பெரும் உலகச் சாதனையாளர்களையே பெருந்தூரம் தள்ளிவைத்தவாறு நம் உள்ளூர்ப் பிரதேசங்களில் இதில் பரி சோதனைகள் செய்தவர்களாகச் சொல்லப்பட்டவர்களையெல்லாம் தூசாகத் தட்டிவிட்டவாறு இவரது படைப்புகள் பல்பரிமாணம் கொண்டவையாகப் புதிய தளத்துக்கு உயர்வது மட்டுமல்லாமல் இதுகாலம் வரை புனைவு என இருந்துவந்த போக்குகளுக்கே பிரியாவிடை கூறுகிறது. இராகவன் தன் படைப்புகள் மூலம் மேற்கொண்ட இக்கலைச் செயற்பாடு இன்றைய தீவிர எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு தம்படைப்புத் தொழிலில் ஈடுபடும் அனைவரையும் - அவர்கள் ஏற்கனவே நான் கேட்டுக்கொண்டபடி இவரது படைப்புகளை ஆழ்ந்து வாசிக்கும்பட்சத்தில் - நெருக்கடிக்குள்ளாக்குகிறது.

இதை இராகவன் ஏற்படுத்திய முறைதான் தனியானது. எப்படி?
இங்கேதான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இராகவனின் எழுத்துக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்றாவது குற்றச்சாட்டான, இவரது ஆக்கங்கள் மரபான கதையாடலை முற்றிலும் நிராகரித்து, விளம் பரங்கள், சுவரொட்டிகள், சுலோகங்கள், கடிதங்கள், வினாத்தாள்கள் என்பனவற்றைப் பாவிக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். இது உண்மை. ஆனால் இவ்வாறு கலைத்துவமற்றவற்றை இராகவனின் கையாள்கை எவ்வாறு கலைத்துவப்படுத்தி உயரச்செய்ததோடு உள்ளடக்கத்தையும் மரபை விட்டெழச் செய்து புனைவுலகத்தையே முற்றுமுழுதாகப் புதிய தடங்களுக்கு அழைத்துச் செல்கிறது என்பதையே இப்படிக் குற்றஞ்சாட்டுவோர் பார்க்கத் தவறுகிறார்கள்.

எப்படி இதைச் செய்கிறார் என்று ஆராய முற்பட்டால் அவரின் ஆற்றல் வியப்பளிக்கும் விதத்தில் விரிவதை எந்த மனத்தடையுமற்றுச் சொல்லுவேன். ஜேம்ஸ் ஜொய்ஸ் சொன்னதுபோல் எத்தனை பேராசிரியர்கள் தம் தலைமயிரைப் பிய்த்துக்கொண்டாலும் கண்டுபிடிப்பது கஷ்டம். காரணம் அத்தகைய வாசிப்பு விரிவு இவர்களிடம் இல்லாமையே.
இராகவனின் கதைகளைத் தனித்து ஒரு வட்டத்துக்குள் முடக்கிவிட முடியாது. ஒன்றைத் தொட்டால் குளத்தில் எறிந்த கல்லொன்று ஏற்படுத்தும் நீர்வளையங்களாகக் கதைக்குள் கதையாய் விரிந்துகொண்டு போவது ஒரு புறமிருக்க, ஒவ்வொரு கதையும் ஒன்றோடொன்று தொடர்புடையதாய் முன்னால் உள்ள கதையைப் பின்னால் வரும் கதை மறுவாசிப்பு செய்வதாய் அல்லது வேறொரு கோணத்தில் விமர்சிப்பதாய்ச் சங்கிலித் தொடராய்ப் பின்னிப்பிணைந்து போவது தனி அழகு. கலாவல்லி முதலான கதைகள் தொகுப்பில் உள்ள ‘மநுபுத்திரனின் படைப்புகள் அல்லது வாழ்க்கைச் சரிதம்’ என்பது வரையறைகளை நீக்கிப் புனைகதைகளைத் திரவமாக்குதல் பற்றிக் கதைக்கிறதென்றால் அடுத்த தொகுப்பான விட்டில் - சமகால அரசியல் பகுப்பாய்வில் உள்ள முதல் கதையான “தேவேந்திரனுடன் உரையாடல்” என்பது புனைகதைகளை ஒழுங்கழிக்கும் என்று அதே கருப்பொருளை வேறுகோணத்திலிருந்து தொட்டுச் செல்வதோடு கார்ல் பொப்பரின் (ரிணீக்ஷீறீ றிஷீஜீஜீமீக்ஷீ) “பொய்ப்பிக்கத் தூண்டுவதே விமர்சனம்” என்று வேறொரு தளத்துக்கு உயர்த்தப்பட்டு “புனைகதைகளின் எதிர்காலம்”, “அவதிச்சக்கரம்” என்னும் இரு கருது கோள்களையும் தேவையான கால அவகாசமெடுத்துப் பொய்ப்பிக்கும் செயல்முறை தொடங்கப்பட உள்ளது என்று முடிப்பது தனி ரசனைக்குரியதாக இருப்பதோடு இவர் எடுத்துக்கொண்ட புனைவுகளைத் திரவப்படுத்தும் நோக்கு இதிலும் தொடர்வதைக் காணலாம்.

நீர்வளையங்களாக விரியும் இவரது கதைப் போக்கிற்குச் சிறு உதாரணமாக இவரின் “அவதி விளக்கக் கடித”த்தைக் காட்டலாம். ஓர் உயிரியால் (பல்லி) அவதிக்குள்ளாகும் இராசேந்திரன் அதிலிருந்து மீள்வதற்கு “உயிரி என்ற இதழில் வந்திருந்த அறிவித்தலைக் கண்டு அதற்கு எழுதிய கடிதமாக இக்கதையில் வரும் “நான்” எனும் இராசேந்திரன் தன் மனைவியோடு உடலுறவுகொள்ள முனைதலும் அதற்குத் தடையாக இருப்பவையும் - அதாவது உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு சமயமும் படுக்கையறை உத்தரத்திலிருந்து ஒரு பல்லி எச்சமிடுவதால் ஆண்குறியானது உச்ச நிலையில் சுரத்துக்கெட்டுப் போகிறது. மனைவியின் வேட்கை தணிக்கப்படாது அவள் படும் அவஸ்தை ஒரு தனிக் கதை. அதேவேளை உடலுறவின் கோணங்கள், பல்லியின் எச்சமிடலுக்குப் பயந்து போசனவறை, வழிபாட்டறை, குளியலறை என்று புணர்ச்சிக்கான இடங்களை மாற்றிக்கொண்டிருத்தல், மாதவிடாய்க் காலங்கள் உட்படப் புணர்ச்சி வன்புணர்வாய் மாறுதல் இன்னொரு கதை. இதற்கிடையே மனைவியோடு உடலுறவுகொள்ளும்போது தான் பல்லி எச்சமிடுகிறது என்றால் உடலுறவு கொள்ளும் பெண்களை மாற்றிக்கொண்டால் இது தொடருமா என்று கேள்வியோடு இதற்காகப் பெண்கள் சிலரைத் தெரிவுசெய்தமை பின்வருமாறு அமைவது தனிக் கதை.

1. மனைவி அமுதாவின் தங்கை வாதினி
2. அயல் வீட்டில் வசிக்கும் இளம் விதவை கிரிசாந்தி
3. அந்திப் பொழுதில் நகர வீதிகளில் அலையும் விபச்சாரிகள்
4. அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப் பட்ட தம்பியின் மனைவி.
இத்தனை தொல்லைகளுக்குள்ளாக்கிய பல்லி பற்றியும் பல்லி இனங்கள் பற்றியும் ஓர் ஆய்வு ஞிவீsநீஷீஸ்மீக்ஷீஹ் சிலீணீஸீஸீமீறீஇல் வருவதுபோல் விபரிக்கப்படுவது மற்றொரு கதை. பல்லி என்னும் உயிரி எதன் குறியீடு என்பது வாசகர் யூகத்துக்கு விடப்படுகிறது. அடுத்த முக்கியமான விஷயம் இவர் அணுக முற்படும் பெண்கள் இருவரின் கணவன்மார் இனந்தெரியாத நபர்களால் சுடப்பட்டு இறந்தவர்கள். அத்தோடு பல்லியின் தொல்லைகளால் அவதிப்படும் இவர் அதிலிருந்து விடுபட ஆலோசனை கேட்க இவர் அணுகிய உள வளத்துணையாளரும் இவர் காணச் செல்லவிருந்த அன்றே இனந்தெரியாதோரால் சுடப்பட்டு இறந்துபோகிறார். ஈற்றில் பல்லியால் எதிர்நோக்கும் அவதிநிலையிலிருந்து விடுபடுவதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கிய வழிகளனைத்தும் அடைபட்டுப்போன நிலையில்தான் “உயிரி” 34ஆம் இதழ் கிடைத்தது. அதில் “யாதாவது உயிரியால் தொடர்ந்து அவதிகுள்ளாகிவருபவராய் இருந்தால் அவதிவிளக்கக் கடிதம் ஒன்றை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அந்த நிலைப்பாட்டிலிருந்து முழுமையாக விடுபடுவதற்கான தீர்வொன்றை முன்மொழியக் காத்திருக்கிறோம்” என்ற அறிவித்தலை வாசித்த பின்னரே “உயிரி” இதழாசிரியருக்கு இந்த அவதி விளக்கக் கடிதம் அனுப்பப்படுகிறது. ஆனால் என்னே துர்ப்பாக்கியம்! “உயிரி”யும் 34ஆம் இதழோடு நின்றுபோய்விடுகிறது. என்றாலும் கதை முடியவில்லை, கதையின் பிற்குறிப்பு பின்வருமாறு அமைகிறது: “தவிர்க்க முடியாத காரணங்களால் உயிரி 34ஆம் இதழோடு நின்றுபோயிற்று. அன்பான வாசகர்களே! இராசேந்திரனின் அவதிவிளக்கக் கடிதத்தை வாசித்து முடித்ததும் அவதி நிலையிலிருந்து முழுமையாக அவனை விடுவிப்பதற்கான யாதாவது தீர்வினை முன்மொழிய வேண்டுமென உங்களுக்குத் தோன்றினால் இராசேந்திரன் முகவரிக்கு ஒரு கடிதத்தை எழுதி அனுப்புங்கள்” என்று முடிகிறது. ஆனால் இது இத்துடன் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. அதன் எச்சம் ஏதாவது வேறொன்றோடு எங்கோ ஒட்டிக்கொண்டு இன்னொன்றாகத் தொடரலாம்.

ரஷ்யக் கவிஞன் மயக்கோவ்ஸ்கி, சுவரொட்டி விளம்பரங்களையும் கவிதையாக்கினார், லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் லூயி ஃபோர்ஹெஸ் புத்தக விமர்சனங்களையும் சிறுகதையாக்கினார். காஃப்காவின் கரப்பான் பூச்சியாக மாறும் மனிதன் மற்றும் அவரது விசாரணையில் வரும் கதாபாத்திரம் தன் ஆண்குறி வெட்டப்பட்டதோடு கதை முடிவை எட்டுதல், இன்னும் இவை கனவிலா அல்லது நனவிலா நடைபெறுகின்றன என்பதை பிரித்தறிய முடியா அபூர்வப் பிற்புலக் கவிப்பு, மு.தவின் ஆழமான கருத்தியல் பின்னணியில் நிகழ்த்தப்படும் தொழுகையின் பின்னணியில் எஸ். பொவின் தீ, உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை, சாருநிவேதிதாவின் ஸீரோ டிகிரி எஜ்ஸிஸ்டன்சிலியமும் பேன்சி பனியன் ஆகியவற்றைப் படித்தால் பின்னவை வெற்று மீஜ்லீவீதீவீtவீஷீஸீவீsனீ ஆகுதல், ஜேம்ஸ் ஜொய்சின் டப்லினேர்சைப் படித்த ஆனந்தத்தில் யுலிசெஸ்ஸைப் படிக்க முற்பட்டபோது நேர்ந்த வியப்பு, பின்படிக்க முடியாத பின்வாங்கல் சல்மான் றுஷ்டியின் மிட்னைற் சில்றனில் காணப்படாத, சாத்தானின் வாசகத்தில் காணப்படும், படிக்க முடியாமல் செய்யும் யீஷீக்ஷீவீதீவீபீபீமீஸீ stஹ்றீமீ, கோணங்கியின் ஆரம்பகாலக் கதைகளைப் படித்த சந்தோஷத்தில் உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தையைப் படித்தபோது ரேகை சாஸ்திரம் தெரியாதவன் தன் வெறுங்கையின் கோடுகளைப் பார்த்துச் சிரிப்பது போன்ற நிலை, பின்னர் ஒருமுறை கோணங்கியை லண்டனில் சந்தித்தபோது “உங்கள் ‘பாழி எந்தவித மெசேஜ்ஜையும் தருவதாய் இல்லை’ என நான் கூற, இத்தனையாவது பக்கத்தைப் படித்த பின் இத்தனையாவது பக்கத்தைப் படித்துப்பார்த்தால் விளங்கும் என்று பக்கங்களின் எண்ணிக்கையைத் தந்தபோது “இப்படித்தான் அர்த்தம் புரிய வேண்டும் என்றால் அதில் அர்த்தம் இல்லை” என்றபோது அவர் அதை எதிர்த்து ஏதாவது கருத்தை முன்வைப்பார் என்று நான் நினைக்க அவர் அத்தகைய அறிவார்ந்த தன்மை இல்லாது சிரித்துக்கொண்டிருந்தது எனக்குத் தந்த சோர்வு, ரஞ்சகுமார் அவரது கலைத்துவ உணர்வு எழுத்துநடை பற்றிக் கதைக்கும்போது கல்கியின் நாவல்களை நினைவூட்டுவதால் ஏற்படும் அதே சோர்வு. இவர்கள் தம் உள்ளுனர்வின் உந்துதல்களால் கலையுணர்வு பெறுபவர்கள் போலும் - அதாவது வெங்கட்ராமனின் காதுகள் நாவலில் வரும் பாத்திரத்தின் காதில் வந்துவிழும் விசேட ஒலிகளை இவர்கள் உள்வாங்குபவர்கள் போலும்.

ஆனால் இராகவனின் கதைகளின் பரப்பெல்லை மேலே குறிப்பிட்டவற்றைவிட இன்னும் வித்தியாசமானது. இவர் மூளையால் எழுதுகிறார் என்பதன் அனுகூலத்தை இவ்வாறு நான் மேலே குறிப்பிட்ட புனைவுகளோடு ஒப்பிடும்போதுதான் காணலாம். இவரது பரப்பெல்லை விரிந்து, ஏனைய கதைசொல்லிகளையெல்லாம் ஒதுக்கியவாறு புதிய தளத்துக்கு உயர்வதன் காரணம் இதுவே. “பெண்ணாக வந்ததொரு மாயப் பிசாசாம்” என்று தொடங்கி “புண்ணாங் குழியிடைத்தள்ளி” என்று பட்டினத்தடிகளின் வரிகளைப் புனிதமாக எடுத்தோதும் நம்மவர்கள் இதேவகையான சொல்லாடல்களை எழுத்தாளன் ஒருவன் பாவித்தால் முகத்தைச் சுழிப்பதுதான் வேடிக்கை. சொற்கள் என்பவை நிர்க்குணமானவை; அவற்றில் குணத்தை ஏற்றுபவன் மனிதன்தான். இங்கே இராகவன் நம் மர்ம உறுப்புகளை அவை தொடர்பான சித்திரவதைகள், மனப் பிறழ்வுகள் பற்றி விவரிக்கும்போது அவற்றின் பாவிப்பின் பல்பரிமாணத்தால் பொதுமையாக்கப்பட்டு, நீர்மைப்படுத்தப்படும்போது இது பெரும் படிமமாக, பெருங்கருத்தியலாக விரிகிறது. அடக்கப்பட்ட உணர்வுகளுக்கு விடுதலை, இது காலம்வரை பிரிவுபடுத்தப்பட்டு இயங்கிய அனைத்துத் துறைகளும் மரபு முறைகளும் ஒருமையுறும் பெருங்கருத்தியல், பெருங்கவிதையாக விரிகிறது.

இங்கே குப்பிழான் ஐ. சண்முகன் கூறும் ‘வடிவங்களைக் கடந்த வடிவம் இனி வரப்போகும் இலக்கிய உருவம்’ என்று இராகவனின் படைப்புகள் தொடர்பாகக் கூறுவது மிகச் சரியானதே. ஆழமாக இவர் கதைகளைப் படிக்கும் எவரும் இதை உணர்வர்.
நன்றி - காலச்சுவடு ஏப்ரல் 2012

செவ்வாய், மார்ச் 6

அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீதான வாசகப் பார்வை

-முகைதீன்சாலி

நந்தினி சேவியரின் ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ சிறுகதைத்தொகுப்பை ஆற அமர இருந்து வாசித்தேன். எட்டுச் சிறுகதைகள் அடங்கிய அத்தொகுப்பில் ஆறு சிறுகதைகள் என்னை விட மூத்தவை. நான் பிறப்பதற்கு முற்பட்டவை. ஏனைய இரு கதைகளும் என் மழலைப் பருவக் காலத்திற்குரியவை. இச்சிறுகதைத் தொகுப்பை வாசித்து அதற்கு விமர்சனம் எழுதுமளவிற்கு எனக்கு ஆற்றலோ அனுபவமோ கிடையாது.

நந்தினி சேவியர் நன்கு வேர்விட்டு விழுதுவிட்டு கிளைபரப்பி பரந்து நிற்கும் ஆல விருட்சம். நானோ அதன் கீழ் முளைவிட்டு வளரத்துடிக்கும் சிறுசெடி.
விருட்சத்தை விமர்சிக்க செடியினால் முடியாது பார்த்து இரசித்து இன்புற முடியும்.

நந்தினி சேவியரின் அயல் கிராமத்திற்குள் நுழையுமுன்பாக முன்னுரைக்குள் மூழ்கிப்போனேன்.

முதுபெரும் எழுத்தாளர் முருகையன் எழுதிய முன்னுரைக்கு முத்தாய்ப்பாய் நந்தினி சேவியரின் எழுத்தாற்றல் பற்றி குறிப்பிடும் பின்வரும் பந்தி அமைந்து விடுகிறது.

‘அவரது கதைகளில், கருத்து முழக்கங்களையோ உணர்ச்சிமயமான சன்னதங்களையோ நாம் எதிர்பார்க்க முடியாது. அதேவேளை வெறும் கிளுகிளுப்புக்கும் புளிச்சல் ஏவறைகளுக்கும் கொட்டாவிகளுக்கும் சேவியரின் கதை உலகிலே சற்றேனும் இடமில்லை’

ஆனால் இன்றைய நவீன எழுத்தாளர்கள் மேற்படி பண்புகளினின்றும் வெளியேற முடியாது. அவற்றுள் கட்டுண்டு கிடப்பது வேறு விடயம்.
நந்தினி சேவியரை நான் அறிந்தது சற்று நாளிகைக்கு முன்பதாகத்தான். நான் அவரை முதலில் சந்திக்கையில் அவரை ஒரு எழுத்தாளராகவோ விமர்சகராகவோ கண்டுகொள்ளவில்லை. அவரையொரு மனிதம் பொதிந்த மனிதராகவே கண்டுகொண்டேன். பின்னர் அவரோடு உரையாடியபோது அவரது நாவிலிருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் இலக்கியத் தரம் பொதிந்த இனிய தேனாக என் காதுகளைக் குளிர்வித்தன.

பழம் தின்று கொட்டை போட்ட இலக்கியவாதியான அவர் தன்னை எப்போதும் ஒரு வாசகன் என்று அறிமுகப்படுத்தும் பண்பு அவரைப்பற்றியதான எனது பார்வையைக் கூர்மையாக்கின.

இளம் படைப்பாளிகளை புடம் போடுகின்ற அவரது ஆவல், அவர்களை மதித்து அவர்களுடன் சமமாகப் பழகும் பண்பு, தமிழ்த் தாய்க்கு அணி சேர்க்க அவர் கொண்டுள்ள ஆவல், இலக்கிய உலகில் அவர் இன்றும் என் வயதோடு ஒத்திருக்கும் அதிசயம் எண்ணிப்பார்க்கையில் என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

திருகோணமலையில் இருந்து கொண்டே இத்தனை காலமாய் நந்தினி சேவியர் என்னும் இலக்கியப் புத்தகத்தை படிக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஏக்கம் என்னை குடைகிறது.

நந்தினி சேவியரின் ‘வேட்டை’ என்ற சிறுகதையைச் சற்றுச் சத்தமாகவே வீட்டிலிருந்து உரக்க வாசித்தேன்.
‘பாற்றா…பாற்றா… கிடக்காடா….கிடக்காடா… வெள்ளயா உதுக்குள்ளான் கிடக்கு… விட்டிடாதை … கிடக்கிடா…கிடக்கிடா… விட்டிடாதை …விட்டிடாதை …எழுப்பு… எழுப்பு…’

மேற்படி வசனத்தை நான் சத்தமாக வாசித்தபோது என் இரு மழலைச் செல்வங்களும் மேற்படி வசனத்தைத் திரும்பத் திரும்ப என்னை வாசிக்க வற்புறுத்தியபோது நான் வியந்து போனேன். நந்தினி சேவியரின் எழுத்தின் பால் மழலைகளுக்கும் ஈடுபாடு உண்டே என்று. இது ஒரு எழுத்தாளனின் மிகப்பெரிய வெற்றியல்லவா!
‘வேட்டை’ கதையினை திரும்;பத் திரும்ப வாசித்த போது நான்; ஒரு சிறுகதை வாசிக்கின்றேன் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு ஒரு நேரடி வேட்டைக் காட்சியினை காண்பது போன்ற உணர்வுக்குள் தள்ளப்பட்டுப் போனேன். என் கண் முன்னால் தம்பரும் அவரின் வெள்ளையனும் உயிரோடு இருப்பதான ஒரு பிரம்மை ஏற்பட்டுப்போகிறது. இது அக்கதையின் உயிரோட்டத்தை உணர்த்தி நிற்கிறது. இதுதான் ஒரு சிறுகதையின் உண்மையான பண்பு என என்னை உணர வைத்த கதை அது.

மேற்படி கதையினூடாக இளம் தலைமுறையினர் அறியாத பல விடயங்களை நந்தினி சேவியர் சொல்லித் தருகிறார்;. வேட்டையாடும் முறை. உடும்பை எடுத்து அதை உடும்புக்கட்டுக் கட்டுகின்ற முறை, வேட்டைக்குப் பயன்படுத்தும் பொருட்கள் இவைகளெல்லாம் எமக்கு ஆவணங்களாக அமைந்து விடுகின்றன.

மொத்தத்தில் ‘வேட்டை’ நம் வாசிப்புப் பசிக்கு நல்லதொரு வேட்டை.
மேற்படி ‘வேட்டை’ கதையானது ஒரு நிகழ்ச்சிக்கதையாக அமைந்திருக்கிறது. அமெரிக்க எழுத்தாளர்களான எட்கர் ஆலன்போ, ஹெமிங்வே இங்கிலாந்து எழுத்தாளரான ஜாக்கப்ஸ் போன்றவர்கள் கதையம்சம் இல்லாது நிகழ்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கதைகள் படைத்துப் புகழ் பெற்றது போன்று நந்தினி சேவியரும் ‘வேட்டை’ கதையினூடாக புகழ் பெறுகிறார்.

‘வேட்டை’ கதையினூடாக இரண்டு நாள் வேட்டைக்காட்சி விபரிக்கப்படுகிறது. இது புதுமைப்பித்தனின் ‘நினைவுப்பாதை’ சிறுகதை போல, இழவு வீட்டில் இரண்டாவது நாள் விடி வெள்ளி கிளம்பும் நேரத்தில் தொடங்கி சுமார் இரண்டே நாழிகைக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை புதுமைப்பித்தன் சொல்லி முடிப்பது போல், நந்தினி சேவியரும் வேட்டையை நடாத்தி முடிக்கிறார். இக்கதை திடீரென்று தொடங்கி திடீரென்று முடிவது போல் தோன்றினாலும் ஆழ்ந்து நோக்கினால் படிப்பவரின் உள்ளத்தில் நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் உள்ள மறைமுகமான கதை படிப்பவரின் உள்ளத்தில் வளர்ந்து கொண்டே போகும்.

தலையும் காலும் இல்லாத முண்டம் போன்ற ஓர் ஓவியத்தை வரைந்து அதற்கு முன்னும் பின்னும் உள்ள அழகுகளைக் கற்பனையால் கண்டு மகிழச்செய்வதே இவ்வகைத்தனவான கதைகளின் நோக்காகும்.
வேட்டையை முடித்துவிட்டு ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ சிறுகதைக்குள் நுழைகிறேன். ஆரம்பம் முதல் முடிவு வரை கதை பண்மையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு நந்தினி சேவியர் மாத்திரம் கதை சொல்லவில்லை. தன்னுடைய நண்பர்களையும் சேர்த்து பக்கத்தில் அமர்த்திக்கொண்டு கதை சொல்வது போல மேற்படி சிறுகதை அமைந்திருக்கிறது.
இச்சிறுகதை வெறும் கற்பனையில் முளைத்தாக எனக்குத் தெரியவில்லை. இது நேரடியாக களத்தில் நின்று அனுபவித்த ஒருவர் சாட்சிக்காக நண்பர்களையும் அழைத்துக்கொண்டு சொன்ன கதையாகவே நான் பார்க்கிறேன்.
கதை இடம்பெற்ற தளமும் கதை மாந்தர்களும் என் காலத்திற்கு முற்பட்டவை என்பதினால் இக்கதை மூலம் கதாசிரியர் சொல்லவந்த விடயம் முழுமையாக புரியாது போனாலும் இக்கதை எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர்களிடத்தில் இக்கதை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது எனது கணிப்பு.

இக்கதை எந்த நோக்கத்திற்காக அக்காலத்தில் எழுதப்பட்டதோ அந்நோக்கம் இக்கதையினூடாக நிச்சயம் நிறைவேறியிருக்கும்.

நான் இதுவரை வாசித்த சிறு கதைகளுள் பண்மையாக சொல்லப்பட்டு லாவகமாக நகர்த்திச் செல்வப்பட்ட முதற்சிறுகதை இதுவெனக் கூறுவேன்.
வெளியூர் சென்று திரும்பிய பாட்டன் பிரயாணச் செய்திகளை பாட்டியிடம் சொல்லி ஆறுவது போல. நந்தினி சேவியர் மேற்படி சிறுகதைையை நகர்த்திச் சென்றிருக்கும் லாவகம் அலாதியானது.

அயற்கிராமத்திலிருந்து ‘ஒரு பகற்பொழுது’ க்குள் நுழைகிறேன். பல சிறுகதைப் பண்புளை தன்னகத்தே கொண்டு தலைநிமிர்ந்து நிற்கிறது இச்சிறுகதை.

பதுமைப்பித்தனின் ‘ஒருநாள் கழிந்தது’ சிறுகதையோடு மேற்படி கதையினை ஒப்பு நோக்குகிறேன். இரண்டு கதைகளிலும் கருவாக வறுமை அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால் இரண்டு கதைகளின் களங்களும் வெவ்வேறு தளங்களில் நடந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. ‘ஒருநாள் கழிந்தது’ நகர வாழ்க்கையின் வறுமை பற்றியும் ‘ஒருபகற்பொழுது’ கிராம வாழ்க்கையின் வறுமைபற்றியும் பேசுகின்றன.

‘ஒருநாள் கழிந்தது’ ஏழை எழுத்தாளரான முருகதாசர் என்ற பாத்திரத்தின் ஒருநாள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.
‘ஒரு பகற்பொழுது’ செல்லம் என்கின்ற கிராமிய குடும்பத் தலைவி பாத்திரத்தை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.
‘ஒருநாள் கழிந்தது’ கதையில் படுக்க வைத்திருக்கும் கோரைப் பாயினை வர்ணிப்பதன் மூலம் அங்குள்ள ஏழ்மை நிலையினை நமக்கு உணர்த்தி விடுகிறார் புதுமைப்பித்தன்.

‘கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜால வித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப்படாததால் அது நடு மத்தியில் இரண்டாக கிழிந்து ஒரு கோடியில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால் முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருத்த வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க ஒரு துண்டையோ அல்லது மனைவியின் புடவையையோ அல்லது குழந்தையின் பாவாடையையோ எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும்’

நந்தினி சேவியர் தனது கதையில் செல்லத்தின் ஏழ்மை நிலையினை, ஆட்டுக்கு அவள் திட்டும் ஒற்றை வாசகத்தினூடாக புரியவைக்கிறார்.
‘உனக்கு மட்டுமே… பசி… எல்லாருக்குந்தான்.. உன்னையும் வித்துத் துலைச்சிட்டாள்?

புதுமைப்பித்தனின் முருகதாசர் என்ற பாத்திரம், ஏழ்மை நிலை காரணமாக சாகா வரம் பெற்ற கதைகளை எழுதுவதை விட்டுவிட்டு தனது எழுத்தாற்றலை விளம்பர நிறுவனம் கொடுக்கும் முப்பது ரூபாய்க்கு விற்று விடுகிறார்.
நந்தினி சேவியரின் செல்லம் பாத்திரம் கடைக்காரன் மார்க்கண்டுவின் ஏச்சில் ரோசமுற்று தன் காதில் கிடந்த தோட்டை அறுபத்தைந்து ரூபா அறாவிலைக்கு விற்று கடன் அடைக்கிறாள்.

புதுமைப்பித்தனின் ‘ஒருநாள் கழிந்தது’ முருகதாசரின் வறுமை நிலையோடு மாத்திரம் நகர்ந்து விட்டாலும் நந்தினி சேவியரின் ‘ஒரு பகற்பொழுது’ அதற்கும் அப்பால் சென்று செல்லையா என்ற பாத்திரத்தின் ஊடாக பொதுடைமைப் பார்வையை வெளிக்கொணர்கிறது.

‘மாறி மாறி ஆண்டாலும் ஏழையல் வாழ்வு கண்ணீரிலே’ என்ற கோசத்தினூடாக ஆட்சியாளர்களை கேள்வி கேட்கிறார்.
கு. அழகிரிசாமியின் திரிபுரம், ராஜா வந்திருக்கிறார், அழகம்மாள், பாலம்மாள் போன்ற சிறுகதைகளினூடாக பொதுவுடைமைக் கருத்துக்கள் வெளிப்பட்டு நின்றது போல நந்தினி சேவியரின் ‘ஒரு பகற்பொழுது’ கதையினூடாகவும் முதலாளித்துவத்திற்கு எதிரான போக்கு காணப்படுவதை உணர்ந்து கொள்ளலாம்.

புதுமைப்பித்தனின் முருகதாசர் பாத்திரத்தின் ஒருநாள் கழிந்து விட்டாலும் திங்கட்கிழமை சம்பளம் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

நந்தினி சேவியரின் செல்லம்மா பாத்திரம் வள்ளியாச்சி கொடுத்த மண்ணப்பிய மரவள்ளிக் கிழங்கோடும் ஒடியலோடும் ஒரு பகற்பொழுதை கழித்து விட்டாலும் நாளைப் பொழுதிற்கு?
2002ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வரங்கக் கோவையில் கலாநிதி செ. யோகராசா சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘ஈழத்துச் சிறுகதைகளில் ஆரம்ப காலம் தொடக்கம் ஏறத்தாழ 1980 வரை வறுமைநிலைச் சித்தாpப்பு முதன்மை இடம் பெற்று வந்துள்ளது. சி.வைத்தியலிங்கத்தின் பாற்கஞ்சி தொடக்கம் நந்தினி சேவியரின் ‘ஒரு பகற் பொழுது’ வரை இதற்குச் சான்றுகளாகின்றன’
மேற்படி கூற்றினூடாக ஈழத்து சிறுகதைப் பரப்பில் நந்தினி சேவியரின் இடத்தை புரிய முடிவதோடு ‘ஒரு பகற்பொழுது’ சிறுகதையின் வெற்றியையும் உணரமுடிகிறது.

ஒரு பகற்பொழுதின் வெயிலின் கொடுமையினால் மனமுருகி ஆறுதல் கொள்வதற்காக ‘நீண்ட இரவுக்குப் பின்’ நுழைகிறேன்.
‘நீண்ட இரவுக்குப் பின்’ சிறுகதை திரும்பத்திரும்ப வாசிக்கத் தூண்டும் கதை. ‘அரசு’ என்ற பாத்திரத்தின் ஊடாக 1974ம் ஆண்டு காலகட்டத்தின் இளைஞர்களின் நிலையினை படம்பிடித்துக் காட்டுகிறார் நந்தினி சேவியர். ஆனால் அந்தநிலை கிட்டத்தட்ட முப்பபத்தாறு ஆண்டுகள் கழிந்து விட்ட இக்கால கட்டத்திலும் தொடர்வதானது சங்கடத்திற்குரியது.

சாகா வரம் பெற்ற கதைகள் என்று கூறுவார்கள் அதற்கு உதாரணமாக நந்தினி சேவியரின் ‘நீண்ட இரவுக்குப்பின்’ சிறுகதை அமைகிறது.
தமிழ், சிங்களம் என்ற இன வேறுபாடுகளுக்கு அப்பால் வறுமை என்பதும், வேலையில்லாத் திண்டாட்டம் என்பதும் மனிதர்கள் என்ற வகையில் சமமானதே என்பதை மேற்படி சிறுகதையில் ‘ரத்னபால’ என்ற பாத்திரத்தை புகுத்துவதின் ஊடாக புரியவைக்கிறார் நந்தினி சேவியர்.

இன்றைய சமுதாய வாழ்வில் காணப்படும் பொருளாதாரப் போராட்டத்தையும், வறுமையின் கொடுமையையும், அதனால் மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களையும் பல கதைகள் பேசுகின்றன. அந்த வகையில் அகிலனின் ‘பசி’ ஆர்.சூடாமணியின் ‘மறுபுறம்’ ஜெயகாந்தனின் ‘ஒருபிடிசோறு’ புதுமைப்பித்தனின் ‘தனி ஒருவனுக்கு’ எம்.ஏ அப்பாசின் ‘கஞ்சி’ இந்தவரிசையில் நந்தினி சேவியரின் ‘நீண்ட இரவுக்குப்பின்’ சிறுகதையும் இணைந்துகொள்கிறது.

மேற்படி சிறுகதையில் ‘வரதன்’ என்ற பாத்திரத்தின் ஊடாக தன்னுடைய மனதில் புதைந்து கிடக்கும் போராட்;ட வேட்கையினை வெளிப்படுத்துகிறார் நந்தினி சேவியர். ‘இந்த நிலமைகள் மாறவேண்டுமென்றால் தேர்தலினாலோ அரசுகள் மாறுவதினாலோ முடியாது என்றும், இந்த நிலமைகளைக் கட்டிக்காக்கின்ற அரசு அமைப்பபை உடைத்து அதிலை எங்களைப்போல உழைக்கின்ற மக்களின்ரை அரசைப் போராடி அமர்த்தாத வரையில் இது தீராது’ என்கிறார். இதிலே ‘உடைத்து’ என்ற சொற்பதத்தின் ஊடாக போராட்டத்தின் வலுவான தன்மையை வெளிப்படுத்துகிறார். இதற்கான போராட்ட ஆயுதமாக கட்சி அரசியலை அறிமுகப்படுத்துகிறார். கட்சி அரசியலுக்கான வழி முறையாக இனமத பேதமின்றி தொழிலாள வர்க்கத்தினரை ஒன்றினைக்கும் செயற்பாட்டினையும் அறிமுகப்படுத்துகிறார்.
ஆயுதங்களால் செய்யமுடியாத வேலைகளை பேனையினால் செய்ய முடியும் என்பதை உணர வைக்கிறார் நந்தினி சேவியர். வாழ்வியலின் யதார்த்த நிலையினை சிறுகதையாக்கும் நந்தினி சேவியரின் மேற்படி சிறுகதை சரியாக புரியப்பட்டிருந்தால் தமிழரின் போராட்ட வரலாறு வேறு விதமாக அமைந்திருக்கும். இன்றைய சூழ்நிலைக்கும் தக்கவாறு மேற்படி சிறுகதை அமைந்திருப்பது அதன் வெற்றிக்கான அறிகுறியாகும்.

நந்தினி சேவியர் அறிமுகப்படுத்தும் இந்தப் போராட்டம் தனி இனத்திற்குரியதில்லை என்பதனை, வரதனைப் போன்றே அவனது அலுவலக நண்பன் ‘விமலரத்தின’ வும் இவனோடு பல விஷயங்களில் உடன்பட்டிருந்தான். என்ற வசனத்தின் ஊடாக புரியவைக்கிறார்.
கருத்துக்களை தன்னிலை வாதங்களாக வெறுங் கோசங்களாக வாசகர் மனதில் திணிக்காமல் கதையின் போக்கோடு விபரிக்கும் பாங்கானது நந்தினி சேவியரின் தனிப் புலமையாகும்.

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் அப்பாவித் தகப்பனுக்கு தனக்கு இனி வேலை கிடைக்காது என்பதை புரியவைத்து, இருக்கின்ற தொழிலை சந்தோசமாக ஏற்று, அதில் வருகின்ற இடர்களை சந்தோசமாக ஏற்கத் துணிவு கொள்ளும் ரத்னபால பாத்திரத்தினூடாக மற்றுமொரு பரிமாணத்தை உணர வைக்கிறார் நந்தினி சேவியர்.

மொத்தத்தில் ‘நீண்ட இரவுக்குப்பின்’ என்ற ஒரு சிறுகதையின் ஊடாக பல விடயங்களை உணரவைத்தது மட்டுமில்லாது இளந் தலைமுறையினருக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் மேற்படி சிறுகதையை தீட்டியிருக்கிறார் நந்தினி சேவியர்.
‘நீண்ட இரவுக்குப்பின்’ ‘பயண முடிவில்’ என் பார்வையைச் செலுத்துகிறேன்.
ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், அவர்களின் வாழ்விடங்கள், சேரிப்புறங்கள், போன்றவற்றை தங்கள் கதைகளினூடாக மிக நுணுக்கமாக அழகுணர்ச்சியுடன் விபரிக்கின்றபோது அல்லது வர்ணிக்கின்றபோது, அவ்வர்ணனைகள் வாசகர் மனதில் எதிர் விளைவினை ஏற்படுத்தும் என்பது நந்தினி சேவியரின் வாதமாகும்.

அதீத வர்ணிப்பானது அவ் அவல நிலைகளை வாசகர் மனதில் பதியவைப்பதற்குப் பதிலாக வாசகர் மனதில் அந்நிலை சம்மந்தமான அழகியலை மேலுணர்த்தும் என்பது நந்தினி சேவியரின் மாற்றுக் கருத்தாக உள்ளது.

இந்த அடிப்படைியில் ‘பயண முடிவில்’ சிறுகதையில், தமயனின் வண்ணான் தொழிலை மிக எளிமையாக விளங்க வைப்பதைக் காணலாம்.
‘விடியலில் எழுந்து துறைக்குப் போய், சீலையோடு மாரடித்து, மருந்து நனைத்து, நீலம் தோய்த்துக் கஞ்சி முறுக்கிக் காயவைத்து, பிறகு இஸ்திரிக்கைப் பெட்டியோடு மல்லாடும் தனது தமையனைப்பற்றி அவன் நினைவுக்கு வந்தது.

ஒரு எழுத்தாளனின் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டுமென்பதை இதனூடாக உணரமுடிகிறது.

‘பயண முடிவில்’ சிறுகதையை வாசித்து முடிக்கையில் மணிரத்திணத்தின் ஒரு சிறந்த சினிமாவை பார்த்து முடித்த பிரமிப்பு ஏற்பட்டுப்போகிறது. மனதில் ஒரு நெருடல் நிலைபெறுகிறது. தங்கனை, வாயாறப் புகழ வேண்டுமென்று, இது சிறுகதை என்று கூட உணராமல் மனம் வெம்புகிறது. இது இக்கதையின் வெற்றிதானே?

‘பயண முடிவில்’ சிறுகதையின் வெற்றி அக்கதையின் முடிவில்தான் தங்கியிருக்கிறது.

அவர் கொடுத்த சாமான்களை ‘தங்கன்’ எடுத்துச் செல்லவில்லை என்பதனை கதாசிரியர் சொல்லுகின்ற விதம் என்னை பிரமிக்க வைக்கிறது. ஒற்றை வசனத்தினூடாக அதை உணர்த்துகிறார்.
‘சாமானையும் றஹீமையும் மூதுரையும் பின் தள்ளி வேகமாக நகர்ந்தது லோஞ்சி’

மேற்படி முடிவினூடாக நந்தினி சேவியர் மனிதனுக்கு இருக்க வேண்டிய சுய கெளரவத்தையும், தன்மானத்தையும் புரிய வைப்பதோடு, உயர் அதிகாரிகள் தங்கள் சுய நோக்கத்திற்காக அப்பாவி ஏழைகளை சுரண்ட நினைக்கும் மனோபாவத்தையும் சுட்டிக் காட்டுகின்றார்.

தன் கெளரவத்தை இழந்து அதிகாரியின் வீட்டில் வேலை பார்த்து அந்த வேலையைப் பெறுவதை விட துறையோடும், இஸ்திரிக்கையோடும், லோன்றியோடும் காலத்தை கடத்துவது மேலானது என்று தங்கன் துணிவு கொள்வதாக ‘எதையும் எதற்கும் தயாரான ஒரு ஓர்மம் அவனுள் படிந்து இறுகியது’ என்ற வசனத்தின் ஊடாக உணர்த்துகிறார் நந்தினி சேவியர்.
‘பயணத்தின் முடிவில்’ இருந்து ‘மத்தியானத்திற்கு சற்றுப்பின்பாக’ வருகிறேன்.

‘மத்தியானத்திற்கு சற்றுப்பின்பாக’ கதையினை மீண்டும் மீண்டும் வாசிக்கின்றேன். சில விடயங்கள் புரிகிறது சில விடயங்கள் புரியவில்லை. இருவரின் உரையாடலாக இக்கதை இருந்தாலும் இதில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட பல மனிதர்கள் வந்து போகிறார்கள். இவர்கள் 1977 ஆம் ஆண்டுகளில் நந்தினி சேவியரோடு வாழ்ந்து பழகிய மனிதர்கள். அவர்களைத் தனக்குள் உள்வாங்கி இச்சித்திரத்தை தீட்டியிருக்கிறார் நந்தினி சேவியர்.

முன்னதாக வந்த கதைகள் எளிமையாக சுதந்திரமாக எழுதப்பட்ட கதைகளாகவும் மேற்படி கதை உயர்ந்த இலக்கியத் தரத்தோடு புறத்தாக்கங்களை உள்வாங்கி கடின போக்கில் எழுதப்பட்ட கதையாகவும் நான் உணர்கிறேன்.

ஆங்காங்கே இக்கதையில் பொதுவுடமைக் கருத்துக்களும்> இயக்கம் சார்ந்த நடைமுறைகளும் இடம்பெற்றிருப்பதை உணர முடிகிறது.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது போல> தொழில்நுட்பக் கல்லூரிகளின் சான்றிதழ்களும் பரீட்சைப்பெறுபேறுகளும் வறுமைக்கும் பசிக்கும் விடையளிக்க வில்லை என்கிறார் நந்தினி சேவியர்.
இக்கதை எழுதப்பட்ட கால கட்டத்தில் வாழந்தவர்கள் இக்கதையினை இலேசாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் ஏனெனில் அவர்களின் அன்றைய வாழ்வியல் பற்றியதான பார்வைதான் இக்கதை. இதை இன்று புரிந்து கொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.

உத்தியோகம், வசதிகள் வந்து விட்டால் உறவு நட்பு யாவும் போலிதானா என கேள்வி எழுப்புகிறார் நந்தினி சேவியர். அவ்வாறு வசதி வந்தவர்கள் வசதிக்காக நண்பர்களை மிதிக்குமுன்பாக நட்புக்கு முற்றுப்புள்ளியிடச் சொல்கிறார்.

ஹெச்.இ.பேட்ஸ் என்பவர் குறிப்பிடுவது போல, எழுதும் ஆசிரியரின் எண்ணத்துணிவு சிறுகதையில் எவ்வாறு வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்பது போல நந்தினி சேவியரின் ‘மத்தியானத்திற்கு சற்றுப்பின்பாக’ சிறுகதை அமைந்திருக்கிறது.

‘ஆண்டவருடைய சித்தம்’ சிறுகதை தடையில்லாது ஓடி கடலில் சங்கமிக்கும் ஆற்றைப்போல தொய்வில்லாமல் பயணிக்கிறது.
1982 காலப்பகுதியில் கம்யூனிச சிந்தனையாளர்கள் அனுபவித்த துயரங்களில் ஒன்றை சுட்டி இக்கதை புனையப்பட்டுள்ளது.
அநாதரவாக மடத்தில் இருக்கின்ற பிள்ளை கூட சுயமாக சம்பாதிக்கும் திறமையுள்ள ஒருவனை கம்யூனிசக் கொள்கையுடையவன் என்ற காரணத்தினால் திருமணம் செய்ய வெறுப்பதாக மேற்படி கதையினூடாக உணர்த்துகிறார் நந்தினி சேவியர்.

கடைசியாக ‘தொலைந்து போனவர்கள்’ கதையில் கண் பதிக்கிறேன்.
1987 கால கட்ட இலங்கைச் சூழலை எண்ணிப்பார்க்கறேன். துப்பாக்கிகள் காலோச்சிய காலகட்டம். பேனைகள் எழுதுகின்ற தன் தொழிலை இடைநிறுத்தி வெறும் பார்வையாளராய்ப் பரிணமித்த காலகட்டம்.

‘தொலைந்து போனவர்கள்’ கதையினூடாக தன் துணிவை வெளிப்படுத்துகிறார் நந்தினி சேவியர். எளிமையான எழுத்து வடிவத்தினூடாக கால சூழலுக்குத்தக்கவாறு சொல்ல வேண்டிய விடயங்ககைத் தெளிவாகவும் அதேவேளை நேரடியாகச் சுட்ட முடியாத விடயங்களை மறைமுகமாகவும் கையாண்டு வாசகர் உணரும் விதத்தில் லாவகமாக கதையினை நகர்த்திச் செல்கிறார் நந்தினி சேவியர்.

‘சுப்பர் மடம்’ என்கின்ற அந்தச் சிறு கிராமத்தை நந்தினி சேவியர் விபரிக்கும் அழகு அலாதியானது. அந்தக்கிராமம் அழிவுற்றதை விபரிக்கையில் ஒரு அழகான கனவு கலைந்தது போல இருக்கிறது.
மொத்தத்தில் ‘தொலைந்து போனவர்கள்’ கதை உள்ளத்தில் ஒரு நெருடலை ஏற்படுத்திச் செல்கிறது.

இன்று இலங்கையில் கோர யுத்தத்தின் விளைவாக தொலைந்து போன தமிழ்> முஸ்லிம் கிராமங்களையும் மனிதர்களையும் இக்கதையினூடாக ஞாபகமூட்டிச் செல்கிறார் நந்தினி சேவியர்.
‘அதே பச்சை நிறச் சீருடை…சப்பாத்துக்கள்…தலைப்பாகை மட்டுமே சற்று வித்தியாசமாய்…” என்ற வாசகத்தின் ஊடாக ஒரு வரலாற்றுச் சான்றினை வெகு எளிமையாக புரியவைக்கும் பாங்கு அலாதியானது.
‘தொலைந்து போனவர்கள்’ சிறுகதை, எழுதப்பட்ட காலச் சூழல் எவ்வாறான கடினத் தன்மை உடையது என்பதனையும் பேனா பற்றியதான வெளிப்புறத் தாக்கத்தின் கடினத் தன்மையினையும் புலப்படுத்தி நிற்கிறது. இவ்வாறான சிறுகதைகள் இறுக்கமில்லா சுதந்திரமான சூழல்களில் இதைவிட எளிமையாக வெளிப்படலாம் என்பது எனது இலக்கிய நோக்கு.

‘நடை அழகு என்பது ஆசிரியரின் தனிச்சொத்து என்று கருதினாலும் ஆசிரியர் அவர் வாழ்ந்த காலத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டிருப்பதை மறுக்க இயலாது காலத்தின் சிந்தனைகள்> எண்ணங்கள் அவற்றை வெளியிடும் பேச்சுமொழி> எழுத்து மொழி இவ்வளவையும் ஜீரணித்துக் கொண்டுதான் படைப்பாளரும் தம்முடைய சொந்த நடையில் படைப்பை வெளியிடுகின்றார். எனவே நடைக்கு ஆசிரியர் மட்டும் காரணமாவதில்லை. அவர் வாழும் காலமும் காரணமாகிறது’ என்ற அகிலனின் கூற்றுக்கு இனங்க நந்தினி சேவியரின் சிறுகதை ‘நடை’ அமைந்திருப்பதைக் காணலாம்.

நந்தினி சேவியரின் ‘நடை’ தனித்துவமானது. யாழ்ப்பான மண்வாசனைச் சொற்களை தன்னுடைய கதைகளில் எளிமையாக கையாள்வதைக் காணலாம். அவ்வாறான சொற்கள் யாழ் மண்ணுக்கு மட்டும் சொந்தமானவை. உதாரணமாக உதுக்குள்ளான், விழுந்திட்டுதே, ஆரேனும், வாங்கிப் போடுவியள், இருக்கே, கேட்டியளே, அறாவிலை, என்னணை செய்யிறது.
ஜெயகாந்தன் சென்னைத் தமிழில் பல கதைகளை எழுதியது போல நந்தினி சேவியர் தான் பிறந்த மண் வாசனையை தன்னுடைய சிறுகதைகள் மூலம் நுகரவைப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஸ்டீவன்சன் என்ற அறிஞர், சிறுகதைகளை மூன்றாக வகைப்படுத்துகிறார். கருவால் வந்த கதை (The Story Of Plot),பாத்திரத்தால் அதன் குணநலன்களால் உருவான கதை (The Story Of Character), பாத்திரங்களின் உணர்வுகளை மட்டும் முக்கியப்படுத்தும் கதை (The Story Of Impression) இதைவிட நிகழ்சியால் சிறக்கும் கதை என்ற வகையினையும் இணைத்துக் கொள்ளலாம்.

மேற்படி சிறுகதை வகைகளில் நிகழ்ச்சியால் சிறக்கும் கதை என்ற வடிவத்தை நந்தினி சேவியர் கையான்டிருந்தாலும், அவரின் ஏனைய சிறுகதைகள் மேற்படி வகையறாக்களையும் தாண்டி ஒரு புது இலக்கணத்துக்குள் உள்வாங்கக் கூடியதான வகையில் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். அந்த புது வகையாக ‘வாழ்வியல் சார்ந்த அன்றாட நடைமுறை’ என்ற வகைக்குள் நந்தினி சேவியரின் சிறுகதைகளை உள்ளடக்க முடியும் என்பது என்னுடைய கருத்து.

நந்தினி சேவியரின் ஒவ்வொரு சிறுகதைகளும் வெவ்வேறு விடயங்களைப் பேசிய போதிலும் அக்கதைகளில் எங்கேனும் ஓரிடத்தில் கொம்யூனிச சித்தாந்தம் எட்டிப் பார்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இந்த வகையில் நந்தினி சேவியர் வாழ்க்கையைச் சிறுகதையாக்கும் ஒரு வித்தகர். நந்தினி சேவியரின் எழுத்துக்களை வாசிப்பதன் ஊடாக இளம் தலைமுறையினர் தம்மை புடம்போடமுடியும். நந்தினி சேவியரின் எழுத்துக்கள் மட்டுமல்ல அவரும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம்தான். ஏனெனில் அவருடன் உரையாடும் போதெல்லாம் ஓர் உயர் ரக இலக்கியப் புத்தகத்தை வாசித்த சுகானுபவத்தை உணரமுடியுமென்பதை அவருடன் உரையாடுவதன் மூலமே உணரமுடியும்.

mohideensaly62@yahoo.com

நன்றி :- மகுடம்/இதழ் 1/ 2012/மட்டக்களப்பு
















வெள்ளி, பிப்ரவரி 24

ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்: அ.முத்துலிங்கத்தின் 'அமெரிக்காக்காரி'


நன்றி :- பதிவுகள்.கொம்



 வெங்கட் சாமிநாதன் -



ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல் தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத் தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இன்றும் சரி, இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத் தொடங்கி, பின் வந்த பண்டாரநாயக சிங்களத்திற்கு முதலிடம் கொடுக்கத் தொடங்கி, பின் அடுத்தடுத்து வந்த தமிழ் இனத்தையே குறி வைத்த அடக்கு முறை அடுத்தடுத்து தொடர்ந்த பின் வருடங்களில் யாழ்ப்பாண நூலக எரிப்பும் வன்முறைகளும் 1983 லிருந்து ஈழத்தமிழர் புலம் பெயரத்தொடங்கிய வரலாறும், பின் வந்த போரின் பயங்கரங்களும் படு கொலைகளும் இன்று இன்னும் குறைந்தது ஒரு தலைமுறைக் காலத்துக்கு தம் குரல் இழந்து, செயல் இழந்து கண்ணியமும் சம உரிமையும் இழந்து தம் வாழ்ந்த மண்ணிழந்து வாழும் நிர்ப்பந்தத்துக்குள்ளாயிருக்கும் ஈழத் தமிழர் தம்மைப் பற்றி உற்சாகத்துடன் வாழும் எதிர்கால நம்பிக்கையுடன் சொல்ல ஏதும் அற்றிருக்கும் போது அவரகள் எழுத்து புலம் பெயர்ந்த நாட்டிலிருந்தும் கூட ஒரு சோகக் கதையாகத்தான் இருக்க முடியும். பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் ஒரு இடத்தில் இதற்கு எதிராகச் சொல்வது போலத்தோன்றும். வார்த்தைகள் சரியாக நினைவில் இல்லை. ஆனால் இப்படித்தான் அது அர்த்தப்படும். “அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி: Will there be singing and dancing in times of war? அதற்கு ப்ரெக்டின் பதில்: Yes. There will be singing and dancing: but that will be about War

கிரேக்க நாடகங்கள் பெரும்பாலானவை, எனக்குத் தெரிந்தவை எல்லாமே தொடர்ந்த அடுத்தடுத்த போர்களின், அவை விளைவித்த நாசத்தின், பின்னணியில் பிறந்தவை தான். உதாரணத்துக்கு ஒன்று யூரிபிடிஸின் நாடகம் Trogen Women பெலப்பனேசியன் போரில் ஏதென்ஸ் நகரமே சூறையாடப்பட்டு நகரம் அதன் ஆண்மக்களை இழந்த தன் பெண்களின் சோகத்தையும் அவலத்தையும் சொல்வதுதான் ட்ராய் நகரத்துப் பெண்கள். தம் கணவரை இழந்த பெண்களின் கூட்டுப் புலம்பல் தான் அந்நாடகமே. ஒரு விதத்தில் பார்க்கப் போனால் பகவத் கீதையே ஒரு குடும்பமும், ராஜ்யமும் தமக்குள் போரிட்டு அழிவை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் போது பிறந்த தர்மோபதேசம் தானே. ஆப்பிரிக்க கவிதைகள் எல்லாமே உரத்த குரலில் தம் அடிமை வாழ்வுக்கு எதிரான போருக்கான அறைகூவல் என்று சொல்ல முடியாதா?.

பரவலாக அமைதி நிலவியதாகத் தோன்றிய அறுபதுகளில் கொழும்புவில் வாழும் தமிழரின் யாழ்ப்பாண ஏக்கம் தொடர்கிறது. இது எஸ்.பொன்னுத்துரையின். உரத்த குரல்களில் பிரதான்யமானது எஸ்.பொவினது. அன்றைய அப்பையாவின் யாழ்ப்பணத்துக்கான ஏக்கம் இன்று கனடாவில், ஐரோப்பிய நாடுகளில் வாழும் அப்பையாக்களின் ஏக்கம். அன்று சடங்கு நாவலின் அப்பையாவுக்கு யாழ்தேவி இருந்தது. இன்று இல்லை. ஈழப் போரில் தன் மகனை இழந்தவர் எஸ்.பொ. மு. தளைய சிங்கம் தமிழர் கௌரவத்துடன் வாழ வேண்டும் தனி ஈழத்தைக் குறிக்குமுகமாக இனி தனக்கென ஒரு தனி வீடு வேண்டும் என்று முதல் குரல் கொடுக்கிறார் தன் தனி வீடு நாவலில். படிப்படியாக ஒர் இனம் மற்ற இனத்தை தன் பெரும்பான்மையின் அதிகாரச் செறுக்கில் ஒடுக்க வளர்த்து வந்த கொடுமையின் பெருக்கைச் சொல்லும் வரலாறு தான் ஈழத்தமிழரின் வரலாறு. அந்த வரலாறு பதிவு செய்யும் இலக்கியம் தானே பின் வந்த ஈழ எழுத்துக்கள் அனைத்தும், ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும்.

இதை எழுதி வரும்போது தான் எனக்குத் தோன்றுகிறது, இப்படி நீட்டி முழக்கி இவ்வளவு சொல்லியிருக்க வேண்டாம் என்று. புறநானூற்றின் எத்தனைப் பாட்டுக்கள் போருக்குச் சென்ற தமிழர்களின் வீரத்தையும், மரணத்தையும் போர்க்களங்களைப் பற்றியும் பாடுகின்றன!.கலிங்கத்துப் பரணி என்ன சொல்கிறது?. போகட்டும். . பரணி என்றால் என்ன அர்த்தம்? அது பிறந்தது எதற்கு? ஈழத்துப் பரணி என்று இப்போது எழுதப்படும் வாய்ப்பு இல்லைதான். தான் வதைபடும் வாழ்வை அனுபவத்தை எழுதாமல் வேறு என்னத்தை எழுதுவான் ஒரு எழுத்தாளன்? அப்படித்தான் அ. முத்துலிங்கமும். பெரும்பாலும் இந்த ஈழ அனுபவத்தை அவர் நேரிடையாக பகிர்ந்து கொண்டவர் அல்லர் என்ற போதிலும். அ. முத்துலிங்கம் ஈழத்தமிழர்தாம்.. கொக்குவிலைச் சேர்ந்தவர். நமக்குத் தெரிந்த இந்த ஈழ சரித்திரம் பூராவும் அவருக்கு இன்னும் நன்றாகவே தெரியும். அதன் பாதிப்புக்கு இரையானவர்தாம். தன் பிறந்த மண்ணையும் ஊரையும் இழந்தவர்தாம். ராஜ பக்‌ஷே அவரைத் திரும்ப கொக்குவில் பிரஜையாக ஏற்றுக் கொள்வாரோ என்னவோ தெரியாது. முதலில் திறந்த வெளியில் முள்வேலிகளுக்குள் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு முதலில் குடி உரிமை கிடைக்கிறதா அவர்கள் தம் வீடு திரும்புகிறார்களா பார்ப்போம். ஆனால் முத்துலிங்கத்திடமிருந்து ஏதும் ஆவேசமும் உக்கிரமும் நிறைந்த உரத்த குரல் எதிர்ப்போ கண்டனமோ எழுவதில்லை. சுபாவத்தில் மிகவும் அடங்கிய குரல்காரர். அவர் உரத்துப் பேசி யாரும் கேட்டிருக்க முடியாது. உரத்த வாய்விட்ட சிரிப்பு கூட அவரிடமிருந்து எழுவதில்லை. எதிலும் அமைதி. கொண்டாட்டமானாலும், கண்டனமானாலும் சரி

அறுபதுகளிலிருந்து எழுதி வருகிறார். இடையில் சில காலம் எழுதாதிருந்திருக்கிறார். எழுதத் தொடங்கிய போதும், இடை விட்டுப் பின் தொடர்ந்த போதும் சரி அவர் எழுத்தும் அவரும் குணம் மாறவில்லை. இவ்வளவு நீண்ட காலமாக ஒரே குரலில் சன்னமான, ஒரு மெல்லிய புன்னகை உதிரக் காணும், குரல். சிறுகதைகளும் கட்டுரைகளும் ஆனாலும் எங்கும் எதிர்பாராத இடத்தில், இழப்பின் சோகத்தின் தாக்கத்தை நாம் பயங்கரமாக உணர்வோம். ஒரு நாள் ஒரு நாவிதருடன் நடந்த நீண்ட . உரையாடல் தான் சுவருடன் பேசும் மனிதர்.. சற்று ,மாறுதலுக்காக ஒரு புதிய சலூனுக்குப் போனால் அங்கு ஒரு இராக்கியர் தான் இவருக்கு முடி வெட்ட வந்தவர். சதாம் ஹுஸேன் காலத்தில் இங்கு கனடாவுக்கு குடியேறியவர். அவர் அராமிக் அவரது தாய் மொழி. சிரியன் கிறிஸ்துவர். அவர்கள் இராக்கைச் சுற்றியுள்ள பல நாடுகளில், இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா, லெபனான் என இப்படி கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் சிதறி வாழ்கிறார்கள். பொறி இயல் படித்தவர் அகதியாக கனடா வந்தவர். முடி திருத்தும் தொழில் கற்றுக்கொண்டுள்ளார். தனக்கு அரபி தெரியும் என்று காட்டிக்கொள்ள விரும்பவில்லை. யேசு பேசிய மொழி தான். ஆனாலும் அது அழிந்து கொண்டு வரும் மொழி. அராமிக் பேசும் நாடு என ஒன்றில்லை. பேசுவார் இன்றி இருந்த ஹீப்ருக்கு இப்போது அரசு மொழி அந்தஸ்து தந்து இஸ்ரேல் வாழ்வழித்து வருகிறது. என்று அவர் தன் ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டே வந்தவர் தன் வாடிக்கையாளரைக் கேட்கிறார். “உங்கள் நாடு எது?. உஙகள் மொழி எது?” என்று. தான் தமிழர் என்றும் இலங்கையில் அரசாளும் சிங்களவரால் விரட்டப்பட்டு அகதிகளாக வாழும் தமிழரில் ஒருவர் என்கிறார். இதற்லி அந்த இராக்கி, “தமிழும் அழிந்து தான் போகும். ஒரு சில மில்லியன் பேரே பேசும் மால்டீஷ்,(மால்டா), திவேஹி (மாலத்தீவு), ஐஸ்லாண்டிக் (ஐஸ்லாந்து) இவையெலலாம் அழியாது. ஆனால் தனக்கென ஒரு நாடு இல்லாத தமிழ் அழிந்துவிடும் என்று சொல்கிறார். ஆனால் தான் நம்பிக்கை இழக்க விரும்பவில்லை என்று முத்துலிங்கம் கதையை முடிக்கிறார். அவர் நம்பிக்கை கிடக்கட்டும். நம்பிக்கையில் வாழ வேண்டியவர் அவர். நம்மைப் பற்றிப் பேசுவோம். நாடு இல்லை, சரி. ஒரு மாநிலம் இருக்கிறது. ஆனாலும் தமிழ் நாட்டில் தமிழில் யார் பேசுகிறார்கள்? தொலைக்காட்சியில்?, தெருவில்?, கல்விக் கூடங்களில்? குழந்தைகள்? ஏன்? சென்னை ரிக்‌ஷாக்காரர்கள்? தமிழ் பேசும் நடிகைகள் தேவை என்று தினம் விளம்பரங்கள் தொலைக் காட்சியில் வருகின்றன. தமிழ் தலைப்பு கொண்ட சினிமாப் படங்களுக்கு வரி விலக்கு தரப்படுகிறது. தமிழ் நாட்டில் தமிழை வாழ வைக்க என்னென்ன வெல்லாமோ செய்ய வேண்டியிருக்கிறது. கதையில் வெகு அமைதியாக ஒரு பெரும் சோகத்தை, இழப்பைச் சொல்லிவிடுகிறார். முழக்கங்கள் தேவையாயிருக்கவில்லை.

முத்துலிங்கம் தன் வாழ்வின் பெரும்பகுதியை உலக நாடுகள் பலவற்றிலும் வேலை நிமித்தம் வாழ்ந்திருக்கிறார். சுற்றியலைந்திருக்கிறார். அவ்வாழ்க்கையின் சன்ன மெல்லிய குரல் பதிவுகள் தான் அவரது கதைகள் அனேகமும். அவை அனைத்தும் சோக நிகழ்வுகளாகவே பெரும் பாலும் நிறைந்துள்ளன. அத்தோடு ஒரு வாழ்க்கை விடம்பனமும் மெல்லிய புன்னகையும். இஸ்லாமாபாதில் அவர குடியிருந்த இடம் ராணுவ அதிகாரிகள் வாழும் பங்களாக்கள் கொண்டது. அங்கு அவருக்கு சினேகிதமான ஒரு பெட்டிக்கடைக்காரன். 18 வயதிலிருந்து 20 வருடங்களாக அங்கு இருப்பவன். பேப்பர், பாண், சிகரெட் இத்யாதி விற்று வாழ்பவன். அங்கு ஒரு கல்யாண நிகழ்ச்சிக்காக இடைஞ்சலாக இருந்த அவனை விரட்டி அவன் பெட்டிக்கடையையும் உடைத்து எறிந்தார்கள்.. கல்யாணம் பெரிய ஷாமியானா போட்டு, வெகு தடபுலாக, ஃபதே அலி கான் கச்சேரியோடு நடந்து முடிந்தது. சுற்றிக் குடியிருக்கும் எல்லோருக்கும் கல்யாண வீட்டில் தான் சாப்பாடு ஐந்தாறு நாட்கள் ஆயின பந்தலைப் பிரிக்க. பின் தான் பெட்டிக் கடைக்காரன் வந்தான். அவனுக்கு பதே அலிகான் கேட்க முடியாது போய்விட்ட துக்கம். கல்யாண மாப்பிள்ளையை சிறுவயதில் தன் தோளில் சுமந்ததாகச் சொல்கிறான் நவாஸ். இருப்பினும்………அவன் விரட்டப்பட்டான். கேட்பார் வருந்துவார் யாரும் இல்லை. மாப்பிள்ளை கலைந்த தலையும் கசங்கிய உடையுமாக பெட்டிக்கடைக்காரனிடம் “சிகரெட்” என்கிறான். நவாஸ் ஒரு கிகரெட் எடுத்துக்கொடுக்கிறான். கதை “பத்து நாட்கள்” .

வேடிக்கையான சில கற்பனைகளும் உண்டு. ”நீ குடியிருக்கும் இடத்தின் புவியீர்ப்பை அனுபவிக்கிறாயே அதற்குக் கட்டணம் கொடு” என்று ஒரு அதிகாரம் கட்டணம் வசூலிக்கிறது. புவியீர்ப்பு இல்லாது வீடு கட்டமுடியுமா? தெருவில் தான் நடக்கமுடியுமா? 48-வது அகலக்கோடு என்று ஒரு கதை. அந்த கற்பனைக் கோட்டுக்கு ஒரு புறம் போனால் செவ்வாய்க் கிழமை. மறுபுறம் புதன் கிழமை. இந்தக் கோடு எத்தனையோ நாடுகளை பிரித்தும் ஊடுருவியும் செல்கிறது. பிரிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் கனடாவும். நயாகரா வீழ்ச்சிக்கு ஒரு புறம் அமெரிக்கா. மறு புறம் கனடா. இரண்டு நாடுகளையும் இணைக்கும் பாலமும் ஒன்று உண்டு. கீழே விழுந்து கிடக்கும் மேபில் இலை காற்றில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமாக அலைந்து கொண்டிருக்கும். தனக்குத் தான் மறதி அதிகமாயிற்றே, திசை மயக்கமும் உண்டே என்று சுற்றுலா வந்த சிவமூர்த்தி பஸ்ஸிலிருந்து இறங்கியவர் இறங்கிய இடத்தின் அடையாளங்களைக் குறித்துக்கொண்டு கடைத்தெருவைச் சுற்றி வந்தவர் திரும்பிப் பார்த்தால் பஸ்ஸைக் காணோம். விசாரித்துப் பார்த்தால் பஸ் போய்விட்டது என்கிறார்கள். பிரசினை என்னவென்றால அவர் இறங்கியது கனடாவில். ஊர் சுற்றிவிட்டு வந்து விசாரித்தது அமெரிக்காவில். அவர் மறதி அவரைத் திரும்பவும் ஏமாற்றிவிட்டது 48-வது அகலக்கோடு கதையில்

பலதரப்பட்ட அனுபவங்கள். வெளிநாட்டு அனுபவங்கள். வெளி நாடுகளில் சொந்த மனிதர்களின் வேற்று பண்பாட்டு அனுபவங்கள். தாட்பாள்களின் அவசியம் என்று ஒரு கதை. அம்மா இலங்கையிலிருந்து வந்தவர் கனடா வாழ்க்கையுடன் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு மிகவும் கஷ்டப் படுகிறார். முதலில் அதற்கேற்ப பழக்கப்படுத்திக் கொள்ளவே அவருக்கு இஷ்டமில்லை. அதில் தாட்பாளும் ஒன்று. வேண்டாத விருந்தினர்களை அம்மா உபசரிக்கத் தொடங்குகிறார் .அவர்கள் மதமாற்றத்துக்கு பிரசாரம் செய்கிறவர்கள். அவர்களை நம்பும் அம்மா வெகுளி. அம்மா இலங்கைக்குப் போனபின்னும் அவர்கள் வந்து அம்மாவைப்பற்றி விசாரிக்கிறார்கள். அம்மாவுக்கு சொர்க்கத்தில் இடம் நிச்சயம் செய்ய அவர்கள் பிரார்த்தனை செய்வதாக அம்மாவுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள் என்று அம்மா வேறு சந்தோஷமாகச் சொல்லியிருக்கிறார். “இப்போது “உங்களுக்கு சொர்க்கம் போக விருப்பமா? என்று இவரிடமும் கேட்டார்களாம். “ஏதோ இவர்களிடம் எக்ஸ்ட்ரா டிக்கட் ஒன்று மிஞ்சியிருப்பது போல. ”பாதைகள் எங்கு பிரிகின்றன என்று சொன்னால் நானே விசாரித்துப் போய்க் கொள்கிறேன்” என்று இவர் பதில் சொல்ல, பிரசாரகர்களுக்கு இது உவப்பாக இருக்கவில்லை. “உங்கள் தாயார் மிக தயாள குணத்தவர்” என்று சொல்லி இவர் சொர்க்கத்துக்கு லாயக்கில்லாதவர் என்ற தீர்மானத்துடன் வெளியேறுகின்றனர். முத்துலிங்கத்தின் கேலியும் நகை உணர்வும் நாம் சொல்லும் நமுட்டுத் தனமானது. அதிகம் போனால் ;க்ளுக் என்று மெலிதாகக் கேட்கலாம். அட்டகாசமாகச் சிரித்து சுற்றியிருப்பவர்களையெல்லாம் நம்மைத் திரும்பிப்பார்க்க வைக்காது.

வேட்டை நாய் என்று ஒரு கதை , ஒரு உக்ரேனியன் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்து திருமணத்தில் போய் முடிகிறது. அவள் பல பாஷைகள் பேசுபவள். எல்லாவற்றிலும் 1000 வார்த்தைகளே பேசுபவள். படு கஞ்சம். பணத்திலும் வார்த்தைகளிலும். வேட்டை நாய் வாங்கப் போய் அவளைக் கூட வைத்துக்கொண்டு கழிவு விலையில் தான் ஒரு நாயை. வாங்க முடிகிறது. அதை வேட்டைக்கு அழைத்துச் சென்றால், சுட்ட பறவையை நோக்கி அது முக்கால் தூரம் விரைந்து பின் திரும்பிவிடும். ஏன்? கழிவு விலையில் வாங்கியது. கொடுத்த காசுக்கேற்ற வேலை. முழு விலையும் கொடுத்திருந்தால் பறவை விழுந்து கிடக்கும் தூரம் வரை சென்று பறவையைக் கவ்விக்கொண்டு வரும். ஒரு சமயம் திருமணம் செய்துகொள்ள காதலர் இருவரும் அவள் யுக்ரெய்ன் வழக்கப்படி மூன்று ரகஸ்யங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமாம். இவள் ஒரு ரகஸ்யம் சொல்லி நிறுத்தி விடுகிறாள். அடுத்த ரகஸ்யம் என்ன? சொல்லவில்லையே என்றால், அது அடுத்த ஆளுக்கு. ஒரு ஆளுக்கு ஒரு ரகஸ்யம் தான் என்கிறாள். இப்படிப் போகிறது அந்தக் கதை. ஒரு சமயம் இருவருக்கும் சண்டை. தெருவில் தபால் வண்டி ஒட்டிப் போகும் ஒரு மீசைக்காரனைக் காட்டி “ பார், அது உன் தகப்பனாக இருக்கக் கூடும்,” என்று இவன் சொல்ல, நான் சொன்ன புனிதமான ரகஸ்யத்தை நீ கேலி செய்துவிட்டாய்” என்று அவளுக்குக் கோபம். அவனைப் படுக்கையில் விழுத்தாட்டி, அவன் மேல் தவளை போல் கால் பரப்பி தன் முகத்தை அவன் அருகே கொண்டு போனாள். உக்ரேனிய மிருகம் அவனை முகரக் குனிவது போல் இருந்தது. ஆனால் அவள், கழிவு விலையில் வாங்கப் பட்டவள் போல் பாதியிலேயே நின்று விட்டாள். இவளோடு தான் தன் வாழ்வைக் கழிக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்த போது அவர்கள் திருமணம் செய்துகொண்டு 45 நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. என்று முடிகிறது கதை.

உடனே திரும்பவேண்டும் கதை நமக்கு பல ஆச்சரியமான புதிய தகவல்களைத் தரும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையோரம் இருக்கும் சியாரா லியோனேயில் வேலை. மனைவி கைக்குழந்தையுடன் வாசம். குழந்தைக்கு மலேரியா காய்ச்சல்.. மேற்குக் கரையோரம் இருக்கும் நைரோபிக்கு உடனே அலுவலக வேலையாகப் போக வேண்டும். நைரோபிக்கு போய் திரும்பி வந்த விமானப் பயணமும் ஹோட்டல் வாசமும் ஒரு சாகஸப் பிரயாணம் மாத்திரமல்ல, அக்கால ஆப்பிரிக்க பயணங்களும் வாழ்க்கையும் தீவிர சாகசங்களை வேண்டுவதாக இருக்கும் போல. திரும்பி சியாரா லியோனே வந்து மனைவியையும் குழந்தையையும் பார்க்க நாட்கள் பல தாமதமாகிவிட்டது. “இனி ஒரு நிமிஷம் இங்கு இருக்க முடியாது. நான் திரும்பிப் போகிறேன்” என்று மனைவி சொல்ல, ”அது தான் சரி உடனே திரும்பிவிடவேண்டும்” என்றும் தீர்மானமாகி அடுத்த நாள் காலை அதைத் தான் செய்யப் போகிறேன்” என்கிறார் முத்துலிங்கம். கதையின் அடுத்ததும் கடைசியுமான வரி: ”நாங்கள் ஆப்பிரிக்க மண்ணை விட்டுக் கிளம்ப மேலும் 21 வருடங்கள் பிடித்தன”

பதினேழாம் நூற்றாண்டு இலங்கைக் கதை “லூசியா” கண்டியைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் ராஜசிங்கன் என்னும் சிங்கள அரசன் ஆண்டுகொண்டு இருந்த காலம். போர்ச்சுகீசியரும் ஆங்கிலேயரும் ஊடுருவி தம்மை ஸ்தாபித்துக்கொள்ள முயன்று கொண்டிருந்த காலம் தகப்பன் கண்டிச் சிறையில். இறந்து விட மகன் 18 வயது ராபர்ட் நாக்ஸ்க்கு தகப்பன் சொன்ன கடைசி அறிவுரை. உனக்கு ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக்கொள்ளாதே. ஏசுவிடம் விசுவாசமாக இரு”. தப்பித்த ராபர்ட் சிங்களம் கற்று, சிங்கள நாட்டு பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொள்கிறான். அவனும் அவனது இரண்டு நண்பர்களும் கண்டி வழக்கப்படி சிந்திரிக்மல் என்னும் பெண்ணை மணந்து கொள்கிறார்கள். அவள். வீட்டு வேலை எல்லாம் செய்கிறாள். இவர்கள் வியாபாரத்தில் நிறைய பணம் சேர்த்து செல்வந்தர் ஆகிறார்கள். ஆனால் அரசனின் கொடுமை தாளாது இங்கிலாந்து திரும்ப விரும்புகிறார்கள். ராபர்ட்டுக்கு ஓடிப்போக விருப்பமில்லை. கண்டி அரசனுக்கு ஆங்கிலம் பேசும் ஆலோசகன் தேவை. அரச அதிகாரி திவச அவனைப் பிடித்துக்கொண்டு போய் விடுகிறான். அப்போது சிந்திரிக்மல், அவனிடம் குழந்தை லூசியா அவனது குழந்தை தான் என்று சொல்கிறாள். போகும் முன் லூசியாவுக்கு ராபர்ட் சொன்ன புத்திமதி, “ நான் திரும்பி வருவேன். அது வரை யாரையும் தலை நிமிர்ந்து பார்க்காதே. உனக்கு ஆங்கிலம் தெரியும் என்று யாரிடமும் சொல்லாதே” டச்சுக்காரர்கள் தோற்று வருகிறார்கள். ஆங்கிலேயர் வெற்றி பெற்று வருகிறார்கள். அப்போது நான் தப்பி, கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து நான் திரும்புவேன்” என்று சொல்லிச் செல்கிறான். அது 1679-ம் வருடம். லூசியா 14 வயதுச் சிறுமி. ராபர்ட்டுக்கு வயது 37. ஆனால் திசாவின் கண்களில் லூசியா பட்டு விடவே அவள் அரண்மனைப் பணிக்கு இட்டுச் செல்லப்படுகிறாள். அரசனுக்கு பணிவிடை செய்ய. அரண்மணையில் அவள் ஆங்கிலம் அறிந்தவள் என்பது வெளிப்பட, அரசன் முன் நிறுத்தப்பட்டு அவள் அரசனின் 37-வது ஆசை நாயகியாகிவிடுகிறாள். அரசனின் படுக்கைக்கு சென்றவள். அரசனின் அகோர பூத உடலில் அவளது சிறிய உடல் புதைந்து போகிறது. ஏழு வருடங்கள் இப்படிக் கழிகின்றன. ராஜசிம்ஹன் இறந்து போகிறான். அப்போது லூசியாவுக்கு வயது 22. ராபர்ட் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடிவிட்டான் தான். அவன் லூசியாவுக்குச் சொன்னபடி டச்சுக்காரர்கள் தோற்று ஆங்கிலேயர் வருவார்கள் ஆட்சி செய்வார்கள். ஆனால் அதற்கு இன்னும் 118 வருடங்கள் லூசியா காத்திருக்க வேண்டியிருக்கும்” என்ற கடைசி வரியுடன் கதை முடிகிறது. வாக்கேயக் காரர்களின் முத்திரை போல, கதையின் கடைசி வரி முத்துலிங்கத்தின் முத்திரை போலும். இக்கடைசி வரிகள் வரலாறு அவர்களை ஏமாற்றவிருப்பதையும், அவர்களுக்குத் தெரியாத வரவிருக்கும் சோகத்தையும் சொல்கிறது. அந்தச் சோகமும் ஏமாற்றமும் நிறைந்த வரலாறு தான் இன்றைய ஈழத்தமிழரை எதிர்நோக்கியிருப்பதும். எத்தனை வருடங்கள் இவர்கள் காத்திருக்க வேண்டுமென்பது முத்துலிங்கத்துக்குத் தெரியாது. அவரும் சொல்லவில்லை.

இவை ஒரு சிலவே. முத்துலிங்கம் சிறுகதைகளே எழுதியுள்ளார். கட்டுரைகளையும் நேர்காணல்களையும் தான். சிறுகதைகளெ ஆனாலும் அவற்றின் பரப்பும் எண்ணிக்கையும் விஸ்தாரமானது. உலகம் முழுதையும் உலக மக்கள் அனைவரையும் காட்சிகளாக வாழ்க்கைத் துணுக்குகளாக நம் முன் நிறுத்தும். தோழமையோடு, அவ்வப்போது சிறிது நமட்டுச் சிரிப்போடு, மெல்லிதாக எட்டிப் பார்க்கும் புன்னகையோடு. அந்த உலகம் தனித்துவமானது. வேறு யாரிடமிருந்தும் கிடைக்காதது. ஈழத் தமிழ் எழுத்தாளர்களிலேயே தனித்துவம் மிக்கவர். ஆர்ப்பாட்டமில்லாமல், இரைச்சலிடாமல், நம் முன் நின்று விடுகிறவர். ஈழம் தமிழுக்குத் தந்துள்ள ஒரு கொடை..

அமெரிக்காக்காரி: (சிறுகதைத் தொகுப்பு) – அ. முத்துலிங்கம் காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் பக்கங்கள் 173. விலை ரூ 125.

vswaminathan.venkat@gmail.com

செவ்வாய், பிப்ரவரி 7

சி. கணேசமூர்த்தியின் “தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும்”




நூல் அறிமுகம்

-பூ. நகுலன்
நன்றி - புதிய நூலகம் (செய்திமடல்) இதழ் 10

தான் சார்ந்த தன்னைச் சூழ நிகழ்ந்த விடயங்களையும் தன் அனுபவத்தின் பெறுமதியையும் உணர்ந்து ‘தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும்’ என்ற நூலை அல்வாயைச் சேர்ந்த சி. கணேசமூர்த்தி எழுதியுள்ளார்.

வரலாறு சமய ஆய்வு என்பவற்றை ஆய்வுப்பொருளாகக் கொண்டதாக இந்நூல் அமைகின்றது. 2010 மார்கழியில் முதலாவது பதிப்பை இந்நூல் கண்டுள்ளது. இந்நூலின் உள்ளடக்கம் இரண்டு பகுதிகளை கொண்டதாக விளங்குகின்றது. பகுதி ஒன்று வரலாறு என்ற பிரிவாக அமைந்துள்ளது. பகுதி இரண்டு ஆக்கங்கள் கட்டுரைகள் என்ற பிரிவாக அமைந்துள்ளது.
இறந்தகால நிகழ்வுகளை எதிர்கால சந்ததியும் அறிந்து கொள்ளும் நோக்கில் நிகழ்காலத்தில் செய்யப்படும் ஒர் ஆவணம் அல்லது ஆக்கம் வரலாறு எனலாம். ஒரு இனம் தன் இருப்பினை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது இயல்பானது. அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகவே வரலாறும் அமைகிறது. கிடைக்கத்தக்க ஆதாரங்களை சரியாகப் பயன்படுத்தி இவ்வரலாறு எழுதப்படுகின்றபோது வரலாற்றை எழுதுகின்ற ஆசிரியர் பலராலும் மதிக்கப்படுவது இயல்பானதாகும். மதிக்கப்பட வேண்டும் என்கின்ற உந்துதலும் வரலாற்றாசிரியரிடம் இயல்பாகக் குடிகொண்டு விடுவதும் உண்டு.

இத்தகையதொரு வரலாற்றுப் பின்புலத்தில் தமிழரின் பரவலை ஆசிரியர் எடுத்துரைக்கின்றார். மனித இனத்தின் தோற்றம் பரவல்> தமிழரின் தோற்றம் பரவல்> ஈழத்தமிழர் வரலாறு பரவல்> என்கின்ற விடயங்களைத் தாங்கியதாக முதலாம் பகுதி அமைந்துள்ளது. தமிழர்கள் யாவரும் அறிந்திருக்க வேண்டிய செய்திகளை இவை கொண்டிருக்கின்றன. இத்தகைய செய்திகள் கட்டுக்கதைகளாக அமையவில்லை என்பதை சி. கணேசமூர்த்தி முகவுரையில் குறிப்பிடுகிறார்.. வரலாற்று நூல்களில் இருந்து ஆதாரங்களைத் திரட்டியிருக்கின்றார்.

இலங்கைத் தமிழரது அதிகார மீட்புப் போராட்டம் வெற்றிபெறாமல் நீண்டு போனதிற்குக் காரணமான விடயத்தை தனது கருத்தாக கணேசமூர்த்தி குறிப்பிடுகிறார். கல்வி> ஆளுமை> தன்னம்பிக்கை முதலியவற்றை கொண்டு அரசியல் நடத்திய தலைவர்கள் சுயநலத்தை அனுபவித்தவர்களாகவே இருந்தனர். இன்றுவரை ஒரு தமிழ்த்தலைவர் கூட சமூக பலத்தைக் கட்டியெழுப்பவில்லை. தமிழர்கள் தமக்கிடையே சமூக பலத்தைக் கட்டியெழுப்பினால் தமிழர்களுக்கான சுதந்திரம் மிகவும் எளிதாகக் கிடைக்கும். என்கின்ற ஆதங்கத்தினை ஆசிரியர் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

முதலாம் பகுதியின் தொடர்ச்சியாக மாறாம்புலம் எங்கள் ஊர்> மாறாம்புலம் மாணிக்கப் பிள்ளையார் வரலாறு> எமது சமூக அரசியல் தொடர்பான பதிவுகள்> எமது ஊர் முன்னோர்கள்> என்கின்ற விடயங்கள் காணப்படுகின்றன. மாறாம்புலம் பிள்ளையார் கோயிலின் வரலாறு முழுமையுமாக இப்பகுதியில் விபரிக்கப்படுகின்றது. பண்டைய காலங்களில் தல வரலாறு கூறும் புராணங்கள் எமது தமிழ்மொழியில் எழுந்திருக்கின்றன. இத்தகைய பின்புலத்தில் மாறாம்புலம் பிள்ளையார் வரலாறும் ஆசிரியரால் எழுதப்பட்டிருக்கின்றது. மாறாம்புலம் சார்ந்த் விடயங்களைக் கூறியிருக்கின்ற அதேவேளை மாறாம்புலத்தில் தனது பணி எவ்வாறு அமைந்தது என்பதை அரசியல் தொடர்பான பதிவுகள் என்ற பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலின் உள்ளடக்கமாக அமையும் இரண்டாம் பகுதியில் திருக்குறளின் பொருட்பால் பகுதியை மையமாகக் கொண்டு தனது அனுபவங்களை முன்னிறுத்தி தற்கால உலகில் பொருளின் தேவையை உணர்ந்து ஒரு கட்டுரையைத் தந்திருக்கின்றனார். ‘வள்ளுவர் கண்ணோட்டத்தில் பொருளும் பொளுள்சேர் வழியும் ஆய்வு விளக்கமும்’ என்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது> வள்ளுவர் குறள்களையும் சான்றாகத் தந்து பொருள் தொடர்பான தேடலை வலியுறுத்தும் கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார். சிறுசிறு உபதலைப்புக்களுடன் பொருட்பால் அதிகார குறட்பாக்கள் இலகுவான மொழி நடையில் எடுத்தாளப்பட்டுள்ளது.

ஆலயம் அதன் முக்கியத்துவம் தொடர்பாக அமைந்த இன்னொரு கட்டுரையில் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழ கோயிலைக் காண்க’ என்பது அமைந்துள்ளது> ஆசிரியரின் சைவ அனுபவத்தை விளக்குகின்ற கட்டுரையாக இது அமைந்துள்ளது. சமுதாயத்தின் நிலைக்களனாக விளங்கும் ஆலயத்தை பேணிக் காக்கும் கடனை வலியுறுத்துவதாகவும் இக்கட்டுரை காணப்படுகின்றது.

மாறாம்புலம் மாணிக்க விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகனின் மகிமையை கூறுவதாக அமைகின்ற கட்டுரை ஒன்று காணப்படுகின்றது. பரம்பரை பரம்பரையாக கூறப்பட்டுவரும் கருத்துக்கள் காற்றோடு காற்றாக செல்லாது அடியவர் மனதில் என்றும் நிலைத்திருக்க வேண்டிய வேையை உணர்ந்து விநாயகர் தொடர்பான வழிவழியாக வந்த கருத்துக்களை இக்கட்டுரையில் ஆசிரியர் தொகுத்துத் தருகின்றார்.
தேர்த்திருவிழா என்னும் கட்டுரை ஆலயத்தில் நடைபெறும் தேர்த்திருவிழாவை முன்னிறுத்துவதாக அமைகின்றது. தேர்த்திருவிழாவின் உள்ளார்ந்த கருத்துக்களை அலசுவதாகவும் தத்துவத்தை விளக்குவதாகவும் அக்கட்டுரை உள்ளது.

சைவம் ஒரு வாழ்க்கை நெறி என்கின்ற கட்டுரை வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் சைவ நொறியின் சிறப்புக்களை சைவப் பெரியவர்களின் தவயோகிகளின் மேற்கோளுடன் எடுத்துரைக்கின்றது.

மாறாம்புலம் பிள்ளையாரை வேண்டிப் பாடிய பாடல்களையும் ஆசிரியர் இந்நூலில் இணைத்துள்ளார். ஆசிரியரின் கவிதை அனுபவங்களையும் இங்கு காணலாம்.

இறைவன் துணையிருந்தால் அனைத்தும் வெற்றியாக அமையும் என்பதையும் அன்பு வழியில் நாம் அனைவரும் வாழவேண்டும் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் தன்மையை ஒரு கட்டுரையில் ஆசிரியர் தருகின்றார்.

இந்நூல் எழுதுவதற்கு துணைநின்ற ஆதாரங்களை இறுதியில் தந்துள்ளார்.
மிக அழகாகவும் எளிமையாகவும் அமைந்த இந்நூல்: ஊர்வரலாறுகள் குறித்தும் தமிழர் வரலாறு குறித்தும் தேடும்போதும் வாசகர்களுக்கு அடிப்படையான சில வழிகாட்டல்களை இந்நூல் வழங்கும் என்பது என்பது திண்ணம்.

நன்றி – புதிய நூலகம் (செய்திமடல்) இதழ் 10